Friday, July 29, 2016

இருதலைக்கொள்ளியாக காங்கேயர்!

த்வைபாயனர் முகம் ஒரு சிறுவனைப் போல் மலர்ந்தது. தன் தாயின் நினைவுகளில் அவரும் பங்கு கொண்டார். அதே மாறாத புன்னகையுடன் தாயிடம், “இப்போதும் நீ அதைத் தான் செய்கிறாயா அம்மா? மூழ்குவதைப் போல் நடிக்கிறாயா? நான் வந்து காப்பாற்ற வேண்டுமென்பது தான் உன் எண்ணமா?” என்று கேட்டார். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நகைத்துக் கொண்டனர். ஆனால் உடனடியாகத் தற்கால நிகழ்வுகள் அவர்களை துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. த்வைபாயனர் யோசனையுடன் பேசினார். “அம்மா, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் வருத்தத்தை உணர்கிறேன். காங்கேயன் இல்லை எனில் க்ஷத்திரிய தர்மத்தைக் காப்போரும் இல்லை. அவருடைய வலிமையான தோள்களில் தான் அரச தர்மமும் க்ஷத்திரிய தர்மமும் இடம் பெற்றுக் காக்கப்பட்டு வருகின்றன. ம்ஹூம், அவர் இல்லை எனில் க்ஷத்திர்ய தேஜஸோடு பிரம தேஜஸும் இணைந்து பங்காற்றுவது என்பதும் கனவாகி விடும். ஆன்ம ஒளி பெறுவதும் நடைபெறாத ஒன்றாகும்.” என்றவர் தன் தாயிடம், “காங்கேயர் இங்கே எப்போது வருகிறார்?” என்று விசாரித்தார்.

“இன்னமும் மூன்று நாட்களுக்குள்ளாக இளவரசன் காங்கேயன் இங்கே வருவான். ஒரு வேளை அவனால் திரும்ப முடியவில்லை எனில் என்ன செய்வது? அதற்காகத் தக்க ஏற்பாடுகளைச் செய்து வர வேண்டியே அவன் அங்கே தங்கி இருக்கிறான். அவன் இப்போதெல்லாம் பேசுவதில்லை. மௌனமாகவும் அதே சமயம் கடுமை நிறைந்த முகத்துடனும் காணப்படுகிறான். காங்கேயன் மட்டும் வெளியேறிவிட்டான் எனில்! ஹஸ்தினாபுரம் சுக்கு நூறாகி விடும்! அடுத்து என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது!” இதைக் கேட்ட த்வைபாயனர் மௌனமாக யோசிக்க சத்யவதியும் மௌனம் காத்தாள். பின்னர் ஏதோ நினைவுக்கு வந்தது போல் நிமிர்ந்து தாயைப் பார்த்தார் த்வைபாயனர். “அம்மா, நீங்கள் கவலைப் பட வேண்டாம். அனைத்தையும் சூரிய பகவானிடம் ஒப்படைத்து விடுங்கள். நீங்கள் நிம்மதியாக இருங்கள். எல்லா விஷயங்களும் அவை எப்படி நடக்க வேண்டுமே அப்படியே தான் நடக்கின்றன. நம் விருப்பம் இதில் எதுவும் இல்லை. எல்லாம் அவன் விருப்பம். அவன் செயல்!” என்றார்.

மூன்று நாட்களில் காங்கேயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சில மஹாரதிகளும் தன்னுடைய போருக்கான ரதத்தில் அங்கே வந்து சேர்ந்தார். அவருடன் ஓர் ரதப்படையே வந்திருந்தது. பராசர ஆசிரமத்தின் வாசலிலேயே த்வைபாயனர் அவரை வரவேற்றார். தக்க மரியாதைகள் செய்து அவரை வரவேற்றார் த்வைபாயனர். காங்கேயரும் த்வைபாயனருக்குத் தக்க மரியாதைகள் செய்தார். அவர் கண்கள் கடுமையைக் காட்டின. முகம் கல்லைப் போல் இறுகிக் கிடந்தது. உதடுகள் ஓர் தீர்மானத்தில் உறைந்து கிடந்தன. அவருக்கெனத் தயாரிக்கப்பட்ட குடிலுக்கு த்வைபாயனர் அவரை அழைத்துச் சென்றார். பின்னர் இருவருமாக சத்யவதியைச் சென்று பார்த்தார்கள். பூரண ஆயுதபாணியாக வந்திருந்த காங்கேயர் ஆயுதங்களை நீக்கிவிட்டு சத்யவதியைப் பார்க்கச் சென்றார். சத்யவதியை நமஸ்கரித்து முடிக்கும் வரையில் பேசாமல் இருந்த காங்கேயர் உடனே பேசத் தொடங்கினார்.

