Monday, July 21, 2014

குதூகலமான மக்களும், கொந்தளிக்கும் மணமகளும்!

காம்பில்ய நகரமே கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தது.  எங்கெங்கும் மக்கள் வெள்ளம்.  உற்சாகம், ஆடல், பாடல், கேளிக்கைகள்! பல்வேறு விதமான போட்டிகள்.  நடனமணிகளின் நாட்டியக் கலை நிகழ்ச்சிகள்! பாடகர்களின் சிறந்த பாடல் போட்டிகள்!  இன்னிசை விருந்து! இவற்றோடு ஆங்காங்கே பெரிய  பெரிய அடுப்புக்களில் மகத்தான விருந்து சமைக்கப்பட்டுக் கூடி இருக்கும் மக்களுக்கும், வேடிக்கை பார்க்க வரும் மக்களுக்கும் வெளியூர்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கும் விருந்து படைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. திரௌபதியின் சுயம்வரம் மிகவும் வெற்றிகரமாக முடிந்ததோடல்லாமல், பரத வம்சத்தினரின் ஒரு பிரிவான குருவம்சத்துச் சக்கரவர்த்தியாக இருந்த பாண்டுவின் மூன்றாம் மகன், இளவரசன் பாண்டவ குமாரன், நிகரற்ற வில் வித்தை வீரன் அர்ஜுனன் போட்டியில் ஜெயித்து திரௌபதியை வென்றது குறித்து அனைவருக்கும் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி.

 அரசர்கள், பேரரசர்கள் வந்து  இறங்கி இருந்த கூடாரங்களில் பலருக்கும் இந்தப் போட்டியின் முடிவினால் மனம் உடைந்துவிட்டது.  சிலருக்கு சந்தோஷமாகவும் இருந்தது. பெரும்பாலோருக்கு மனதில் வருத்தமே! அதிலும் பாண்டவர்கள் உயிருடன் இருப்பது குறித்துப் பெருவாரியான அரசர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் சிலருக்கு அதனால் வருத்தமே!  தங்களுக்குள் ஏற்பட்ட கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் தவித்தனர்.  இப்போது பாண்டவர்களுடன் ஏற்படப் போகும் இந்தத் திருமண பந்தத்தால் ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் கூட்டணி எப்படி, எந்தத் திசையில் செல்லும் எனச் சிலர் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தனர்.  யார் எவருக்கு எப்போது ஆதரவளிப்பார் எனத் தங்களுக்குள் கணித்துக்கொண்டனர்.

நகருக்கு வெளியே இப்படிக் கொண்டாட்டங்களும், குதூகலங்களும், ஆடல், பாடல்கள் கேளிக்கைகளுமாகக் காட்சி அளிக்க, நகரின் உள்ளே மையமான பகுதியில் அமைந்திருந்த துருபதனின் அரண்மனையில் மட்டும் மௌனமே கோலோச்சியது.  அரண்மனைக்குள் நுழைந்து என்ன காரணம் என்று பார்ப்போமா?  எங்கே ஒருத்தரையும் காணவில்லையே!  அனைவரும் மௌனமாகவே பேசிக் கொள்கின்றனரே!  அதோ, அந்த அறைதான் துருபதனின் தனி ராஜாங்க அறை.  இங்கே தானே துருபதன் முக்கிய ஆலோசனைகளை நடத்துவான்!  உள்ளே எட்டிப் பார்ப்போம்!  ஆஹா!  இங்கே சிலர் அமர்ந்திருக்கின்றனர்.  அதோ துருபதனின் சிம்மாதனம்.  அதில் அமர்ந்திருப்பதும் அவனே!  ஆனால் இது என்ன ?  அவன் முகத்தில் மகிழ்வுக்குப் பதில் வருத்தம்!  மனச்சோர்வடைந்திருப்பவன் போல் காணப்படுகிறானே!

தன் கைகளால் தலையைத் தாங்கிய வண்ணம் ஏமாற்றமும், விரக்தியும், சோர்வும் கண்களில் தெரிய செய்வதறியாது ஏன் அமர்ந்திருக்கிறான்?  என்ன காரணம்! அவனருகே முகத்தைச் சுளித்த வண்ணம்  கடுகடுப்போடு காணப்படுவது த்ருஷ்டத்யும்னன்.  சத்யாஜித்தும் ஷிகண்டினும் கண்களில் ஆர்வம் மீதூற த்ருஷ்டத்யும்னனுக்குப் பின்னால் நின்று கொண்டு அனைவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதோ!  மணப்பெண் திரௌபதி!  என்ன இது? புது மணமகளுக்குரிய சந்தோஷத்தையே அவள் முகத்தில் பார்க்க முடியவில்லையே!  மாபெரும் துயரில் மூழ்கிப் பரிதாபமாகவன்றோ காட்சி அளிக்கிறாள்!  அவளருகே அமர்ந்திருக்கும் அந்தப் பெண்மணியை எங்கே பார்த்திருக்கிறோம்!  ஆம் அது குந்தி தேவி தான்.  சாட்சாத் குந்தியே தான்.  இது ஏன் திரௌபதியைப் பரிதாபம் பொங்கப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்? அவளருகே அமர்ந்திருப்பது துருபதனின் அரண்மனையின் ராஜ வம்சப் பெண்மணியர் போலும்!

