Thursday, May 12, 2016

ஆசிரம வாழ்க்கையின் அனுபவங்கள்!

ஆசிரமத்தின் பெண்களில் பெரும்பாலோர் அக்கம்பக்கம் உள்ள கிராமங்களிலிருந்து இங்கேயுள்ள ஆசிரமவாசிகளைத் திருமணம் செய்து கொண்டு வந்தவர்களாக இருந்தது. அவர்கள் கொஞ்சம் சோம்பேறித் தனத்தோடு தான் இருந்தனர். காலையில் சீக்கிரமாக அவர்களால் எழுந்திருக்க இயலாது. பிரம்ம முஹூர்த்தம் கழிந்த பின்னரே எழுந்து கொண்டனர். அதோடு அல்லாமல் ஒருவருக்கொருவர் வம்பு பேசிக்கொண்டும் வம்புப் பேச்சுக்களைக் கேட்டு ரசித்துச் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் பராசரர் அவர்களைக் கண்டிக்கவே மாட்டார். அவரே நேரடியாக இரு சீடர்களை அழைத்துக் கொண்டு மாட்டுக்கொட்டிலுக்குச் சென்றுவிடுவார். அவர்கள் துணையுடன் கொட்டிலை நன்கு சுத்தம் செய்வார். பசுக்களையும் குளிப்பாட்டிப் பால் கறக்கத் தயார் செய்வார். அதைக் கண்டதுமே ஆசிரமத்துப் பெண்மணிகள் அங்கே போய் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டிருக்கும் வேலைகளைச் செய்யப் போயிருப்பதாகப் போக்குக் காட்டுவார்கள். அதன் பின்னர் பராசரர் தன் மகன் த்வைபாயனன், சீடர்கள் அஸ்வலும், பைலரும் துணை வர நதியில் நீராடிக் காலை அனுஷ்டானங்களைச் செய்வார். தூக்கமயக்கத்தில் இருக்கும் ஆசாரியர் கௌதமரும் மற்றவர்களும் அவசரம் அவசரமாக இவர்களுடன் கலந்து கொள்வார்கள்.

அனைவரும் குளித்து முடித்துக் காலை அனுஷ்டானங்கள் முடிந்த பின்னர் அக்னி குண்டத்தைச் சுற்றி அனைவரும் அமர்ந்து கொண்டு வேதங்களை ஓத ஆரம்பிப்பார்கள். பராசரரின் குரலே அங்கு ஓர் புனிதமான சூழ்நிலையை உருவாக்கி விடும். மற்ற பிராமணர்களும், பிரமசாரிகளும் பராசரரோடு தொடர்ந்து வருவதற்குக் கஷ்டப்பட்டாலும், அதை லட்சியம் செய்யாமல் அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுத்துத் தங்கள் வேலைகளில் ஈடுபடுவார்கள். வேதம் ஓதும்போதும் பராசரரைப் போல் அட்சர சுத்தமாக சரியான இடைவெளியில் தக்கபடி ஏற்ற, இறக்கங்களோடு ஓதுவதற்கு முயற்சி செய்வார்கள். சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பராசரரின் இந்த வருகையை ஒவ்வொரு வருடமும் ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர். அவர் வந்திருக்கும் செய்தி கிடைத்துவிட்டதும், அவரவர் தங்களால் இயன்ற பொருளை அக்னிக்கு ஆஹுதி இடுவதற்கு எடுத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக பராசரரை வந்து பார்த்து நமஸ்கரித்து அவர் ஆசிகளைப் பெற்றுக் கொள்வார்கள். இதன் மூலம்கிராமத்து வாசிகளுக்கும் ஆசிரம வாசிகளுக்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத பந்தம் தோன்றியது.

