பானுமதி மேலும் கூறினாள்: “ஆகவே
கண்ணா, நீர் வரப் போகும் சேதி கிடைத்ததுமே நான் ஆர்யபுத்திரரிடம், உங்களைச் சந்திக்க
அனுமதி வாங்கினேன். நான் உங்கள் விருந்தாவனத்தின்
ஒரு கோபி எனப் பலமுறை கனவு கண்டிருக்கிறேன்.”
ஒரு நீண்ட பெருமூச்சை விட்ட பானுமதிக்குத் தான் ஒரு அரசகுமாரியாக இராமல், கோபியாகவே
இருந்திருக்கக் கூடாதா என்ற எண்ணம் இருப்பதாகக் கண்ணன் நினைத்துக் கொண்டான். வெளிப்படையாக துரியோதனனை நேரில் பார்த்துக் கண்ணன், “துரியோதனா, நான் இவ்வளவு பயங்கரமான ஆள் என எனக்கே
இப்போது தான் தெரிய வந்துள்ளது. இது தெரிந்திருந்தால்
நான் ஹஸ்தினாபுரம் வரவே மிகவும் யோசித்திருப்பேனே. வந்திருக்கவே மாட்டேனே!” என்றான் கண்ணன்.
அதற்கு துரியோதனன், “ஓ, இவள்
என்னை மிகவும் தொந்திரவு செய்கிறாள். அதுவும்
நீ வரப் போவதைத் தெரிந்து கொண்ட பின்னர் இவளது தொந்திரவு மிகவும் அதிகம் ஆகிவிட்டது. உன் வீர, தீர சாகசங்களைத் தவிர்த்து வேறெதுவும்
பேச மறுத்துவிட்டாள். நீ சிறுவனாக இருந்தபோது
மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடிக் களித்திருக்க வேண்டும் கண்ணா, வீடுகளுக்குள்ளாக இருக்கும் பெண்கள் கூட உன்னை நினைத்தால்
பைத்தியமாகி விடுகின்றனரே! என்னப்பா மாயம்
இது!” என்றான்.
“ஆர்யபுத்திரரே, வாசுதேவனிடம்
நான் பேசுகிறேனே. என்னைப்பேச விடுங்கள். இத்தனை நாட்களாக நீங்கள் தானே அவருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள். பின்னால் எனக்கு வாசுதேவனிடம் பேசுவதற்கு இதைப்
போன்றதொரு சந்தர்ப்பம் வாய்க்குமோ, வாய்க்காதோ!
வாசுதேவா, நீர் உன் கோபியரை நினைத்துக் கொண்டிருக்கிறீரா அல்லது அடியோடு மறந்துவிட்டீரா?” பானுமதிக்குத் திடீரென சந்தேகம் வந்தது.
“என்னால் அவர்களை எப்படி மறக்கமுடியும்
இளவரசி! அவர்கள் என் வாழ்வின் ஒரு பகுதி. என் ஜீவனின் ஒரு அங்கம்.” என்றான் கண்ணன் தன் கண்களால்
தொலைதூரத்தில் பார்த்துக் கொண்டு.
“அப்படியா? எனில் நானும் அந்த கோபியரில் ஒருத்தியாக ஆகி விட்டால்? வாசுதேவா!
நானும் உன் வாழ்க்கையின் அங்கமாகிவிடுவேன் இல்லையா?” பானுமதி கேட்டாள். அவள் பேச்சு மும்முரத்தில் கிருஷ்ணனை மரியாதையாக
அழைப்பதை விட்டு விட்டாள். கிருஷ்ணன் அவளிடம்,
“இளவரசி, நீங்கள் ஏன் கோபியாக வேண்டும்! நீங்கள்
கோபியாக முடியாது. இந்த அஸ்தினாபுரத்துப்
பட்டத்து இளவரசனின் பட்டத்து இளவரசி நீங்கள்.
ஒரு நாள் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் பட்ட மஹிஷியாக ஆகப் போகிறீர்கள்.” என்றான்
கண்ணன். வேடிக்கை செய்யும் குரலில் கண்ணன்
பேசினான். ஆனால் பானுமதியோ அதை லட்சியமே செய்யவில்லை. “ என் பேச்சை ஒதுக்கிவிட்டு வேறு பேச்சுக்கு மாறாதீர்கள்.”
