Saturday, July 23, 2016

மஹாராணியின் கலக்கம்!

ஆனால் இப்போது விசித்திர வீரியன் அப்படி இல்லை. அவன் இயல்பாக பிறந்ததில் இருந்தே பலஹீனமாகவே இருந்தான். அவன் ஆயுதப் பயிற்சி எல்லாம் மேற்கொள்ளவும் இல்லை. அதோடு ஒரு நிலையான எண்ணமும் அவனிடம் காணப்படவில்லை. நிமிஷத்துக்கு நிமிஷம் மாறும் சுபாவம் கொண்டவனாகவும் இருந்தான். மனிதர்களை எப்படிக் கையாள்வது என்பதில் அவனுக்குச் சிரமங்கள் இருந்தது. இதனால் அவன் தாய்வழிப் பரம்பரை குறித்து அனைவரும் அடிக்கடி பேசினார்கள். அவன் தாய்வழியைக் கொண்டு பிறந்திருப்பதாக நினைத்தனர். அரசகுமாரனுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்கள் அவனிடம் இல்லை என்று ரகசியமாகப் பேசிக் கொண்டனர். ஆகவே இது வெளியே பரவப் பரவ மற்ற நாடுகளில் இருந்து எந்த அரசனும் தன் பெண்ணையோ, சகோதரியையோ அவனுக்கு மணமுடிக்க விரும்பவில்லை. இதெல்லாம் மஹாராணி சத்யவதியின் மனதைப் புண்படுத்தியது. அவள் வேதனையில் ஆழ்ந்தாள். தன் மகனுக்குத் திருமணம் ஆகவில்லை எனில் குரு வம்சம் வாரிசின்றி முடிவடைந்து விடுமே எனக் கவலைப் பட்டாள். ஆனால் இதற்கெல்லாம் இளவரசர் காங்கேயர் ஒரு முடிவு கட்ட முனைந்தார்.

காசி தேசத்து அரசன் தன் மூன்று பெண்களுக்கும் ஒரே நேரத்தி சுயம்வரம் ஏற்பாடு செய்திருந்தான். அம்பா, அம்பிகை, அம்பாலிகை ஆகிய அவர்கள் மூவரும் தங்களுக்கு இஷ்டப்பட்ட கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர். இதில் அம்பா மட்டும் சால்ய தேசத்து மன்னனைத் தன் மணாளனாக ஏற்க இஷ்டப்பட்டுத் தன் தந்தையிடமும் அது குறித்துத் தெரிவித்திருந்தாள். ஆனால் காங்கேயர் வலிமை வாய்ந்த ஓர் படையுடன் காசி தேசத்துக்குச் சென்று சுயம்வர மண்டபத்துக்குள் புகுந்து மூன்று பெண்களையும் தூக்கி வந்தார். இது ஓர் அசாதாரணமான நிகழ்வாக இருந்தது. காசி தேசத்து அரசன் எதிர்த்துப் போர் புரிந்தாலும் அவனை வெல்ல அதிக நேரம் பிடிக்கவில்லை காங்கேயருக்கு. மற்ற அரசர்கள் எதிர்த்தவர்களையும் புறம் காட்ட வைத்தார்.  இது குருவம்சத்தினருக்கு ஓர் மாபெரும் வெற்றி என்றாலும் சத்யவதிக்கு தர்மசங்கடமாகவே இருந்தது. ஏனெனில் இத்தனை வருடங்களாகக் குரு வம்சத்தினரின் புகழ், கௌரவம் எல்லாம் அவளாலும் மஹாராஜா ஷாந்தனுவாலும் கட்டிக் காப்பாற்றப் பட்டு வந்ததற்கு இப்போது இடையூறு நேரிட்டுவிட்டதாகவும் மாபெரும் களங்கம் ஏற்பட்டு விட்டதாகவும் உள்ளூர அஞ்சினாள். மனம் பதைத்தாள்.

