Monday, July 2, 2012

துரியோதனனின் கவலை!


அங்கே மூன்றாவதாய் அமர்ந்திருந்தவன் கர்ணன் என்னும் அங்க நாட்டு அரசன்.  தேரோட்டி ஒருவனால் வளர்க்கப்பட்டு சிறு வயதில் இருந்தே துரியோதனனின் இணை பிரியா நண்பனாக விளங்குபவன்.  துரோணாசாரியாரிடம் ஆயுதப் பயிற்சிகளும், சஸ்திர வித்தைகளும் கற்றவன்.  அப்போதில் இருந்தே அர்ஜுனனைத் தனக்குச் சமமாக நினையாதவன்.  எப்போதுமே அர்ஜுனனை விடத் தான் ஒரு படி மேல் நிலையில் இருக்க விரும்புவன்.  அழகிய முகம்.  நெற்றியில் சூரிய வடிவில் திலகம் இட்டிருந்தான்.  தினசரி சூரிய வழிபாடு தவறாமல் செய்பவன்.  அவன் நேர்மையும், தைரியமும் அவன் முகத்திலும் கண்களிலும் பிரதிபலித்தன. 

கட்டுமஸ்தாகக் காணப்பட்டாலும் அவன் உடல் எளிதில் வளையும் தன்மையும் கொண்டிருந்தது.  அதீத புத்திசாலி என்பதை அவன் கண்களிலிருந்து அவ்வப்போது வந்த மின்னலைப் போன்ற ஒளி காட்டிக் கொடுத்தது.  துரியோதனனை விடவும் ஆயுதப் பயிற்சியிலும், வில் வித்தையிலும் தேர்ந்தவனாய் இருப்பான் என்பதை அவன் உடல் அமைப்புக் காட்டிக் கொடுத்தது.  ஆனாலும் அவன் அணிந்திருந்த உடையும், ஆடை ஆபரணங்களும், கிரீடமும் துரியோதனனை விடவும் அவன் கொஞ்சம் கீழ்ப்பட்ட நிலையிலே இருப்பதைச் சுட்டிக்காட்டியது.

“மாமா, அந்த மாட்டிடையன் இப்போது பார்த்து இங்கே ஏன் வருகிறான்?  அவன் வருவதில் எனக்குக்கொஞ்சம் கூட சம்மதம் இல்லை.  அவனைக்குறித்து நான் நன்கறிவேன்.  பயங்கரமானவன் அவன்.” என்றான் வெறுப்புடன். 


சகுனி சிரித்துக்கொண்டே, நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான்.  நிதானமாய்த் தன் கைகளில் இருந்த பானத்தை அருந்தினான்.  துரியோதனனைப் பார்த்து, “ துரியோதனா, அவன் இந்தச் சமயம் மட்டுமல்ல, எப்போது வந்தாலும் எனக்குப் பிடிக்கவில்லைதான்.  அவனைக் கண்டாலே எனக்கும் எரிச்சல் வருகிறதுதான்.  ஆனால் அவனை நீ மாட்டிடையன் எனக்கூப்பிடுவது மட்டும் சரியில்லை.  உனக்கு யாரையானும் பிடிக்கவில்லை எனில் தாராளமாய் அடைமொழிகள் வைத்து அழைக்க ஆரம்பிக்கிறாய்.” என்று கொஞ்சம் ஹாஸ்யமாகவே பேசினான்.


“அவனால் நமக்கு என்ன நேரிட்டுவிடப் போகிறது?” கர்ணன் கொஞ்சம் அலட்சியமாகவே கேட்டான்.

“உனக்குத் தெரியாது கர்ணா!  அவன் புரிந்து கொள்ளாத விஷயமோ, அறியாத செய்தியோ எதுவுமே இருக்காது.  குறைந்த பக்ஷமாக யாதவர்கள் அப்படித்தான் நம்புகின்றனர்.  அவர்களை அவன் தன் கைப்பொம்மைகளாக ஆட்டி வைக்கிறான்.  அவர்களும் அவனுடைய இசைக்கு ஏற்ப ஆடுகின்றனர்.  எத்தனை பெரியவர்களாக இருந்தாலும்.  அதோடு பாண்டவர்கள் அவனுக்கு அத்தை வழி சகோதரர்கள் என்பதை மறவாதே.  அவர்களை நாம் நாடு கடத்தியதையே ஒரு போதும் மன்னிக்க மாட்டான் எனில், இப்போது நடந்திருக்கும் விஷயத்திற்கு என்ன தான் சொல்வானோ!”


“ஒருவேளை பாண்டவர்கள் எப்படி இறந்தார்கள் என ஆராய்ச்சி செய்யப் போகிறானோ என்னவோ!” சகுனி விஷமத்தனமாகச் சிரித்துக்கொண்டே கூறினான்.


