Tuesday, September 24, 2013

துரோணரின் சீடர்கள்!

கண்ணனை அங்கேயே இப்போதைக்கு விட்டுவிட்டு, நாம் இப்போ அவசரமா ஹஸ்தினாபுரம் போயாகணும்.  அங்கே ஒரு முக்கியமான நிகழ்ச்சி! அதுவும் துருபதனின் ஜென்ம வைரியான துரோணரின் ஆசிரமத்திலே!  என்னனு பார்ப்போமா?  துரோணர் தன் ஆசிரமத்தின் தன் வழக்கமான ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.  அவருடைய மாளிகைக்கு எதிரே அவர் ஆசிரமத்தின் யுத்தசாலை எனப்படும் பயிற்சிக் கூடத்தில் ஹஸ்தினாபுரத்தின் படைகளின் தலை சிறந்த தளபதியான துரோணர் சிந்தனையுடன் அமர்ந்திருந்தார்.   அவர் முகம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்ததை அவர் புருவங்களின் நெரிப்பும், கண்களில் தெரிந்த மனச் சஞ்சலத்தின் அறிகுறியும், அதன் மூலம் விளைந்த அமைதிக்குறைவும் நன்றாகக் காட்டியது.  அவர் முன்னே   கெளரவர்களில் மூத்தவனும் அப்போதைய ஹஸ்தினாபுரத்தின் யுவராஜாவானவனுமான  துரியோதனன், வில் வித்தையில் சிறந்தவன் ஆன துரியோதனனின் நண்பனும், அவனால் அங்க நாட்டரசன் ஆனவனும் ஆன கர்ணன்,   துரோணரின் அருமை மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.  புஷ்கரத்தை ஆண்ட யாதவர்களின் காவலன் ஆன செகிதானாவை வென்று அங்கிருந்து விரட்டி அடித்ததைக் குறித்த தங்கள் சந்தோஷத்தை துரோணரிடம் கூறி பெருமிதம் கொள்ள வந்தவர்கள், அவர்களுடைய இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைக்கு வசைமாரி கிடைத்துச் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர்.    துரோணர் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தார்.

“நான் சொன்னது என்ன துரியோதனா!  எவ்வாறேனும் செகிதானாவை நண்பனாக ஆக்கிக் கொண்டு அவன் மகனை இங்கே மாணவனாகச் சேர்த்து விடு என்றல்லவோ கூறினேன்!  ஆனால் நீ செய்தது என்ன?  அவனை நசுக்கி அல்லவா எடுத்துவிட்டாய்?  அவனை ஆக்கிரமிக்கவா சொன்னேன்?  புழு,பூச்சியை நசுக்குவது போல் அல்லவோ அவனை நசுக்கிவிட்டாய்?  கெளரவர்களுக்கு இது உகந்தது அல்ல.  அதோடு அவனை யமுனையின் அக்கரைக்குத் துரத்தி அடித்திருக்கிறாய்!”

“ஆசாரியரே, அவன் பிடிவாதக்காரனாக இருக்கிறான்.  தோல்வியை எங்கே ஒப்புக் கொண்டான்!” கர்ணன் கூறினான்.   சூரியனைப் போன்ற தேஜஸோடு கூடிய அவன் அழகிய முகம் கோபத்தில் சிவந்து கொந்தளித்தது.  “அவனுக்கு இது வேண்டியது தான்.  அவனுடைய அகம்பாவத்தாலேயே அவன் விரட்டி அடிக்கப்பட்டான்.”

“அவன் கெட்டிக்காரன்; தைரியசாலியும் கூட.  அதனாலே தான் அவனுடைய நட்பு நமக்கு மிகத் தேவையான ஒன்று என நான் நினைத்தேன்.  அதை மிக விரும்பினேன்.  இப்போது அந்த ராஜபாட்டையின் பாதுகாவலனாக யார் இருக்கின்றனர்?  புஷ்கரத்துக்குச் செல்லும் ராஜபாட்டையில் அநேக இடங்களில் யாதவத் தலைவர்கள் குடி இருக்கின்றனர்.  தங்கள் படைகளோடு பலரும் இருக்கின்றனர்.” துரோணர் பேசுகையில் அவருக்கு செகிதானாவை விரட்டி அடித்ததில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்பதைக் குரலிலேயே காட்டினார்.   ஆனால் அடுத்துப் பேசிய அஸ்வத்தாமனுக்கு துரோணரின் இந்தக் கோபம் பிடிக்கவில்லை என்பதும் தெரிந்தது. “ நீங்கள் தான் அப்போது முழுச் சம்மதம் கொடுத்தீர்கள் தந்தையே!  செகிதானாவை நாங்கள் எதிர்க்க நீங்கள் சம்மதம் கொடுத்தீர்கள்!” என அழுத்தம்திருத்தமாய்ச் சொன்னான்.  துரியோதனனும் தன் குரலில் கடுகடுப்பைக் காட்டியவண்ணம், “அவன் ஒருக்காலும் நம் நண்பனாக மாறப்போவதில்லை ஆசாரியரே!  மாறவும் மாட்டான்!” என்று திட்டவட்டமாகக் கூறினான்.  “நீ உன் மனதை அதற்கேற்றாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டும், துரியோதனா!” ஆசாரியர் கூறினார்.