அந்தச் சமயம் தர்மக்ஷேத்திரம் வந்திருந்த வாடிகா இந்தச் செய்தி கிடைத்ததும் உடனடியாக ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கே விசித்திரவீரியனுக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திருமணமும் நிறைவேறியது.  த்வைபாயனரால் செல்ல முடியவில்லை. அவருக்கு இங்கே ஸ்ரோத்திர சத்ரா அதை விட மிக முக்கியம். ஆகவே வாடிகா மட்டும் சென்றிருந்தாள். திருமணமும் நடைபெற்றது. த்வைபாயனர் இங்கே தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் அனைத்து ஆசாரியர்களும் ஒரு சேர அமர்ந்த வண்ணம் வேதங்களைக் குறித்த விவாதங்களையும், ஆலோசனைகளையும் செய்து கொண்டிருந்தனர். மந்திர கோஷம் விண்ணைப் பிளந்தது, அதை முறியடிக்கும் வண்ணம் வேகமாய் வந்த ரதம் ஒன்றின் சக்கரம் கிரீச்சிட்டுக் கொண்டு நின்றது அனைவர் காதுகளிலும் விழுந்தது. குதிரைகளின் குளம்படிச் சப்தமும், அவை கனைக்கும் சப்தமும் கேட்டன. மந்திர கோஷம் அப்படியே நின்றது. அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஏதோ அசாதாரணமான நிகழ்வு நடந்திருக்கிறது.

தொடர்ந்து ரதங்கள் வரும் சப்தமும் கேட்டது. அனைவரும் உன்னிப்பாகக் கவனிக்கையிலேயே முதலில் வந்து நின்ற ரதத்திலிருந்து மந்திரி கௌண்டின்யர் என்பவர் இறங்கி த்வைபாயனர் இருக்கும் இடத்தைக் கேட்டுக் கொண்டு வந்தார். வந்தவர் த்வைபாயனரிடம் மாட்சிமை பொருந்திய மஹாராணி வந்திருப்பதைத் தெரிவித்தார். த்வைபாயனருக்குத் திக்கென்றது. எனினும் தன்னைச் சமாளித்துக் கொண்டு வேகமாக வெளியே நின்று கொண்டிருக்கும் மஹாராணியை வரவேற்கச் சென்றார். மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். முதலில் வந்த ரதத்துக்குப் பின்னர் ஓர் ரதத்தில் சிலர் அமர்ந்திருக்க மூன்றாவதாக மஹாராணியின் ரதம் நின்றிருந்தது. சுற்றிலும் திரைச்சீலைகளால் மூடப்பட்டிருந்த அந்த ரதத்தின் சீலைகளை ஊழியர்கள் விலக்க முதலில் தாவி இறங்கினாள். பின்னர் அவள் கை கொடுத்து மஹாராணியை இறக்கி விட்டாள். த்வைபாயனரின் மனம் கலங்கியது. ஏதோ அவசரமான, அவசியமான விஷயம் இருப்பதால் தான் பிரச்னை ஏற்பட்டிருப்பதால் தான் தானே கிளம்பி வந்திருக்கிறாள் சத்யவதி! இல்லை எனில் வந்திருக்க மாட்டாள். இப்படி எல்லாம் எவருக்கும் சொல்லாமல் வருபவள் அல்ல அவள். த்வைபாயனர் தாயை நமஸ்கரிக்கத் தன் அருமை மகனின் முதுகில் தட்டிக் கொடுத்தாள் சத்யவதி!

சத்யவதி கணவன் இருக்கையில் ஒரு அழகோடு இருந்தாள் எனில் இப்போது கணவன் இறந்த பின்னரும் இந்தச் சங்கடமான சூழ்நிலையிலும் சற்றும் அழகு குறையாமலேயே இருந்தாள். ஆனால் இப்போது அவள் பார்க்கக் கவர்ச்சியாக மட்டும் இல்லை. கௌரவமான ஒரு அரசகுல மாதாவாகக் காட்சி அளித்தாள். பார்ப்பவர் அவளைக் கை எடுத்துக் கும்பிடும் வண்ணம் மரியாதைக்குரியவளாக இருந்தாள். மஹாராணிக்குரிய கிரீடம் வைத்துக் கொண்டிருந்தபோது இருந்ததை விட இப்போது அவள் தூக்கிக் கட்டி இருக்கும் அவள் கூந்தல் இயற்கையான கிரீடமாக அவளுக்கு அணி செய்தது. இப்போதும் அவளைப் பார்க்கிறவர்கள் பார்க்கும் கண்களை எடுக்கத் தயங்கினார்கள் தான்! ஆனால் அவர்கள் மனதில் மரியாதையே நிரம்பி இருக்கும். ஆபரணங்களைப் பூண்டு இருந்த கோலத்தை விட இப்போது ஆபரணங்கள் பூணாமலேயே அவள் இயற்கையான அழகில் ஜொலித்தாள். ஒரு மன முதிர்ச்சி வாய்ந்த மரியாதையுடன் அனைவரும் வணங்கக் கூடிய பெண்மணியாகவே காட்சி அளித்தாள். துயரம் கூட அவளுக்கு அழகு கொடுத்தது.

