Friday, August 28, 2015

வாக்குறுதிகளை நிறைவேற்றிய வாசுதேவன்!

அனைவரும் காத்திருக்கக் கிருஷ்ணன் தன் பரிசு அறிவிப்பைச் செய்தான். “எங்களிடம் இருக்கும் தங்கத்தில் ஐந்தில் ஒரு பாகம் தருகிறோம். அதே போல் தான் கால்நடைச் செல்வங்கள், ரதங்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றையும் தருகிறோம். யாதவர்களில் விரும்பும் ஐந்தில் ஒரு பாகத்தினரும் பாண்டவர்களுக்குச் சேவை செய்ய வருகின்றனர். திறந்த வாய் திறந்தபடி இருக்க அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.  யாதவர்களால் இவ்வளவு மாபெரும் பரிசை அளிக்க முடியும் என்று அங்கிருந்த எவரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.  சற்று நேரம் கடும் அமைதியில் இருந்த சபையில் திடீர் என யாரோ, “வாசுதேவக்கிருஷ்ணனுக்கு மங்களம்!” என்று உரத்த குரலில் கூவ அனைவரையும் இது தொற்றிக் கொண்டது. அனைவருமே கிருஷ்ணனுக்கு மங்கள வாழ்த்துகள் சொல்லியும், கிருஷ்ணனுக்கு ஜயம் என்று சொல்லியும் வாழ்த்தத் தொடங்கினார்கள்.

சாதாரணமாகக் கடுமையே காட்டும் பீஷ்மர் கூட இந்த அறிவிப்பினால் நெகிழ்ந்தும், மகிழ்ந்தும் போயிருந்தார் என்பது அங்கு கூடி இருந்த அரசர்கள் செய்த கைதட்டல் ஒலியில் கலந்து கொண்டதில் இருந்து தெரிந்தது. அங்கிருந்த மன்னர்களும் அதுவரையிலும் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் தங்கள் கருத்தைச் சொல்லாமல் மௌனம் காத்தவர்கள் இப்போது ஏகோபித்துக் கிருஷ்ணனின் அறிவிப்புக்குத் தங்கள் மகிழ்வைத் தெரிவித்தனர். யுதிஷ்டிரன் கண்களில் கண்ணீர் ததும்பியது. நன்றிக்கடனில் மூழ்கினான் யுதிஷ்டிரன். அவனால் பேசமுடியவில்லை.  அப்போது கூட்டத்தில் அமைதியை மீண்டும் நிலை நாட்டக் கிருஷ்ணன் தன் கைகளை உயர்த்தினான். அப்போது தான் அவன் இன்னும் பேசி முடியவில்லை என்பதை சபையினர் புரிந்து கொண்டனர். “மேலும் என் மூத்த அண்ணாரும், ரோஹிணி அன்னையின் மகனுமான பலராமர், உங்களுடன் வருகிறார். அவரோடு தேர்ந்தெடுத்த யாதவர் குல அதிரதர்களுடன் நானும் வருகிறேன். மாட்சிமை பொருந்திய யுதிஷ்டிரரே! காண்டவபிரஸ்தத்துக்கு நாங்கள் அனைவரும் உங்களுடன் வந்திருந்து புதிய நகரை நிர்மாணிக்க உதவிகள் செய்கிறோம்.”

அதற்கு மேல் பீமனால் பொறுக்க முடியவில்லை. சபையில் வயதிலும் அறிவிலும், தகுதியிலும் மூத்தவர் பலர் இருக்க அவர்கள் முன் வாயடக்கம் வேண்டும் என்னும் நினைவே அற்றவனாய்த் தன் உரத்த குரலில் முழக்கமிட ஆரம்பித்தான். "ஜெய கிருஷ்ண வாசுதேவா!” என்று உரத்த குரலில் கூவினான். சபை மொத்தமும் அவனுடன் சேர்ந்து  கொண்டது. பின்னர் கிருஷ்ணன் வியாசர் பக்கம் திரும்பினான். “முனி சிரேஷ்டரே! பாண்டவர்களை அவர்கள் நிர்மாணிக்கப் போகும் நகரில் பல்லாண்டு வீற்றிருந்து நல்லாட்சி தர வேண்டும் என ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். அது மட்டுமல்ல, குருதேவா! நீங்களும் எங்களுடன் காண்டவபிரஸ்தம் வந்திருந்து எங்கள் புதிய நகரம் நிர்மாணம் ஆகப் போகும் இடத்தையும் பார்த்து நல்லாசி கூறியருள வேண்டுகிறேன்.”

