Saturday, November 8, 2014

திருதராஷ்டிரன் கட்டளை! துரியோதனன் கேட்ட சத்தியம்!

மனம் நிறையப் பாசத்துடன் துரியோதனன் உச்சந்தலையைத் தடவிக் கொடுத்தான் திருதராஷ்டிரன்.  “மகனே, இறை சக்தியை எவரால் எதிர்த்து நிற்க முடியும்?  அந்த ஒப்பற்ற சக்தி இதை இப்படித் தான் நடக்கவிடவேண்டும் என நினைத்திருக்கிறது  துரியோதனா, யாருக்குத் தெரியும் ஐவரும் உயிருடன் இருந்திருப்பதும், திரௌபதியின் சுயம்வரச் செய்தி தெரிந்து அவர்கள் காம்பில்யம் செல்லப்போவதும் எவர் அறிந்திருந்தார்?  போனதோடு அல்லாமல் அவர்கள் அதிர்ஷ்டம் திரௌபதியை அர்ஜுனன் வென்றும் விட்டான்.  எல்லா கிரஹங்களும் அவர்களுக்கு அநுகூலமாகச் செயல்பட்டிருக்கின்றன.”


“தந்தையே, விண்ணகத்து கிரஹங்கள் மட்டுமில்லை; மண்ணகத்து மனிதர்களும் தான் அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டிருக்கின்றனர்.  உங்கள் அனைவரின் போற்றுதலுக்கு உரிய உங்கள் அருமைப் பாட்டியார் மஹாமஹா ராணி சத்யவதி தேவியார், தாத்தா பீஷ்மர், விதுரச் சித்தப்பா மற்றும் ஹஸ்தினாபுரத்தின் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து அவர்களுக்காகப் பாடுபட்டிருக்கின்றனர்.  தந்தையே, தந்தையே, இந்நிலையில் கூட நீங்கள் என் பக்கம் உதவியாக எனக்குத் துணையாக நிற்காவிடில் நான் வாழ்வதில் தான் என்ன பயன்?  “மீண்டும் தன் விண்ணப்பத்தை, வேண்டுகோளைத் தெரிவிக்கும் வண்ணமாகத் தன் தந்தையின் கரங்களை இறுகப் பிடித்தான் துரியோதனன்.


“என்னால் என்ன முடியும், மகனே!  என்னால் முடிந்ததெல்லாம் எது சரியானதோ அதைச் செய்வது ஒன்றே!” திருதராஷ்டிரன் பதில் கொடுத்தான். கடுமையான கோபத்துடன் துரியோதனன், “சரி, சரி, அவர்கள் மட்டுமே எல்லாவற்றையும் சரியாகச் செய்கின்றனர்.  நான் செய்வதெல்லாம் தவறானது.  அது தானே நீங்கள் சொல்வது? அப்படியே இருக்கட்டும்.  உங்கள் மூத்த மகன் ஆன நான் எனக்கு உரிமையானதை அடைய விடாமல் அனைவரும் தடுப்பது சரியா?  அதற்கெதிராகச் சதி செய்வது சரியா? உங்கள் மூத்த மகன் ஆன நான் சக்கரவர்த்தி ஆவதற்கான முழுத் தகுதிகளும் பெற்றிருந்தும், அந்தப் பாண்டவர்கள் ஐவருக்கும் கீழ் ஓர் ஊழியனாகப் பணி புரிய வேண்டுமா?  ஏன்?  எதற்காக?  ஒவ்வொரு நாளும், அந்த பீமன், என்னை, “குருடனின் பிள்ளை” என அழைப்பான்;  அதை நான் என்னிரு காதுகளால் கேட்டுக் கொண்டு மனம் புண்ணாகித் தவிக்க வேண்டும்.  ஹூம், காம்பில்யத்தில் கூட திரௌபதியின் சுயம்வரத்திற்காகக் கூடி இருந்த அனைத்து அரசர்கள், இளவரசர்கள், மன்னாதி மன்னர்கள் கூடியிருந்த அந்த மாபெரும் சபையிலேயே பீமன் இதைத் தான் கூறினான்.  தந்தையே!  எனக்கு அப்போது எப்படி இருந்தது தெரியுமா?  அக்னியில் இறங்கி என்னை எரித்துக் கொள்ளலாமா அல்லது கங்கையில் மூழ்கி உயிரை விடுவோமா என நினைத்தேன். “ துரியோதனன் ஆக்ரோஷம் முழுதும் குரலில் வெளிப்படும்படிக் கூறினான்.


“அப்படி எல்லாம் பேசாதே மகனே!  தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தைக் கைவிடு.  வீரன் ஆன உனக்கு இது விவேகமான செயல் இல்லை.  ஆனால் நான் என்ன செய்ய முடியும்?இப்போது அதற்கெல்லாம் யோசிக்கும் அளவுக்கு நேரமில்லை.  நாளை மதியத்துக்குள்ளாக அவர்கள் அனைவரும் இங்கே வந்து சேர்ந்து விடுகின்றனர்.  யுவராஜாப் பொறுப்பில் இருக்கும் நீ தான் முன்னால் சென்று அவர்களை எதிர்கொண்டு அழைத்து வர வேண்டும்.  இல்லை எனில் தாத்தா பீஷ்மரும், பாட்டியார் மஹாராணி சத்யவதியும் கோபமும், வருத்தமும் அடைவார்கள்.  மேலும் நீயும் உன் மனைவியும் நேரில் சென்று அவர்களை அழைத்து வரும்படி பாட்டியார் சத்யவதி தனியான செய்தி ஒன்றும் அனுப்பி உள்ளார்கள்.  இப்படி ஒரு சூழ்நிலையில் நான் என்ன செய்ய முடியும்?  என்ன செய்யலாம் என்பதையும் நீயே சொல் மகனே!”