த்வைபாயனர் அவளைத் தம் குடிசைக்கு அழைத்துச் சென்றார். மற்ற ஆசாரியர்கள் அனைவரும் அவளுக்கு ஆசிகளை வழங்கி விட்டு அவரவர் இடத்துக்குச் சென்றனர். பைலரிடம் தொடர்ந்து தன் வேலையையும் சேர்த்துக் கவனிக்கச் சொல்லிவிட்டுத் தாயைத் தன்குடிலுக்கு அழைத்துச் சென்றார் த்வைபாயனர். ஒரு மாணவனை அழைத்து வாஜ்பேய யக்ஞத்தின் போது மஹாராணியும் மஹாராஜாவும் தங்கி இருந்த குடிலைச் சுத்தம் செய்து சத்யவதி தங்குவதற்கு ஏதுவாக இருக்கும்படி செய்யச் சொன்னார். பின்னர் அவளை உட்காரச் செய்து ஓர் மண் குடுவையில் குடிக்க மோரும் கொடுத்தார். சற்று ஆசுவாசம் செய்து கொண்ட சத்யவதி தன்னுடன் வந்த ஊழியர்களை அப்புறம் போகச் சொல்லி சைகை செய்தாள். தாவியைத் தவிர மற்றவர் வெளியேறினார்கள். த்வைபாயனர் காட்டிய ஆசனத்தில் அவள் அமர்ந்ததும் த்வைபாயனர் அவளைப் பார்த்து, “தாயே, எங்கே என் மனைவியும் ஜாபாலியின் மகளுமான வாடிகா? உங்களுடன் வரவில்லையா?” என்று கேட்டார்.

அதற்கு சத்யவதி அவளை அம்பாவுடன் அனுப்பி இருப்பதாகச் சொன்னாள். இதைச் சொல்லும்போதே மனம் உடைந்து பெரிதாக அழ ஆரம்பித்தாள் சத்யவதி. உதடுகள் நடுங்க, “க்ருஷ்ணா, துரதிர்ஷ்டம் ஓர் பெரிய இடியைப் போல் எங்கள் குடும்பத்தில் விழுந்து விட்டது! அதிலிருந்து மீளத் தெரியாமல் தவிக்கிறோம்.” என்றாள்.

“என்ன ஆயிற்று அம்மா? இடி விழுந்ததா? என்ன சொல்கிறீர்கள்?”

“க்ருஷ்ணா, அந்த இடி என் மேல் மட்டும் விழவில்லை. காங்கேயன் மேல், குரு வம்சத்தின் மேல், எங்கள் குடும்பத்தின் மேல்! ஏன் நாங்கள் கடைப்பிடிக்கும் தர்மத்தின் மேலும் விழுந்து விட்டது!”சொல்லும்போதே அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“என்ன ஆயிற்று? நீங்கள் அனைவரும் விசித்திர வீரியனுக்குக் காசி தேசத்து அரசகுமாரிகளோடு மணம் முடிந்த பின்னர் சந்தோஷமாக இருப்பதாகவன்றோ நினைத்து வந்தேன்!”

“இல்லை மகனே! இந்தக் கல்யாணம், ஆம், கல்யாண விஷயமே ஒரு கோரமான, கொடூரமான விவகாரமாகப் போய் முடிந்து விட்டது!” என்று சொன்ன மஹாராணி தன் உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.