“அவர்கள் தான் செத்து ஒழிந்தார்களே.  அவர்களுக்கு உரிய மரியாதையுடன் ஈமக்கடன்களையும் நிறைவேற்றியாகி விட்டது.  இனி அவ்வளவு தான்.  வேறு பேச்சுக்கே இடமில்லை.”  என்றான் கர்ணன் திட்டமாக.


“ஹூம், உனக்குப் புரியவில்லை.  அந்தக்கண்ணனை நான் நன்கறிவேன்.  சிரித்துக்கொண்டே கழுத்தை அறுப்பான். இவ்வுலகிலேயே இப்படிச் சிரித்துச் சிரித்துக் கழுத்தறுப்பவர்களில் இவன் ஒருவன் தேர்ந்தவன்.  நான் நன்கறிவேன்.” என்றான் துரியோதனன்.


தன் மருமகனையே கொஞ்சம் கனிவோடு பார்த்த சகுனி, அவனைச் சீண்டுவது போல, “ கிருஷ்ணனின் சாகசங்களைக் குறித்து அறிந்திருக்கிறாய் அல்லவா?  அவன் சாகசங்கள் ஒரு கதை போல் பேசப்படுகின்றன.  அதோடு அவன் மனிதனே அல்ல;  கடவுள் என்பதாகவும் கூறுகின்றனர்.”  என்றான்.


“பைத்தியக்காரத் தனம், முட்டாள் தனம்.” ஆக்ரோஷத்தோடு பேசினான் துரியோதனன்.   “அவனால் திறமையாகச்  சண்டை போட முடியலாம்.  அதில் வெற்றியும் பெறலாம்.  நல்ல சதியாலோசனைகளும் செய்வான் என நினைக்கிறேன்.  நம்மைப் போல் தான் தூங்கி, விழித்து, எழுந்து, அநுஷ்டானங்களைச் செய்து, உணவு உட்கொண்டு, போர் புரிந்து, மனைவிகளோடு வாழ்ந்து, வயதான பெண்களுக்கு உதவிகள் புரிந்து என ஒரு சாதாரணமான மனுஷனைப் போல் தான் இருக்கிறான்.   ம்ம்ம்ம்ம்…இன்னும் சொல்லப் போனால் பெண்களோடான அவனுடைய உறவுகள் குறித்துப் பலவிதமாய்ப் பேசுகிறார்கள் தான்.  ஆனால் அவனைக் கடவுள் என யார் சொன்னது?  சரி, அவன் கடவுளாகவே இருந்தாலும், ஏன் இங்கே வருகிறான்?  அவனுடைய இப்போதைய நகரம் துவாரகை மேற்குக் கடற்கரைக் கோடியில் உள்ளது.  இவ்வளவு பெரிய நிலப்பரப்பைக் கடந்து ஏன் இங்கே வரவேண்டும்?   அவன் கடவுள் இல்லை என்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயம் அவன் வெறும் துக்கம் விசாரிக்க மட்டுமே இவ்வளவு தூரத்தைக் கடந்து வருகிறான் என்பதை நான் நம்ப மாட்டேன்.”


“ஆஹா, என் அருமை மருமகனே,  மறுபடி நீ நிதானமிழந்து பேசுகிறாய்.” சொன்னவண்ணமே சகுனி துரியோதனனைத் தட்டிக் கொடுத்தான்.  “நீ ஒரு விஷயத்தை நம்பவில்லை எனில், நம்பவில்லை என்பதை வெளிக்காட்டாதே.  கிருஷ்ணன் கடவுளாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே;  இறந்து போன பாண்டவர்களை உயிர்ப்பிக்க அவனால் இயலுமா?  நிச்சயம் முடியாது.  அதோடு மருமகனே,  இந்தக் கடவுளர் எல்லாம் தங்களுக்கு முகஸ்துதி செய்பவர்களுக்குத் தான் அருள் புரிகின்றனர்.   சாமானியருக்கு இல்லை. “ என்று கேலியாகச் சொன்னான்.  

1 comment:

அப்பாதுரை said...

சகுனிக்கு ஒரு பின் கதை உண்டே உங்களுக்குத் தெரியுமா? பாண்டு திருதராஷ்ட்ரன் குடும்பத்தை அழிக்க அவர் ஏதோ சபதம் எடுத்ததாக வரும் கதை. எனக்கு நினைவில்லை. தேடித் தேடிப் பார்க்கிறேன் - கிடைக்கவுமில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்? இந்த இடத்தில் நல்ல இடைச்செருகலாக அமையும்.