Sunday, August 30, 2015

காண்டவப்ரஸ்தம் நோக்கிய பயணம்! பின்னுரை தொடர்கிறது!

பீமன் ஒரு பெரிய யானையின் மேல் அமர்ந்திருந்தான். அவனோடு கிருஷ்ணனும் காணப்பட்டான். குரு வம்சத்து முக்கியஸ்தர்களில் பலரும் பீமனைத் தொடர்ந்து யானை மேல் வந்தனர். அந்த மாபெரும் ஊர்வலத்தையே பீமன் தான் தலைமை தாங்கி நடத்துவது போல் இருந்தது. யானைகள் செல்லும்போதே தங்கள் உணவுக்காகவும், செல்லும் வழிக்காகவும் வழியெங்கும் காணப்பட்ட பெரிய மரங்களைப் பெயர்த்தெடுத்தன. உண்ணக் கூடியவற்றை உண்டு விட்டு மிச்சத்தை வழியிலேயே போட்டுவிடும்படி யானையைப் பழக்கி இருந்தனர் யானைப் பாகர்கள். அதனால் பின் தொடர்பவர்கள் வழி தவறிப் போகாமல் பின் தொடர வசதியாக இருக்கும் அல்லவா! யானைகளுக்குப் பின்னர் அதிரதர்களும், மஹாரதர்களும் வந்தனர்.  அவர்களுக்குப் பின்னால் வேத வியாசர் தன் குழுவினருடன் வந்தார். அவர்கள் அனைவரும் கால்நடையாகவே வந்தனர். யுதிஷ்டிரனும் பலராமனும் அவர்களுக்குத் துணையாக அவர்களுடனே வந்தனர்.

எல்லாவற்றுக்கும் பின்னால் மாட்டு வண்டிகள் தானியங்களையும், தங்கங்களையும், மற்றப் பொருட்களையும் சுமந்து கொண்டு வரிசையாக வந்தன. கௌரவர்களிடம் பாகப்பிரிவினையில் பெற்ற தங்கத்தோடு கூடத் தங்கள் மாமனார் ஆன துருபதன் அளித்த தங்கத்தையும் எடுத்துக் கொண்டு வந்தனர் பாண்டவர்கள். ரதங்களில் அரசகுல மகளிர் பயணித்தனர். அவர்களில் குந்தி தேவியும் திரௌபதியும் காணப்பட்டனர். மற்ற சாமானியப் பெண்மணிகள் அவரவர் தகுதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாட்டு வண்டிகளிலோ, கால்நடையாகவோ பயணித்தனர். அனைவரும் தங்கள் சிறிய குழந்தைகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பெரிய குழந்தைகளின் கைகளைப் பிடித்த வண்ணம் விழாக்காலப் பாடல்களைப் பாடிக் கொண்டு வந்தனர்.

இவர்களுக்கெல்லாம் பின்னால் மற்றவர்கள் வந்தனர். தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். வண்டிகளிலும், குதிரைகள் மேலும், மாட்டு வண்டிகளிலும்,  கோவேறு கழுதைகள் மேலும், ஒரு சிலர் பல்லக்குகளிலும் பயணித்தனர். இரு பக்கங்களிலும் கால்நடைச் செல்வங்கள் அவற்றின் எஜமானர்கள் அவற்றைக் கவனிக்கப் பயணித்தன. மல்லர்கள் அங்குமிங்கும் போய் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தி வந்தனர். கால்நடைகளைக் கவனிப்போரிடம் சென்று அவர்களுக்கு வேண்டிய தேவைகள் எல்லாம் சரிவரக் கிடைக்கின்றனவா என்று கேட்டு உறுதி செய்து கொண்டனர். இசைக்கருவிகள் முழக்குவோரும் இந்த மாபெரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டு தங்கள் இசைக்கருவிகளை முழக்கிய வண்ணம் வந்தனர். அந்த சப்தத்தால் சுற்று வட்டாரமே அதிர்ந்தது. பாடகர்கள் அருமையான பாடல்களை இசை அமைத்துப் பாடியபடி வந்தனர். செல்லும்போதே வேத பிராமணர்கள் தங்கள் சீடர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்த வண்ணம் வந்தனர்.

இந்த நகரும் நகரமானது ஒவ்வொரு நாளும் விடிகாலையில் மாடுகள் கறக்கப்பட்டவுடன், அனைவரும் காலை அநுஷ்டானங்களை முடித்தவுடன் கிளம்பும். ஒரு யோஜனை தூரம் அல்லது இரண்டு யோஜனை தூரம் வரை தொடர்ந்து செல்வார்கள். (ஒரு யோஜனை என்பது கிட்டத்தட்டப் பத்துமைல்) கிட்டத்தட்ட 20 மைல் தூரம் சென்றதும் சூரியன் உச்சிக்கு வருவதற்கு ஒரு நாழிகை முன்னர் சாத்யகியால் ஏற்கெனவே குறிப்பிட்டு அமைக்கப்பட்டிருக்கும் தங்குமிடத்திற்குச் சென்று தங்குவார்கள். அங்கே சென்று அந்த அசை நகரம் தங்கியதும், வேத வியாசர் யாகத் தீயை மூட்டுவார். யாகங்கள் செய்யப்பட்டு அர்க்கியங்கள் கொடுக்கப்பட்டு யாக அக்னிக்கு அவிர்பாகமும் கொடுக்கப்படும். அதன் பின்னர் அந்த மாபெரும் மக்கள் கூட்டத்தில் உடல்நலம் சரியில்லாதோரைக் கவனிப்பார் வியாசர். தன் ஆசிகளையும் மந்திரிக்கப்பட்ட பாலையும்குடிக்கக் கொடுப்பார். அதன் பின்னர் அனைவரும் மதிய உணவை முடிப்பார்கள்.

கற்றறிந்த வேத பிராமணர்களும் மற்றவர்களும் வேத வியாசரைச் சூழ்ந்து கொள்ள அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பார் வியாசர். அதன் பின்னர் ரிஷி, முனிவர்களால் சித்தி அடைவதைக் குறித்தும் தன்னைத் தான் அறிதலைக் குறித்தும் வாத விவாதங்கள் நடைபெறும். தவங்கள் செய்யவும், சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதைக் குறித்தும் விவாதிக்கப்படும். அங்கிருக்கும் மக்களில் சிலர் இந்த வாத, விவாதங்களைக் கேட்பதோடு மட்டுமில்லாமல் வியாசரின் ஆசிகளையும் கோரிப் பெறுவார்கள். தினந்தோறும் பெரிய அளவில் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து வியாசரிடம் பேசி அவர் ஆசிகளைப் பெற்றுச் செல்வார்கள். அவருடைய வழிகாட்டுதலின் படி அங்கு வந்திருந்த ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு பிராமணரைத் தங்கள் குடும்ப ஆசாரியனாக ஏற்றுக் கொண்டனர். அவரவர் குடும்ப வழக்கப்படி சடங்குகள்,சம்பிரதாயங்களை செய்ய வைத்தார். குழந்தைகளுக்குக் கல்வியும் கற்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கு வேண்டிய மதிய உணவைத் தாங்களே தயார் செய்து கொண்டனர். பீமனின் மேற்பார்வையில் அரச குடும்பத்தினருக்கான சமையலறையில் பெரிய அளவில் உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கப்பட்டு  யாருக்கெல்லாம் சமைக்க முடியவில்லையோ அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. மதிய வேளையில் குழந்தைகள் விளையாட, வயதானவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள். பெண்கள் கூடி அமர்ந்து தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாட, ஆண்கள் அதற்கேற்ப இசைக்கருவிகளை முழக்குவார்கள். க்ஷத்திரியர்களில் சிலர் வேட்டைக்கும் சென்றனர். மல்லர்கள் தங்கள் மல்யுத்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து அனைவருக்கும் காட்சி விருந்து அளித்தனர். கூடிய கூட்டத்தினரின் உற்சாகத்துக்கும், அவர்களின் வரவேற்புக்கும் இடையே கிருஷ்ணனும், பலராமனும் கூட அர்ஜுனனுடன் அந்த மல்யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டுச் சிறிய அளவில் போட்டிகள் நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர். சூரிய அஸ்தமனம் ஆகும் சமயம் மாலை நேர அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் உறங்கச் செல்வார்கள்.

அர்ஜுனன் தலைமையில் அங்கிருந்த மக்களை எல்லாம் க்ஷத்திரியர்களும், மற்றப் படை வீரர்களும் அரண் போல் பாதுகாத்துக் காட்டு மிருகங்களிடமிருந்தும் வழிப்பறிக் கொள்ளைக்காரரிடமிருந்தும் பாதுகாத்தனர். ஒவ்வொரு நாளும் பகல் முழுவதும் கிருஷ்ணன் ஒவ்வொரு குழுவாகச் சென்று பார்த்து அனைவரையும் அறிமுகம் செய்து கொண்டான். அவன் தரிசனத்தை வேண்டியவருக்கு தரிசனம் அளித்ததோடு அல்லாமல் பெண்களை மரியாதையுடனும் நடத்தினான். அவ்வப்போது கேலி செய்து கொண்டும், பரிகாசமாகப் பேசிச் சிரித்துக் கொண்டும், குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டும் இருந்தான். மல்லர்களுடன் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டான்.  குழந்தைகளுக்குப் பல்வேறு விளையாட்டுக்களைக் கற்றுக் கொடுத்ததோடு படித்தறிந்த ஆன்றோரின் விவாதங்களையும் மௌனமாகக் கவனித்துக் கொண்டான். தேவைப்பட்ட நேரத்தில் விவாதங்களிலும் கலந்து கொண்டான்.

ஒரு நாள் காலை நேரம்! அசை நகரம் பயணப்பட்டுக் கொண்டிருக்கையில் அனைவர் காதுகளிலும் “சோ”வென்ற சப்தம். சில்லென்ற காற்று வேறு! அனைவரும் ஆவலோடு மேலே நடந்தனர். சற்று தூரத்தில் யமுனை பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓடிக் கொண்டிருந்தாள். பரந்து விரிந்திருந்த யமுனையின் அகலத்தையும் விசையுடன் ஓடிக் கொண்டிருக்கும் வேகத்தையும் கண்டவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். தாங்கள் தங்கள் இடத்திற்கு வந்து விட்டோம் என உணர்ந்தனர். அனைவரும் பெரு மகிழ்வுடனும், களிப்புடனும் ஓட்டமாக ஓடி யமுனையில் மூழ்கினர். தங்கள் கைகளால் நீரை அடித்து மகிழ்ந்தனர்.


பின்னுரை நாளை முடியும்.

1 comment:

வல்லிசிம்ஹன் said...

இந்த ஊர்வலத்தைக் கண்ணால் கண்டு களித்த புண்ணியம் உங்களுக்குதான் .
பழைய கால மேற்கத்திய படங்களில் ஆயிரமாயிரம் பசுக்களையும் ,நூற்றுக்கணக்கான் குடும்பங்களையும்
அழைத்துப் போன காட்சிகளைப் பார்த்திருக்கிறேன்.
இங்கே கண்ணன் வழி நடத்த மக்கள் பின் தொடர
வியாசர் நல்வழிப் படுத்த
ஒரு அரசாங்கம் உருவாகிறது.
அதி அத்புதம். நன்றி கீதா. மிக மிக அருமை.