அனைவருமாகக் கூடி என்ன செய்யப் போகின்றனர்?  ஏன் இங்கே கூடி இருக்கின்றனர்?  இன்னும் சிலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆவலுடன் வந்திருக்கின்றனரே!  ஆம், அதோ கிருஷ்ண வாசுதேவன்!  மாறாப் புன்னகையுடன் எது நடந்தாலும் கலங்காத திட நெஞ்சுடன் தன் சுயக் கட்டுப்பாட்டையும், நிதானத்தையும் இழக்காமல் நடைபெறப் போகும் ஆலோசனையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவனாக அமர்ந்திருக்கிறான். அவனுக்கு அடுத்து வரிசைப்படி அமர்ந்திருப்பவர்கள் பாண்டவர் ஐவரும். யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், நகுலன், சஹாதேவன்.


யுதிஷ்டிரன் தன் கண்ணியத்தை விடாமல்  சாந்தம் கண்களில் தெரிய, அமைதி பொங்கும் முகத்துடன் அமர்ந்திருந்தான்.  பீமன், நிகழ்ச்சியின் முக்கியத்துவம் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி தன் விளையாட்டுத்தனத்தை விட்டுவிட்டு அமர்ந்திருக்க நினைத்தாலும் அவன் இயல்பு அவனை அவ்வாறிருக்க விடவில்லை.  உள்ளூர இதை ரசித்தானோ என்னும்படியான முகபாவம்! அர்ஜுனன் ஆவல், ஏக்கம், ஆர்வம் அனைத்தையும் தன் கண்களில் காட்டியவண்ணம் வியாகூலமான முகத்துடன் அமர்ந்திருந்தான்.  நகுலனுக்கு இந்தக் கூட்டமே எரிச்சலைக் கொடுத்தது போலும்.  சஹாதேவனோ தனக்கும் இவற்றுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதவன் போல விண்ணிலிருந்து ஏதேனும் அசரீரி வந்து தங்களுக்கு ஆலோசனை கொடுக்குமோ என்னும் வண்ணம் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

துருபதனுக்கு எதிரே ஒரு உயரமான பீடத்தின் மேல் ஓர் மரப்பலகையில்  மான் தோலை விரித்து அதில் அமர்ந்திருந்தார் குரு வேத வியாசர் அவர்கள். அவரருகே வலப்பக்கமாக யஜர் மற்றும் உபயஜர் ஆகியோரும் காணப்பட்டனர்.  வேத வியாசரின் சீடர்களான தௌம்யர், ஜைமினி ஆகியோரும் வியாசருக்கு இடப்பக்கம் அமர்ந்திருந்தனர். இவர்களுக்கு நடுவே குரு சாந்தீபனியும் காணப்பட்டார்.  காம்பில்யத்துக்கு அருகிலிருந்த ஒரு முக்கியமான புண்ணிய தீர்த்தத்தில் வேத வியாசர் தன் குருகுலத்தை அப்போது ஸ்தாபித்து இருந்தார்.  அவர் காம்பில்யத்தின் சுயம்வரத்தின் முடிவைத் தெரிந்து கொள்ள வேண்டியே அங்கே காத்திருந்தார்.


போட்டியில் அர்ஜுனன் வென்றான் என்பது தெரிந்ததுமே அவர் காம்பில்யம் செல்லத் தயாரானார்.  அதற்கேற்றாற்போல் துருபதனும் ஆசாரியர் அங்கு வந்திருப்பதைத் தெரிந்து கொண்டு வியாசரைக் காம்பில்யத்துக்கு வருவதற்கு அழைப்பு அனுப்பி வைத்தான்.  அன்று காலை தான் வியாசர் தன் சீடர்களான தௌம்யரோடும், ஜைமினியோடும் அங்கே வருகை புரிந்திருந்தார்.  துருபதன் தன் பரிவாரங்களோடு அவரை எதிர்கொண்டு அழைத்து வந்தான்.  நதிக்கரையிலிருந்து  அரண்மனைக்கு வரும்வரை வியாசர் நடந்தே ஊர்வலமாக வந்தார்.  மக்கள் கூட்டம் வழியெங்கும் ஆசாரியரை வணங்கவும், ஆசிகளைப் பெறவும் காத்திருந்தது.  மக்கள் கூட்டத்துக்கு அவரவருக்குத் தேவையான ஆசிகளை வழங்கியும், மக்களுக்கு தரிசனம் கொடுத்தும் வியாசர் அரண்மனையை அடைந்தார்.

