திருதராஷ்டிரனைப்போல்
யுதிஷ்டிரன் எதற்கும் தயங்கவில்லை. அவன் எந்த
அளவுக்கு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தான். அதனால் குடும்பத்தில் முக்கியமாய் ஹஸ்தினாபுரத்தின்
அரசியல் வாழ்வில் நிம்மதியும், அமைதியும் கிடைக்குமானால் அவன் விரைவில் ஒரு முடிவு
எடுக்க வேண்டும். அதற்கு அவன் தாத்தா பீஷ்மரின்
உதவியைக் கூட எதிர்பார்க்கவில்லை. அவன் எதற்கும்
தயாராகிவிட்டான். திருதராஷ்டிரனைப் பார்த்து,
“நான் என்ன செய்யவேண்டும் அரசே? நான் ஏற்கெனவே
ஒரு முறை கூறியதையே மீண்டும் கூறுகிறேன். நீங்கள்
கட்டளையிடுங்கள்; நாங்கள் அதை நிறைவேற்றுகிறோம்.
அரசே, உங்கள் அனைவரின் முழுச் சம்மதத்துடனேயே தாத்தா பீஷ்மர் என்னை யுவராஜாவாக்கினார். அப்போது நீங்கள் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தீர்கள். நானாக இதைக் கேட்கவில்லை; நீங்கள் பெரியோர்கள் பார்த்து யுவராஜாவின் அலுவல்களைக்
கவனிக்கச் சொல்லிக் கவனித்தேன்; இப்போது அது
கூடாதெனில் சொல்லுங்கள். இப்போது, இந்த நிமிடமே
நான் யுவராஜா பதவியிலிருந்து விலகி விடுகிறேன்.
தாராளமாக துரியோதனனே யுவராஜாவாக ஆகிக் கொள்ளட்டும். இதன் மூலம் அவன் மனம் கொஞ்சமானும் சாந்தம் அடைந்தால்
நல்லதே! அவனும், அவன் சகோதரர்களும் சந்தோஷமாய்
இருந்தாலே போதுமானது.”
திருதராஷ்டிரனுக்கு
உள்ளூற மகிழ்ச்சி என்பது அவன் குரலில் தெரிந்தாலும், அவன் மிகக் கஷ்டப்பட்டு முகத்தில்
வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு, யுதிஷ்டிரன் சொல்வது தனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கும்
செய்தி எனக் காட்டிக் கொண்டான். “இது மட்டும்
போதாது யுதிஷ்டிரா! இதனால் எல்லாம் இந்த சகோதரச் சண்டை முடிவுக்கு வந்துவிடும் எனத்
தோன்றவில்லை. ஹஸ்தினாபுரத்து மக்கள் உன்னையும்,
உன் சகோதரர்களையும் தங்கள் உயிராக நினைக்கின்றனர். தர்மமே அவதாரம் செய்திருக்கிறது உன் மூலமாக என எண்ணுகின்றனர். நீ தர்மத்தின் தேவதை எனப்போற்றுகின்றனர். துரியோதனன்
வலுக்கட்டாயமாய் உன்னிடமிருந்து யுவராஜா பதவியைப் பிடுங்கிக் கொண்டான் என்பது தெரிய
வந்தால் மக்கள் புரட்சி செய்வார்கள். அவர்களை
அடக்குவது அவ்வளவு எளிதல்ல.” திருதராஷ்டிரன் எப்படியேனும் யுதிஷ்டிரன் மூலமே இந்தப்
பிரச்னைக்கு முடிவு கட்ட விரும்பினான்.
“மாட்சிமை
பொருந்திய அரசே, மனம் விட்டுச் சொல்லுங்கள். ஆணையிடுங்கள்.
நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?
என்ன செய்தால் பரதச் சக்கரவர்த்தியால் ஸ்தாபிக்கப் பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யம் நிலைத்து
நிற்கும்? இந்த ராஜ்யத்தின் மேன்மைக்காக நான்
எதுவேண்டுமானாலும் செய்வேன்; என் தம்பிகளும் அதற்கு உடன்படுவார்கள்.” என்றான்.