பராசரர் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வைத்தியம் செய்தும், கிராமத்து வாசிகளின் குடும்பப் பிரச்னைகளைத் தீர்த்து வைத்தும் கிராமத்தில் ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையில் ஏற்படும் சச்சரவுகளைத் தீர்த்து வைத்தும் உதவிகள் செய்து வருவார். விண்ணில் உலாவரும் கிரஹங்களின் சுழற்சிக்கு ஏற்ப அவரவருக்கு ஏற்றவாறு எதிர்காலத்தைக் கணித்துக் கூறுவார். மெல்ல மெல்ல ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டு வந்தான் த்வைபாயனன். நாளாக ஆக அவனுக்குத் தன் தந்தை அடைந்த வெற்றிக்குக் காரணம் புரிந்தது. அனைவரிடமும் அவர் அடைந்திருக்கும் செல்வாக்கின் காரணமும் புரிந்தது. ஆசிரமவாசிகளை எந்தப் பொருளையும் பாதுகாத்துப் போற்றாமல் இருக்கும்படி பராசரர் பழக்கி இருந்தார். ஆசிரமத்தில் ஏதேனும் பொருள் இருந்தால் அது உணவுப் பொருளாகத் தான் இருக்கும். அதுவும் மூன்றே நாட்களுக்கு வருமாறு காணப்படும். அதிகமாக எந்தப் பொருளின் மேலும் ஆசிரமவாசிகள் விருப்பம் கொள்ளாமல் பார்த்துக் கொண்டார் பராசரர்.

த்வைபாயனன் கேள்விப் பட்டவரையில் இப்படியே நடந்து வந்தாலும் ஒரு முறை பராசரர் ஆசிரமங்களுக்கு வருடாந்திர வருகைக்குச் சென்ற போது ஒரு ஆசிரமத்தின் பெண்மணிகள் தேவைக்கு மேல் உணவுப் பொருளைப் பாதுகாத்து வைப்பதைத் தெரிந்து கொண்டார். அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கவே இல்லை. மாறாக, அதிகமாக இருந்த உணவை எடுத்துக் கிராமவாசிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார் பராசரர். இதையும் நாளடைவில் அறிந்து கொண்டான் த்வைபாயனன். ஒரு அனுபவத்தை த்வைபாயனனால் மறக்கவே முடியாது. ஒரு ஆசிரமத்துக்கு அவன் தன் தந்தையோடு போனபோது அங்கே உணவுப் பொருள் எதுவும் மருந்துக்குக் கூட இல்லை. கிராமவாசிகளும் என்ன காரணத்தாலோ எதுவும் கொண்டு வந்து  கொடுக்கவில்லை. த்வைபாயனனும், பைலரும் பிக்ஷைக்கு ஆசிரமத்தின் வேறு இரண்டு பிரமசாரிகளோடு போனபோது அவர்களுக்கு பிக்ஷை ஏதும் கிடைக்கவே இல்லை. அவர்களைப் பார்த்ததுமே கதவுகள் சார்த்தப்பட்டன.

ஆனால் பராசரர் இதற்கெல்லாம் கலங்காமல் நம்மைக் கடவுள் பசும்பாலையே உணவாகக் கொண்டு ஜீவித்திருக்கும்படி விரும்புகிறார். இது கடவுளின் விருப்பம் என்றார். அனைவருக்கும் பசுக்களின் பாலே உணவாயிற்று. யாருக்கேனும் போதவில்லை எனில் தன்னுடைய பங்கிலிருந்து கொடுக்கச் சொல்லிப் பராசரர் சொல்வார். குழந்தைகளுக்குத் தன் பங்கிலிருந்து பாலைக் கொடுப்பார். இதைப் பார்த்து மற்றவர்களும் கொடுப்பார்கள். எப்படியோ அன்றாடக் கடமைகள் அனைத்துமே தன்னுடைய கண்காணிப்பில் ஒழுங்காக நடக்கவேண்டும் என்பதைப் பராசரர் கவனித்துக் கொண்டார். தங்கள் அலட்சியத்தைக் கவனத்தில் கொள்ளாமல் பராசரர் நடந்து கொள்வதைக் கண்ட கிராமவாசிகள் மறுநாளே தங்கள் தவறை உணர்ந்து தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு வந்து  கொடுத்தனர். எப்படியாயினும் ஒரு சில ஆசிரமங்களைக் கிராமவாசிகளுக்குப் பிடிக்காமல் தான் போயிற்று. அவர்கள் ஆசிரமவாசிகளோடு விரோத பாவத்தில் இருந்தனர். ஆனாலும் அதற்கும் பராசரர் சொல்வது: நாம் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறோமெனில் இப்போது நாம் அதற்குத் தக்கவர்களாகவே இருப்போம்!” ஆகையால் சகித்துக் கொள்ள வேண்டும் என்பார். இன்னொரு ஆசிரமத்திற்கு அவர்கள் சென்றபோது அந்த ஆசிரமத்தையே அங்கிருந்து வேறிடத்துக்கு மாற்றும் முயற்சியில் அதன் ஆசாரியரும் சீடர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.

