Monday, December 26, 2016

பாண்டவர் தேவியுமல்லை நீ! புகழ்ப் பாஞ்சாலத்தான் மகளல்லை நீ!

அங்கே நின்றிருந்த ஓர் ஊழியனிடம் துரியோதனன் கூறினான். “பிரதிகாமி, பெண்கள் தங்கும் அந்தப்புரம் செல். அங்கிருக்கும் நம் அடிமை திரௌபதியிடம் சொல். அவள் இப்போது எனக்கு உரியவள் என்று எடுத்துச் சொல். உடனே அவளை தர்பார் மண்டபத்துக்கு வரச் சொல். என் ஆணை என்று தெரிவி! அவளுடைய யஜமானர்களான எங்களுக்கு அவள் உடனடியாக இங்கே வந்து தன் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டு அடிமைகளுக்குரிய வேலைகளைத் தொடங்க வேண்டும் என்று சொல்!” என்றான். அந்த ஊழியன் கண்களில் அச்சம் தெரிந்தது. அதைக் கண்ட துரியோதனன் மேலும் தொடர்ந்து கூறினான். “ பிரதிகாமி, விதுரன் இப்போது விவரித்தவற்றைக் கேட்டுவிட்டு இதன் பின் விளைவுகள் என்னவாக இருக்குமோ என்று அஞ்சுகிறாயா? பயப்படாதே! இதோ பாண்டவ சகோதரர்கள் ஐவருமே இப்போது எங்கள் அடிமைகள். ஆகவே இவர்கள் ஐவரின் மனைவியுமான திரௌபதியும் எங்கள் அடிமையே!” என்றான்.

அரை மனதாக அந்த ஊழியன் பிரதிகாமி பெண்கள் தங்கும் அந்தப்புரம் நோக்கிச் சென்றான். அங்கே விசாரித்ததில் திரௌபதி மாதாந்திர விலக்கின் காரணமாக அரச குடும்பத்தினர் தங்கவென்று ஏற்படுத்தப்பட்டிருந்த தனி அறையில் இருப்பதைத் தெரிந்து கொண்டான். அங்கே இருந்த திரௌபதியோ விரைவில் மோசமான பேரிடர் ஒன்று ஏற்படப் போகிறது என்பதைத் தன் உள்ளுணர்வால் புரிந்து கொண்டிருந்தாள். எந்த நேரமும் அது தன்னையும் வந்து தாக்கும் என எதிர்பார்த்திருந்தாள். அதுவும் அவள் மாத விலக்கின் காரணமாகத் தனித்திருக்கையில் தன்னை நோக்கி ஊழியன் பிரதிகாமி வருவதைப் பார்த்ததும் அவள் நெஞ்சு உலர்ந்து போனது. அச்சத்தில் மனம் திக், திக் என அடித்துக் கொண்டது. அவளுக்கு ஏற்கெனவே யுதிஷ்டிரன் இம்மூவுலகிலும் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத் தங்கள் அனைவரையும் தியாகம் செய்து விடுவான் என்னும் எண்ணம் ஆழப் பதிந்திருந்தது. அப்படி ஏதானும் நடந்திருக்குமோ?
பிரதிகாமி அறைக்கு வெளியே நின்ற வண்ணம் தன் கைகளைக் கூப்பிக் கொண்டான். பின்னர் தன் தலையைக் குனிந்து வணக்கம் தெரிவித்தான். “மாட்சிமை பொருந்திய அரசியே! உங்களை தர்பார் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லவே நான் வந்துள்ளேன்!” என்றான். “என்ன? தர்பார் மண்டபத்திற்கா? அதுவும் என்னுடைய இந்த நிலைமையிலா? அது எப்படி முடியும்?” என்று கேட்டாள்.  “என்னை மன்னியுங்கள், மாட்சிமை பொருந்திய அரசியே! நான் உண்மையையும் பேச முடியாது. அதே சமயம் உங்களிடம் பொய்யும் சொல்ல முடியாது. மாட்சிமை பொருந்திய இந்திரப் பிரஸ்தத்து அரசர் யுதிஷ்டிரன் சூதாட்டத்தின் போது உங்களையும் பணயம் வைத்து ஹஸ்தினாபுரத்து யுவராஜா துரியோதனனிடம் உங்களை இழந்து விட்டார்.  யுவராஜா துரியோதனன் இப்போது உங்களை தர்பார் மண்டபத்துக்கு அழைத்திருக்கிறார்.” என்றான்.

