Thursday, May 19, 2016

காட்டில் கேட்ட குரல்!

ஹைஹேயர்களுடன் ஆன யுத்தம் நடந்தபோது இவர்கள் தங்கள் குழுவுடெஅன் காட்டின் உள்பகுதிக்கு யாராலும் நெருங்க முடியாத இடங்களுக்குச் சென்றனர். இதைக் குறித்துச் சொல்கையில் பராசரர் த்வைபாயனரிடம் ஓரிரு முறை ஒரு பெரிய மஹரிஷியின் பெயரைக் கூறி இருக்கிறார். அவர் பெயர் மஹா அதர்வண ஜாபாலி என்பதாகும். தர்மக்ஷேத்திரம் போய் அங்கே ஆசிரமம் அமைத்த பின்னர் த்வைபாயனர் அதர்வத்தில் சிறந்த குருமார்களிடமிருந்து இதை முழுவதும் கற்க ஆவல் கொண்டிருந்தார். இந்த மந்திரங்கள் எப்படிப்பட்ட அற்புதங்களை எல்லாம் நிகழ்த்துகிறது! இதை நாம் கற்றே ஆகவேண்டும் என்று எண்ணினார். அவர்கள் செல்லும் வழியில் கண்களில் பட்ட கிராமங்களில் அங்குள்ள மக்களிடம் இப்போது குருக்ஷேத்திரம் என அழைக்கப்படும் தர்மக்ஷேத்திரம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டுக் கொண்டு சென்றார்கள். சில சமயம் அவர்களால் தவறாகவும் வழிகாட்டப்பட்டார்கள். அதோடு இல்லாமல் அங்கே செல்லும் வழியில் இருக்கும் “ஓநாய்களின் உலகம்” என்னும் பகுதியைக் குறித்தும் அவர்கள் பயங்கரமான செய்திகளைத் தந்தார்கள். அவற்றைக் காதால் கேட்பதற்கே நடுக்கமாக இருந்தது.

பயணத்தில் அவர்கள் ஒரு பெரிய காட்டை அடைந்தார்கள். அங்கே முட்புதர்கள் அடங்கிய செடி, கொடிகள் மட்டுமின்றி உயரமாகவும் பருமனாகவும் வளர்ந்திருந்த பெரிய மரங்கள் காட்டை அடைத்துக் கொண்டு இருந்தன. பல்வேறு விதமான காட்டுக் கொடிகளும் ஆங்காங்கே படர்ந்து வளர்ந்திருந்தன. அடர்ந்த காடாகக் காணப்பட்டது அது! அங்கே உள்ளே செல்வதற்கு மனிதரால் உண்டாக்கப்பட்ட பாதை ஏதும் காணப்படவில்லை. அவ்வப்போது காட்டு மிருகங்கள் சென்றிருக்கக் கூடிய வழிகளே காணப்பட்டன. சரஸ்வதி நதிக்கரையோரமாகவே அவர்கள் நடந்தார்கள். அங்கே தான் அவர்கள், “மஹா சரஸ்வதி” என்றழைக்கக் கூடிய கல்விக்கடவுளுக்கு வழிபாடுகள் நடத்தினார்கள். அவளை வேண்டிக் கொண்டு அனைவரும் அறிவில் சிறந்தவர்களாக இருக்க சரஸ்வதியின் கடாட்சத்தைப் பெற்றார்கள். ஆனால் இப்போது அங்கே சரஸ்வதி ஒரு நதியாகப் பிரவாகம் எடுத்து ஓடவில்லை. மாறாக ஒரு சின்னஞ்சிறு வாய்க்காலாகக் காட்சி அளித்தது. அதிலிருந்து நீர் ஐந்து வெவ்வேறு ஏரிகளுக்குச் சென்றது. அவர்கள் நடுங்கினார்கள். இந்த ஐந்து ஏரிகளும் தான் “ச்யமந்தக பஞ்சகங்கள்” என அழைக்கப்படும் ஏரிகளாக இருக்க வேண்டும். இங்கே தான் பரசுராமர் யுத்தம் நடந்தபோது அவருடைய எதிரிகளின் ரத்தத்தால் இந்த ஏரிகளை நிரப்பி இருக்க வேண்டும்! இதை நினைத்து அவர்கள் மீண்டும் நடுங்கினார்கள்.

“நேர்மையின் களம்” “சத்தியத்தின் களம்” என்றெல்லாம் அழைக்கப்பட்ட அந்தப் பகுதி பார்க்கவே மிகக் கொடூரமாகக் காணப்பட்டது. த்வைபாயனரின் தந்தை பராசரரின் ஆசிரமம் இருந்த சாம்பல் பிரதேசத்தை விடவும் மோசமாகக் காணப்பட்டது. ஆங்காங்கே மனிதர்களின் எலும்புக்கூடுகளும், குதிரைகளின் எலும்புக்கூடுகளும் காணப்பட்டன. ரதங்கள் உடைந்து அதன் பாகங்கள் சிதறிக் கிடந்தன. கோரமான காட்சிகள் அவர்கள் கண்ணெதிரே காணக் கிடைத்தன. கண்ணுக்குத் தெரியாத பள்ளங்களும் நிறைந்து இருந்தன. ஒரு காலத்தில் குடிசைகளாக இருந்தவற்றின் மிச்சங்களைச் சில இடங்களில் கண்டனர். இப்போது அவை மூங்கில் குவியலாகக் காட்சி அளித்ததோடு அல்லாமல் மனிதர் வசிப்பதற்கான அறிகுறிகளும் சிறிதும் இல்லை. அவர்கள் அந்த ஏரியின் ஒரு பக்கக் கரையைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்கே சுத்தம் செய்தார்கள். உலர்ந்த சுள்ளிகளையும் கட்டைகளையும் சேகரித்தார்கள். ஓர் அக்னிகுண்டம் வெட்டினார்கள். அங்கே புனிதமான அக்னியை உண்டாக்கினார்கள். காட்டில் கிடைக்கும் பல்வேறு விதமான உண்ணக் கூடிய பழங்கள், கொட்டைகள் முதலியவற்றைச் சேகரித்து அவற்றை அக்னிக்கும் ஆஹுதி கொடுத்துத் தங்கள் உணவுக்கும் வைத்துக் கொண்டார்கள்.

