Sunday, May 15, 2016

கல்பி தீவுக்குக் கிட்டிய சாபம்!

பனிரண்டு நாட்கள் காரியங்களும் முடிந்து பதின்மூன்றாம் நாள் கௌதமர் த்வைபாயனரிடம், “த்வைபாயனா! நீ இங்கேயே இருக்கலாம். தர்மக்ஷேத்திரத்துக்குப் போக வேண்டாம். இதுவும் உன்னுடைய ஆசிரமம் தான். இந்த ஆசிரமம் இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது எனில் அதன் காரணம் உன் தந்தை தான். அவரால் தான் நானும் இன்று ஓர் ஆசாரியனாக இருக்கிறேன். நான் அவருக்கு மிகவும் கடமைப்
பட்டிருக்கிறேன். இந்த ஆசிரமத்தை நீயே எடுத்து நடத்துவாயாக! நானும் உனக்கு உதவி செய்கிறேன். உனக்கு வயது குறைவு என்றாலும் உன்னுடைய அறிவுக்கும், தகுதிக்கும் இந்த ஆசிரமப் பொறுப்பை ஏற்பது தவறில்லை. “ என்றார். அதற்கு த்வைபாயனர் தன்னிரு கரங்களையும் மிகவும் அடக்கத்துடன் கூப்பி கௌதமரை நமஸ்கரித்தார்.

“ஆசாரியர்களில் சிறந்தவரே! நான் உங்கள் மாணாக்கன். இந்த ஆசிரமம் தான் எனக்குப் பிறந்த வீடு ஆகும். ஆகவே தாங்கள் என்னை இருக்கச் சொன்னதில் தவறில்லை. ஆனால் குருவே, நான் என் தந்தையின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும். தர்மக்ஷேத்திரத்தை புனர் நிர்மாணம் செய்யவேண்டும் என்பதை அவர் வாழ்நாள் ஆசையாகக் கொண்டிருந்தார். இப்போது அவர் பித்ருலோகத்துக்குச் சென்று விட்டாலும், அவரின் ஆசையை நான் பூர்த்தி செய்தே ஆகவேண்டும். அவர் ஆசை என்னை தர்மக்ஷேத்திரத்தின் பால் இழுக்கிறது. நான் கட்டாயமாய் அங்கே போயாக வேண்டும்!” என்றார். கௌதம ரிஷி விடாமல் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். “த்வைபாயனா, அங்கே செல்வதில் உள்ள இடையூறுகளைக் குறித்து நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து பயணம் செய்து வந்த பயணிகள் சொல்வதில் இருந்து வழியெங்கும் காட்டு மிருகங்களின் அட்டகாசம் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. பகலில் இப்படி எனில் இரவில் அவற்றின் கூக்குரலும், ஊளையும் பயணிக்கவோ, ஓய்வு எடுக்கவோ விடுவதில்லை. அங்கே ஆசிரமங்கள் ஏதும் இல்லை, மகனே! அதே போல் அங்கே வேதங்களின் கோஷங்களும் கேட்காது! காட்டு மிருகங்களின் கூச்சல் தான் கேட்கும்.” என்றார்.

த்வைபாயனர் கீழே விழுந்து தன் குருவை நமஸ்கரித்துக் கொண்டார். பின்னர் பேசலானார்; “சர்வ மாட்சிமை பொருந்திய குருவே, நான் என் தந்தைக்கு உறுதி மொழி கொடுத்திருக்கிறேன். தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்வதற்கு உதவுவதாகக் கூறியுள்ளேன். கடந்த பனிரண்டு வருடங்களாக நாங்கள் இருவரும் இதைக் குறித்தே பேசி வந்திருக்கிறோம். ஆகவே தந்தைக்குக் கொடுத்த உறுதிமொழியை என்னால் மீற முடியாது! அதைத் தவிர்க்க முடியாது. தயவு செய்து என்னை மன்னித்து என்னை என் வழியில் செல்ல அனுமதி கொடுங்கள்!” என்றார். ஆசாரியர் அப்படியும் மீண்டும் சந்தேகத்தைக் கிளப்பினார். “குழந்தாய்! உன் தந்தை பலவிதமான கொடுமைகளை எல்லாம் அனுபவித்த பின்னர் அவருடைய சீடர்கள் எவருக்கும் தர்மக்ஷேத்திரம் செல்லும் துணிவு ஏற்பட்டதில்லை!” என்றார்.

“ஆம், ஐயா, அவர்கள் வரையில் அவர்கள் செய்தது சரியே! நான் அவர்களைக் குற்றம் சொல்லவே இல்லை!”

“மகனே, நீ தனியாகவா போகப் போகிறாய்?”