இப்போது கர்ணன் மீண்டும் வலியுறுத்தும் குரலில், “அவனெல்லாம் நம்மோடு நட்பை விரும்புபவனல்ல ஆசாரியரே! அவன் ஒரு விஷச் செடியைப் போல் வெட்டி எறியப் பட வேண்டியவன்.” என்றான்.  “ஆஹா, நண்பர்களே இல்லாமல் நீங்கள் அனைவரும் மட்டும் சேர்ந்து உங்கள் எதிரிகளை ஒழிக்கப் போகிறீர்களா?” ஆசாரியர் குரலில் ஏளனம் மிகுந்தது.  “இப்போது புஷ்கரம் நம் கைகளில் இருப்பதால், விராடன், கண்ணன் ஆகியோரின் நடவடிக்கைகளை நாம் கண்காணிக்க இயலும்.  மேலும் ஹஸ்தினாபுரத்தில் இருந்து செளராஷ்டிரம் செல்லும் ராஜபாட்டையில் நம் கண்காணிப்பு இருப்பதால் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்,  இது நமக்கு நன்மையே.  அவை நம் ஆட்சியின் கீழ் வருவதால் நன்மையே பயக்கும்.” என்றான் கர்ணன்.  துரோணர் அவனை அலட்சியமாகப் பார்த்தார்.  “விராடனும், யாதவர்களும் ஒன்று கூடிக் கொண்டால்?? அதுவும் நமக்கெதிராக?  அப்போது நமக்கு அவர்களைக் கவனிப்பதும், அவர்களை எதிர்கொள்வதுமே வேலையாக இருக்கும்.  அதற்கே சரியாக இருக்கும்.  அந்தச் சமயம் பார்த்து துருபதன் ஹஸ்தினாபுரத்தில் நுழையப் பார்ப்பான்.  அவனை எவரால் தடுக்க இயலும்?”


“நான் விகர்ணனைப் புஷ்கரத்தை நிர்வகிக்கச் சொல்லியுள்ளேன்.” என்றான் கர்ணன்.  “கெளரவர்களின் படைகள் இவற்றுக்கு நடுவே எங்கே தங்கும்?  ஒரு பக்கம் முழு விரோதியான விராடன், இன்னொரு பக்கம் ஷால்வன், செகிதானாவைச் சுற்றியோ யாதவப் படைத்தலைவர்கள்!  இவர்களுக்கு நடுவே மாட்டிக் கொண்டு தவிக்கும் கெளரவப் படைகள்!  ஹூம்!  என்ன காரியம் செய்திருக்கிறீர்கள்?  போங்கள், இப்போது போங்கள்!  எப்படி இருந்தாலும் என்னுடைய ஆசிகள் இருக்கும்!   நான் இந்த விஷயத்தைக் குறித்துப் பிதாமகர் பீஷ்மரோடு கலந்து ஆலோசிக்க வேண்டும்.  அதன் பின்னர் நாம் செய்யவேண்டியது என்ன என்று தீர்மானிக்கலாம்.”  துரோணர் அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்.  இளைஞர்கள் மூவரையும் அனுப்பிய துரோணர் தீவிர சிந்தனையில் மூழ்கினார்.  துரியோதனன் வழக்கம் போல கர்வம், அகம்பாவம் நிறைந்தே இருந்து வருகிறான்.  கட்டுக்கு அடங்காத மூர்க்கமும், சுயநலமும் அவனை விட்டு மறையவில்லை.  கொடுக்கும் புத்திமதியின் உள்ளார்ந்த பொருளைப் புரிந்து நடக்கும் ராஜதந்திரத்தை அவனிடம் எதிர்பார்க்கவும் முடியவில்லை.  அவனுக்கும் ராஜதந்திரத்துக்கும் வெகு தூரம்.  ஹூம்!  துரோணரின் திட்டங்கள் தோல்வியடைகின்றனவே!  செகிதானாவை ஒரு விசுவாசமுள்ள நண்பனாக ஆக்கிக் கொள்வதன் மூலம், ஷால்வனின் நாட்டுக்கும், யாதவர்களின் சின்னச் சின்ன நாடுகளுக்கும், ஹஸ்தினாபுரத்தின் எல்லைகளுக்கும் இடையே இருந்து வரும் சச்சரவுகளைத் தீர்த்துக் கொண்டு எல்லைகளை பலமாகவும் வலிமையாகவும் மாற்ற விரும்பினார்.  ஆனால் அவருடைய அருமைச் சீடர்களோ, செகிதானாவை அமைதியும், சமாதானமும் விரும்பும் நண்பனாக ஆக்கிக் கொள்ளாமல், அவனை நிரந்தர எதிரியாக மாற்றிவிட்டனர்.  “ஒருவேளை கிருஷ்ணன் செகிதானாவின் உதவிக்குச் சென்று புஷ்கரத்தை மீண்டும் கைப்பற்றிவிட்டால்??