“வாசுதேவா! நிச்சயமாய் நான் வருகிறேன்.” என்று சிரித்த வண்ணம் கூறிய வியாசர் தன் வலக்கையை உயர்த்தி யுதிஷ்டிரனுக்கு ஆசிகளைத் தெரிவித்தார். பின்னர் உரத்த குரலில் வேத மந்திரங்களை ஓதி அதன் மூலமும் கடவுளரின் ஆசிகளை வேண்டினார். வேத பண்டிதர்கள் அவருடன் கலந்து கொண்டனர்.

“ஏ இந்திரா, தேவர்களின் அரசனே! உன் கருணை மழையை இந்த அரசன் மேல் பொழிவாய்!
இவனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாய்!
அனைத்துச் சிறப்புக்களையும் இவனுக்குக் கொடுத்து ஆசீர்வதிப்பாய்!
மனிதருக்குள் இவன் தலைசிறந்தவனாக இருக்கவும், இவனே அனைவருக்கும் தலைவனாக இருக்கவும், இந்தப் பரந்த பூமியில் பிரபுவாகத் தலைமை தாங்கி வழிநடத்தவும் ஆசீர்வதிப்பாய்!
அனைத்து மக்களின் ஆசைகளையும் இவன் பூர்த்தி செய்ய ஆசீர்வதிப்பாய்!
மனிதர்களுக்குப் புதியதொரு உலகைக் காட்டி அவர்களை நல்வழிப்படுத்த் ஆசீர்வதிப்பாய்!
சூரியக் கடவுளைப் போல், அவன் ஒளிபொருந்திய கதிர்களைப் போல் இவனும் பிரகாசிக்க அருளுவாய்!
நூற்றுக்கணக்கான வசந்தங்களை இவன் கண்டு நீண்ட நாட்கள் வாழ்வாங்கு வாழ ஆசீர்வதிப்பாய்!

இவை முடிந்ததும் மந்திராக்ஷதைகளால் யுதிஷ்டிரனுக்கு வியாசரும் மற்ற பிராமணர்களும், ரிஷி, முனிவர்களும் ஆசீர்வதித்தனர். அப்போது ராஜசபையில் இருந்த அனைவரும் இடி முழக்கம் போல் தங்கள் கைகளைத் தட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அந்தச் சபையின் அனைத்து நியதிகளையும் சம்பிரதாயமான சடங்குகளையும் உடைத்துக்கொண்டு அனைவரும் ஒரே குரலில், ஒரே மனிதனின் உரத்து ஒலிப்பது போல், “முனி சிரேஷ்டரின் ஆசீர்வாதங்கள் அனைத்தும் உண்மையாகட்டும்! கிருஷ்ண வாசுதேவனுக்கு ஜெயம்! யுதிஷ்டிரனுக்கு ஜெயம்! குருவம்ச சிரேஷ்ட்ரான யுதிஷ்டிரனுக்கு மங்களம்!” என்று முழங்கினார்கள்.

