Monday, May 5, 2014

தந்தையும் மக்களும்!

அந்தப்புரத்திலிருந்து திரெளபதி, த்ருஷ்டத்யும்னன், சத்யாஜித் ஆகியோருடன் தந்தையைப் பார்க்க வந்து கொண்டிருந்தாள்.  அப்போது சஹாதேவனைப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான் துருபதன்.  அவனுடைய நிலையைப் பார்த்த மூவரும் அதிர்ந்தனர்.  கோபநடை நடந்து வந்த துருபதன் நேரே தன் ஊஞ்சலில் சென்று அமர்ந்து வீசி வீசி ஆட்டத்தொடங்கினான். பெரியவர்களிடம் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடந்தே பழக்கப்பட்ட மூவரும் உடனே அவனிடம் என்னவெனக் கேட்கத் தயங்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  ஆனால் தந்தையிடம் அவர்கள் மனம் திறந்து பழகிப் பழக்கப்பட்டவர்கள் ஆதலால் ஊஞ்சலில் துருபதன் அருகேயே மூவரும் அமர்ந்து கொண்டனர்.  தங்கள் மூவர் மனமும் ஒன்று போல் நினைப்பதைப் போலத் தாங்கள் மூவரும் ஒருங்கே சேர்ந்து அமர்ந்து பேசுவதிலும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.   துருபதன் முதலில் எதுவுமே பேசவில்லை.  அவன் கோபமும், பொங்கி வந்த ஆத்திரமும் அடங்கும் வகையில் ஊஞ்சலை மிக மிக வேகமாய் ஆட்டினான்.  யோசனையில் அவன் நெற்றிப் புருவங்கள் சுளித்துக் கொண்டன.

தந்தையின் கிளர்ந்தெழுந்த முகத்தையே பார்த்த வண்ணம் த்ருஷ்டத்யும்னன் அமர்ந்திருந்தான்.   அவன் பார்வையில் தந்தையை எது வந்தாலும் நான் காப்பாற்றுவேன் என்னும் எண்ணம் தொனித்தது.  திரெளபதியோ அசையாமல் தரையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.  விக்ரஹம் ஒன்றுஇடம் பெயர்ந்து வந்தது போல் இருந்தது அவள் அமர்ந்திருந்த கோலம்.  சத்யஜித்தும்  தந்தையின் நிலையால் குழப்பம் அடைந்திருந்தாலும், அவர் இப்போது இதோ தன் எண்ணங்களைப் பகிரப்போகிறார் என்னும் எதிர்பார்ப்போடு காத்திருந்தான்.  அவன் எதிர்பார்த்தது போலவே துருபதன் பேச ஆரம்பித்தான்.  “என் அருமை மக்களே, நாம் பொறியில் சிக்கி விட்டோம். இந்த சுயம்வரத்தின் மூலம் துரோணரை அழிக்கலாம் என நான் நினைத்திருந்தேன்.  அதற்கு இது நம்மை இட்டுச் செல்லும் என எதிர்பார்த்தேன்.  ஆனால் நம்முடைய நோக்கம் தடைப்பட்டுவிட்டது.  வாசுதேவன் தந்திரமாக விளையாடி நம்மைச் சிக்க வைத்துவிட்டான்.” மிகவும் கோபம் இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு அளவு கடந்த விரக்தியில் பேசினான் துருபதன்.  அவன் கண்களோ அவர்களை நேருக்கு நேர் சந்திக்கவில்லை.  தரையிலேயே பதிந்திருந்தன.