“அது
சரி, அது சரி” திருதராஷ்டிரன் கைகளைப் பிசைந்து கொண்டான். அரியணையில் கை முஷ்டிகளால் ஓங்கிக் குத்தினான். என்ன செய்வது எனப்புரியாமல் தவித்தான். பின்னர்
யுதிஷ்டிரனிடம், “குழந்தாய், நீ பதவியை விட்டு விலகினாலும் ஹஸ்தினாபுரத்தில் உன்னால்
நிம்மதியாக வாழ முடியாது. துரியோதனன் வாழ விடமாட்டான்.
அதுதான் என்ன செய்வதெனப் புரியாமல் தவிக்கிறேன்.”
திருதராஷ்டிரனின்
தர்மசங்கடத்தைக் குறைக்க உதவினவன் போல யுதிஷ்டிரன் நகைத்தான். தனக்கு இதெல்லாம் ஒன்றும் புதிய விஷயமில்லை, ஏற்கெனவே
எதிர்பார்த்ததுதான் என இதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்தான். “அரசே, நாங்கள் ஹஸ்தினாபுரத்தை
விட்டே, இந்த நாட்டை விட்டே சென்று விடுகிறோம். காட்டுக்குச் சென்றுவிடுகிறோம்.” என்றான்.
“இல்லை,
இல்லை, அதெல்லாம் வேண்டாம்.” திருதராஷ்டிரன் குரல் நடுங்கியது. மீண்டும் பீஷ்மரை உதவிக்கு அழைப்பவன் போல் அவர்
பக்கம் பார்த்தான். பின்னர் அதே நடுக்கமான
குரலில், “நீங்கள் காட்டுக்கெல்லாம் போக வேண்டாம். வாரணாவதம் போய்ச் சில மாதங்கள் அங்கே தங்கி இருங்கள். அங்கே கடவுள்களுக்கெல்லாம் கடவுளான மஹாதேவருக்கு
ஒரு விழா நடைபெறப் போகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த விழாவில் பங்கெடுக்க வருகின்றனர். நீங்கள் அதில் கலந்து கொண்டாற்போலவும் இருக்கும். அந்த விழாவுக்காக உழைத்தாற்போலவும் இருக்கும். சில மாதங்கள் நீங்கள் இங்கிருக்கவில்லை எனில் துரியோதனனும்
மனம் அமைதியடைவான். அவர்களுடைய சந்தேகமும்
நீங்கும். அதன் பின்னர்…..பின்னர்……. நீங்கள் ஹஸ்தினாபுரம் திரும்பலாம்.”
“பெரியப்பா,”
முதல்முறையாக உறவுப் பெயர் சொல்லி அழைத்த யுதிஷ்டிரன், “எனக்குப்புரிந்து விட்டது.
நாங்கள் என்ன செய்யவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களோ அதை உங்கள் உத்தரவாக எண்ணித்
தலைமேல் சுமந்து அதை நிறைவேற்றுவோம். கவலைப்படாதீர்கள். நான் இன்றே யுவராஜா பதவியைத் துறந்துவிட்டேன்.”
இதைச் சொல்கையில் யுதிஷ்டிரன் குரலில் எந்தவிதமான வருத்தமும் தெரியவில்லை. “எங்கள் தாய் குந்தியுடனும், என் மற்ற சகோதரர்கள்
நால்வருடனும், நான் நாளை மறுநாள் வாரணாவதம் கிளம்பி விடுகிறேன்.”
2 comments:
rombaaaaa naal kalichu intha pakkam vanthirukken
திருத்ராஷ்ட்ரன் ரொம்ப சுவாரசியமான கேரக்டர். வில்லாதி வில்லத்தனம் இருந்தும் பரிதாபம் எப்படியோ வரமாதிரி அமைஞ்ச பாத்திரம். அதிகம் ஆராயப்படாத கேரக்டர். நீங்க இதைப் பத்தி எழுதுறது நிச்சயமா unique.
Post a Comment