Saturday, May 10, 2014

ஷிகண்டின் வந்தான்!

அப்போது அங்கே அரண்மனையின் சேடிப்பெண் திடீரென முன்னறிவிப்பின்றித் தோன்றினாள்.  அவள் வந்த வேகத்தில் எதிர்பாராதது ஏதோ நடந்திருப்பது புரிந்தது.  அவளும் மிகவும் வேகமாயும், குழப்பத்துடனும், “மன்னா, பிரபுவே, இளவரசர் ஷிகண்டின் வந்திருக்கிறார்.” என அறிவித்தாள்.   நால்வருக்கும் தூக்கிவாரிப் போட்டது. “ஷிகண்டின் வந்திருக்கிறானா?”  ஒரே சமயத்தில் நால்வரும் கேட்டனர்.  “இதோ வந்துவிட்டார், பிரபுவே!” எனச் சேடி அறிவிக்க உள்ளே நுழைந்தான் ஷிகண்டின்.  ஷிகண்டின் உள்ளே நுழைந்தான். அவனுடைய பழைய தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறிய புதியதொரு தோற்றத்தைப் பெற்றிருந்தான்.  ஒல்லியாக ஆனால் மிகவும் உயரமாக இருந்த அவன் நடையில் ஒரு சிறு தள்ளாட்டம் இருந்தது.  அவன் உதடுகளுக்கு மேல் புதர் போல் மீசை அடர்ந்திருக்க, தாடைகளில் தாடியும் காணப்பட்டது.  துருபதனும், மற்ற மூவரும் பேச்சு வராமல் திகைத்துப்போய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர். தங்கள் கண் முன்னால் ஏதோ ஒரு பிசாசு ஷிகண்டினைப் போல் வருகிறதோ என்றும் நினைத்தனர்.  ஆனால் ஷிகண்டின் உள்ளே நுழைந்ததும் தந்தை கால்களில் விழுந்து வணங்கினான்.

துருபதன் அவனைத் தூக்கினான். அணைத்துக் கொண்டான். ஆனால் அத்தனையும் ஏதோ கடமைக்கு என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.  திரெளபதி அவளுக்கு வந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.  த்ருஷ்டத்யும்னன் பெரியவன் என்னும் நிலையில் மெல்லச் சிரித்து வரவேற்க சத்யஜித் சந்தோஷமாக அவனை வரவேற்றான்.   துருபதன் அவனைப் பார்த்து, “ஷிகண்டின், இத்தனை நாட்களாக நீ எங்கே போயிருந்தாய்?” என்று கொஞ்சம் நிதானமாகவே கேட்டான்.  துருபதன் மனதுக்குள்ளாக இவன் இப்போது பார்த்து இங்கே ஏன் வந்தான் என்றே தோன்றியது.  இவன் பிறந்ததில் இருந்தே துருபதனுக்கு ஒரு பிரச்னையாக இருந்ததோடு இங்கே நிலைமை ஏற்கெனவே சிக்கலாக இருக்கையில் இவன் வந்திருப்பதால் சிக்கல் அதிகமாகி விடும் என்றும் நினைத்தான்.