த்ருஷ்டத்யும்னன் தந்தையிடம், “நிச்சயமாய் இது கிருஷ்ண வாசுதேவனின் வேலை என்பதை நீங்கள் அறிவீர்களா தந்தையே?” என வினவிய அவன் குரலில் தொனித்த சந்தேகத்தைக் கண்டு துருபதன் ஆச்சரியம் அடைந்தான்.  தன் மகன் முகத்தைக் கூர்ந்து பார்த்தவன் ஊஞ்சல் ஆட்டுவதை நிறுத்தினான்.  கடைசியில், “ஆம்” என்றான் மெல்ல.  பின் தொடர்ந்து, “அவன் எப்போதுமே குரு வம்சத்தினரோடு நாம் இணங்கிப் போக வேண்டியதன் அவசியத்தைக் குறித்துக் கூறுவான்.  பாஞ்சாலமும், குரு வம்சமும் இணைந்திரு க்க வேண்டும் என்பான்.  இப்போது என் இந்த அவமானத்தின் மூலம் அதை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறான்.”  சற்றே நிறுத்தியவன், மேலே தொடர்ந்து, “  நான் குரு வம்சத்தினருக்கு அழைப்பு அனுப்பியதன் காரணத்தை நீ நன்கறிவாய் மகனே!  அரசர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை நிமித்தமே அனுப்பி வைத்தேன்.  அவர்கள் எவரையும் இங்கே நான் எதிர்பார்க்கவே இல்லை.  அதிலும் அந்த துரோணன்,தன் முதன்மைச் சீடர்களை இங்கே வந்து சுயம்வரத்தில் கலந்து கொள்ள அனுமதிப்பான் என எதிர்பார்க்கவே இல்லை. “ துருபதனுக்கு இருந்த மனக்கசப்பு அந்தக் குரலில் தெரிந்தது.

“அவர்கள் பரிசுப் பொருட்கள் கூட அனுப்பி உள்ளனர்.  அவர்களை எவ்விதம் தடுப்பது?  நம்மால் அது இயலுமா?” த்ருஷ்டத்யும்னன் கேட்டான்.  “முடியாது மகனே, முடியாது.  அவர்களைப் போட்டியில் கலந்து கொள்வதில் இருந்தோ அதில் வெல்வதில் இருந்தோ நாம் தடுக்கவே முடியாது. “ அதே கசப்பு நீடிக்கப்பேசிய துருபதன் மேலும் தொடர்ந்து, “ ஹூம், என் அருமைக் கிருஷ்ணை(திரெளபதிக்கு இன்னொரு பெயர் கிருஷ்ணை), அங்கே அந்த சகோதரச் சண்டைகள் நடக்கும் இடத்திற்கு மருமகளாகச் செல்லுவாள்; அங்கு போய் அந்த பிராமணப் படைத் தலைவன் துரோணருக்குப் பணிவிடைகள் செய்வாள்.  அவன் பழிவாங்கும் படலத்திற்கு இது நல்லதொரு வாய்ப்பு. அவமானம், அவமானத்திற்கு மேல் அவமானம்.  “ துருபதன் பொங்கினான்.

“அவர்கள் அனைவருமே வில் வித்தையில்தேர்ந்தவர்களா தந்தையே!  மற்றவர்களோடு அவர்கள் எவ்விதத்தில் வேறுபட்டவர்கள்?  எவ்விதத்தில் மற்றவர்களை விடச் சிறந்தவர்கள்?” திரெளபதி கேட்டாள். “குழந்தாய், கிருஷ்ணை!,  துரியோதனன் மிகச் சிறந்த வில் வித்தை வீரன் ஆவான்.  அங்க தேசத்து மன்னன் கர்ணனும் மிகச் சிறந்த வில் வித்தை வீரரில் ஒருவன். அஸ்வத்தாமா குறித்தோ கேட்கவே வேண்டாம்;  துரோணரின் மகன். மிகச் சிறந்த வில் வித்தை வீரன்.  அவனுக்கு நிகர் யாருமில்லை.  யாதவர்களுக்குள் பார்த்தால், வாசுதேவக் கிருஷ்ணனை விட்டு விட்டால் மற்றபடி உத்தவன், சாத்யகி மற்றும் கிருதவர்மா ஆகிய மூவர் தான் தேறுவார்கள்.  மகத தேசத்தை எடுத்துக் கொண்டால் அங்கே சிறந்த வில் வித்தை வீரர் எவரும் வர வாய்ப்பில்லை.  ஒருவேளை சக்கரவர்த்தி ஜராசந்தனே  கலந்து கொள்ள முடிவெடுத்தால் அவன் ஒருவன் மட்டுமே இருப்பான்.  அடுத்து இவர்களை விடுத்தால் விராடனும், பிரபலமான வில் வித்தை வீரன் ஆவான்.  அதே போல் சேதி நாட்டு மன்னன் ஆன சிசுபாலனும் சிறந்த வில் வித்தை வீரன் ஆவான். “