என்றவள் தன் உதடுகளைக் கொஞ்சலாகப் பிதுக்கிய வண்ணம் மேலும் கூறினாள்: “ நான் ஒரு பட்டமஹிஷியாக ஆவேனோ என்னமோ எனக்கு அது
பற்றித் தெரியாது. ஆனால், இந்த உலகம், இந்த
மலைகள், செடிகள், கொடிகள், அதில் பூக்கும் பூக்கள், இவை மிகப் பிடிக்கும். இந்த அரண்மனையின் அழகிய பூந்தோட்டத்துப் பூக்களின்
நறுமணங்களுக்கு நடுவே வீடு கட்டிக் கொண்டு அந்த சுகந்தங்களை நுகர்ந்து கொண்டு வாழ விரும்புகிறேன்.
ஆடலும், பாடலுமாக இனிமையானதொரு வாழ்க்கையையே விரும்புகிறேன். வாசுதேவா, விருந்தாவனத்தில் உன் வாழ்க்கை அப்படித்
தானே நடந்தது! ஆம், அப்படித் தான் கேள்விப்
பட்டேன். உன் புல்லாங்குழலின் இனிமையான இசையைக்
கேட்டுவிட்டு கோபியர் எல்லாம் தங்கள் வேலைகளைக் கூட மறந்து உன்னைத் தேடி ஓடோடி வருவார்களாமே! அவ்வாறே நானும் ஒரு கோபியாக வர விரும்புகிறேன்.”
சிறு குழந்தை போலப் பேசிய அவள்
பேச்சுக்கள் கண்ணனுக்குச் சிரிப்பை வரவழைத்தன.
அவன் முகத்தில் ஹஸ்தினாபுரம் வந்ததில் இருந்து இத்தனை நாட்களாகக் காணாத அந்தப்
பழைய மயக்கும் சிரிப்புக் காணப்பட்டது. துரியோதனனைப் பார்த்து, வேடிக்கையாக, “துரியோதனா,
என்னப்பா இது? நீ இன்னமும் கவனமாக இருக்க வேண்டும்
போலுள்ளதே! இவள் உன்னை விட்டு விட்டு என்னுடன்
வந்துவிடப் போகிறாள். எச்சரிக்கை!” என்றான்
கேலியாக.
“ஓ, ஓ, இவள் ஒரு வாயாடி. எப்போதும் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே கிருஷ்ணா! பகல் முழுவதும் பேசுவது போதாது என நினைத்து இரவில்
தூக்கத்திலும் இப்படித் தான் பேசிக் கொண்டிருப்பாள். நகைப்புக்கு இடமாகும் விஷயங்களைக் குறித்தே பேசுகிறாள். திடீரென ஒரு நாள் அவள் பைத்தியமானால் ஆச்சரியப்
பட முடியாது!” மிகச் சாதாரணமாக இதைக் கூறிய
துரியோதனன், பெரிய குரலில் சிரித்தான். உள்ளூர
வருந்திய பானுமதி வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், போலியான திகிலுடன், “நான் பைத்தியமா! இதோ பார், வாசுதேவா! என்னைப் பார்த்தால் அப்படியா தோன்றுகிறது!” என்று
மேலும் தொடர்ந்தாள். அவள் மேலே தொடர்ந்து பேசியதைக்
கவனித்த கிருஷ்ணனுக்கு பானுமதிக்கும் வலுக்கட்டாயமாக மதுவைப் புகட்டி இருப்பார்களோ
எனத் தோன்றியது.
“நான் பைத்தியம் இல்லை வாசுதேவா! இதோ இந்த மனிதர் தான் பைத்தியம். அதிலும் தான் சக்கரவர்த்தியாக வேண்டும் என்ற பைத்தியம். எப்போதும் இவர் சிந்தனையில் தான் பட்டத்து இளவரசனாகவும்,
பின்னர் அரசனாகவும் ஆக வேண்டும் என்ற நினைப்புத் தான். அதற்காக இந்த மனிதனைக் கொல்ல வேண்டும்; அந்த மனிதனை
நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் எனத் திட்டங்கள் போடுகிறார். இதற்காக இவருடைய மாமா சகுனியிடமும், ஆருயிர் நண்பர்
கர்ணனிடமும் ரகசியப் பேச்சு வார்த்தைகள் நடத்துகிறார். மூவரும் கலந்து என்னதான் பேசுவார்களோ! எப்போதும் யாரானும் ஒருத்தரை ஒழிக்கவோ, அழிக்கவோ
திட்டங்கள். வேறு விஷயங்களே பேசுவதற்கு இல்லையா
என யோசித்து யோசித்து அலுத்துவிட்டேன். எல்லாம்
வல்ல அந்த மஹாதேவனுக்குத் தான் தெரியும். இவர்
என்றைக்காவது இதயபூர்வமாக என்னிடம் ஒரு வார்த்தை அன்பாகப் பேசியோ, அல்லது என்னைப் பார்த்துக்
காதலுடனோ, அன்புடனோ புன்னகையாவது புரிந்திருப்பாரா? சந்தேகமே!
நானும் எதிர்பார்த்து அலுத்துவிட்டேன்.
இப்போது சொல் வாசுதேவா, யார் பைத்தியம்!
நானா? இல்லை, ஆர்யபுத்திரரா?” மூச்சுவிடாமல்
பானுமதி பேசி நிறுத்தினாள். துரியோதனன் அளவுக்கு
மிஞ்சிக் குடித்திருந்தாலும் நிதானத்தை இழக்கவில்லை. ஆனால் இந்த பானுமதியைக் கொஞ்சம் போல் குடிக்க வற்புறுத்தியதற்கு
இவள் இவ்வளவு உளற ஆரம்பித்துவிட்டாளே. இவளை
மேன்மேலும் பேசவிட்டால் தனக்கு ஆபத்து நேரிடுமே.
துரியோதனன் கலவரமடைந்தான்.
“வாயை மூடு, பானுமதி!” என்று
அவளை அதட்டினான்.
13 comments:
பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
வாழ்த்துக்கள்...
துரியோதனன் 'வாயை மூடு' என்று கோபப்படும் பொழுது அவனை அடித்துப் போடும் ஆத்திரம் வருவது, உங்கள் கதை சொல்லும் திறமையின் வெற்றி என்பேன். பானுமதி பாத்திரத்தின் பரிமாணங்களை இன்னும் அறிய ஆவல்.
பானுமதியைப் பற்றி இதுவரை அறிந்திராத அளவுக்கு அறிமுகமும் தொடர்ந்து குணசித்திரமும் தந்திருக்கிறீர்கள். முந்தைய பதிவுகளில் பானுமதியை வர்ணித்திருக்கும் விதம் அப்பொழுது மலர்ந்த மலரை விட அழகு, தேனில் தோய்த்தப் பழத்தை விட இனிமை. எத்தனை முறை படித்தாலும் திகட்டவேயில்லை. 'பிரம்மன் அவளை சதையோடும் ரத்தத்தோடும் படைக்கவில்லை மணம் வீசும் மலர்களாலே படைத்தான்' என்ற வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. 'மலர்களால் படைத்தான்' என இல்லாமல் 'மணம் வீசும் மலர்களால் படைத்தான்' என அமைந்தது தற்செயலா திட்டமா? ஓவியனுக்கும் கவிஞனுக்கும் இடையே இருக்கும் வேறுபாடு இந்த வரியில். நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அதைவிட அனுபவிப்பது நல்லதென்று நிறுத்திக்கொள்கிறேன் (சுயநலத்தோடு).
ஆர்யபுத்ரன் என்பது பொதுவான பெயரா, துரியோதனனுக்கு மட்டுமா?
கண்ணனுக்கும் பானுமதிக்குமிடையே ஏதேனும் நிறைவேறாத காதல் இருந்ததோ? (இருந்திருக்கக் கூடாதோ என்று கொஞ்சம் ஏக்கம் வரும்படி எழுதியிருக்கிறீர்கள் :-)
திண்டுக்கல் தனபாலன், தொடர்ந்த வரவுக்கு நன்றி.
அப்பாதுரை, அந்த நேரத்தில் என் மனதில் தோன்றும் எண்ணங்களே வருகின்றன. மீண்டும் திருத்துவதில்லை. சில சமயம் எழுத்துப் பிழையோ, தட்டச்சுப் பிழையோ கண்களில் படுவது அதனால் தான். மற்றபடி எல்லாம் தானாக வருவதே.
