Wednesday, October 12, 2016

ராஜசூய யாகத்துக்கான ஏற்பாடுகள்!

அந்தக்காலங்களில் க்ஷத்திரியர்கள் அண்டை நாடுகளுடன் போரிட்டுத் தங்கள் நாட்டை விஸ்தரித்துக் கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. அது தான் வீரம் என்றும் பேசப்பட்டது. அப்படி நாட்டை விஸ்தரித்துக் கொண்டு பலநாடுகளையும் தனக்குக் கீழ் கொண்டு வந்து ஆட்சி செய்பவன் சக்கரவர்த்தி எனப்பட்டான். யுதிஷ்டிரனுக்கும் இப்போது அப்படி ஓர் நிலைமை ஏற்பட்டிருந்தது. மிகக் கடுமையானதொரு தேர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தான். அவனும் ஓர் க்ஷத்திரியன் தானே! அதுவும் போர்க்கலையை மிக நன்றாகப் பயின்றவன். தன் முன்னோர்களின் சாகசங்களைக் குறித்துக் கேட்டு அறிந்து கொண்டு அவர்களின் வீர, தீர சாகசங்களில் மிக்க பெருமையும் கர்வமும் அடைபவன். ஆகவே ஒரு க்ஷத்திரியனுக்குப் போர் என்பது மாபெரும் யக்ஞம் ஒன்றைப் போல் ஆகும். தன்னையே ஆகுதியாகக் கொடுக்கும் ஓர் உயர்ந்த சமயச் சடங்கைப் போன்றது. யாகங்களில் சொரியப்படும் நெய்யைப் போல் அவன் தன் ரத்தத்தை இங்கே சொரிந்து அந்த யக்ஞத்தை மிக மதிப்பானதாக ஆக்குவான். அப்படி அவன் இருந்தால் தான் அனைத்தையும் வென்று பெயரையும், புகழையும் பெற்றுத் தன் முன்னோர்களின் பித்ரு லோகத்தில் ஓர் உன்னதமான இடத்தையும் பெற முடியும்.

ஆகவே அவன் க்ஷத்திரிய தர்மம் என்னும் இந்த நெருப்பை என்றென்றும் அணைந்து விடாமல் பாதுகாத்து வர வேண்டும். அந்த மாபெரும் பொறுப்பு அவன் தோள்களில் சுமந்திருக்கிறான். இவ்விதமான காப்பிய மரபுகளைத் தொடர்ந்து அவன் பின்பற்றவில்லை எனில், அதன்படி நடக்கவில்லை எனில், அவன் மனைவி, அவனுடைய மற்ற சகோதரர்கள், அவனைப் பெற்ற தாய் குந்தி ஆகியோர் மட்டுமில்லாமல் கிருஷ்ணன் கூட அவனை ஒதுக்கிவிடுவான். ஆகவே அவன் எப்பாடுபட்டாவது இவற்றைக் காப்பாற்றி வரவேண்டும். அரண்மனையிலுள்ள பெண்டிரும் யுதிஷ்டிரனின் மற்ற சகோதரர்களும் அடிக்கடி சந்தித்து ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக் கொள்வார்கள். அவர்களுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இந்திரப் பிரஸ்தத்தை ஓர் வலுவான நகரமாக ஆக்குவது குறித்தும் பேசிக் கலந்து ஆலோசிப்பார்கள். அவர்கள் அனைவரின் எண்ணமும் இந்திரப் பிரஸ்தம் ஆரியவர்த்தத்தில் குறிப்பிட்ட இடத்தைப் பெறுவது மட்டுமல்ல, சர்வ சக்தி வாய்ந்த அதிகார மையமாக அதை மாற்றுவதும் தான்! அதிலும் அவர்கள் க்ஷத்திரிய தர்மத்தையோ, யுதிஷ்டிரன் அரச தர்மத்தையோ  மீறாமல் அதைச் செய்து முடிக்க வேண்டும். ஆகவே அவர்கள் பேச்சு சுற்றிச் சுற்றி தர்மத்தைக் காப்பாற்றுவதில் வந்து முடியும்.