“உண்மைதான்.  ஆனால் அவர்கள் அனைவரிலும் மிகச் சிறந்த வில் வித்தை வீரன் கர்ணன் ஒருவன் மட்டுமே.  ஆனால்……அவன் பிறப்பைக் குறித்துச் சில பேச்சுக்கள் இருக்கின்றன.  அவன் முறைதவறிப் பிறந்தவன் எனச் சொல்கின்றனர். “ என்று த்ருஷ்டத்யும்னன் கூறினான்.  அப்போது திரெளபதி “இருக்கட்டும், துரோணரின் இந்தச் சீடர்கள் போட்டியில் கலந்து கொள்ளட்டும்.  எவன் வென்றாலும் எனக்குக் கவலை இல்லை.  நான் அவனை மணமகனாக ஏற்கப் போவதில்லை.  அது உறுதி!” இதைச் சொல்கையில் திரெளபதியின் கண்கள் தீயைப் போன்ற ஒளியோடு ஜொலித்தன.  அவள் கண்களின் அந்த ஒளியக் கண்டு ஆண்கள் மூவரும் அதிசயித்தனர்.  ஆனால் துருபதனோ கவலையும் பட்டான்.  “மகளே, என் அருமை மகளே! நீ எவ்விதம் அவர்களை மறுதலிப்பாய்?  உன்னால் அவர்களிடமிருந்து தப்ப முடியுமா?  என் மகளே, எனக்கு இது தான் மாபெரும் கவலையாக இருக்கிறது!” என்று சொன்ன துருபதன் தூரத்தில் சலசலத்து ஓடிக் கொண்டிருந்த கங்கையைப் பார்த்துக் கொண்டே உதடுகளை மடித்துக் கொண்டு நின்றான்.  அவன் நின்ற கோலத்தைப் பார்த்தால் கங்கை உடனே அவன் கேள்விக்குப் பதில் சொல்வாள் என எதிர்பார்த்த மாதிரி இருந்தது.

பின்னர் மெதுவாகத் திரும்பினான். திரெளபதியைப் பாசம் பொங்கும் விழிகளோடு தலையோடு கால் வரை பார்த்தான்.  “மகளே, நான் ஆர்யவர்த்தத்து அரசர்களுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டேன்.  இந்தப் போட்டியில் ஜெயிப்பவன் எவனாக இருந்தாலும் என் மகள் அவனுக்கே என உறுதி மொழி கொடுத்திருக்கிறேன்.  அதிலிருந்து என்னால் விலக இயலாது. என் உறுதி மொழியை நானே உடைக்க முடியாது.”

“ஆனால் தந்தையே, இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.  ஒரு இளவரசன் அல்லது ஒரு அரசனுக்கு மேல் இரண்டு பேர் அல்லது மூவர் ஜெயித்தால் அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை திரெளபதிக்கு இருக்கிறது.  அதிலும் அவளுக்குப் பிடித்தவரை அவள் தேர்ந்தெடுக்கலாம்.” என த்ருஷ்டத்யும்னன் தங்கைக்காகப் பரிந்து பேசினான்.

“உண்மை மகனே! அவ்வாறே நடக்கும்!” துருபதன் கூறினான்.

“ஒருவருமே வெல்லவில்லை எனில்? என்ன செய்வது தந்தையே?” திரெளபதிக்கு சந்தேகம் முளை விட்டது.


“அப்போது நீ வந்திருப்பவர்களில் உனக்கு யாரைப் பிடிக்கிறதோ அவரைத் தேர்ந்தெடுக்கலாம். அதற்கான உரிமை உனக்கு உண்டு. “ என்று சொன்ன துருபதன்,  சற்றே கவலையுடன், “ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இதன் மூலம் அரசர்களுக்குள் சண்டை வரும்;  அனைவரும் உன் கரத்தைப் பிடிக்கப் போட்டியிடுவார்கள்.  அவர்கள் ஒருவருக்கொருவர் போரிடுவார்கள். பின்னர் உன்னைத் தூக்கிச் செல்லக் கூட முயற்சிக்கலாம். “



2 comments:

ஸ்ரீராம். said...

சிக்கலான கட்டம்தான். விக்கிரஹம் போல அமர்ந்திருக்கும் திரொவொபதி வர்ணனை ... ஒருவேளை திருமணத்துக்குப் பின்தான் திரௌபதி குண்டாகி விடுவாளோ!

திண்டுக்கல் தனபாலன் said...

முந்தைய பகிர்வுகளை படித்து விட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறேன்...