திரௌபதி திகைத்தாள்.  சிறிது நேரம் ஆனது அவள் தன்னிலைக்கு வர! தன்னிலைக்கு அவள் வந்ததும், கேட்டாள். “என்ன சொல்கிறாய்? பிரதிகாமி? என்ன இது? என் கணவருக்குப் புத்தி பிசகி விட்டதா? அவர் என்னை எப்படிப் பணயம் வைக்க முடியும்?” அதற்குப் பிரதிகாமி தன் கைகளைக் கூப்பிய வண்ணம் கூறினான். “மாட்சிமை பொருந்திய அரசர் யுதிஷ்டிரன் முதலில் தங்கள் உடைமைகளையும், செல்வங்களையும் இழந்தார். பின்னர் இந்திரப் பிரஸ்தத்தை இழந்தார். அதன் பின்னர் தன் சகோதரர்கள் ஒருவர் பின் ஒருவராக இழந்தார். பின்னர் தன்னையும் இழந்தார். அதன் பின்னர் தன்னுடைய க்ஷத்திரிய குலத்தின் மகன் என்னும் தகுதியை இழந்தார். அதன் பின்னர் உங்களைப் பணயம் வைத்து உங்களையும் இழந்தார்!” என்று விவரித்தான்.

திரௌபதியின் முகம் ஆத்திரத்திலும் தாங்கொணாக் கோபத்திலும் சிவந்தது. “பிரதிகாமி, உடனடியாக தர்பார் மண்டபம் செல்! அங்கே என் கணவர் யுதிஷ்டிரன், பாண்டுவின் புத்திரனிடம் கேள்! அவர் என்னை எப்போது இழந்தார் என்று கேள்! தன்னையும் தன் சுதந்திரத்தையும் இழந்த பின்னர் என்னை இழந்தாரா? அல்லது அதற்கு முன்னரா என்று நான் கேட்டதாக ஆரிய புத்திரரிடம் கேள்!” என்று பதில் கொடுத்தாள். பிரதிகாமி மீண்டும் தர்பார் மண்டபம் நோக்கிச் சென்றான். அங்கே யுதிஷ்டிரனைப் பார்த்து அவன், “பிரபுவே, மதிப்புக்குகந்த பாஞ்சால இளவரசியும், உங்கள் ராணியுமான தேவி அவர்கள் உங்களிடம் இதைக் கேட்கச் சொன்னார்கள். அவரை நீங்கள் இழந்தது உங்கள் சுதந்திரத்தைப் பறி கொடுத்த பின்னரா அல்லது அதற்கு முன்னரா என்று அறிய விரும்புகிறார்!” என்றான்.

யுதிஷ்டிரனுக்கு மூச்சு முட்டியது. அவன் உள்ளத்தில் உணர்ச்சிப் பிரவாகம் எடுத்து ஓடியதில் அவன் மூழ்கி விடுவான் போல் இருந்தது. அவனால் பேச முடியவில்லை. அதோடு இல்லாமல் அவன் தர்பார் மண்டபத்தில் வைத்து எதையும் பேசவும் விரும்பவில்லை. திரௌபதியை அவன் இழந்தது எப்போது என்பது குறித்த கருத்து எதையும் இப்போது கூற அவன் விரும்பவில்லை. திரௌபதியைப் பணயம் வைத்தது சரியானது தானா என்பது குறித்தும் அவன் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் துரியோதனன் மிகவும் ஆத்திரத்துடன் பிரதிகாமியிடம் கூறினான். “அந்தப் பெண்மணியை இங்கே தர்பார் மண்டபத்துக்கு வரச் சொல்! அவளே நேரில் இந்தக் கேள்வியைக் கேட்கட்டும்!” என்றான்.  பிரதிகாமி திரும்பிச் சென்று திரௌபதியிடம் யுதிஷ்டிரன் பதில் ஏதும் கொடுக்கவில்லை என்றும், துரியோதனன் அவள் தர்பார் மண்டபம் வந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் கூறினான்.

துரியோதனனின் இந்தக் கட்டளையைப் பிரதிகாமி கூறியதும் திரௌபதி சொன்னாள்: ”நீ மீண்டும் தர்பார் மண்டபத்துக்குப் போ! அங்கே என் பிரபுவிடம் நான் செய்ய வேண்டியது என்ன என்று கேள்! அவர் சொல்வதை மட்டுமே நான் கேட்பேன். மற்றவர் பேச்சைக் கேட்க மாட்டேன்!” என்று தீர்மானமாகச் சொன்னாள். மீண்டும் தர்பார் மண்டபம் சென்ற பிரதிகாமிக்குத் தான் மிகக் கடுமையான அக்னிப் பரிக்ஷையில் இருப்பதாகத் தோன்றியது. ஏதோ கடுமையான சாபத்தில் அவன் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்தான். ஏனெனில் அவனைக் காப்பாற்ற யுதிஷ்டிரனாலும் முடியாது. துரியோதனன் குறித்துச் சொல்லவே வேண்டாம்.  அங்குமிங்கும் செய்திகளைத் தூக்கிக் கொண்டு அலையும் அவனை துரியோதனன் எவ்வாறு காப்பாற்றுவான்? அவனால் செய்யக் கூடியது எதுவுமே இல்லை. திரௌபதியின் செய்தியை அங்கே தர்பார் மண்டபத்தில் துரியோதனனிடம் தெரிவித்தான் பிரதிகாமி. யுதிஷ்டிரன் வாயே திறக்கவில்லை. தங்களுடனேயே திரௌபதியும் இருக்கவேண்டும் என்றே அவன் அவளையும் பணயம் வைத்தான். அவனுடைய இந்த நோக்கத்தை அவன் எப்படி திரௌபதியிடம் விவரிப்பான்?