தர்மம் வெற்றி அடையவேண்டும், எங்கும் தர்மசாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இத்தகைய பேச்சுக்களின் போது பீமன் உற்சாகத்துடன் கலந்து கொள்வான். இன்னும் சொல்லப் போனால் அவன் தான் தலைமை வகித்துப் பேசுவான். என்ன நடந்தாலும் சரி, ஹஸ்தினாபுரத்தை விட அதிக வலுவுள்ள நகரமாக இந்திரப் பிரஸ்தம் திகழ வேண்டும். அதற்கான ஆவன செய்ய வேண்டும். துரியோதனனை ஒருக்காலும் ஓர் சக்கரவர்த்தியாக அங்கீகரிக்க முடியாது. அவன் சக்கரவர்த்தியாக ஆகவும் கூடாது. அவன் கெட்டவன், பொறாமைக்காரன், நமக்குத் தீங்கிழைப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிறான். தந்திரக்காரன், சூழ்ச்சிகள் செய்கிறான். நாம் ஐவரையும் ஒருசேர ஒழித்துக்கட்ட நினைப்பவன்.. அவன் சக்கரவர்த்தி ஆகக் கூடாது.

அர்ஜுனன் இடைவிடாமல் வில் வித்தையில் புதிது புதிதாக முயற்சி செய்து கொண்டிருந்தான். அவனுடைய முயற்சிகள் மூலம் அவன் கர்ணனைப் போன்றதொரு எதிரியை வெல்ல, அழிக்கவோ முடிய வேண்டும். ஆகவே அவன் அதற்கெனப் பயிற்சிகள் செய்து வந்தான். துரியோதனனின் நண்பனான கர்ணன் மிகச் சிறந்த வில் வித்தைக்காரன் என்ற பெயர் பெற்றிருந்தான். அவனைத் தோற்கடிக்க வேண்டும். நகுலனுக்கோக்  குதிரைகள் மேல் விருப்பம் அதிகம். வித விதமான குதிரைகளை வாங்கி அவற்றுக்குப் பயிற்சி கொடுத்து வந்தான். அனைத்தும் ரதத்தில் பூட்டுவதற்கோ அல்லது போரில் குதிரைப்படைகளாக ஆவதற்கோ கொடுக்கப்பட்ட பயிற்சிகள் ஆகும். அதற்கெனப் பல ரதப் போட்டிகளை வைத்தான். இவை எல்லாமுமே அவன் போரில் ஈடுபடுவதற்கான முன்னோட்டமாகவே கொண்டான். அவற்றுக்கான ஒத்திகைகளாகச் செய்தான். அப்போது தான் குதிரைகளும் சரி, குதிரை வீரர்களும் சரி எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள். போர் என்பது எப்போது நடைபெற்றாலும் அந்தப் போரை அவன் எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தான். ஒரு விதத்தில் அதை விரும்பினான். அவனுடைய மிகப்பிரியமான குதிரை தேவலோகத்து தெய்விகக் குதிரையை விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று நம்பினான்.

இப்படி மற்ற சகோதரர்கள் போருக்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கையில் கடைக்குட்டியான சஹாதேவனோ எப்போதும் போல் வாயைத் திறக்காமல் அமைதி காத்து வந்தான். அவனிடம் ஏதேனும் கேள்வி கேட்டால் ஒழிய அவன் வாயையே திறக்க மாட்டான். அமைதியாக உட்கார்ந்து கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருப்பான். தன் மனதில் உள்ளதை வாயைத் திறந்து சொல்ல மாட்டான். இம்மாதிரியான முக்கியமான சம்பாஷணைகளின் போது யுதிஷ்டிரன் மிகவும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. மிகச் சிரமத்துடன் தன்னைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வான். தான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால் அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நினைத்து அவன் யோசித்தே பேசுவான். க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பாற்றுவதற்காகத் தான் கொடுத்த உறுதிமொழியை மீறும் வண்ணம் ஒரு சொல்லாவது அவன் வாயிலிருந்து வந்து விடாமல் கவனமாக இருப்பான்.

மீண்டும் மீண்டும் அண்டை நாடுகளைத் தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொண்டு ஒரே அரியணைக்குக் கீழ் ஆட்சியைக் கொண்டு வருவது குறித்து அவர்கள் பேசினார்கள். அப்போது தான் ஆரியவர்த்தத்தில் அவர்களின் பெயர், புகழ் எல்லாமும் சிறப்பாக ஓங்கி இருக்கும். வல்லமை படைத்தவர்களாகவும் இருப்பார்கள். ஆயிற்று! கிருஷ்ணன் துவாரகைக்குக் கிளம்பிப் போய் மூன்று மாதங்கள் கடந்து விட்டன. சகோதரர்கள் தங்கள் ராஜ்யத்தை விஸ்தரிப்பது குறித்தும் தங்கள் மகிமையை மேலும் மேலும் வளர்த்து புகழ் அடையும் வழியைக் குறித்தும் யோசித்துப் பேசி வந்தனர். அப்போது பீமனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவன் ஏதேனும் ஓர் யாகம் செய்வது குறித்துப் பேசினான். வாஜ்பேய யக்ஞம், அல்லது ராஜசூய யாகம் அல்லது அஸ்வமேத யாகம்! ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும். அண்டை நாட்டவரை அழைத்து உபசரித்து நம் உயர்வைக் காட்டிக் கொள்ள வேண்டும்.

