Tuesday, September 3, 2013

வெற்றிச் சங்கு முழங்குகிறது! சாதனையும், சோதனையும்!

சிகுரி நாகன் தலைமையில் அந்தக் குழுவினர் கற்கள் நிரம்பி, ஏற்றமும், இறக்கமுமாய் இருக்கும் அந்தப் பாதையில் சென்றனர்.  அனைவருக்கும் பின்னால் பாதுகாப்பாக சாத்யகி வந்தான்.  அவனுடன் வந்த சிலர் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைச் சுமந்து வந்தனர்.  செங்குத்தான, உயரமான அந்த மலைப்பாதையில் குறிப்பிட்ட உயரம் வந்ததும், கிருஷ்ணன் யாதவர்கள் பாடும் போர் கீதத்தைப்பாட ஆரம்பித்தான்.   உணர்ச்சி பொங்கும் குரலில் அவன் பாடுவதைத் தொடர்ந்து மற்ற யாதவர்களும் கலந்து கொள்ள, நாகர்கள் அவர்கள் பாடலின் வரிகளைத் திரும்பப் பாடி அவர்களைத் தொடர்ந்தார்கள்.  அவர்களுக்கு அந்த மொழியும் புரியவில்லை;  பாடலும் புரியவில்லை.  ஆனாலும் உணர்வுகள்  பொங்கப் பாடிய யாதவர்களைப் பார்த்ததும், அவர்களுக்கும் அதே உணர்வுகள் பொங்கின. பாடப் பாட அவர்களின் நாடி, நரம்புகளில் எல்லாம் புது ரத்தம் பாய்ந்தது போல் தோன்ற மனதில் உற்சாகம் பொங்க மீண்டும் மேலே வேகமாகவே ஏறினார்கள்.  செங்குத்தாக மேலே ஏறிய அந்தப் பாறையின் சரிவுக்கருகே வந்தார்கள் அவர்கள் அனைவருமே.


அப்போது யாரும் எதிர்பாரா வண்ணம் கண்ணன் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துக் கொண்டு, தன் வில்லாகிய சார்ங்கத்தையும் இன்னொரு கையில் பிடித்த வண்ணம், சங்கை முழங்கினான்.  அவன் ஊதியது வெற்றிச் சங்க முழக்கம்.  அது காட்டின் மூலை, முடுக்குகளில் எல்லாம் சென்று எதிரொலித்தது. ஆங்காங்கே பறவைகள், விலங்குகள், புழு, பூச்சிகள் என அனைத்திலும் அதன் தாக்கம் தெரிந்தது.


”பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” என ஆரம்பித்த அந்த முழக்கம் ஒரு எதிரொலியாக மாறி ஆயிரம், பதினாயிரம் முறைகள் அனைவருக்கும் கேட்டது.   மாட்சிமை பொருந்திய அந்த ராக்ஷச வர்த்தத்தில் வசிக்கும் அனைத்து ராக்ஷசர்களையும் சவாலுக்கு அழைக்கும் விதத்தில் இருந்தது அந்தச் சங்கநாதம்!  கண்ணனின் இந்த வெளிப்படையான சவால் விடுக்கும் அழைப்பு அனைவருக்கும் ஒரே நேரத்தில் ராக்ஷசர்களிடம் பயத்தையும், கண்ணனிடம் மரியாதையும் பக்தியையும் உண்டாக்கியது.  அப்போது நடந்தது ஒரு ஆச்சரியம்.  கண்ணனின் அந்தச் சங்க நாதத்துக்கு பதில் கிடைத்தது.  ஆம்.  அந்தக் காட்டுப் புதர்களில் இருந்து முளைத்தாற்போல் உத்தவன் கண்ணனின் சங்க நாதத்துக்குப்பதிலாக சந்தோஷக் கூச்சலிட்டுக் கொண்டு,  ஓட்டமாக ஓடி வந்தான்.  அவனைத் தொடர்ந்து கால்களை நொண்டிக் கொண்டே ராக்ஷசச் சிறுவன் நிகும்பனும் ஓடி வந்தான்.  கண்ணனும், அவனுடன் வந்தவர்களும், உத்தவனையும், நிகும்பனையும் மட்டும் பார்க்கவில்லை.   அவர்கள் இருவருக்கும் பின்னே, நிழல்கள் போன்ற சில தோற்றங்களைக் கண்டனர்.  ஆம், ராக்ஷசர்களில் சிலர் அந்த அடர்ந்த காட்டுப் புதர்களின் பின்னே தங்களை மறைத்துக் கொண்ட வண்ணம் முதுகுகளில் சில மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு வந்து மறைந்து கொண்டிருந்தனர்.  கண்ணனின் சங்கொலியைக் கேட்ட மாத்திரத்தில் அவர்கள் அனைவரும் தாங்கள் தூக்கி வந்த மூட்டைகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு வேகமாக ஓடி மறைந்தனர்.


அது பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.  விசித்திரமாகவும் இருந்தது.  கிருஷ்ணன் சங்கை முழக்குகிறான்.  அந்த அடர்ந்த காட்டில் இருந்து எங்கிருந்தோ விண்ணிலிருந்து இறங்கியவன் போல உத்தவன் பதில் கொடுத்துக் கொண்டு ஓடோடி வருகிறான்.  விண்ணகத்து தேவர்களுக்குக் கண்ணன் கட்டளையிட்டாற்போலும், அவர்கள் அதை ஏற்று உத்தவனை அனுப்பியது போலும் உணர்ந்தனர்.  இவன் நிச்சயம் சாமானிய மனிதன் அல்ல.  சாக்ஷாத் அந்தப் பர வாசுதேவனே ஆகும்.  ஆம், இவன் அந்தப் பரம்பொருளே ஆவான்.  உறைந்து நின்றனர் அனைவருமே. ராக்ஷசவர்த்தம் சென்றும் ஒருவன் உயிருடன் மீண்டானா? இல்லை, இல்லை, இது கண்ணன் செய்த மாயமே!  இவனிடம் ஏதோ இருக்கத் தான் செய்கிறது.  ஒரு நரகத்திலிருந்து அல்லவோ உத்தவனை மீட்டிருக்கிறான்.  உத்தவனைக் கண்ட கிருஷ்ணன் மகிழ்ச்சி பொங்க ஆரவாரம் செய்த வண்ணம் தன்னிரு கைகளையும் நீட்டிக் கொண்டு உத்தவனைத் தழுவிக் கொள்ளும் வேகத்தோடு ஓடினான்.  இன்னமும் இந்த அதிசயத்தை நம்ப முடியாத மற்றவர்கள் அனைவரும், “வாசுதேவ கிருஷ்ணனுக்கு மங்களம்!  வாசுதேவ கிருஷ்ணனுக்கு ஜெயம்!” என ஜெய கோஷம் கோஷித்துக் கொண்டு பின் தொடர்ந்தனர்.   உத்தவனைக் கட்டி அணைத்துக் கொண்ட கிருஷ்ணன் அவன் காதுகளில் மட்டுமே விழும் வண்ணம், “ஐந்து சகோதரர்களும், அத்தை குந்தியும் உயிருடன், நலமாக இருக்கின்றனரா?” என விசாரித்தான்.


உத்தவன் தலையை மட்டும் ஆட்டி ஆமோதித்தான்.  பின்னர் அனைவர் எதிரிலும் இதைக் குறித்துப் பேச வேண்டாம் எனக் கண்ணனுக்குத் தன் கண்களால் எச்சரிக்கை விடுத்தான்.  அனைவரும் கேட்கும் வண்ணம், “ மாட்சிமை பொருந்திய கண்ணா, வாசுதேவா, உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  ராக்ஷசர்களின் மாபெரும் தலைவனும், அரசனும் ஆன அரசன் வ்ருகோதரன் , நாகர்களின் தலைவனும், அரசனும் ஆன மாட்சிமை பொருந்திய ஆர்யகனுடன் சிநேகம் வைத்துக் கொண்டு நட்புறவை நீடிக்க விரும்புகிறான்.  அதில் மகிழ்ச்சி அடையும் அரசன் வ்ருகோதரன், நாகர்கள் அரசனுக்குத் தன்னால் இயன்ற சில பரிசுகளையும் அனுப்பி உள்ளான்.  நாகர்களுக்கும் ராக்ஷசர்களுக்கும் இடையே இனி சமாதானம் நிலவி அமைதி பெருகவும் பிரார்த்தித்துக் கொண்டு இந்தப் பரிசில்களை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறான்.” என அறிவிப்புச் செய்தான்.


ராக்ஷசர்கள் அனைவரும் தூக்கி எறிந்துவிட்டுப் போன அந்த மூட்டைகளைச் சுட்டிக் காட்டிய கண்ணன் இவற்றில் என்ன பரிசுகள் உள்ளன எனக் கேட்டான். “காட்டு நரிகளின் பதப்படுத்தப்பட்ட தோல்கள்!” என்றான் உத்தவன். “பாட்டனாருக்கு இவற்றைப் பரிசாக அளித்துள்ளானா, வ்ருகோதரன்?” எனக் கண்ணன் கேட்க, ஆமோதித்த உத்தவன், “ஆம், இனி ராக்ஷசர்களும், நாகர்களும் நண்பர்கள் எனவும் சொல்லி அனுப்பி உள்ளான்.  இரு நாடுகளுக்குமிடையே இனி அமைதியே நிலவும்.  எந்த ராக்ஷசனும் எந்த நாகனையும் கொன்று தின்ன மாட்டான்.  இந்த நட்பின் அடையாளமாகவே மேற்கண்ட பரிசுகளை வ்ருகோதரன் அனுப்பியுள்ளான்.  ஆர்யகனின் குடிகளுக்கு இனி எந்த பயமும் தேவையில்லை!” என்றான் உத்தவன்.  மேலும் புன்னகையுடன் உத்தவன் கூறியதாவது:”  ஆர்யகனின் பிரதிநிதியாக நானும் வ்ருகோதரனுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்துள்ளேன் -மாட்சிமை பொருந்திய மன்னர் ஆர்யகன் அதை நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கையில் கொடுத்தேன் ----இந்தப் பரிசுகளுக்குப் பதிலாக நாகர்கள் வ்ருகோதரனுக்கு ஐம்பது ஆடுகள், செம்மறியாடுகளின் தலைகளைப் பரிசாக அளிப்பான் எனக் கூறியுள்ளேன்.  இதோ இந்த ராக்ஷசச் சிறுவன் இருக்கிறானே, இவன் பெயர் நிகும்பன்.  இப்போது நம் மொழியை நன்கு பேசவும், புரிந்து கொள்ளவும் ஆரம்பித்துவிட்டான்.  இவன் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினத்தன்று ராக்ஷசப் பிரதிநிதியாக இங்கே வந்து இந்த மாற்றங்களை எல்லாம் கவனித்து ஏற்றுக்கொண்டு அமைதியைப் பிரகடனம் செய்யும் முயற்சிகளுக்கு உதவி வருவான்.”


நாகர்கள் அனைவருக்கும் விவரிக்க ஒண்ணா சந்தோஷம் ஏற்பட்டது.  அவர்களின் மனதின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை அவர்களிடம்.  ஒரு மாபெரும் துர் சொப்பனம் காண்பதில் இருந்து திடீரென விடுதலை அடைந்த குழந்தையைப் போல இனி ராக்ஷசர்கள் நம்மை உணவாக்க மாட்டார்கள், அவர்களைக் கண்டு பயப்பட வேண்டாம்;  அவர்கள் நண்பர்கள் என்னும் இந்தப் புதிய மாற்றம் அவர்களுக்குப் பெரும் மன நிம்மதியைக் கொடுத்தது.  பின்னர் அவர்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொருளை வைத்து அனைவருக்கும் விருந்து தயாரித்து அளித்தனர்.  அதன் பின்னர் அவர்கள் நாகர்கள் பிரதேசத்துக்குத் திரும்ப வேண்டிய ஆயத்தங்களைச் செய்தனர்.  அப்போது கண்ணன் உத்தவனைப் பார்த்தான்.  அனைவரையும் முன்னே செல்ல விட்டுவிட்டு உத்தவனை மட்டும் தன்னோடு நிறுத்திக் கொண்ட கண்ணன் அவனைப் பார்த்து, “எப்படியப்பா தப்பினாய் அந்த ராக்ஷசக் கும்பலிடமிருந்து?  நீ உயிருடன் திரும்பி வந்தது குறித்து எனக்கு இவ்வளவு அவ்வளவு சந்தோஷமில்லை.  அளவிட முடியா சந்தோஷம்.  ஆனால் இந்த அதிசயம் நடந்தது எப்படி?  ஐந்து சகோதரர்களையும் உன்னால் பார்க்க முடிந்ததா?  அத்தை குந்தியை?” எனக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டான்.

“அனைவரும் நலம்.  அத்தை குந்தியும், அவளுடைய ஐந்து குமாரர்களும்; அனைவரும் நலம்!” என்ற உத்தவன், “ராக்ஷசச் சக்கரவர்த்தி வ்ருகோதரன் யாரென எண்ணுகிறாய் கிருஷ்ணா?  சாக்ஷாத் நம் பீமனே தான்!” என்றான் புன்னகையுடன்.  “என்ன, பீமனா? “ ஆச்சரியத்துடன் கேட்ட கிருஷ்ணன், “பீமன் இதை எப்படிச் சாதித்தான்?  எவ்வாறு ராக்ஷச அரசனாக மாறினான்?” என்று கேட்டான்.  “அது ஒரு பெரிய கதை கண்ணா, அதைச் சொல்கிறேன் உனக்கு.  கொஞ்சம் அவகாசம் கொடு!” என்ற உத்தவன், “ஆனால் பீமன் ஒருவனால் தான் இது எல்லாம் நடந்திருக்க முடியும்!” என்றான். மேலும் தொடர்ந்து, “ஆனால் இப்போது அவர்கள் எவரும் துவாரகைக்கு வர விரும்பவில்லை!” என்றான்.  “ஓஹோ, நல்லது.  எனக்கும் அது தான் சரியெனப் படுகிறது.  நான் விரும்புவதும் அது தான்.  அடுத்தவருடம் மார்கழி மாதத்துக்கு முன்னர் அவர்கள் வெளிப்பட வேண்டாம்.  அவர்கள் இப்போது இருக்கும் இடத்திலேயே இருக்கட்டும்.  அது தான் நல்லது.  துருபதனின் மகளும் காம்பில்யத்தின் இளவரசியுமான  திரெளபதியின் சுயம்வரம் அடுத்த வருடம் புஷ்ய மாதம் நடக்கப் போகிறது.  “

“என்ன சுயம்வரமா? வாசுதேவா, அவள் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாள் என்றல்லவோ நினைத்தேன்!’ உத்தவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.  “ஹாஹாஹா, உத்தவா, என்னைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் எல்லாப் பெண்களிடமிருந்தும் நான் எப்படியோ தப்பிவிடுகிறேன்.” என்று சிரித்தவன், “திரெளபதி சுயம்வரத்தின் மூலம் அவளுக்கேற்ற மணமகனைத்  தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என நாங்கள் கூடிப் பேசி முடிவு செய்திருக்கிறோம்.” என்றான்.  “சுயம்வரத்தில் போட்டியும் உண்டு.  போட்டியில் வென்றவனே திரெளபதியை மணக்க முடியும்.” என்றான் மேலும்.  “நீ அந்தப் போட்டியில் கலந்து கொள்வாய் அல்லவா?”உத்தவன் கேட்டான்.  “நான் கலந்து கொள்ள வேண்டும் என்றா நினைக்கிறாய்?  உத்தவா, என்னைவிட அர்ஜுனன் உகந்தவன்.  அர்ஜுனன் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெல்ல வேண்டும் என எண்ணுகிறேன்.  அதனாலேயே அவர்கள் இங்கேயே இப்போது தங்கி இருந்து அடுத்த வருடம் புஷ்ய மாதத்தின் போது வெளிவந்தால் போதுமானது என்றும் நினைக்கிறேன்.” என்றான் கண்ணன்.   “நல்லது வாசுதேவா, இது பீமனுக்குக் கொஞ்சம் நிம்மதியைக் கொடுக்கும்.  அவனுக்கும் இது சரியாக வரும்.  அவனுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது.  ஆகவே இப்போது வர அவன் விரும்பவில்லை.  அவர்கள் அனைவருமே நீ அவர்களை வெளிப்படுத்திக்கொள்ளச் சொல்கையிலே வெளிப்படுத்திக்கொள்ளலாம் என எண்ணுகின்றனர்.” என்றான் உத்தவன்.


“எனக்கு சந்தோஷம் தான் உத்தவா!  இப்போது இருக்கும் இடத்திலேயே இன்னொரு வருஷத்தைக் கழிக்க அவர்கள் அனைவரும் ஒத்து முடிவெடுத்தது நல்லது. “ என்ற கண்ணனைப் பார்த்து, உத்தவன், “ஒத்துப் போய்த் தான் ஆகவேண்டும்.  அவ்வளவு ஏன்?  யானைகள் வந்து கட்டி இழுத்தால் கூட அவர்களால் இப்போது வர இயலாது.  இந்த ராக்ஷச வர்த்தத்திற்கு யுவராஜா பிறக்கப் போகிறான். பீமனுக்கு அடுத்த வாரிசு தோன்றப் போகிறது.  பீமனின் ராக்ஷச மனைவி ஹிடும்பி மூலம் அவனுக்கு ஒரு மகன் பிறக்கப் போகிறான்.  அதுவரையிலும் பீமனால் எங்கும் அசைய முடியாது.  யுவராஜாவுக்கு ஆறு மாதம் ஆகும்வரையிலும் பீமன் அங்கே இருந்தே ஆகவேண்டும்.” என்றான்.  கிருஷ்ணன் சிரித்தான்.  “இந்த பீமன் அடுத்து என்ன செய்வான், என்ன அதிசயங்கள் நடக்கும் என்பதை எவராலும் கணிக்க முடியாது!’ என்றான்.  பேசிக்கொண்டே லஹூரியாவை அவர்கள் அடைந்த சமயம்  அவர்களுக்காக ஒரு செய்தி காத்திருந்தது.  ஆர்யகனின் சொந்த தூதுவனே வந்திருந்தான்.  “அனைவரும் விரைவில் திரும்புங்கள்.  ஒரு பொல்லாத அரசன் நாககூடத்தை முற்றுகையிட்டிருக்கிறான்.  படைவீரர்களின் உதவி தேவை!” இவையே ஆர்யகனின் செய்தி.   அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.  வியப்பாகவும் இருந்தது.  ஏனெனில் நாகர்களை முற்றுகையிடும் அளவுக்கு எந்த அரசனும் அப்போது விரோதியாக இல்லை.  நாட்டைப் பிடிக்கும் அளவுக்கு ஊடுருவியவன் எவனாயிருக்கக் கூடும்?  ஆனால் அனைவருக்கும் ஏற்கெனவே கிருஷ்ணனின் நடவடிக்கைகளால் ஏற்பட்டிருந்த வீரமும், தைரியமும், சக்தியும் பொங்கிப் பிரவாஹிக்க ஊடுருவி உள்ளே வந்திருக்கும் அரசனைப் பொடிப் பொடியாக்கத்  துடித்தனர்.

“உத்தவா, நம்மை எதிர்நோக்கிப் புதிதாக ஒரு சோதனையும், சவாலும் வந்துள்ளது!” என்றான் கிருஷ்ணன்.





4 comments:

இராஜராஜேஸ்வரி said...

ன் ஊதியது வெற்றிச் சங்க முழக்கம். அது காட்டின் மூலை, முடுக்குகளில் எல்லாம் சென்று எதிரொலித்தது.

சந்தோஷ சங்கு..!

sambasivam6geetha said...

நன்றிங்க, எழுதும்போது சரியாக் கவனிக்கலையா, காப்பி, பேஸ்டில் சரியா வரலையா? முதல் வார்த்தை விடுபட்டிருக்கிறது. :)))

வை.கோபாலகிருஷ்ணன் said...

சங்கின் முழக்கம் சந்தோஷம் அளிக்கிறது.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

படையெடுத்து வந்திருப்பது யார் என்று அறியும் ஆவலில்...!