“பாலமுனி, அம்மா உங்களிடம் அனைத்தையும் சொல்லி இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். இந்தப் பிரச்னையைக் குறித்து நன்கு அறிவீர்கள் அல்லவா?”

“ஆம்,” என்றார் த்வைபாயனர். “என்ன செய்ய உத்தேசித்திருக்கிறீர்கள், இளவரசே?” என்றும் கேட்டார். காங்கேயர் தன் தொண்டையைக் கனைத்துச் செருமிக் கொண்டார். “என்னுடைய வழி தெளிவாக இருக்கிறது. நான் என்னுடைய சபதத்தை உடைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்ளும் உத்தேசத்தில் இல்லை. என் குருவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகக் கூட நான் என் சபதத்தை உடைக்கப் போவதில்லை. என்னால் அது இயலாத காரியம்!”

“அது சரி இளவரசே! ஆனால் நீங்கள் இல்லை எனில் குரு வம்சம் என்னாவது? இந்த மாபெரும் சாம்ராஜ்யம் என்னாவது? உங்கள் உதவி இல்லாமல் இந்த சாம்ராஜ்யம் இனி எப்படி முன்னேற முடியும்?”

“பாலமுனி, நான் என் சபதத்தை உடைத்தேன் எனில்! நான் இறந்தவனை விட, பிணத்தை விட மோசமானவன் ஆவேன். என்னால் அப்படி நடக்க இயலாது! ஆனால் என் குருநாதர் நேரம் குறித்துவிட்டார். ஆணை இட்டுவிட்டார். அப்போது நீங்கள் யாராக இருந்தாலும் கீழ்ப்படியாமல் இருக்க முடியாது. கீழ்ப்படியவில்லை எனில் போரிட்டு உயிரைத் துறக்க வேண்டியது தான் ஒரே வழி!”

“காங்கேயா!.........” என்று ஆரம்பித்த சத்யவதியால் மேலே பேசமுடியாமல் தொண்டையை அடைத்துக் கொண்டது. அதைக் கண்ட காங்கேயர், “தாயே, தாயே, கலங்காதீர்கள்! என்னைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம்.” என்று வேண்டினார். அதற்குள்ளாகத் தன்னைச் சுதாரித்துக் கொண்ட சத்யவதி, “காங்கேயா, நீ என்ன நினைக்கிறாய்? உன் மனம் என்ன நினைக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீ ஓர் சத்யபிரதிக்ஞை எடுத்தவன். நீ உயிர் வாழ்வதும் அந்த சத்தியத்துக்கே! அதற்காகவே நீ இருக்கிறாய்! உன்னுடைய வீரதீர சாகசங்கள் நிறைந்த இந்த வாழ்க்கைக்கு நீ எடுத்த சத்தியப் பிரதிக்ஞை ஓர் கிரீடமாக அணிகலனாக விளங்குகிறது. நீ இறந்தாயெனில் கூட அது மாபெரும் விஷயமாகப் பேசப்படும். அரசகுமாரர்கள் மத்தியிலும் அரசர்கள் நடுவிலும் நீ ஓர் அணையாத கலங்கரை விளக்கமாகத் தோன்றுவாய்! அவர்கள் நினைவில் நீ என்றென்றும் வாழ்வாய்! ஏன் எனில் எடுத்துக் கொண்ட சபதத்துக்காக நீ உன் இன்னுயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறாய்! ஆனால் நீயும் உன் தந்தையும் இன்று வரை கட்டிக்காத்து வரும் அரச தர்மம்? அது எங்கே போகும்? அதற்கு என்னாகும்? அந்த தர்ம சாம்ராஜ்யம் உடைந்து சுக்குச் சுக்காகிவிடுமே!”