“அவளிடம் சொல்! அவள் இங்கே வந்து இங்குள்ள பெரியோரிடம் அவள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்கச் சொன்னேன் என்று தெரிவிப்பாய்!” என்றான் யுதிஷ்டிரன்.  ஊழியன் பிரதிகாமி அந்த இடத்திலேயே சிலை போல் நின்றான். அவனை அங்கேயே ஸ்தாபிதம் செய்து விட்டாற்போல் நின்றான். அவன் துரியோதனனுக்கும் கீழ்ப்படியாமல் இருக்க முடியாது. அதே போல் திரௌபதியின் நேர்மையான கோபத்தையும் அவனால் எதிர்கொள்ள முடியாது! துரியோதனன் தன் தம்பி துஷ்சாசனனிடம் திரும்பினான். “தம்பி, துஷ்சாசனா! இந்த ஊழியன் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறான். நீயே அந்தப்புரம் செல்! திரௌபதியை தர்பார் மண்டபத்துக்கு இழுத்துவா!  உனக்குக் கீழ்ப்படிய மாட்டேன் என்று அவளால் மறுக்க இயலாது! கேவலம் அவள் ஓர் அடிமை!” என்றான். துஷ்சாசனன் வெற்றிப் புன்முறுவல் பூத்தான். பாண்ட சகோதரர்கள் ஐவர் மட்டுமின்றி அவர்களின் மனதுக்குகந்த ராணியும் இப்போது அவர்களின் அடிமை!

துஷ்சாசனன் அரசகுலப் பெண்டிர் தங்கும் அந்தப்புரம் சென்று அங்கே தனி அறையில் இருந்த திரௌபதியைச் சென்று பார்த்தான். ஓர் இகழ்ச்சிப் புன்னகையுடன் அவளிடம் அவள் ஹஸ்தினாபுரத்து அரசன் துரியோதனனால் தர்பார் மண்டபத்துக்கு வரும்படி ஆணையிடப் பட்டிருப்பதாகச் சொன்னான். திரௌபதி திட்டவட்டமாக மறுத்தாள். அவன் சொன்னான். “வா, உடனே வா! வந்துவிடு! நீ என்ன இன்னமும் உன்னைக் குரு வம்சத்தின் இளவரசி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீ இப்போது ஓர் அடிமை! ஆனால் பயப்படாதே! நீ இப்போது குரு வம்சத்தின் ஈடு இணையற்ற அரசன் துரியோதனனின் பாதுகாப்பில் இருக்கிறாய்!” என்றான். அப்போது திரௌபதி அடைந்த வேதனையை துஷ்சாசனன் மிகவும் ரசித்தான். அவன் சிரித்தான். மேலும் பேசினான். “ரொம்பவே அடக்கமாக இருப்பதாக நினைக்காதே! நாங்கள் யார்? உன் கணவன்மார்களின் பெரியப்பன் பிள்ளைகள் தானே!” என்று கூறினான்.

ஆத்திரமும், ஆங்காரமும் பொங்க திரௌபதி துஷ்சாசனனைப் பார்த்தாள். அங்கிருந்து காந்தாரி தங்கி இருந்த இடம் நோக்கிச் செல்ல இரண்டு அடி எடுத்து வைத்தாள். ஆனால் துஷ்சாசனன் அவளை அங்கிருந்து தப்பிச் செல்ல விடவில்லை.  அவளை நோக்கிக் கோபமாக அடி எடுத்து வைத்து, அவளுடைய நீண்ட தலைமுடியைப் பிடித்து இழுத்தான். அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்த வண்ணம் அவளை தர்பார் மண்டபம் நோக்கி இழுத்துச் சென்றான். அது மிகக் கஷ்டமானதொரு வேலை தான். ஆனாலும் துஷ்சாசனன் சிறிதும் இரக்கமின்றி நடந்து கொண்டான். திரௌபதியின் கெஞ்சல்களைக் கேட்ட அவன் மீண்டும் மீண்டும் அவமரியாதையான சொற்களை அவளிடம் கூறினான்.  “என் சகோதரன் துரியோதனன் நீ தர்பார் மண்டபம் வந்து சேர வேண்டும் என்று விரும்புகிறான். நீ ஓர் அடிமை. இங்கே ஆடப்பட்ட சூதாட்டத்தில் நீ உன் கணவனால் பணயம் வைக்கப்பட்டு அடிமை ஆகி விட்டாய்!” என்று கூறிக்கொண்டே அவளை இழுத்துச் சென்றான். திரௌபதி கட்டி இருந்த ஒற்றை ஆடை அவள் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரில் நனைந்தது.  அந்தக் கோலத்துடனேயே அவள் தர்பார் மண்டபத்துக்குள் நுழைந்தாள்.


1 comment:

ஸ்ரீராம். said...

கொடுங்காட்சி. பின்னராவது இதுபற்றி காந்தாரியின் கருத்து என்ன கொண்டிருந்தாள் என்று அறிய ஆவல்.