“தந்தையே, நம் குடும்பத்திற்கும் வம்சத்திற்கும் ஏற்பட்ட இழுக்கைத் துடைக்க நினைத்தேன். “ என்ற ஷிகண்டின் பாசத்தோடு தன் தந்தையின் தோள்களில் சாய்ந்து கொண்டதோடு அல்லாமல், அவரிடமிருந்து ஆறுதலான வார்த்தைகளையும் எதிர்பார்த்தான்.  ஆனால் துருபதனோ வாய் திறக்கவே இல்லை.  மெளனமாகவே இருந்தான்.  அதற்குமேல் ஷிகண்டின் சும்மா இருக்காமல் தன் தகப்பனிடம், மெல்ல அவன் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி, “நான் இனி ஒரு பெண் அல்ல! வாலிபன்!” என்றான்.  துருபதனுக்கு இரண்டாம் முறையாகத் தூக்கி வாரிப் போட்டது.  “என்ன?” என்று கேட்டவன் ஆச்சரியத்தால் விரிந்த கண்களோடு அவனைப் பார்த்தான்.  ஷிகண்டினோ ,”ஆம் தந்தையே, அந்த மஹாதேவன் அருளாலும், ஆசிகளாலும் நான் ஒரு ஆண்மகனாகி விட்டேன்.  இனி நீங்கள் ஹிரண்யவர்மனுக்குச் செய்தி அனுப்பலாம்.  அவர் மகளைக் காம்பில்யத்துக்கு அனுப்பி வைக்கச் சொல்லுங்கள்.  அவள் கணவனோடு சேர்ந்து வாழ்க்கையை அவள் துவங்கலாம் என செய்தி அனுப்புங்கள்.” என்று சொன்னான்.  அவன் குரல் நடுங்கியது.  ஷிகண்டின் சொன்ன செய்தியின் முக்கியத்துவம் குறித்து நினைத்துப் பார்த்துப் புரிந்து கொண்ட துருபதன் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

என்றாலும் இன்னமும் அவனால் இதை நம்ப முடியவில்லை. “மகனே, இது உண்மை தானா?” என மீண்டும் மீண்டும் கேட்டான்.

“ஆம், தந்தையே!  இது உண்மை தான்.  என் குருநாதரின் ஆசிகளோடு நான் பெண்ணாக இருந்ததில் இருந்து ஆணாக மாற்றப்பட்டு விட்டேன். மனதளவிலும், உடலளவிலும் நான் இப்போது ஒரு முழு ஆண்மகன்.  உங்களுக்கு இப்போது இரண்டு பெண்கள் இல்லை;  மூன்று பிள்ளைகள்.  ஆண்மகன்கள்.” என்று மிகவும் சந்தோஷமாகக் கூறினான் ஷிகண்டின்.

“அப்படிப்பட்டதொரு குரு யார்?  அவர் எங்கனம் உன்னை ஏற்றுக் கொண்டார்? உனக்கு இத்தகையதொரு ஆசியை வழங்கி உன்னை ஆண்மகனாக்கியவர் யார்?”


“தந்தையே, கேட்டால் அதிசயமும், ஆச்சரியமும் அடைவீர்கள்.  அவர் வேறு எவருமல்ல.  துரோணாசாரியார் தான். “ இதைச் சொல்கையில் தன் தந்தையின் முகத்தையே கூர்ந்து கவனித்தான் ஷிகண்டின்.  தந்தையின் முகம் காட்டும் உணர்வுகளைக் கவனிக்க ஆயத்தமானான்.  அதற்கேற்றாற்போல் துருபதனின் முகம் கோபத்தால் தீக்கொழுந்து போல் ஜொலித்தது.  முகத்தின் சிவப்பு அருகிலுள்ளவர்களை அச்சமடைய வைத்தது.  கண்கள் இரண்டும் நெருப்புக் கங்குகள் போல் பிரகாசித்தன.  அவன் ஷிகண்டினைப் பார்த்துக் கோபமாகக் கத்தினான்; “துரோணாசாரியர்??  குரு வம்சத்தின் ஆசாரியரையா சொல்கிறாய்?  அவனா உன்னை ஆண்மகனாக்கினான்?  இது உண்மையா?” எரிமலை போல் வெடித்தான் துருபதன்.  பின்னர் ஷிகண்டினைப் பிடித்து தள்ளினான்.

“ஆஹா! இதை விடக் கொடுமை ஏதேனும் உண்டா?  என் பரம வைரியிடம் போய் இப்படிப்பட்டதொரு பரிசை வாங்கி வந்திருக்கிறாய்!  நீ எனக்குச் செய்த மாபெரும் நம்பிக்கை துரோகம் இது! “

