“ஏன்? ஜைமினி நல்ல மருத்துவர். அவர் நன்றாகவே பார்த்துக்
கொள்ளுவார் இவனை!” என்று வியாசர் பதிலளித்தார்.
“ஆனால், மதிப்புக்குரிய ஆசாரியரே, அந்த மஹாதேவன், ஈசன் என் உதவிக்கு வந்திருக்கிறான்.”
உத்தவனின் மனம் வேகமாக யோசித்துக் கொண்டிருந்தது.
யோசனைகளுக்கு இடையே அவன் எப்படியோ இப்போதைக்கு அந்த இரு பெண்களின் பிடியிலிருந்து
தப்பினாலும் தான் நிரந்தரமாய்த் தப்பவேண்டுமெனில் இங்கிருந்து ராக்ஷஸவர்த்தம் செல்வதே
ஒரே வழி என நிச்சயம் செய்துவிட்டான். இதன்
மூலம் அவன் உயிருக்குப்பாதுகாப்பு இல்லை எனினும் இந்த சங்கடத்தை விட அது எவ்வளவோ பரவாயில்லை.
ஆனால் கார்க்கோடகனுக்கு உத்தவன் என்ன சொல்கிறான் என்ற ஆவல்! “எப்படிச் சொல்கிறாய்,
உன் உதவிக்குக் கடவுள் வந்திருப்பதாய்?” என்று உத்தவனைக் கேட்டான்.
“மாமா அவர்களே, ஐந்து சகோதரர்களும் உயிருடன் தான்
இருக்கின்றனர்!” என்ற உத்தவன் தொடர்ந்து, “ஆகவே நான் இந்தப் பையனுடன் ராக்ஷஸவர்த்தம்
சென்று அவர்களை அழைத்து வந்துவிடுகிறேன். கிருஷ்ணன் இங்கே வந்ததும், அவர்களை துவாரகை
அழைத்துச் செல்வது குறித்து முடிவு செய்யலாம்.” என்றான். உத்தவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ
என அனைவ்வரும் அவனைத் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தார்கள். “நீயா?
ராக்ஷஸவர்த்தம் செல்வதா?” கார்க்கோடகன் திகைப்பின் விளிம்பில் கேட்க, அவன் மனைவியான
ரவிகாவோ உத்தவனை விடுவதாயில்லை. “அங்கே போய் உனக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என் பெண்களின்
கதி என்னாவது? நீ ராக்ஷஸவர்த்தம் செல்லவே கூடாது!”
என்று தன் காரியத்திலேயே கண்ணாக இருந்தாள். ஆனால் உத்தவன் திட்டமாக, “நான் செல்லப்
போகிறேன் மாமி அவர்களே! நான் இங்கு வந்ததே
அதற்காகத் தானே!” என்றான் உத்தவன். அவன் மனம்
மகிழ்ச்சியில் கூத்தாடியது. ராக்ஷஸவர்த்தம்
சென்று ராக்ஷசர்களால் தான் சாப்பிடப்படுவது இந்தப் பெண்களை மணப்பதை விட மேல். அவன் மனம் மகிழ்ச்சி அடைந்தது. வியாசரால் உத்தவன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.
ஐந்து சகோதரர்களையும், குந்தியையும் கண்டுபிடித்துக்
காப்பாற்ற வேண்டும் அல்லது அந்த முயற்சியில் ராக்ஷசர்களால் கொல்லப்படவேண்டும். இந்த இரு சகோதரிகளிடமிருந்து தப்ப அவனுக்கு வேறு
வழி இல்லை. ஆகவே ராக்ஷஸவர்த்தம் செல்வதே மேல்
எனத் தீர்மானித்துவிட்டான்.
“ஆஹா, அப்படியே செய் மகனே! உன்னால் முடியும்! அந்தப் பசுபதிநாதன் உன்னைக் காத்து அருளுவான். என் மக்களே! எவரும் கவலைப் படாதீர்கள். அவன் இங்கே இந்த வேலைக்காகவே அனுப்பப் பட்டான் அல்லவா!
அந்தப் பசுபதி நாதன் பார்த்துக்கொள்ளுவான்.