“ஆம், ஐயா! என்ன நடந்தாலும் நான் அங்கே செல்லத் தான் போகிறேன். பார்க்கப்போனால் என் தந்தை போயிருக்க வேண்டும். உயிருடன் இருந்திருந்தால் கட்டாயம் சென்றிருப்பார் என்னையும் அழைத்துக் கொண்டு.” என்று சொன்ன த்வைபாயனர் அதன் பின்னர் துக்கத்தில் சற்று  மௌனமாகி விட்டார். அதன் பின்னர் மீண்டும் பேசினார்;” ஐயா, அப்படி எனக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ எனக் கவலைப்படுகிறீர்கள். பயப்படுகிறீர்கள். ஆனால் நான் அதற்கெல்லாம் அஞ்சவில்லை. தந்தையைப் போல நானும் பித்ருலோகம் செல்ல நேர்ந்தால் சந்தோஷமாகவே செல்வேன். அதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை. என் தந்தை தான் அங்கே இருக்கிறாரே! ஆகவே இவற்றுக்கெல்லாம் பயந்து நான் என் வாக்கைக் காப்பாற்றாமல் இருக்க முடியாது. நான் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியே ஆக வேண்டும். என்னுடன் யாரும் வருவதையும் நான் விரும்பவில்லை. நான் நாளை இரவு இங்கிருந்து கிளம்பி தர்மக்ஷேத்திரம் செல்லுவதற்குரிய படகைப் பார்த்து அதில் கிளம்புகிறேன்.” என்றார்.

“எங்கே செல்வாய் நீ? நாளைக்கு இங்கே வரும் படகு நீரோட்டத்தோடு செல்லப் போகிறது. இது தர்மக்ஷேத்திரம் செல்லும் வழியில்லை. வேறு வழி!” என்றார் ஆசாரியர்.

“ஐயா, நான் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள்வேன்; ஆனால் இப்போது இந்த விஷயத்தில் என் விருப்பம் போல் விடுங்கள்!” என்று ஆசாரியரிடம் கெஞ்சினார் த்வைபாயனர். “ஹூம், நம்முடைய மதிப்புக்குரிய ரிஷியின் மரணம் நமக்குக் கடவுளரால் அனுப்பப்பட்டதொரு எச்சரிக்கையாகவே நான் நினைக்கிறேன், த்வைபாயனா! உனக்கு அது புரியவில்லையா?” என்று கௌதமர் கேட்டார். “இருக்கலாம், ஐயா, ஆனால் நீங்கள் சொல்வதற்கு மாறாக அதன் மூலம் நான் வலிமை பெற்றிருப்பதாகவே நினைக்கிறேன். தந்தை என்னை இங்கே அழைத்து வந்த பின்னர் யமுனைக்கரையின் கல்பிக்கும், நான் பிறந்த தீவுக்கும் திரும்பிச் செல்லவே இல்லை. ஆனால் என்னிடம் சொல்லி இருந்தார். தர்மக்ஷேத்திரத்துக்கு நாம் பயணப்படும் முன்னர் கல்பிக்கு ஒருமுறை சென்று என் தாயையும், மற்ற உறவினரையும் பார்த்து விடை பெற்று வரலாம் என்று சொல்லி இருந்தார். நான் என் தாயை அவசியம் பார்க்க வேண்டும். அவளுடைய ஆசிகளைப் பெற வேண்டும். நாளைக் கழித்து இங்கிருந்து கிளம்பும் படகில் நானும் கிளம்புகிறேன். எனக்கு என்ன நேர்ந்தாலும் கவலை இல்லை ஐயா! ஆனால் தங்களுடைய ஆசிகள் மட்டும் எனக்கு வேண்டும். எனக்கு ஆசிகளைக் கொடுங்கள். தந்தை எண்ணிய காரியத்தை முடித்து வைக்கும் திடமனதும், தைரியமும், வலிமையும் எனக்குக் கிடைக்க ஆசிகளைக் கொடுங்கள். இறை அருளால் எனக்குக் கடவுளரின் ஆசிகள் கிடைக்கும் என்றே நம்புகிறேன்.”

குறிப்பிட்ட நாளில் தன் மான் தோலைச் சுருட்டிக் கொண்டு தன்னுடைய சுரைக்குடுக்கையையும்,  தண்டத்தையும் கையில் எடுத்துக் கொண்டு கௌதமர் உடன் வர த்வைபாயனர் நதிக்கரையை நோக்கிச் சென்றார். படகுக்காரன் இளம் ரிஷியை மிகவும் சந்தோஷத்துடன் வரவேற்றுத் தன் படகில் ஏற்றிக் கொண்டான். படகு கிளம்ப இருந்த சமயம் எவரோ நீரில் குதிக்கும் சத்தம் தொபுகடீர் எனக் கேட்டது. பின்னர் யாரோ படகை நோக்கி நீந்தி வந்தார்கள். மிக வேகமாக வந்தார்கள். படகோட்டிப் படகைக் கொஞ்சம் நிறுத்தினான். விரைவில் பைலர் படகின் ஒரு முனையைப் பற்றிக் கொண்டு ஏற முயன்றார். “த்வைபா, என்னை விட்டு விட்டுச் செல்லலாமா? இப்படி நீ செல்லக் கூடாது. நீ எங்கே சென்றாலும் நான் உன்னுடனேயே வருவேன்!” என்ற வண்ணம் பைலர் படகில் ஏறினார். நீரில் நீந்தியதால் நனைந்து  போயிருந்த பைலரை அதைக் குறித்துக் கவலைப்படாமல் த்வைபாயனர் ஆரத் தழுவிக் கொண்டார். மறுநாள் அதிகாலையிலே கல்பிக்குச் சென்று விட்டார்கள். அங்கே தன் பாட்டனின் குடிசையைத் தேடினார் த்வைபாயனர். அங்கே எதுவுமே இல்லை. திகைப்பும் அச்சமும் ஏற்பட்டது த்வைபாயனருக்கு. அந்தத் தீவில் மனிதர் வாழ்வதற்கான எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை.