துருபதனின் இந்தக் கோப ஆவேசப் பேச்சால் அனைவரும் திகைத்துப் போய்ச் செயலற்று நின்றனர்.  ஒரு மாதிரியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்ட துருபதன் கொன்று விடுவான் போலக் கோபத்துடன் ஷிகண்டினை முறைத்துப் பார்த்தான்.  “இதைக் காட்டிலும் நீ செத்து ஒழிந்திருந்தால் நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன்!” என்று சொன்ன வண்ணம் அவனை அடிக்கக் கைகளை ஓங்கியவன் என்ன காரணத்தாலோ தன்னை அடக்கிக் கொண்டு அந்த அறையை விட்டு அகன்றான்.  ஷிகண்டின் நிச்சயமாக இதை எதிர்பார்க்கவே இல்லை.  தந்தை கோபப்படுவார் என்றாலும் இந்த அளவுக்கு அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.  அவன் முகம் வெளுத்து ரத்தமெல்லாம் வடிந்தாற்போல் ஆகிவிட்டது.  உதடுகள் நடுங்கின; ஏன், மொத்த உடலுமே நடுங்கியது.  கீழே விழுந்துவிடுவான் போல் ஆடினான் அவன்.  நல்லவேளையாக திரெளபதி வேகமாக வந்து அவனைப் பிடித்துக் கொண்டாள்.  பின்னர் ஒரு தாயின் கருணையோடு அவனை அங்கிருந்த ஊஞ்சலில் படுக்க வைத்தாள்.

த்ருஷ்டத்யும்னன் தன் தந்தைக்கு இப்போது தன் உதவி தேவை என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.  சத்யஜித் ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீர் எடுத்து வந்து மயக்கமடைந்து இருக்கும் தன் சகோதரன் முகத்தில் தெளித்தான்.  பின்னர் ஆட்களை வரவழைத்து ஷிகண்டினை உள்ளே தூக்கிச் சென்று ஒரு அறையில் படுக்க வைத்தான்.  சத்யஜித் அவன் அருகேயே அமர்ந்து கொண்டான்.  திரெளபதியும் ஷிகண்டினின் படுக்கையில் அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்த வண்ணம் ஷிகண்டினையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  சவக்களை படர்ந்திருந்த ஷிகண்டினின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் திரெளபதி.


தன் குடும்பமும், பாஞ்சாலமும் இப்போது இருக்கும் மோசமான நிலையை எண்ணிப் பார்த்தாள்.  மிகவும் மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. இந்த ஷிகண்டினைப் பார்த்தால் செத்துவிடுவான் போல் இருக்கிறதே!  ஹூம் , இந்த அழகில் சுயம்வரம் நடப்பது எப்படி?  சுயம்வரம் ஏற்கெனவே பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு இருக்கிறது.  இவனுக்கு ஏதேனும் நேர்ந்தால் இங்கே மகிழ்ச்சியான சுயம்வர நிகழ்வுக்கு பதிலாக துக்கம் அல்லவோ ஏற்படும்!  மிக மோசமானதொரு வருந்தத் தக்க சூழ்நிலை ஏற்படும்.  இந்த சமயம் பார்த்து ஜராசந்தன் அவளைக் கடத்தி விட்டால்??  பின்னர் என்ன!  போர் தான்!  ரத்த ஆறு ஓடும்.  பாஞ்சாலமும், மகதமும் ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டு ஆர்யவர்த்தமெல்லாம் ரத்த ஆறு தான் ஓடப் போகிறது. எல்லாவற்றுக்கும் மேல் அந்த துரியோதனன் போட்டியில் வென்றான் எனில், அந்த கொலைகாரனை, சகோதரர்களைத் திட்டமிட்டுக் கொன்றவனை மணக்கும்படி ஆகிவிடுமே!  பின்னர் தன் தந்தையின் சபதமும், அவர் கெளரவமும் என்னாவது?

எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும்படியாக இப்போது இங்கே ஷிகண்டின் புதுப் பிறவி எடுத்து வந்திருக்கிறான்.  தந்தையின் ஜன்மவைரியால் கொடுக்கப்பட்ட பரிசாக வந்து சேர்ந்திருக்கிறான். தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவமானம் போதுமா?

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு கோபம்...!

ஸ்ரீராம். said...

என்னவொரு திருப்பம்! குடும்பக் குழப்பங்கள்!