Friday, November 14, 2014

பீஷ்மரின் நினைவோட்டம்!

இது ஒரு பயங்கரமான சபதம் என்பதை தேவ விரதன் நன்கறிவான். அவனைப் போன்ற துடிப்பும், இளமையும் நிறைந்த வாலிபர்களால் எளிதாக நிறைவேற்ற முடியாத ஒன்று என்பதையும் புரிந்து கொண்டான்.  ஆகவே அதற்காக அவன் தன்னுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றிக் கொள்ள நேர்ந்தது.  வாழ்க்கையின் , இளமையின் அனைத்து இன்பங்களையும் துறந்தான். கிட்டத்தட்டத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டான்.  அவனைப் போன்ற இளைஞனுக்கு இயல்பாக இருக்கும் உணர்வுகளை அடக்கி ஆண்டான். தன்னலத்தையும் சிற்றின்ப வேட்கையையும் அடக்கி ஆண்டான்.  அந்த சாம்ராஜ்யத்துக்கே அசைக்க முடியாத ஒரு தூணாக மாறி உறுதியுடன் நின்றான்.  இதன் மூலம் அவனை அனைவரும், “பீஷ்மர்” பயங்கரமான சபதம் எடுத்தவன் என்னும் பொருளில் அழைக்கத் துவங்கினார்கள்.  அந்தப் பெயரே நிலைக்கவும் நிலைத்தது.


அவன் தந்தை ஷாந்தனுவுக்கு சத்யவதி மூலம் இரு பிள்ளைகள் பிறந்தனர்.  முறையே சித்திராங்கதன், விசித்திர வீர்யன் என்னும் பெயர் பெற்ற அந்த இளைஞர்கள் வளர்ந்து வருகையில் ஷாந்தனுவுக்கு முடிவு ஏற்பட பீஷ்மரே அரியணை ஏறாத அரசனாக அந்த சாம்ராஜ்யத்தைத் தன் தம்பிமாருக்குச் சரியான பருவம் வரும் வரை கட்டிக் காத்தார்.  பல போர்களைப் புரிந்தார். குருவம்சத்தின் அந்த சாம்ராஜ்யம் பீஷ்மரின் முயற்சிகளால் மேலும் மேலும் வளர்ந்து விரிவடைந்தது.  தன் தம்பிகளிடம் ஒரு தந்தையின் அன்பைக் காட்டினார்.  அவ்விதமே குரு வம்சத்து சாம்ராஜ்யத்திடமும் மாறா அன்பு கொண்டு சாம்ராஜ்யத்தைப் பல வகைகளிலும் விஸ்தரித்து வந்தார்.  தன் சிற்றன்னையின் மகன்களை நல்லதொரு குருகுலத்தில் சேர்த்து அவர்கள் அனைத்துக் கல்வியையும் கற்றுத் தேற வழி செய்தார்.  சித்திராங்கதன் இளவயதிலேயே நோயால் தாக்கப்பட்டு இறந்து போனான்.  விசித்திர வீரியனுக்கு ஏற்றதொரு அரசகுமாரியைத் தேட முடியாமல் பீஷ்மர் காசி அரசனின் இரு மகளைக் கடத்தி வந்தார்.  அவர்களைத் தன் தம்பி விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்து கொடுக்க நினைத்தார்.  இதன் மூலம் விசித்திர வீரியனுக்கு வலுவும், பலமும் வாய்ந்த இளவரசர்கள் பிறந்து குரு வம்சத்தினரின் இந்த சாம்ராஜ்யம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்றுத் தழைத்தோங்கும் என்றும் எதிர்பார்த்தார்.  ஆனால் துரதிர்ஷ்டவசமாகக் குழந்தைகள் பிறக்காமலேயே விசித்திர வீரியனும் இறந்து போனான்.


இதன் மூலம் சாம்ராஜ்யத்தில் பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கின.  ஆனால் தன் கணவன் இறந்தாலும் ராஜ்யத்தில் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டிக் கொள்ள விரும்பிய சத்யவதி பீஷ்மரின் உதவியை நாடினாள்.  இருவருமே ஷாந்தனுவின் வம்சம் அவனோடு முடிந்து போக விடுவதில்லை என்னும் முடிவை எடுத்தனர்.   பீஷ்மரின் போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரியவளாக இருந்த ராணிமாதா சத்யவதியும் இளமையில் அவளுக்குப் பராசர முனிவர் மூலம் பிறந்த பிள்ளையான க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசரை அழைத்தாள்.  அவர் முனிவர்களுக்குள்ளே சிரேஷ்டராக ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார். என்றாலும் தன்னைப் பெற்ற அன்னை அழைத்ததும் ஹஸ்தினாபுரம் வந்த அவர் தன் தாயின் இரண்டாவது மகனின் இரு விதவைகளுக்கும் அக்கால முறைப்படியான நியோகம் மூலம் விந்து தானம் செய்தார்.