ரவிகா தன் நெற்றியில் தன்னிரு கரங்களால் ஓங்கி அடித்துக் கொண்டாள். அப்போது அவள் கைகளில் தோள்பட்டை வரை அவள் அணிந்திருந்த
வளையல்களின் “கலகல”வென்ற சப்தத்தில் கூட துக்கம் நிறைந்திருப்பதாகத் தோன்றியது. அவள் மகள்கள் இருவரும் அதிர்ச்சியில் மயங்கிக் கீழே
விழுந்துவிட்டார்கள். அவர்களுக்குள் நடந்த இந்த சம்பாஷணையைத் தீவிரமாகக் கேட்டுக் கொண்டிருந்த
ஆர்யகன், சட்டெனத் திரும்பி ஆசாரியரைப்பார்த்தான். திடீரெனத் தோன்றிய மன எழுச்சியால் நடுங்கிய கிறீச்சென்ற
குரலில், “நீங்கள் சொல்வது சரியே ஆசாரியரே!’ என்றான். திகைப்புடன் ஆர்யகனைப் பார்த்த
அனைவரும் அவன் உடலே நடுங்கிக் கொண்டிருந்ததைக் கண்டனர். ஆஹா, பசுபதிநாதன் அவன் உடலில் ஆவிர்ப்பவித்திருக்கிறான். அவன் உதடுகள், கைகள் என அனைத்தும் நடுங்குகின்றன. அவன் உதடுகளிலிருந்து இப்போது வரும் வார்த்தைகள்
அவன் சொந்த வார்த்தைகள் அல்ல. அந்தப் பசுபதிநாதன்
அவன் உள்ளிருந்து அவனைப் பேச வைக்கிறான். நாகர்கள்
அனைவரும் பக்தியோடு ஆர்யகனைப் பார்த்தனர்.
மிகுந்த வலியும், வேதனையும் அனுபவிப்பவனைப் போல்
ஆர்யகன் தன் தலையை மெல்லத் தூக்கினான். அவன்
கண்கள் அப்படியும் இப்படியுமாய் உருண்டன. சற்று
நேரம் இப்படிப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யகன் மீண்டும் நிதானமடைந்தவன் போலக் காணப்
பட்டான். ஒரு நிலைக்கு வந்துவிட்டான் என்பது
புரிந்தது. கண்கள் மின்னலெனப் பளிச்சிட, அதில்
இப்போது தெரிந்த பாவம் தனியானதொரு அதிகாரத்தை அவன் பெற்றிருப்பதைக் காட்டியது. குரலும் அவன் குரலாகத் தெரியவில்லை. வித்தியாசமான
அதே சமயம் அழுத்தமான உறுதியான குரலில் கட்டளையிடும் தொனியில் வந்தன வார்த்தைகள். இல்லை;
இது ஆர்யகன் குரலே இல்லை. உத்தவன் பிரமித்துப்
போய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். “அவன் உடலில்
ஓடுவது ஆர்யகன் ரத்தம்! அவன் சென்று வென்று நாகர்களின் பெருமையை நிலைநாட்டி அவர்கள்
அச்சமில்லாதவர்கள் என்பதை நிரூபிப்பான்!” அனைவரும் வியப்புற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே
அவன் கண்கள் தாமாக மூடின. ஒரு நீண்ட பெருமூச்சுக் கேட்டது. ஆஹா, பசுபதிநாதர் பேசி இருக்கிறார். உத்தவன் அவர்களிடமிருந்து விடைபெறுகையில் பாதுகாப்பு
இல்லாதது போல் உணர்ந்தான். என்றாலும் இந்தத்தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்து தான்
தப்பியது அவனுக்கு மகிழ்ச்சியே! சிகுரி நாகன்
எல்லைக் கிராமம் ஆன லஹூரியாவுக்கு வந்து அவனுக்கு விடை கொடுத்தான். ஐந்து சகோதரர்கள் இருக்குமிடம் இப்போது உத்தவனுக்குத்
தெரிந்துவிட்டது. கிருஷ்ணன் அவனை நம்பி ஒப்படைத்த
மிக முக்கியமானதொரு பணியை அவன் அநேகமாக நிறைவேற்றிவிட்டான்.
அதோடு மட்டுமில்லாமல் இரட்டைச் சகோதரிகள் தற்கொலை
செய்து கொள்வதிலிருந்து காப்பாற்றப் பட்டுவிட்டார்கள். அவன் இங்கே இருந்து செல்வதற்கு
இது சரியான சந்தர்ப்பம். அவன் இல்லாமல் அந்தப்
பெண்கள் சிறிது நாட்களில் அவனுடன் தங்களுக்கு ஏற்பட்ட (அவர்கள் வரையிலும்) சோகமான அனுபவங்களை
முற்றிலும் மறந்துவிட்டு விரைவில் வேறு கணவனையோ, கணவர்களையோ தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.
கொஞ்சம் அதிசயமாக இருந்தாலும் அந்த ராக்ஷஸச் சிறுவன்
நிகும்பனுக்கு உத்தவனை மிகவும் பிடித்துவிட்டது.
அதற்குக் காரணம் அவன் பீமனின் சகோதரன் என்பதே. அந்த ராக்ஷஸச் சிறுவனின் இருண்ட மனதில் பீமன் வலுவையும்,
பலத்தையும் கொடுக்கும் ஒரு பேரொளியாகத் தோன்றுகிறான் போலும்! மேலும் மேலும் யோசித்த உத்தவனுக்கு அவன் இந்த ராக்ஷசர்களால்
சாப்பிடப் பட்டால் என்ன ஆகும் என்பது புரியாத புதிராக இருந்தது. நாககூடத்துக்குக் கிருஷ்ணன் வந்து காத்திருப்பான். தான் ராக்ஷசர்களால் சாப்பிடப் பட்டதை அறிந்து வருந்துவான். மற்ற எவர் இழப்பையும் விடத் தன் இழப்புக் கண்ணனுக்குத்
தாங்க முடியாததொன்றாக இருக்கும். அந்த இரட்டையர்கள் கூட அவனை மறக்கும் வரை அவனை நினைத்து
அழலாம்; அடடா, சோகத்தில் அந்தப் பெண்கள் வேறு ஏதேனும் முடிவை எடுக்காமல் இருக்க வேண்டுமே!
உத்தவனுக்குத் தன்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது. அவன் தந்தை தேவபாகருக்கும் அவன் இழப்புப் பெரிய
அளவிலேயே இருக்கும். அவன் தாய் கம்சாவோ (கம்சனின் சொந்தச் சகோதரி) வெளிப்படையாகக் கண்ணீரைக்
கொட்டுவாள். ஆனால் உள்ளூர அவளுக்கு அவ்வளவு
வருத்தம் இருக்காது. பிறந்ததில் இருந்து தான்
வளர்த்தறியாத மகனிடம் அவளுக்குப் பாசம் என்பதே இருந்ததில்லையே! அதோடு கிருஷ்ணனுக்குப்
பக்ஷமாக இருக்கிறேன் என்பதாலும் அவளுக்கு என்னைப் பிடிப்பதில்லை.
ஆம், ராக்ஷசர்கள் என்னைச் சாப்பிடப் போகிறார்கள். அது தான் என் முடிவு. அதோடு உத்தவன் கதை முடிந்தது. உத்தவன் தனக்குள்ளே கணக்கிட்டுக் கொண்டு தனக்குத்
தானே சிரித்துக் கொண்டான்.
6 comments:
ஆர்யகனின் செயல்கள் வியப்புடன் சுவாரஸ்யம்...
எழுத்துகள் வேறு font-யை பயன்படுத்தி உள்ளீர்கள்... படிக்க சிறிது சிரமம் தான்...
இரண்டு பேசும் பொற்சித்திரங்களை விட்டு விட்டு 'சாப்பிடலாம் வாங்க' என்று காத்திருக்கும் கூட்டத்தை நோக்கி கண்ணனுக்காக எண்ணங்களோடு உத்தவன் பயணம். இதுவும் ஒரு ஆன்மீகப் பயணம்தான்.
கதை அருமையாகப்போகிறது.பகிர்வுக்கு ந்ன்றிகள்.
டிடி, எனக்கு நல்லாத் தானே தெரியுது!!!!!! ஆனால் சில சமயங்களில் பலரும் இப்படியான புகாரைச் சொல்கின்றனர். வேறு ஃபான்ட் எல்லாம் பயன்படுத்த வில்லை. நோட்பேடில் இருந்து காப்பி, பேஸ்ட் பண்ணி இருக்கவேண்டுமோ! நான் நேரடியாக வேர்டில் இருந்து காப்பி செய்தேன்.
அட ஶ்ரீராம், இது என்ன? அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி. ஆனால் ஐந்தே ஐந்து வலைப்பக்கம் தான் சொல்லி இருக்கீங்க.
பேசும் பொற்சித்திரமே
சாப்பிடலாம் வாங்க
கண்ணனுக்காக
எண்ணங்கள்
ஆன்மிகப் பயணம்.
மிச்சம்???????:))))) கண்டு பிடிங்க!
வாங்க வைகோ சார், மிக்க நன்றி.
Post a Comment