“ஏன் இங்கிருந்து கிளம்புகிறீர்கள்?” என்று பராசரர் கேட்டார். “சுற்றுப்புறம் உகந்ததாக இல்லை!” என்று மறுமொழி வந்தது. மேலும் அந்த ஆசிரமத்து ஆசாரியர் கூறியதாவது: “கிராமவாசிகள் எங்கள் வழிபாடுகளின் போது குறுக்கிடுகின்றனர். அக்னியை வளர்த்து ஹோமங்கள் செய்கையில் தண்ணீரை ஊற்றுகின்றனர். பசுக்களைத் திருடிச் சென்றுவிடுகின்றனர்.” என்றார். அதற்குப் பராசரர், அவரிடம், “ஏன் இப்படிப் பின் வாங்குகிறாய்? அவர்களுக்குப் பயந்து கொண்டா? நாம் உண்மையாக நடந்து கொள்கிறோம் அல்லவா? அதைச் சோதித்துப் பார்க்க இந்த இடத்தை விடத் தகுதியானது ஏதும் உண்டா? நாம் இங்கே நம் கடவுளரை வழிபட்டிருக்கிறோம். வேதங்களை ஓதி ஓதி இந்த இடமும் அதன் சுற்றுப்புறங்களுமே புனிதமாக ஆகிவிட்டது.  இந்த நதி தீரம் ஒரு தீர்த்தமாக ஆகி விட்டது. மக்கள் இங்கே வந்து சடங்குகளைச் செய்யவும், சம்பிரதாயமான வாழ்க்கை வாழவும் தகுந்த இடமாக இருக்கிறது! இதைவிட வேறு இடம் எதற்கு?” என்று அந்த ஆசாரியரின் தோளில் அன்புடன் கையை வைத்துக் கூறினார்.  அந்த ஆசாரியர் இவற்றைக் கேட்டுவிட்டுப் பின்னும் சொல்லுவார்: “ஸ்வாமி, எல்லாம் சரிதான். ஆனால் இந்தக் கிராமத்து மக்கள் கொடுமைக் காரர்களாகவும் பொல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் மனதை மாற்றுவதற்குச் செய்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை; தோற்றுப் போனோம்.” என்றார்.

மீண்டும் அன்புடனும் கனிவுடனும் பராசரர் கூறினார்:” மகனே, சுற்றுப்புறத்து மக்களின் அன்பை நாம் வெல்ல வேண்டும். நம்முடைய ஒழுங்கான கட்டுப்பாடான புனிதமான வாழ்க்கை முறையால் அவர்கள் மனம் மாறி நம்மிடம் அன்பு செலுத்த வேண்டும். அப்படி நாம் செய்யவில்லை எனில், அல்லது நம்மால் இயலவில்லை எனில் நாம் வாழும் இந்த தவ வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும்! இந்த வாழ்க்கை தோல்வி அடைந்து விடும்! நாம் நம் கடமைகளிலிருந்து தவறினவர்கள் ஆவோம். தர்மத்தின் பாதையில் செல்லவும், தர்மத்தின் பாதையைக் காட்டவும், தர்மத்தின் பாதையில் செல்வதற்கான வழிமுறைகளைப் போதிக்கவுமே நாம் பிறப்பெடுத்திருக்கிறோம். ஆசாரியர்களாக இருக்கிறோம். நம் மக்களிடம் நாம் தான் அன்பு செலுத்த வேண்டும். வேதங்களை ஓதும் நமது வாய் பின்னர் ஸ்வரம் பிசகி, ஸ்ருதி பிசகித் தாறுமாறாக வேதங்களைச் சொல்ல ஆரம்பிக்கும். அக்னியை நாம் அசட்டை செய்ய ஆரம்பிப்போம். சடங்குகளைச் செய்ய வேண்டிய முறையில் ஒழுங்காக அக்னியை வழிபடவில்லை எனில் நமக்கு என்ன கிடைக்கும்? நாம் நெறிமுறை தவறினவர்களாக ஆகிவிடுவோம்.” அதற்கு அந்த ஆசாரியர் தயக்கத்துடன், “கிராமவாசிகள் எங்களைக் கொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் போல் உள்ளது!” என்று மெதுவான குரலில் கூறினார்.

“ஆஹா, அப்படியா? அப்படி அவர்கள் உங்களை அடித்துத் துன்புறுத்திக் கொல்ல விரும்பினால் விடாதீர்கள்; தொடர்ந்து வேத மந்திரங்களை ஜபித்தவண்ணமே அவற்றை ஓதிய வண்ணமே இருங்கள். உங்கள் சுய விருப்பத்தின் பேரில் நீங்கள் மரண வாயிலுக்குச் செல்ல முடியும். என்னுடைய தாத்தா மஹா பெரியவர் வசிஷ்ட முனிவர் அப்படித்தான் செய்தார். அவரை ஒரு கொடூர அரசன் கொல்ல வந்தான். அப்போது அப்படித் தான் இருந்து மரணத்தைத் தன் சுயவிருப்பத்தின் பேரில் தழுவினார்.” என்றார். இதைத் தவிரவும் காடுகளுக்கு அருகே அமைந்திருக்கும் ஒரு சில ஆசிரமங்களில் காட்டு மிருகங்களின் தொல்லைகள் நிறையவே இருக்கும். அப்போது பராசரர் அவர்களிடம், “காட்டு மிருகங்களைக் கண்டு பயப்படாதீர்கள். அன்புடன் அவற்றை நடத்துங்கள். அவை உங்களைத் தாக்கினால் உடனே ஓட வேண்டாம். ஓடினால் தான் அது உங்களை எதிரியாக நினைத்துக் கொண்டு துரத்தித் துரத்தி வந்து உங்களைக் கொல்லும். ஆனாலும் நீங்கள் தினந்தோறும் இடைவிடாமல் அக்னியை வழிபட்டு வந்து அணையா நெருப்பைப் பாதுகாத்து வந்தாலே போதுமானது. அந்தக் காட்டு மிருகங்கள் இதைக் கண்டு அஞ்சி ஓடிவிடும்.” என்றார்.

மெல்ல மெல்ல த்வைபாயனனின் பிரமசரிய விரதத்தின் எட்டாம் வருடமும் வந்தது. அப்போது பைலர் தனது பனிரண்டு வருடங்களை முடித்து விட்டிருந்தார். பராசரரின் மாணாக்கர்களிலே மிகவும் பிரபலமானவராகவும் இருந்தார். ஆகவே விரைவில் அவருக்கெனத் தனியாக ஓர் ஆசிரமம் ஏற்படுத்தப்பட்டு அதன் பிரதிநிதியாகப் பைலர் நியமிக்கப்பட்டார்.

2 comments:

ஸ்ரீராம். said...

நிதானமான, ஆனால் வலிமையான பாடங்கள்.

வல்லிசிம்ஹன் said...

கலகங்கள் அப்பொழுதே ஆரம்பித்து விட்டனவா. பராசரர் போல மஹரிஷி இப்போதும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆழமான பாடங்களைக் கற்பிக்கிறார்.
அத்தனையும் அற்புதமான வார்த்தைகள். படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.