இது ஒரு கஷ்டமான முடிவு.  ஆனால் இதை விட்டால் வேறு வழியும் இல்லை. சாஸ்திரங்களின் சம்மதமும் இதற்கு இருந்தது.  இதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளாமல் பெண்ணுக்குக் கர்ப்பம் தரிக்கும் நேரம் மட்டுமே இருவரும் அனுமதிக்கப்படுவார்கள். இதை நடத்திக்காட்டுவதிலும் மிகவும் கஷ்டங்கள் இருந்தன.  பல்வேறு பிரச்னைகள் தோன்றின.  என்றாலும் குரு வம்சத்தினரின் அரச வம்சம் நூலறுந்து போகாமல் இதன் மூலம் காப்பாற்றப்பட்டது.  ஆனாலும் இது நல்லதொரு மக்களைத் தரவில்லை.  கிரஹங்களின் மோசமான நிலை தன் வேலையைக் காட்டி விட்டது.  அரண்மனையில்  பாவத்தின் ஆதிக்கம் மேலோங்கியது. விசித்திர வீரியனின் மூத்த மனைவியான அம்பிகா என்னும் ராணிக்குப் பிறவிக் குருடனாக திருதராஷ்டிரன் என்னும் பெயரில் ஓர் மகன் பிறந்தான்.  இரண்டாவது மனைவியான அம்பாலிகாவோ பிறவியிலேயே பாண்டு ரோகத்தால் பாதிக்கப்பட்ட ஆண் குழந்தையைப்பெற்றெடுத்தாள்.  



எதற்கும் மனம் தளராமல் பீஷ்மர் அந்தக் குழந்தைகளைப் பொறுமையுடனும், அன்புடனும் வளர்த்து ஆளாக்கினார்.  அவர்களுக்குச் சிறப்பான ஆசிரியர்கள் மூலம் தக்க பயிற்சிகள் அளித்தார்.  ஒரு அரசகுமாரர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய வித்தைகள் அனைத்தையும் கற்க வைத்தார்.  இதன் மூலம் குரு வம்சத்தினரின் அரசகுலத்தின் மேன்மையையும் பாரம்பரியத்தையும் காப்பாற்றினார்.  ஆரியர்களின் பழைமையான சட்டத்தின்படி பிறவிக் குருடன் ஆன திருதராஷ்டிரன் மூத்தவனாக இருந்த போதும் ராஜ்யம் ஏற முடியாது.  ஆகவே இளையவன் பாண்டுவை ஹஸ்தினாபுரத்தின் சிம்மாதனத்தில் ஏற்றினார்.  பாண்டுவுக்கு இயல்பாக இருந்த நற்குணங்களாலும், பெருந்தன்மையான போக்கினாலும் மக்களிடம் உள்ள அன்பினாலும் சாம்ராஜ்யத்தின் மக்களிடம் பேராதரவைப் பெற்றான்.  நல்லாட்சி நடத்தி வந்தான் பாண்டு.



பாண்டுவுக்குப் பிறவியில் ஏற்பட்டிருந்த ரோகம் காரணமாகவும் ரிஷி ஒருவரின் சாபம் காரணமாகவும் அவனால் மனைவியுடன் இணைந்து குழந்தை பெற முடியவில்லை.  அவன் மனைவி குந்தி வசுதேவரின் சொந்தச் சகோதரி, குந்திபோஜனால் வளர்க்கப்பட்டவள்.  அவளைத் தவிர மாத்ரி என்னும் இன்னொரு அரசகுமாரியையும் பாண்டு மணந்திருந்தான். இரு மனைவியர் இருந்தும் அவனால் தாம்பத்திய சுகத்தை நுகர முடியவில்லை.  அதனால் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கவே இல்லை.  ஆகவே அவன் மனம் வெறுத்து ராஜ்யத்தைத் துறந்து காட்டுக்கு ஏகினான்.  அங்கே அவனுடன் சென்ற அவன் மனைவி குந்தி பாண்டுவின் வேண்டுகோளின் பேரில் பழைய நியோக முறைப்படி மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.  அதன் பின்னர் அவள் மறுத்ததால் அவளிடமிருந்து அனுமதியைப் பெற்றுக் கொண்டு மாத்ரியும் இரு பிள்ளைகளை இரட்டையராகப் பெற்றெடுத்தாள்.  இவர்கள் ஐவரையும் பாண்டவர்கள் என்றும் ஐந்து சகோதரர்கள் என்றும் அனைவரும் அழைத்தனர்.  யார் பார்த்தாலும் கவரும் வண்ணம் இனிய சுபாவத்துடனும், கவர்ச்சியான அழகுடனும், புத்திசாலித்தனமும், தைரியமும் நிரம்பிப் பெற்றிருந்த பாண்டவர்கள் வளர்ந்து வந்தனர். அவர்களில் மூத்தவனே யுதிஷ்டிரன்.

2 comments: