Sunday, May 25, 2014

அன்புச் சங்கிலியில் பிணைத்தான் கண்ணன்!

 தன்னெதிரே அமர்ந்திருந்த அந்த மெல்லிய உருவத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த சத்யாஜித்துக்குக் கண்ணன் தன்னிரு கரங்களால் தன் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த ஆசனத்தில் நன்கு சாய்ந்ததும் அவன் இதயம் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது.  அடுத்து என்ன நடக்கப் போகிறதோ எனக் காத்திருந்தவனுக்குச் சட்டெனக் கிருஷ்ணன் தன் கைகளை அகற்றியதும், திரெளபதியை நேருக்கு நேர் பார்த்து, “திரெளபதி, என்னிடம் நம்பிக்கையை இழந்துவிட்டாயா?  இப்படி உன் நம்பிக்கையை நீ இழந்துவிட்டாயெனில் என்னால் அதிசயங்களை எப்படி நிகழ்த்த முடியும்?  நீ என்பக்கம் எனக்குப் பக்கபலமாக இருந்தால் அன்றோ என்னால் அதிசயங்களைச் செய்ய இயலும்?”  இப்போது கிருஷ்ணன் அவளைப் பார்த்துக் கேட்ட தொனியில் அவன் மன உறுதியும், தனக்கு உரிமையான ஒன்றைக் கேட்கிறோம் என்னும் நிச்சயத் தன்மையும் புலப்பட்டது.

மறுபடியும் திரெளபதியைப் பார்த்து, “திரெளபதி என்னிடம் கோபித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே!  தயவு செய்து என்னிடம் உண்மையைச் சொல்வாய்!  நீ இங்கு வந்திருக்கும் அரசர்கள், இளவரசர்களில் எவரையேனும் ஏற்கெனவே தேர்ந்தெடுத்துவிட்டாயா?  மறைக்காமல் வெளிப்படையாகச் சொல்லி விடு.  அப்படி நீ தேர்ந்தெடுத்திருந்தால் அவரே உனக்கு மணாளன்.  சுயம்வரம் நடந்தாலும் சரி, இல்லை எனினும் சரி.  அது நிச்சயம்.” தவிர்க்க இயலாத நிச்சயத்தன்மையுடன் அதே சமயம் குரலில் இயல்பான இனிமையுடனும் பேசினான் கிருஷ்ணன்.  எங்கோ கற்பனா லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த திரெளபதியை இந்தக் கேள்வி பூலோகத்துக்குக் கொண்டு வந்து விட்டது.  கிருஷ்ணனைப் பார்த்து, “எங்கே, நீ என்னை எங்கே தேர்ந்தெடுக்க விட்டாய் கிருஷ்ணா!  நான் தேர்ந்தெடுக்கத் தான் நினைத்தேன்.  ஆனால் நீ தானே அது வேண்டாம் என மறுத்தாய்.  இப்போது எனக்கு வேறு வழியில்லை.  போட்டியில் வெல்லும் எவரானாலும், அவர் என் தந்தையின் கெளரவத்தை மீட்டுக் கொடுப்பார் என்னும் நம்பிக்கையுடன் மணந்து கொண்டே ஆகவேண்டும். “

“ஆஹா, அப்படி எனில் நீ உன் வாழ்க்கையைத் தியாகம் செய்யத் தயாராகி விட்டாயா?  சாவித்திரி சத்யவானுக்காகச் செய்தது போல்?  இந்தப் போட்டியில் வெல்பவர் எவரானாலும் நீ மணந்து கொள்ளத் தயார் என்கிறாயா?” கண்ணன் மீண்டும் அவளை வற்புறுத்திக் கேட்டான்.  “நான் வேறென்ன செய்வது?  இது தான் என் தந்தை சுயம்வரத்தில் அவமானம் அடையாமலிருக்கும் ஒரே வழி! வேறு வழியில்லை கிருஷ்ணா! “ திரெளபதிக்கு மீண்டும் வந்த கோபத்தை அவள் உள்ளடக்கிக் கொண்டு பதில் சொன்னாள்.

“திரெளபதி, நாம் யுத்தம் செய்யாமலேயே துரோணரை வெல்ல முடியாது என்கிறாயா?” கிருஷ்ணன் கேட்டான்.  திரெளபதிக்குத் தூக்கி வாரிப் போட்டது.  “யுத்தம் செய்யமாலா ? அது எங்கனம்?” ஆச்சரியம் மாறாமலேயே கிருஷ்ணனைக் கேட்டாள்.  “வெறுப்பையும், பழிவாங்கும் உணர்வையும், நாம் சுயதர்மமாக மாற்றிவிடலாம். “ கிருஷ்ணன் அமைதியாகச் சொன்னான்.  திரெளபதி உடனே, “எனக்கென சுய தர்மம் ஏதும் இல்லை;  என் தந்தை செய்திருக்கும் சபதம் தான் என்னுடைய தர்மம்.” என்று பளிச்செனச் சொன்னாள்.

“திரெளபதி, நீ ஓர் இளம்பெண்.  வயதில் மிகச் சிறியவள்.  ஆனால் உண்மையும், நேர்மையும் நிரம்பியவள்.  இருந்தாலும் அரசகுமாரி என்பதால் அரச கெளரவத்தோடு வளர்க்கப்பட்டு விட்டாய்.  தர்மம் என்பது என்ன என்பதை நான் பார்க்கும் கோணத்திலிருந்து உன்னால் பார்க்க இயலாது.  பார்த்தாலும் புரிந்து கொள்ள இயலாது. “

“நீ எப்படிப் பார்க்கிறாய்?”

“துவேஷமும், பழிவாங்கும் உணர்வும் தர்மத்தோடு சேர்ந்தது அல்ல.  தர்மம் ஒரு நாளும் இவற்றுக்கு அடங்கிப் பணி புரியாது.  தர்மம் என்பது இவற்றின் ஆயுதமும் அல்ல .  தர்மம் என்பது எனக்கு வாழ்க்கை.  என் வாழ்க்கையாக நான் அதைப் பார்க்கிறேன்.  இந்த  ஏழை மாட்டிடையனின் கஞ்சிக்கு இனிப்புச் சேர்க்கிறது.  இந்த மட்டமான பிச்சைக்காரனை ஒரு அரசனின் தகுதிக்கு உயர்த்தி வைக்கிறது.  ஆனால் அதன் உண்மையான பொருள் தான் என்ன?” எங்கோ தூரத்தில் கனவு காணும் கண்களோடு பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணன் இப்போது திரெளபதியைப் பார்த்துத் திரும்பி நேருக்கு நேர் பேசலானான்.  “அதை என்னவெனத் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறாயா?  அது அந்த அனைவருக்கும் பரம்பொருளின் விருப்பம், ஆசை.  ம்ஹூம், இல்லை, இல்லை நாம் சாதாரணமாய் தினம் தினம் வணங்குகின்ற கடவுளரைச் சொல்லவே இல்லை.  அந்த வாசுதேவன், பர வாசுதேவன் அவனைச் சொல்கின்றேன்.  எவன் அனைத்து உயிரிலும் அடக்கமோ, எவனுள் அனைத்து உயிர்களும் அடக்கமோ அந்தப் பர வாசுதேவன்.  அவன் விருப்பம் இது! "

மன எழுச்சியுடன் பேச ஆரம்பித்தான் கிருஷ்ணன்.  மெல்ல மெல்லத் தனக்குள்ளே பேசிக் கொள்ளும் பாணியில் பேச ஆரம்பித்தான்.  அவன் பேசப் பேச அவனைச் சுற்றி ஒரு அமைதி பரவத் தொடங்கியதை திரெளபதி உணர்ந்தாள்.  கண்ணன் முகமும் கண்களும் ஜோதியைப் போல் ஒளிர்ந்தன.  சத்யாஜித் வாயே திறக்காமல் அனைத்தையும் ஒரு அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.  திரெளபதி துடிக்கும் தன்  இதயத்தை அடக்கிக் கொண்டு கிருஷ்ணன் பேசுவதைக் கேட்டாள்.  அவன் பேசுவது எங்கோ தூரத்தில் இருந்து பேசுவது போல் இருந்தாலும் கண்ணன் கிட்டேயும் இருக்கிறான் என்பதும் புரிந்தது.  ஒரே சமயத்தில் எப்படி இவ்வாறு நிகழ முடியும்?

திரெளபதி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவன் முகம் மட்டும் ஒளிரவில்லை என்பதும், அவனைச் சுற்றியே ஓர் ஒளிவட்டம் உருவானதையும் மூச்சடைக்கப்பார்த்துப் பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.  அவன் கண்களில் இருந்து ஒரு வித்தியாசமானதொரு சக்தி தன்னிடம் வந்து புகுந்து கொண்டதையும் திரெளபதியால் உணர முடிந்தது.  கதிரொளியால் நிரம்பியதொரு மாபெரும் ஒளிக்கடலில் தான் மிதப்பதையும் உணர்ந்தாள்.  ஆனால் அவள் தனியாக மிதக்கவில்லை;  கண்ணனும் அவளோடு இருந்தான்.  அவன் சொல்வது அனைத்தையும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை;  எனினும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை அவளும் அவள் புரிந்து கொள்கிறாள் என்பதைக் கண்ணனும் தெரிந்து கொண்டார்கள் என்பதை திரெளபதி உணர்ந்தாள்.  ஒரு மூன்றாம் மனுஷியைப் போல் தனித்திருந்து தன்னைப் பார்க்க அவளால் முடிந்தது.  விவரிக்க ஒண்ணாதோர் இணைப்புச் சங்கிலி அவனையும், அவளையும் பிணைத்தது.



3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// சாவித்திரி சத்யவானுக்காகச் செய்தது போல்? ///

அவர்கள் எப்போது இங்கே வந்தார்கள் அம்மா...?

sambasivam6geetha said...

சாவித்திரியோ, சத்யவானோ வரலை. அவங்களோட கதையை நினைவூட்டுகிறான் கண்ணன். நளாயினி தான் திரெளபதி என முன்னே எழுதின நினைவு இருக்கு. இல்லைனா மீண்டும் அது குறித்து ஒரு நினைவூட்டல் பதிவு போடணும். :)

ஸ்ரீராம். said...

மாயக்கண்ணன். மயக்கும் கண்ணன்!