இதைக் கேட்ட குந்திக்குப் பழைய நினைவுகள் மனதில் வந்து மோதின. அதோடு இல்லாமல் அவளுக்கு இந்த ரத்தம் சிந்தும் போர்களெல்லாம் பிடிக்கவே இல்லை. அவற்றைத் தவிர்க்கவே நினைப்பாள். ஆகவே இந்த யாகம், யக்ஞம் என்பது அவள் மனதுக்குப் பிடித்தமாக இருந்தது. பீமன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதுமே அவளுக்கு அதில் ஆர்வம் மேலிட்டது. பழைய நினைவுகள் மனதில் வந்தன. அவள் கணவன் பாண்டு ராஜசூய யாகம் செய்ய ஆசைப்பட்டது குறித்தும் அது நிறைவேறாமலேயே அவன் இறந்தது குறித்தும் அவள் சொல்லி வருந்தினாள். இத்தனைக்கும் அவன் அரியணை ஏறிய பின்னர் பல நாடுகளையும் வென்றான். பல நாடுகள் ஹஸ்தினாபுரத்து மன்னனின் ஆட்சிக்குக் கீழ் வந்தன. அந்த மன்னர்களெல்லாம் ஹஸ்தினாபுரத்து மன்னன் பாண்டுவுக்கு விசுவாசமாகவும் இருந்து வந்தனர். ஆனாலும் பாண்டுவால் ராஜசூய யாகத்தை மேற்கொண்டு நடத்த முடியாமலே போய் விட்டது. இதைச் சொல்லிக் குந்தி வருந்தினாள்.

உடனேயே அங்கிருந்த அனைவருக்கும் குந்தியின் விருப்பத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்னும் கருத்து ஒருமித்த கருத்தாகத் தோன்றியது. யுதிஷ்டிரன் ஏதோ சொல்ல வாயெடுத்தான்; ஆனால் தன்னை அடக்கிக் கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தான். பீமன் தான் வாயைத் திறந்தான். “நாங்கள் உன் ஆசையைப் பூர்த்தி செய்கிறோம், தாயே! கவலைப்படாதே!” என்று குந்திக்கு ஆறுதல் சொன்ன பீமனின் கண்கள் ஒளி வீசிப் பிரகாசித்தன. அவன் காதலித்து மணந்த காசி தேசத்து இளவரசி ஜாலந்தராவும் அங்கே அவனுடன் இருந்தாள். அவள் கண்களும் தன் கணவன் முகம், கண்கள் மலர்ந்ததைக் கண்டு தாமரைப் பூப் போல் மலர்ந்து இருந்தது. அவளுக்கு பீமன் மேல் இருந்த அளவு கடந்த ஆசை திருமணம் ஆகி இத்தனை வருடங்கள் ஆகியும் சற்றும் குறையவில்லை. திருமணத்தின் போது இருந்த அதே ஆசை மனதோடு இப்போதும் பீமனை நினைத்துப் பெருமையுடன் வாழ்ந்து வந்தாள்.

ராஜசூய யாகம் எனில் ஒரு போர் கட்டாயம் இருக்கும். ஆகவே அர்ஜுனன், “நாம் வெற்றி கொள்வோம்!” என்று சூளுரைத்தான். “நம் தந்தை எப்படி அண்டை நாடுகளை வென்றாரோ அதே போல் நாமும் வெற்றி கொள்வோம்!” என்றான் அர்ஜுனன். நகுலனும் அதை ஆமோதித்துத் தலை அசைத்தான். கடைசியில் அவன் இத்தனை நாட்களாகத் தன் குதிரைகளுக்கு அளித்து வந்த பயிற்சி வீண் போகவில்லை. இப்போது உண்மையானதொரு போரில் அவை ஈடுபடப் போகின்றன. சஹாதேவன் அப்படியே என்னவென்று சொல்ல முடியாத தெளிவாகத் தெரியாததொரு மனோநிலையில் மௌனமாக அமர்ந்திருந்தான்.

1 comment:

ஸ்ரீராம். said...

முதலில் துரியோதனனை வென்றிருக்கலாம்! தொடர்கிறேன்.