படகோட்டியிடம் இரண்டு நாட்கள் கழித்து வந்து தங்களைத் திருப்பிக் கூட்டிச் செல்லும்படி த்வைபாயனர் கூறினார். பின்னர் படகிலிருந்து கீழே குதித்துப் பைலரும், த்வைபாயனரும் தீவை நோக்கி நீந்தினார்கள். த்வைபாயனரின் குடும்பத்துப் படகுகள் எல்லாம் கட்டி இருக்கும் தூணையே அங்கே காணவில்லை. இரண்டு குடிசைகள் சுத்தமாக இல்லை; மூன்றாவது குடிசை சிதைந்து போய்க் காணப்பட்டது. த்வைபாயனர் மனதுக்குள்ளே பிரார்த்தனைகளைச் செய்தார். அவருக்குக் கடவுளர் அனைவரும் அடுத்தடுத்து அவர் சந்திக்கப்போகும் சோதனைகளை முன்னிட்டு இப்போதே அவரைப் பக்குவப்படுத்துகின்றனர் என்றே தோன்றியது. பைலர் த்வைபாயனரின் தோளை ஆதுரத்துடன் தொட்டுத் தொடுகை மூலமாகவே ஆறுதல் கூறினார். த்வைபாயனரோ ஒரு வார்த்தை பேசவும் இல்லை; ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தவும் இல்லை. அதன் பின்னர் அந்தத் தீவின் மற்றொரு பிரிவில் இருந்த கிராமத்தில் மீன் பிடிப்போர் வாழும் பகுதிக்கு இருவரும் சென்றார்கள். அதைப் பார்க்கும்போதே கடந்த பனிரண்டு வருடங்களாக அந்தக் கிராமத்திலோ அதன் மீனவர்கள் வாழும் பகுதியிலோ எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று புரிந்தது. கிராமத்தின் ஜனத்தொகை கூட அதிகரித்திருக்கும் என்று தோன்றவில்லை.

அங்கே இரு இளைஞர்கள் அமர்ந்து கொண்டு ஒருவன் மீனைச் சுத்தம் செய்து கொண்டும், இன்னொருவன் வலையைத் தைத்துக் கொண்டும் இருந்தனர். அவர்கள் இருவரும் இந்த இரு ரிஷிகளையும் பார்த்ததும் வணங்கினார்கள். ஆனாலும் த்வைபாயனருக்கு அவர்கள் யாரெனப் புரியவில்லை. த்வைபாயனர் அவர்களுக்கு ஆசிகளைக் கொடுத்தாலும் தன் குடும்பத்து மக்கள் என்ன ஆனார்கள் என்று அந்த இளைஞனைக் கேட்கவில்லை. அதற்கான தைரியம் அவரிடம் இல்லை. அவர் யோசிக்கையிலேயே ஒரு நடுத்தர வயது மனிதன் அங்கே வந்து அவர்களை வணங்கி, “ரிஷிகளே, உங்களுக்கு என்ன வேண்டும்? யார் நீங்கள்?” என்று கேட்டான். “ஒன்றுமில்லை!” என்ற வண்ணம் தன் கைகளை நீட்டி அவனை ஆசீர்வதித்தார் த்வைபாயனர். “நான் சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுவீர்களா? பசியோடு இருக்கிறீர்கள் போல் தெரிகிறது!” என்று அந்த மனிதன் அவர்களைக் கேட்டான். அவர்கள் அந்த அழைப்பை ஏற்று அவன் குடிசைக்குச் சென்றார்கள். அங்கே அந்த மனிதனின் வயதான தாய் இருந்தாள். வயதான காரணத்தால் அவள் கண்கள் சரியாகத் தெரியவில்லை. எனினும் தன் கண்களைச் சுருக்கிக் கொண்டு, நெற்றியில் கைகளை வைத்த வண்ணம் இவர்களையே உற்றுப் பார்த்தாள் அந்தக் கிழவி.

அவளையும் அவள் வயதையும் பார்த்த த்வைபாயனர் அவளிடம், “தாயே, இந்தத் தீவின் இன்னொரு பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் எங்கே சென்றார்கள்?” என்று கேட்டார். “ஓ, அவர்களா? அவர்கள் எல்லாம் போய்விட்டனர்! யமுனை அவர்களுக்குச் சாபம் கொடுத்துவிட்டாள்!” என்றாள் அந்தக் கிழவி. “என்ன, சாபமா?” என்று ஆச்சரியமாகக் கேட்டார் த்வைபாயனர்.

No comments: