Thursday, May 1, 2014

துருபதன் ஆத்திரமும், சஹாதேவன் கோபமும்!

ஜராசந்தனின் செய்தி மட்டும் துருபதனைக் கோபப் படுத்தவில்லை; சஹாதேவனின் அதிகாரத் தொனியும் சேர்ந்து அவனை ஹிம்சை செய்தது. மிகவும் அதிகாரத்துடன் ஆணையிடும் தொனியில் சஹாதேவன் கொடுத்த ஜராசந்தனின் செய்தியால்  துருபதனுக்கு ஏற்கெனவே இருந்து வந்த சினம் இப்போது  கட்டுக்கடங்கா வண்ணம் தலைக்கேறியது.  எனினும் மிகவும் கஷ்டப் பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட துருபதனின் முகம் மட்டும் பாறையைப் போல் உறைந்து போனது.  அவனுடைய அசாதாரணமான மெளனத்தையும், முகத்தின் கடுமையையும் சற்றும் கவனிக்காத சஹாதேவன் மேலே பேசிக் கொண்டு போனான்.

“தந்தை உனக்கு இவ்விஷயத்தின் தன் வாக்குறுதியை மீண்டும் மீண்டும் அளிக்கிறார்.  மேகசந்தியைத் திரெளபதி தேர்ந்தெடுத்து மணந்து கொண்டால், நம்மிருவரின் படைகளும் சேர்ந்து மாபெரும் பலமுள்ள படையாக மாறும். உன் தலைமைக்குக் கீழ் இரு படைகளும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து செயல்பட்டு வரும்.  இப்போது நீ தான் யாருடைய உதவி உனக்குத் தேவை எனவும், யாரைத் தேர்ந்தெடுப்பது  உனக்கும், உன் நாட்டுக்கும் நல்லது எனவும் முடிவு செய்ய வேண்டும்.  “ மீண்டும் அதே ஆணையிடும் குரலில் கூறினான் சஹாதேவன்.  துருபதனுக்குத் தன் நாட்டுக்கு வரும் வேற்று நாட்டு மன்னர்களை மரியாதையுடனும், கெளரவத்துடனும் உபசரிப்பது என்பது உடம்போடு பிறந்தது.  ஆனால்!! இப்போதோ!  அவை அனைத்தையும் இந்த சஹாதேவன், ஜராசந்தனின் மகன் காற்றில் பறக்க விட வைப்பான் போலிருக்கிறதே!      சஹாதேவனின் இந்த அரசியல் பேரத்தால் , அவன் அதிகாரப் போக்கால் துருபதனுடைய கோபம் எல்லை மீறி விடும் போல் இருக்கிறதே!

தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு தன்னுடைய குரலில் அடங்கும் தொனியே காட்டிக் கொள்ளாமல் அதிகாரத் தொனியிலேயே துருபதன் பேச ஆரம்பித்தான்.  “என்னுடைய வணக்கங்களை மன்னன் ஜராசந்தனுக்குத் தெரியப்படுத்துங்கள் இளவரசே! நான் எப்போதுமே அவர் நண்பன்.  இப்போதும் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன்.  அவருடன் அரசியல் உடன்படிக்கை செய்து கொள்வது என்பது எனக்கு மிகவும் பெருமையைத் தரும்.  அது என் அதிர்ஷ்டம்.” என்றான் துருபதன்.  “அப்படி எனில்   நாங்கள் கேட்டதை நிறைவேற்றுவதில் என்ன கஷ்டம் உனக்கு?” சஹாதேவன் கேட்டான். அவனுக்கு துருபதன் குரலில் இருந்த ஏதோ ஒன்று சங்கடப்படுத்தியது. அதோடு நட்புப் பாராட்டுவதாகக் கூறிய துருபதன் குரலில் அந்த நட்புத் தொனியே இல்லை என்பதையும் கவனித்துக் கொண்டான்.  இந்த வெளிப்படையான பேரத்தை துருபதன் சற்றும் ரசிக்கவில்லை.  ம்ம்ம்ம்ம்?? இப்போது உண்மையைச் சொல்லிவிடுவது தான் நல்லது என நினைத்தான் துருபதன்.  வெளியே சொல்லாமல் இருந்த ரகசியமான செய்தியைச் சொல்லிவிடலாம் என முடிவு செய்தான்.  “மாட்சிமை பொருந்திய இளவரசே, என் மகள் ஒரு முக்கியமான முடிவு எடுத்திருக்கிறாள்.  அவள் வைக்கும் ஆயுதப் போட்டியில் வெல்பவர் எவரோ அவருக்கே மாலையிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறாள்.  அது எந்த நாட்டு அரசனாகவோ, இளவரசனாகவோ இருக்கலாம்.”

“என்ன?? நீ போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறாயா?” அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டான் சஹாதேவன். “ஆம், நான் இன்று மாலை அதை அறிவிக்க இருந்தேன்.  அநேகமாக எல்லா விருந்தினர்களும் வந்து சேர்ந்துவிட்டனர். குரு சாந்தீபனியால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் வில் வித்தையில் வெல்பவர் எவரோ அவருக்கே என் மகள் திரெளபதி மாலையிடுவாள்.  இந்தச் செய்தியால் நம்முடைய உடன்படிக்கைகளுக்குப் பங்கம் நேராது என நினைக்கிறேன்.  “ இதைச் சொல்கையிலேயே சஹாதேவன் முகத்தில் தெரிந்த கடுமையையும், கோபத்தையும் கவனித்துக் கொண்டான் துருபதன்.  சஹாதேவனால் ஏமாற்றத்தை அடக்க முடியவில்லை.  வெளிப்படையாகவே தெரிந்தது. “இதன் மூலம் மற்ற எல்லா அரசர்களைப் போலவே எங்களையும் நடத்துகிறாய்.  அவர்களையும் எங்களையும் சமமாக நினைக்கிறாய்!” என்று கோபத்துடன் கூறினான்.  அவனுடைய மிதமிஞ்சிய ஆத்திரம் குரலில் வெளிப்பட்டது.

இப்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் அதிகக் கஷ்டப்படவில்லை துருபதன்.  மாறாக சஹாதேவனின் ஆத்திரம் அவனை இன்னமும் நிதானப்படுத்தியது.  "ஒரு சுயம்வரம் எனில் இப்படிப்பட்ட புனிதமான நியதிகள், சடங்குகள், நியமங்கள் கடைப்பிடிக்கப்படுவது ஒன்றும் புதிதல்லவே!  திரெளபதியின் முடிவு தான் இறுதியானது.” என்று தீர்மானமாகச் சொன்னான்.

“எனில் நம் உடன்படிக்கைக்கு மாபெரும் இடர்கள் நேரிட்டிருக்கின்றன.  நாம் ஓர் இக்கட்டான நிலையில் இருக்கிறோம்.” குற்றம் சொல்லும் தொனியில் பேசிய சஹாதேவன், மேற்கொண்டு, “மேகசந்தியால் நிச்சயம் இந்த வில் வித்தைப் போட்டியில் ஜெயிக்க இயலாது.  அவன் ஒரு தேர்ந்த வில்லாளி அல்ல.  குறிபார்த்து அம்பு எய்யும் முறையை அவன் கற்கவில்லை.” என மீண்டும் கோபம் கலந்த வருத்தத்துடன் கூறினான்.

“அடப் பாவமே!  இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது! “ சொன்ன துருபதன் குரலில் சிறிதும் வருத்தமே இல்லை.  “அவன் நம்மைப்போல் மல்யுத்தங்களில் சிறந்தவன்.” என்றான் சஹாதேவன்.  “ஓ, அப்படியா? ஆனால், சக்கரவர்த்தி மிகத் தேர்ந்த வில்லாளி ஆயிற்றே!  அவரால் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள இயலாதா?”  மிகவும் சாவதானமாக எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் துருபதன் கேட்டான்.  சஹாதேவன் துருபதன் முகத்தைக் கூர்ந்து கவனித்தான்.  இவன் என்ன என் தந்தையைக் கேலி செய்கிறானா?  மகதத்தின் மாபெரும் சக்கரவர்த்தியையா?  ஹூம்! “ துருபதா, நீ என் தந்தை மகதச் சக்கரவர்த்தியையா போட்டியில் கலந்து கொள்ளச் சொல்கிறாய்?  இதன் மூலம் அவர் மற்ற அரசர்கள் முன்னால் அவமானம் அடைய வேண்டும் என்பது உன் எண்ணமா?” என்று கோபத்தோடு கேட்டான்.




   

1 comment:

ஸ்ரீராம். said...

வாக்குவாதம் எப்போதுமே ஆத்திரத்தையே பின்விளைவாகத் தரவல்லது!