சிறிது நேரத்தில் அங்கிருந்த பெரியோர் அனைவரும் பக்கவாட்டுக் கதவின் வழியே வெளியேறினார்கள். அவர்கள் வெளியேறியதுமே மற்ற மக்களும் முக்கிய வாயில் வழியாக வெளியேற ஆரம்பித்தனர். அப்போது பீமன் சிறிது கூட சம்பிரதாயம் குறித்துக் கவலை கொள்ளாமல் குதித்து ஓடி வந்தான். கிருஷ்ணனை ஆரத் தழுவிக் கொண்டான். பின்னர் அவனை அப்படியே உயரத் தூக்கிச் சுற்றினான். அங்கிருந்த அனைவரும் இதைப் பார்த்து ரசித்தனர். பீமன் பின்னர் கிருஷ்ணனைத் தரையில் இறக்கிவிட்டு விட்டு அவன் தோள்களின் மேல் தன் கையை வைத்த வண்ணம் பக்கவாட்டுக் கதவை நோக்கி நகர்ந்தான். கிருஷ்ணனைப் பார்த்து, “நீ மிகப் பொல்லாதவன்!” என்று கூறிச் சிரித்தான். சிரிப்புச் சப்தம் கேட்காதவாறு கிருஷ்ணன் சிரித்தான். “ஆம், நான் பொல்லாதவன் தான். இல்லை எனில் நான் அளித்த நான்கு உறுதிமொழிகளையும்  எவ்வாறு காப்பாற்றுவேன்? அவற்றில் மூன்று ஏற்கெனவே என்னால் மீட்கப்பட்டது தான்!”

“என்ன, நான்கா?” பீமன் கேட்டான்!

“ஒன்று திரௌபதிக்குக் கொடுத்த வாக்குறுதி! அவளுக்கு நல்ல கணவனைத் தேடித்தருவேன் என்று சொல்லி இருந்தேன். ஒருவனுக்குப் பதிலாக ஐந்து நல்ல கணவர்கள் அவளுக்குக் கிடைத்திருக்கின்றனர். இரண்டாவது வாக்குறுதி பானுமதிக்குக் கொடுத்தது! துரியோதனன் மட்டுமே ஹஸ்தினாபுரத்தை ஆளவேண்டும் என்பது அது! விரைவில் அவன் ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாக முடிசூட்டப்படுவான்! மூன்றாவது நான் உனக்குக் கொடுத்தது! நீ யுவராஜாவாக ஆவாய், உன்னை யுவராஜா ஆக்குவேன் என்று! ஆம், விரைவில் நீயும் யுவராஜா ஆகிவிடுவாய். குரு தேவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விரைவில் உன்னை யுவராஜா ஆக்குவார் என நம்புவோம்.”

“நான்காவது?”

“ஆம், நான்காவது இன்னும் மிச்சம் இருக்கிறது. அது பூர்த்தி ஆவதும், ஆகாததும் உன்னிடம் தான் இருக்கிறது. உன் கையில் தான் இருக்கிறது!”

“என்ன என்னிடமா?” ஆச்சரியத்துடன் கேட்டான் பீமன்.

“ஆம், ஜாலந்திராவிடம் அவளுக்கு நல்லதொரு கணவனைத் தேடித்தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன்.” கிருஷ்ணன் சிரித்தான்.


இத்துடன் நான்காம் பாகம் முடிவடைந்தது. பின்னுரையைத் தொடர்ந்து ஐந்தாம் பாகம் விரைவில் தொடரும். நன்றி. வணக்கம்.

3 comments:

அப்பாதுரை said...

தொடர்கிறேன்.

காண்டவ... இன்றைக்கு எந்த வடிவிலாவது இருக்கிறதோ?

கொஞ்ச நாளா சுறுசுறுப்பா தினம் ஒண்ணுனு எழுதிட்டு வரீங்க?

ஸ்ரீராம். said...

அடேடே!

sambasivam6geetha said...

காண்டவபிரஸ்தம் தான் இந்திரப் பிரஸ்தம் என்னும் பெயரில் ஊரானது என எண்ணுகிறேன். அதான் டெல்லியும் அதைச் சேர்ந்த பகுதிகளும் என்பார்கள்.

//கொஞ்ச நாளா சுறுசுறுப்பா தினம் ஒண்ணுனு எழுதிட்டு வரீங்க?//

முன் கூட்டியே வேர்ட் டாகுமென்டில் பத்துப் பக்கங்கள் போல் எழுதி வைச்சுட்டால் தினம் மூணு பக்கம்னு போடுவேன். எழுத முடியலை என்றால் தாமதம் ஆகும்! :)