“தந்தையே,தந்தையே, ஏதானும் செய்யுங்கள்.  நீங்கள் உங்கள் மகனை உயிருடன் பார்க்க விரும்பினால் கட்டாயம் ஏதேனும் செய்ய வேண்டும்.  இவ்வுலகிலேயே உடனடியாக இறக்கத் தக்க தகுதி வாய்ந்தவர்களில் நான் முதன்மையானவன். என்னை விட துரதிர்ஷ்டசாலி எவருமில்லை.”


“அப்படி எல்லாம் சொல்லாதே என் அருமை மகனே! “ இதைச் சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைக்க திருதராஷ்டிரனின் குருட்டுக் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.  தன் தந்தையின் கரங்களை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த துரியோதனன், “நான் இறக்க வேண்டியவன், ஆம், ஆம்!” என்று முனகியவண்ணம் மீண்டும் தந்தையின் முழங்கால்களில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.  “இல்லை மகனே!  நீ தான் உன் மனைவியோடு சென்று அவர்களை எதிர்கொண்டு அழைத்து வர வேண்டும்.  இல்லை எனில் இந்த ஹஸ்தினாபுரத்து மக்களுக்கே உன் மேல் கோபம் தாங்காது போய்விடும்.  உன் மேல் ஆத்திரம் அடைவார்கள். ஒரு மரியாதைக்காகவேனும் நீ இதைச் செய்ய வேண்டும்.  இல்லை எனில் குரு வம்சத்தினரின் சாம்ராஜ்யத்தின் குடிமக்களே உன்னை வெறுக்கத் தொடங்கி விடுவார்கள்.”


“ஓ, அப்படியா? மக்கள் என்னை வெறுப்பார்களா?  சரி, சரி, உங்கள் கட்டளை அப்படி எனில் அதை நான் நிறைவேற்றுகிறேன், தந்தையே!  ஆனால் ஒன்று!  இந்த ஹஸ்தினாபுரத்து மக்களை நானும் வெறுக்கிறேன்.” மிகுந்த மனக்கசப்போடு கூறினான் துரியோதனன்.  ஆனாலும்  துரியோதனன் தலையோடு கால் நடுங்கினான்.  அதிலும் சுயம்வர மண்டபத்தில் கேட்ட பீமனின் குரல் அவன் காதுகளில் இப்போது தான் கேட்பது போல் மீண்டும் எதிரொலிக்க, பீமனின் சிரிப்பையும் அவன் மீண்டும் கேட்பது போல் உணர, அப்போது திரௌபதியின் முகத்தில் தெரிந்த நிம்மதியையும், மகிழ்ச்சியையும் மீண்டும் தன் கண்களால் கண்டான் துரியோதனன்.  அவன் சுயம்வரப் போட்டியில் தோற்றது புரிந்ததுமே திரௌபதி சிரித்த சிரிப்பும், முழு மணமகள் அலங்காரத்தில் அவள் நின்ற கோலமும், அவளை அடைய முடியாத மனக்கசப்பும் சேர்ந்து கொள்ள துரியோதனன் உடலே பற்றி எரிவது போல் இருந்தது அவனுக்கு.  மிகுந்த முயற்சியுடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் அவன்.  “தந்தையே, நான் செத்தால் செத்துவிட்டுப் போகிறேன்.  ஆனால் அதற்கு முன்னால் உங்கள் கட்டளைப்படியே, பாண்டவர்கள் ஐவரையும், அவர்கள் மணந்து வந்திருக்கும் மணமகளையும் எதிர்கொண்டு அழைக்கச் செல்கிறேன்.  ஆனால் தாங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும்.”

5 comments:

ஸ்ரீராம். said...

என்ன இருந்தாலும் பீமன் அப்படி அழைப்பது தவறுதானே?

துரியோதனன் இப்போது இருக்கும் மனநிலை நரகம்.1617

sambasivam6geetha said...

பீமன் சொல்வது தவறு தான். அது சரி, அது என்ன 1617?? என்ன அர்த்தம்?

ஸ்ரீராம். said...

எனக்கும் தெரியவில்லை. என்ன குறித்து வைத்திருந்தேன், எப்படி கூட சேர்ந்து வந்தது என்று தெரியவில்லை!

எப்படியோ...... பதிலை வரவழைக்கும் கீ நம்பர் என்று தெரிகிறது!

:)))))))

sambasivam6geetha said...

ஹிஹிஹி, கதையிலே சந்தேகம்னால் பதில் சொல்லுவேன். அதெல்லாம் இல்லையே! அதான் ஒண்ணும் சொல்றதில்லை. இங்கே என்னோட பதிவிலே என்னையே வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்டிருக்கு! என்னத்தைச் சொல்ல! :)

sambasivam6geetha said...

ஹூம், பப்ளிஷ் கொடுத்ததும், சுத்தம்! மறுபடி சைன் இன் பண்ணச் சொல்லி நான் தானானு உறுதிப் படுத்திண்டு அப்புறமா உள்ளே விட்டிருக்கு. இத்தனைக்கும் இத்தனை நாழி பதிவு போட்டுக் கொண்டு, மெயில் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். :) கூகிள் ரொம்ப உஷார் பார்ட்டியாகிட்டு வருது போல!