ஆர்யபுத்ர, என்னும் அழைப்புச் சொல் எல்லாரையுமே குறிக்கும். தங்களை விட வயதில், அனுபவத்தில் பெரியவர்களை அழைக்கும் வழக்கம் இது. ஆரிய என்பது தான் ஐய எனத் தமிழில் வழங்குவதாகச் சிலர் கூற்று. ஐய என்னும் விளிச்சொல்லே ஐயர் என மாறியதாகவும் சொல்வார்கள். ம.பி., உ.பி., ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, உத்தராகன்ட் ஆகிய பகுதிகளை ஆர்யவர்த்தம் என அழைப்பார்கள். பிஹாரும் அதன் கிழக்குப்பகுதிகளும் மகதம். வட கிழக்குப் பகுதிகள் கெளடம். ராஜஸ்தானின் தென்பகுதி, குஜராத், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு சேர்ந்த பகுதி திராவிடம். ஆகவே வட மாநிலங்களின் ஆரிய வர்த்தத்து அரசர்களையும் ஆர்ய புத்ர என அழைக்கும் வழக்கம் உண்டு.
கண்ணனுக்கும் பானுமதிக்குமிடையே ஏதேனும் நிறைவேறாத காதல் இருந்ததோ? //
இல்லை; அதோடு பானுமதி அப்போதுதான் முதல்முதலாகக் கண்ணனைப் பார்க்கிறாள். பொதுவாகவே கண்ணனை எந்தப் பெண்ணும் விரும்புகிறாள்; அவனை நம்புகிறாள்; தன் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்கிறாள். இதனால் அந்தப் பெண் கண்ணனிடம் காதல் கொண்டாள் எனச் சொல்ல முடியாது. கண்ணனிடம் பற்று இருக்கும். காதல் இருக்காது. சிலருக்குச் சிலரிடம் நம்பிக்கையும், பற்றும் இருக்கும். அவர்களிடம் மனம் திறப்பார்கள். ஆனால் ஒன்று இதன் மூலம் அந்தக் கால கட்டத்தில் பெண்களை அடக்கி ஆளவில்லை என்றும் அவர்கள் விருப்பம் போல் தான் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதும் மஹாபாரதம் முழுதும் படித்தால் புரியும். :))))))
//அவள் மேலே தொடர்ந்து பேசியதைக் கவனித்த கிருஷ்ணனுக்கு பானுமதிக்கும் வலுக்கட்டாயமாக மதுவைப் புகட்டி இருப்பார்களோ எனத் தோன்றியது.//
பானுமதி அப்படிப் பேசுவதற்குக் காரணம் சொல்வது போல இல்லை?
அந்தக் காலத்தில் பெண்களை அடக்கி ஆளவில்லை சரி, மது புகட்டி விடுவார்களா?!! :))
துரியோதனன் பேச்சில் பானு மதியை மட்டம் தட்டுவதும் பானுமதி மனம் வருந்தினாலும் வெளிக் காட்டாமல் கண்ணனிடம் மையல் வார்த்தைகள் பேசுவதும் புதிதாக இருக்கின்றன. உங்கள் எழுத்துகள் அப்பாதுரை சொல்வது போல கவர்கின்றன.
பானுமதிக்குக் கண்ணன் மேல் மயக்கம் இருந்தது என்பது போலத்தான் உருவகம் வருகிறது!
//அந்தக் கால கட்டத்தில் பெண்களை அடக்கி ஆளவில்லை என்றும் அவர்கள் விருப்பம் போல் தான் இருந்து வந்திருக்கிறார்கள்
ஓரளவுக்கு உண்மை? அடக்கி ஆளவில்லை என்றாலும் இன்னது தான் செய்யலாம் என்ற ஒரு வரம்புக்குள் வைத்திருந்ததாகவே தோன்றுகிறது - புராணங்களிலும் இதைத்தான் பார்க்க முடிகிறது. என் சொல்லை மீறி உன் தந்தையைப் பார்க்கப் போகாதே என்று தாண்டவமாடவில்லையா? பெண்களை மதித்தார்கள் என்பது தெரிகிறது. ஆனால் பெண்கள் ஆண்களுக்கு ஒரு தட்டு கீழே என்ற நிலையில் தான் வைத்திருந்ததாகப் புரிகிறது.
ஐய.. விளக்கம் பிரமாதம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உண்மையாகவே தோன்றுகிறது.
பெண்கள் தங்கள் விருப்பப்படி செயல்பட்டார்கள் என்பதை துவாபர யுகக் கதைகளை விட க்ரேதா யுகக் கதைகளில் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
த்ரேதாயுகம்.. :)
Post a Comment