இதை எல்லாம் செய்து முடிக்கும்போது மாலை ஆகி விட்டது. ஆகவே அவர்கள் உணவாகப் பழங்களையும் கொட்டைகளையும் உண்டபின்னர் தங்கள் மான் தோலை விரித்துக் கொண்டு அக்னி குண்டத்தின் அருகேயே படுத்துக் கொண்டார்கள். குளிர் தாங்கவில்லை. குளிர்காலம் ஆரம்பமாகி இருந்தது. தங்கள் மான் தோலாலேயே உடல் முழுவதையும் தலையோடு சேர்த்து மூடிக் கொண்டு இருவரும் தூங்க ஆரம்பித்தனர். களைத்திருந்த பைலர் உடனே தூங்கி விட்டார். ஆனால் த்வைபாயனருக்கு அவ்வளவு எளிதில் தூக்கம் வரவில்லை. தர்மக்ஷேத்திரத்தை எவ்வாறு பழைய நிலைமைக்குக் கொண்டு வருவது என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தார். அங்கே புனிதமான அக்னி எழுப்பப்பட்டு அதன் புகையால் விண்வெளி நிறைய வேண்டும். அங்குள்ள ஆசாரியர்களாலும் குருமார்களாலும் வேதங்கள் ஓதப்பட்டு அனைத்து மாணாக்கர்களுக்கும் வேதங்கள் கற்பிக்கப்பட்டு தர்மத்தின் படி வாழ்வது எப்படி என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவர் யோசனைக்குத் தடை ஏதுமில்லாமல் அங்கே மௌனம் குடி கொண்டிருந்தது. அந்த மௌனம் அவ்வப்போது இலைகளின் சரசரவென்ற ஒலியினாலும் இரவு நேரப் பறவைகள், மிருகங்களின் குரலாலும் மட்டுமே தடைப்பட்டுக் கொண்டிருந்தது. அவ்வப்போது நீர்ப்பிரவாகத்தின் சலசலவென்ற ஒலியும் இசைபோல் கேட்டது. மெல்ல மெல்ல அந்த இரவும் இரவின் கருமையும் த்வைபாயனரின் கண்களுக்குப் பழக்கம் ஆகி அங்குள்ள காட்டு மரங்கள் தூரத்தில் நடமாடிக் கொண்டிருந்த காட்டு மிருகங்கள் ஆகியவற்றின் உருவம் புகை படிந்த சித்திரம் போல் காணப்பட்டது.

அதன் பின்னர் த்வைபாயனருக்குத் தூக்கம் வந்தது. தூங்க ஆரம்பித்தார். எனினும் நல்ல தூக்கமாக இல்லை. அரைத்தூக்கத்திலேயே கனவு ஒன்றைக்கண்டார். துர்சொப்பனமாகத் தான் இருந்தது. அந்தக் காடும் அந்த இரவும் முழுவதும் வேதனைகளால் நிரம்பி விட்டது போல் இருந்தது. ஆங்காங்கே மனிதர்களின் புலம்பல்களும் வேதனையான முனகல்களும், பெண்களின் அழுகைச் சப்தமும் கேட்டன. அவர்களின் கைகளும் கால்களும் ஆங்காங்கே முறுக்கித் திருகிக் கொண்டன. யுத்தத்தில் இறந்த மனிதர்கள் அனைவரும் சேர்ந்து வந்து ஒப்பாரி வைத்து அழுவது போல் தோன்றியது அவருக்கு. அப்போது பார்த்துக் கடும் குளிர்காற்று வீசியது. அந்தக் காற்று ஊசியைப் போல் குத்தியது. குளிரில் நடுங்கிய பைலர் தூக்கத்திலேயே தன் கால்களைத் தூக்கிக் கொண்டு குறுகி மடிந்த வண்ணம் படுத்தார். முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டார். குளிர் தாங்க முடியாமல் பெருமூச்சும் விட்டார். த்வைபாயனர் தன்னிடமிருந்த மான் தோலையும் எடுத்துப் பைலருக்குப் போர்த்தி விட்டார். அவர் அந்த அக்னி குண்டத்தின் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு முகத்தை முழங்காலில் புதைத்த வண்ணம் அக்னியின் மூலம் தன்னை வாட்டிய குளிரைப்போக்கிக் கொள்ள முயன்றார். அப்போது திடீரென ஒரு குரல், “கிருஷ்ணா, கிருஷ்ணா! எங்கே இருக்கிறாய்? அப்பா, குழந்தாய்! ஏன் நீ வரவில்லை? என்னிடம் வா அப்பா!” என்றது! த்வைபாயனருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அது அம்மாவின் குரல்!

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.