“ஹூம், இந்த இடைக்குலத்தில் வளர்ந்த யாதவச் சிறுவன் ஒரு நிரந்தரத் தொல்லையாக மாறிவிட்டிருக்கிறானே! “  துரோணரின் சிந்தனைக் கொடி உயர உயரப் பறந்தது.  “அவன் இப்போது காம்பில்யத்தில் இருப்பான்.  விரைவில் துருபதனின் மகளை மணந்து கொள்ளவும் போகிறான்.  யாதவத் தலைவன் செகிதானாவை அவனுடைய ஆளுமைக்கு உட்பட்ட பிரதேசத்திலிருந்து விரட்டி அடித்ததைத் தெரிந்து கொண்டால், கிருஷ்ணன் , அவன் மாமனார் ஆன துருபதனோடு கூட நிச்சயம் கெளரவர்களுக்கு எதிராகப் படை திரட்டுவான்.  அதுவும் இப்போது பாண்டுவின் புத்திரர்கள் ஐவரும் இறந்துவிட்ட செய்தியைக் கேட்டதுமே யாதவர்கள் அனைவருக்கும் கெளரவர்களிடம் சந்தேகம், கோபம்.  இந்நிலையில் நிச்சயம் அவர்களின் விரோதம் வளரும்.  போரையும் அறிவிக்கலாம்.  இது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் அல்ல.  அவசரக் காரன், பிடிவாதக்காரன், முரடன், மூர்க்கன்”, துரியோதனன் குறித்தே ஆசாரியர் துரோணர் இத்தனை வசைமாரிகளையும் தனக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டார். “சும்மாவானும் இப்படி எல்லாம் வலுவில் போரிட்டுத் தங்கள் வீரத்தைக் காட்டுவது தான் சிறப்பு என நினைக்கின்றனர் போலும்.  எப்போது அவர்கள் இவை எல்லாம் தேவையில்லாத அசட்டு தைரியம், வீரத்தில் சேர்த்தியல்ல என்பதைப் புரிந்து கொள்ளப் போகின்றனர்?”


தன் சிந்தனை வெள்ளத்தில் மூழ்கிப்போன துரோணர், தன் அன்றாட வழக்கமும், பொழுது போக்கும் ஆன மீன்கள், ஆமைகளுக்கு நதியில் தானியங்களை இறைத்து உணவளிக்கவும் மறந்து போனார்.  அவருடைய உதவியாளனோ, நான்கு புதிய மாணவர்களைச் சேர்க்க வேண்டி துரோணரின் வருகைக்காக வெகு நேரமாகக் காத்துக் கொண்டிருந்தான்.  துரோணரின் பார்வை யுத்தசாலைப் பக்கம் திரும்பும் நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் இருந்தான்.  திடீரென நினைவுக்கு வந்தவர் போல, துரோணர் அவன் பக்கம் திரும்பி, “ஷங்கா, இந்த இளைஞர்கள் நம் யுத்தசாலைப் பயிற்சிக்குத் தக்கவர்களாக இருக்கின்றனரா?  நீ அளித்த தேர்வுகளில் தேறிவிட்டனரா?” எனக் கேட்டார். யுத்தசாலையில் பயிற்சி பெற வரும் இளைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருந்த நடுத்தர வயதுக் காரன் ஆன ஷங்கன், குருவிடம் நெருங்கி வந்து கிசு கிசுத்தான். “ நேற்று வந்த அந்தச் சின்னஞ்சிறு இளைஞன், அவன் இளைஞனா?  இல்லை, அவன் ஒரு ஆண் என்பதை விடப் பெண் என்றே சொல்லலாம்.” என்று மிக மெதுவாக ரகசியம் பேசும் குரலில் கூறினான்.

“அவனை அனுப்பிவிடு!  நான் ஒரு பெண்ணை எல்லாம் யுத்தசாலைப் பயிற்சிக்கு எடுத்துக் கொள்வதில்லை.  முதலில் அனுப்பு அவனை!”  தன் கைகளால் உதாசீனமாக அவனை அனுப்பும்படி ஜாடை காட்டினார் துரோணர். “அவன்போக மாட்டானாம் குருதேவரே!  வந்ததில் இருந்து உணவுகூட உண்ணாமல் உங்களைத் தனியாக நேரில் சந்திக்க வேண்டும் எனக் காத்திருக்கிறான்.  உங்களை நேரில் சந்திக்காமல் இங்கிருந்து செல்லமாட்டானாம்.” என்றான் ஷங்கன்.






3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையாக சுவாரஸ்யமாகச் செல்கிறது. பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

காட்சி மாற்றத்தில் துருபதனிடம் எப்போது கதை நகரும் என்று காத்திருக்கிறேன்!

இராஜராஜேஸ்வரி said...

ராஜதந்திரமற்ற துரியோதனனால் துரோணருக்கு எத்தனை சங்கடம் ..!!