காங்கேயர் வருத்தத்துடன் தன் தலையை ஆட்டினார். “தாயே, எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்றாவிட்டால் தர்மம் என்னிடம் எப்படி வாழும்? நானும் அதைக் காப்பாற்ற எங்கனம் முயல்வது? தர்மம் வாழ வேண்டுமெனில் என் சபதத்தை நான் மீறக் கூடாது!” இதைக் கேட்ட சத்யவதியின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. என்ன சொல்வது எனப் புரியாமல் அழுதாள். அதற்குள்ளாக அந்த ஆசிரமத்திலும் சுற்று வட்டாரத்திலும் செய்தி கசியத் தொடங்கியது. மேன்மை பொருந்திய பரசுராமர் ஜாபாலியின் ஆசிரமத்திற்கு வந்திருக்கிறாராம். பார்கவ கோத்திரத்தைச் சேர்ந்த பரசுராமர், கோடரியைத் தன் ஆயுதமாய்க் கொண்டவர், சாட்சாத் விஷ்ணுவின் அவதாரம் என்ப்படுபவர் தர்மக்ஷேத்திரத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறாராம். அவருடைய வாழ்நாளிலேயே பரசுராமர் அனைத்துப் பதவிகளையும் ஒருசேரப் பெற்று விட்டார். அவர் தெய்விகத் தன்மையையும் அடைந்து விட்டார். அனைவராலும் மிகவும் மரியாதையுடனும் பக்தியுடனும் பார்க்கப்பட்டார். பலராலும் அவர் கடவுளாகவே வணங்கப் பட்டார். சாக்ஷாத் அந்தப் பரமசிவனே பூலோகத்துக்குவந்து விட்டார் என்னும்படி போற்றப் பட்டார்.

மிகவும் மரியாதையுடன் போற்றப் படும் ஜமதக்னி முனிவரின் மகன் பரசுராமர் தன் தந்தையை சஹஸ்ரார்ஜுனன் கொன்றதைச் சகிக்காமல் துயரில் ஆழ்ந்ததோடு அல்லாமல்.அதற்காகப் பழியும் வாங்கினார். மாஹிஷ்மதி நகரின் அரசனான சஹஸ்ரார்ஜுனன் அவன் படையெடுத்து வந்தபோது ஆரிய வர்த்தத்தையே நாசமாக்கினான். பல அரசர்களைக் கொன்று சாம்ராஜ்யங்களை அழித்தான். பல ரிஷிகளையும் முனிவர்களையும் கொன்று ஆசிரமங்களைத் தீக்கிரையாக்கினான். பெண்களை மானபங்கப் படுத்திப் பசுக்களையும் மற்றக் கால்நடைச் செல்வங்களையும் கவர்ந்து சென்றான். அந்தச் சமயம் தான் பரசுராமர் அனைத்துக்குமாகச் சேர்த்துப் பழிவாங்கவென்று வீறு கொண்டு எழுந்தார். இந்தப் படையெடுப்பை முற்றிலும் பூண்டோடு அறுத்து ஒழித்தார். சஹஸ்ரார்ஜுனனைப் பூண்டோடு ஒழித்துக் கட்டி ஆர்யவர்த்தத்தை விட்டு விரட்டி அடித்தார். அவருடைய வீர, தீர சாகசங்கள் அனைத்தும் சாமானிய மக்களால் நாட்டுப்பாடல்களாகவும், கதைகளாகவும் ஆங்காங்கே பாடப்பட்டும் சொல்லப்பட்டும் வந்தன. சஹஸ்ரார்ஜுனனைத் தன் வெறும் கைகளால் அவர் வென்றதைக் குறித்து அனைவரும் கதை கதையாகச் சொல்லுவார்கள்.. ஓர் தடுக்க இயலாத படையை உருவாக்கி சஹஸ்ரார்ஜுனனை அடியோடு ஒழித்தார். அவருடைய தலைமையின் கீழ் குருக்ஷேத்திரத்தில் போர் புரிந்து சஹஸ்ரார்ஜுனனை ஆரியர்கள் ஒன்று கூடி அழித்தொழித்தனர். அதன் பின்னரே அங்கே ஐந்து ச்யமந்தக ஏரிகள் இந்தப் படையெடுப்பின் நினைவாகத் தோற்றுவிக்கப்பட்டது. அகோரிகள் என அழைக்கப்பட்ட சைவ சமயத்தின் இணையற்ற தலைவராகவும் கருதப்பட்டார்.


1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.