Tuesday, November 11, 2014

பீஷ்மரின் எண்ணங்கள்!

பீஷ்மப் பிதாமகர் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தார்.  அவர் அமர்ந்திருந்த கோலம் அவர் மிக வருத்தமானதொரு மனோநிலையில் இருப்பதைக் காட்டியது.  ஒரு மாபெரும் பிரச்னை அவர் முன்னே தலை தூக்கிக் கொண்டிருந்தது.  எப்படி அதைத் தீர்ப்பது என்னும் தீர்க்கமான சிந்தனையில் அவர் ஆழ்ந்திருந்தார்.  நடக்கும் நிகழ்வுகளில் அவர் மனம் மகிழ்ச்சியுறவே இல்லை. துரியோதனனின் மனோபாவம் அவருக்குப் புரிந்தே இருந்தது.  அதே சமயம் தன்னுடைய வாழ்க்கையையும் பின்னோக்கிப் பார்க்க அவர் தயங்கவில்லை.


சிறு குழந்தைப் பருவத்திலேயே அவர் தாய் அவரை விட்டுச் சென்றுவிட்டாள்.  எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைத்த தாயன்பு அவருக்குக் கிட்டவே இல்லை.  புனிதமான அந்த கங்கையே மானுட வடிவெடுத்து அவருக்குத் தாயாக வந்ததாகவே அனைவரும் சொன்னார்கள்.  அவரும் அதை முழு மனதுடன் நம்பினார்.  அதனாலேயே அவரை அனைவரும் “காங்கேயன்” என அழைப்பதையும் தெரிந்து வைத்திருந்தார்.  அது முதற்கொண்டே கங்கை நதியிடம் அவருக்கு இனம் காணாத பாசம். கங்கையைப் பூரணமான அன்புடன் நேசித்து வந்தார்.  பூஜித்து வந்தார்.  தான் ஒரு தேவதைக்குப் பிறந்தவன் என்னும் எண்ணமே அவருக்கு மனதுக்குள்ளாக ஓர் பலத்தையும், வலிமையையும் கொடுத்தது.  மிகவும் பெருமிதம் அடைந்தார்.


சிறு வயதில் விபரம் புரியாமல் இருந்தபோதெல்லாம், “அம்மா எங்கே?” எனத் தன் தந்தையிடம் கேட்டிருக்கிறார்.  தந்தை பதில் சொல்ல முடியாமல் தவிப்பதையும், கண்களின் ஓரத்தில் எட்டிப் பார்க்கும் கண்ணீரையும் கண்டிருக்கிறார்.  தாய் இல்லாமல் தன்னைத் தாயின் பாசத்தையும் சேர்த்து அளித்து வளர்த்து வரும் தந்தையிடம் அபாரமான அன்பும், பாசமும் கொண்ட காங்கேயன் இனி தந்தையிடம் தன் தாயைக் குறித்த எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என உறுதி பூண்டான்.  எட்டு வயதுக்கு காங்கேயனாகிய அவர் குருகுலத்துக்கு அனுப்பப் பட்டார். அவர் குரு பராசர முனிவர்.  தன்னைச் சுற்றிலும் வியப்பும், ஆர்வமும், புதுமையும் நிறைந்த பலவிதமான கதைகளைக் கொண்டவர்.  அது ஏற்படுத்தி இருந்த பிரகாசமான ஒளிவெள்ளத்தில் காங்கேயனும் அமிழ்ந்து போனான்.  தளர்வே அடையாத அவர் குருவின் வலிமையை எண்ணி எண்ணி வியந்து போனான் காங்கேயன். அவருடைய மனோபலம் எவராலும் தவிர்க்க இயலா ஒன்று.  அத்தகைய மனோபலத்தை காங்கேயனுக்குள்ளும் உருவாக்க முயன்றார் பராசரர்.  அதில் வெற்றியும் கண்டார்.


ஆம், பதினெட்டு வயதில் வேத, சாஸ்திரங்களையும், அர்த்த சாஸ்திரம், ஆயுத சாஸ்திரம் போன்றவற்றையும் பரிபூர்ணமாகக் கற்று ஒரு அழகான அதே சமயம் உடல் வலிமையும், மனோ வலிமையும் கொண்டவனாக அவர் உருமாறி இருக்கையில் அவர் வாழ்க்கையின் மிகப் பெரிய மனோபீஷ்டம் பூர்த்தி ஆகிவிட்டதென்றே நினைத்தார். அப்போது தான் ஒரு நாள் அவர் தந்தையான ஷாந்தனு மிகவும் வருத்தமாக இருப்பதைக் கண்டார். சில நாட்களாகவே அவர் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பதையும் தெரிந்து கொண்டார்.  தன் தந்தையிடம் அவர் வருத்தத்தின் காரணத்தைக் கேட்டபோது அவர் தன் மகனைத் தான் மிகவும் நேசிப்பதாலும், அதன் காரணமாக ஏற்பட்ட நம்பிக்கையினாலும் மகனிடம் தன் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.