வியாசர் வந்ததுமே  அன்று நடைபெறவிருக்கும் குடும்பத்தினரின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேவையான ஆலோசனைகளைத் தரவேண்டும் என மன்னனால் கேட்டுக் கொள்ளப்பட்டார். மிகவும் அந்தரங்கமான கூட்டம் என்றும் பிரச்னை சிந்தித்துப்பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமான, எவரும் கேள்விப் படாத ஒன்று எனவும் சொல்லப்பட்டது.  அரச குடும்பத்தினரால் திரௌபதியின் கல்யாணக் கோலாகலங்களில் உற்சாகமாய்க் கலந்து கொள்ள முடியாமல் இந்தப் பிரச்னை தடுப்பதாயும், இப்போதைக்குப் பொதுமக்களுக்கு இது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை என்றும் முடிவு எடுத்த பின்னரே மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.  அனைவரும் மன்னன் துருபதனின் ராஜாங்க அறைக்குள் சென்று அமர்ந்ததும் கதவுகள், ஜன்னல்கள் கூட நன்கு அழுத்திச்  சார்த்தப்பட்டன.  வெளியே மந்திரி உத்போதனரே காவல் காத்தார்.  எவரும் அங்கே பேசப் போவதை ஒட்டுக்கேட்டுவிடக் கூடாது என்பதால் இந்த மாபெரும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.

அனைவரும் அமர்ந்ததும் வியாசர் பேச ஆரம்பித்தார். “மன்னா! அனைவருமே மிகக் கவலையிலும், குழப்பத்திலும் ஆழ்ந்திருக்கிறீர்கள்!  என்ன விஷயம்? ஏன் இப்படி இருக்கிறீர்கள்?” என்று வியாசரே ஆரம்பித்தும் வைத்தார்.  வாழ்வா, சாவா என்பதை நிர்ணயிக்கும் கடைசிப் போராட்டமாகத் தோன்றியது அவருக்கு.  சூழ்நிலையின் தாக்கத்தைப் புரிந்து கொண்ட அவர் வெளிப்படையாகப் பேசும்படி தன் சிரிப்பினால் அழைப்பு விடுத்தார்.  

“சுயம்வரம் தான் நல்லபடியாக நடந்து முடிந்து விட்டதே மன்னா!  உன் வாழ்நாளின் மாபெரும் சாதனை இது! உனக்கு மட்டுமில்லை;  கிருஷ்ண வாசுதேவனுக்கும் இது மாபெரும் வெற்றி!  சாதனை!  “என்ற வண்ணம் கிருஷ்ணனைப் பார்த்துச் சிரித்த வியாசர், “காம்பில்யமே இன்று கோலாகலத்தில் ஆழ்ந்துள்ளது.  அவ்வளவு ஏன்?  ஆர்யவர்த்தம் முழுமையுமே கோலாகலத்தோடு இருக்கிறது.  அனைவருமே இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.  இப்போது பார்த்து நீங்கள் அனைவரும் முகவாட்டத்துடன், உலகமே இடிந்து விழுந்துவிட்டாற்போல் இருக்க வேண்டிய காரணம் என்ன?”  என்று கேட்டார் வியாசர்!

துருபதன் தன் கரங்களைத் தலையிலிருந்து எடுத்தான். வியாசரைப் பார்த்தான். பின்னர் கிருஷ்ண வாசுதேவனைக் கடுமையாகப் பார்த்துக் கொண்டே, “நான் இந்த சுயம்வரத்தையே நடத்தி இருக்கக் கூடாது.  என் வாழ்நாளின் மிகப் பெரிய தோல்வியும் இது தான்;  சோகமும் இது தான்!” என்றான் வெறுப்போடு. “என்னதான் காரணம் என்று சொல், துருபதா!” என மீண்டும் கேட்டார் வியாசர்.


“என்ன காரணமா?  என்னவென்று சொல்வது, ஆசாரியரே!  இந்தப் பாண்டு புத்திரர்கள்  ஐவரும் என் மகள் கிருஷ்ணையை மணம் செய்துகொள்ளப் போகிறார்களாம்.  இது எங்கும் கேட்டிருக்கிறீர்களா?  ஒரே ஒரு பெண் ஐந்து ஆண்களை மணந்து கொள்வது என்பது?  எங்கேனும் உண்டா இப்படி ஒரு கொடுமை? இதற்கு என்ன சொல்வது?”   உள்ளார்ந்த சீற்றத்துடனும், அதனால் விளைந்த கண்ணீரால் தழுதழுக்கும் குரலுடனும் கூறினான் துருபதன்.   “என்ன?  ஆனால் எப்படி இது ஆரம்பம் ஆயிற்று?  யார் இப்படிக்கூறினார்கள்?” வியாசர் பிரச்னையின் ஆணிவேரைத் தெரிந்து கொள்ள விரும்பினார்.



13 comments:

ஸ்ரீராம். said...

கதாசிரியரே கதாபாத்திரத்தின் விருப்பத்தைக் கேட்டு ஆச்சர்யப் படுகிறார்! நடந்ததைத்தானே சொன்னேன் என்பாரோ வியாசர்?

குந்தி ஒரு மாமியார் என்பதைக் காட்டி விடுகிறார். நியாயம், மகன்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என்ற பெயரில் தான் பட்ட கஷ்டத்தை மருமகளுக்கும் அனுபவிக்கத் தருகிறார்!

அப்பாதுரை said...

யஜர் உபயஜர் யார்?

பத்திகளை கொஞ்சம் பிரித்துப் போட்டிருக்கலாமோ?

அப்பாதுரை said...

யஜர் உபயஜர் யார்?

பத்திகளை கொஞ்சம் பிரித்துப் போட்டிருக்கலாமோ?

திண்டுக்கல் தனபாலன் said...

வியாசரேவா...?

sambasivam6geetha said...

ஶ்ரீராம், கதையை எழுதுபவரே அதில் பங்கேற்றிருப்பதாலேயே இது நடந்ததை நடந்தபடி சொல்லப் பட்டது என்னும் பொருளில் இதிஹாஸ: என அழைக்கப்படுகிறது. ராமாயணத்தில் வால்மீகியும், மஹாபாரதத்தில் வியாசரும் பல இடங்களில் பங்கேற்கின்றனர். :))))

sambasivam6geetha said...

குந்தியை மட்டுமே சொல்ல முடியாது. அர்ஜுனன் தான் ஒரு பெண்ணை வென்று வந்திருக்கிறேன் என்று நேரடியாகச் சொல்லாமல் தன் அன்னையிடம் பிக்ஷை பெற்று வந்திருப்பதாகச் சொல்கிறான். தவறு அங்கே ஆரம்பிக்கிறது. பிக்ஷையை ஐவரும் பகிர்ந்து கொள்ளச் சொல்லிக் குந்தி சொல்கிறாள். என்ன பிக்ஷை என அவளும் கேட்டுக்கொள்ளவில்லை. பிக்ஷை என்றால் பணமோ, காசோ, நகையோ, சாப்பாடோ, துணியோ என்ற பொருளில் தான் எடுத்துக் கொள்கிறாள்.

sambasivam6geetha said...

அப்பாதுரை, யஜர், உபயஜர் இருவரும் இரு வயது முதிர்ந்த ரிஷிகள் என்பதற்கு மேல் அவர்களைக் குறித்த குறிப்பு ஏதும் இல்லை.

sambasivam6geetha said...

பத்திகளைப் பிரித்துத் தான் போட்டேன். ப்ளாகர் துரோகம் செய்யறது. :)) சரி பண்ணிப் பார்க்கிறேன்.

sambasivam6geetha said...

டிடி, வியாசரே தான்! :)

ஸ்ரீராம். said...

இதி ஹாஸ பற்றி சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்! ஆடிக்கிருத்திகைக்கு அடுத்தநாள் என்றால் விசேஷமா?

sambasivam6geetha said...

ஹாஹா, என் மனசைப் படிக்க ஆரம்பிச்சுட்டீங்க போல! ஆனால் எனக்கு உங்க கேள்வி புரியலை! ஆடிக்கிருத்திகைக்கு மறுநாள் விசேஷமானு கேட்டால் என்ன அர்த்தம்? ஒண்ணும் புரியலை!

sambasivam6geetha said...

பதில் சொன்னதுக்காக என்றால் நேற்றிலிருந்து வழக்கமான உபயோகத்தில் கையைக் கொண்டு வந்துட்டேன். :)))) ரங்க்ஸ் துணை இல்லாமல் சமைக்கவும் ஆரம்பிச்சாச்சு! என்னைப் பொறுத்த வரை அதான் விசேஷம்! :)))))

ஸ்ரீராம். said...

நீங்களும் கண்டு பிடிச்சுட்டீங்க...! இதுவரை இங்கு சொல்லப் பட்டவற்றுக்கு (அதிகமாக) பதில் சொல்வதில்லை. இன்று சொல்லி இருக்கிறீர்களே என்றுதான்! :)))))

கை முற்றிலும் சரியாகி விட்டதில் சந்தோஷம்.