கங்கைக்கரையில் ஓர் நாள் உலாவிக் கொண்டிருந்த அவர் தந்தை ஷாந்தனு, ஓர் அழகிய பெண்ணை அங்கே கண்டதாகவும், அந்தப் பெண்ணின் பெயர் மத்சகந்தி என்றும், அவள் ஓர் மீனவப் பெண் என்றும் கூறினார். இவ்வுலகில் உள்ள பெண்களிலேயே இவள் தனித்தன்மை வாய்ந்தவளாகவும், மிகவும் அழகானவளாகவும், அதே சமயம் புத்திசாலித் தனத்தில் குறையில்லாமலும் இருந்தாள்.  அவள் அழகும், புத்திக்கூர்மையும் ஷாந்தனுவை ஆட்டிப் படைத்தன.  அவள் மேல் தீராக் காதல் கொண்டான் ஷாந்தனு.  அவளுக்கும் ஷாந்தனுவின் மேல் காதல் ஏற்பட்டது.  ஷாந்தனு அவளை மணக்கவும் விரும்பினான்.  அந்தப் பெண் தன் தந்தையிடம் பேசும்படி சொல்ல, அவள் தந்தையைக் கண்டு பேசினான் ஷாந்தனு.


ஆனால் அவள் தந்தை ஒரு கடுமையான நிபந்தனையைப் போட்டான்.  தன் மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையே சிம்மாதனம் ஏறவேண்டும் என்பதே அந்த நிபந்தனை.  இது ஒரு மோசமான, கொடூரமான நிபந்தனை என ஷாந்தனுவின் மனதில் தோன்றியது.  இதில் சற்றும் நீதி இல்லை என்பதும் அவனுக்குத் தெரிந்தது.  அவனுக்குப் பின்னர் சகல தகுதிகளும் வாய்ந்த அவன் மூத்த மகன் ஆன காங்கேயனே பட்டம் ஏற வேண்டும்.  அவனுக்கே இந்த அரியணை உரியது.  இதை எப்படி அவனிடமிருந்து பறிப்பது!  ஹூம், ஷாந்தனுவிற்கு இதில் சம்மதமே இல்லை.  அவன் காங்கேயனை மிகவும் நேசித்தான்.  அவனுக்கு துரோகம் செய்ய அவன் மனம் ஒப்பவில்லை.  அதே சமயம் மத்சகந்தியை அவனால் மறக்கவும் இயலவில்லை.  இரவும், பகலும், விழித்திருக்கையிலும், தூங்குகையிலும், அவள் அவன் முன்னே தோன்றிக் கொண்டே இருந்தாள்!  அவள் புன்னகையாலும் அவள் அழகிய வடிவினாலும் அவன் மன வேதனை அதிகமாயிற்றே தவிரக் குறையவில்லை.  அவளை மணந்து கொண்டு தனக்கு ராணியாக்கிக் கொள்ள மிகவும் விரும்பினான்.


தன் மகனுக்கு உரிய சிம்மாதனத்தைப் பறித்துக்கொள்ளவும் அவன் விரும்பவில்லை.  அதே சமயம் மத்சகந்தியை இழக்கவும் விரும்பவில்லை.  இந்த அசாதாரணமான நிலை அவனைத் துன்பத்தில் ஆழ்த்தியது.  இதை அனைத்தையும் கேட்ட காங்கேயனுக்கு உடனே முடிவெடுக்க ஒரு கணம் கூட ஆகவில்லை.  அவன் தந்தையிடம் தான் அரியணையை விட்டுக் கொடுப்பதாகவும், தந்தை, மீனவனைப் பார்த்து அவன் நிபந்தனையை ஏற்பதாகவும் கூறிவிட்டு மத்சகந்தியை மணக்கும்படியும் கேட்டுக் கொண்டான்.  இதற்கும் அந்த மீனவன் நம்பிக்கை கொள்ளாவிட்டால் தான் ஓர் சபதம் எடுத்துக் கொள்வதாகவும் கூறிய காங்கேயன்,  தான் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் பிரமசாரியாகவே கழிக்கப் போவதாகவும் கூறினான்.  திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்பதோடு அரியணைக்கு உரிமையும் கோரப் போவதில்லை என்பதையும் உறுதிபடக் கூறினான்.


அவனுடைய ஒரே அபிலாஷை அந்த சிம்மாதனத்தில் யார் அமர்ந்தாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து சாம்ராஜ்யம் விரிவடையவும், எவ்விதத் தொல்லைகளும் இல்லாமல் மன்னன் ஆட்சி புரிய உதவுவதுமே ஆகும் எனவும் இதுவே தன் தலையாய கடமை எனவும் கூறினான்.  தன்னையோ, தன் வாழ்க்கையையோ குறித்து நினைக்காமல் சாம்ராஜ்யத்தைக் குறித்து மட்டுமே தான் இனி நினைக்கப் போவதாகவும் அதன் நலனுக்கெனவே பாடுபடப் போவதாகவும் கூறினான்.

1 comment:

ஸ்ரீராம். said...

படிச்சாச்சு!