Sunday, July 3, 2016

சீடனும் குருவும்!

“என்ன? என் சீடனா? இதை விட மோசமாக என்னை அவமதிக்க முடியாது! எனக்கு இப்படி ஒரு சீடனா? நான் ஒருக்காலும் அவனை என் சீடனாக அங்கீகரிக்கவே மாட்டேன்!” கோபத்துடன் கொந்தளித்தார் மஹா அதர்வர். “அப்போது அவனிடம் நான் என்ன சொல்லட்டும்? தந்தையே! சொல்லுங்கள்!” என்றான் சுமாந்து! மஹா அதர்வ சிறிது நேரம் யோசித்தார். அவர் உதடுகள் ஏதோ யோசனையில் சுளித்தன, நெளிந்தன. பின்னர் உறுதியாக மடிந்தன. “ஆம் இது தான் தக்க சமயம்! நம் முன்னோர்களான பிருகுவுக்கும் ஆங்கிரஸுக்கும் அவர்களின் மன விருப்பம் பூர்த்தியாகும் வண்ணம் நடைபெறும். அவனைப் பணிய வைக்க இதுவே சரியான சந்தர்ப்பம்!” என்று மனதினுள் நினைத்தவர் தன் மகனிடம், “அவனை இங்கே அனுப்பி வை!” என்று ஆணையிட்டார். சுமாந்து வெளியேறியவன் திரும்புகையில் த்வைபாயனருடன் வந்தான். த்வைபாயனர் மஹா அதர்வரைப் பார்த்ததும் கீழே விழுந்து சாஷ்டாங்கமாக வணங்கினார். அவர் பாதங்களைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டிக் கையை நீட்டினார். அவர் செய்யப் போவதை அறிந்தவர் போல் மஹா அதர்வர் அதற்குள்ளாகத் தன் பாதங்களை விருட்டென இழுத்துக் கொண்டார்.

“உங்கள் ஆசிகளை வேண்டி இங்கு வந்தேன், குருவே!” என்றார் த்வைபாயனர். குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் பாவனையில் அவர் குரல் இருந்தது. அதே பணிவுடன் அவர், “நான் இதற்கெல்லாம் தகுதியானவனே இல்லை! அதை நான் நன்கறிவேன். ஏனெனில் இந்த ஆசிரமத்திலிருந்து நான் உங்கள் அனுமதி இல்லாமல் வெளியேறிவிட்டேன். உங்களை அவமதித்து விட்டேன். அந்த மோசமான நடத்தைக்காக உங்கள் மன்னிப்பையும் அதே சமயம் உங்களிடமிருந்து தண்டனையையும் பெற வேண்டியே நான் இப்போது இங்கே வந்துள்ளேன்!” த்வைபாயனர் பேச்சை முற்றிலும் அலட்சியம் செய்தார் மஹா அதர்வர்! “ஆஹா! தண்டனையை வரவேற்கிறாயா நீ? அதைத் தேடியா வந்துள்ளாய்?” என்று கேட்டார். “ஆனால் நீ சொல்லுவதன் பொருளை நீயே உணர்ந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் த்வைபாயனா!” என்று மேலும் கூறினார்.

“என்னை நம்புங்கள், குருவே! நீங்கள் உங்கள் மரண வசிய மந்திரத்தை என் மீது தாராளமாகப் பிரயோகம் செய்யலாம். அதற்காகவே நான் இப்போது வந்துள்ளேன்! உங்கள் ஆசிரமத்தில் உங்களுக்குச் சிறிதும் கீழ்ப்படியாத மாணவன் நான்! ஆகவே தண்டனையை வேண்டியே நான் இப்போது இங்கே வந்துள்ளேன்!” என்றார் த்வைபாயனர். த்வைபாயனர் இதை மனப்பூர்வமாக அறிந்தே தான் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார் மஹா அதர்வர். இந்த இளம் பிரமசாரிக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்றே எண்ணினார் அவர். பின்னர் அவரைப் பார்த்து, “இதோ பார், பிரமசாரி! நீ என் சீடனே இல்லை! நான் ஒருக்காலும் உன்னை என் சீடனாக ஏற்கவே இல்லை!” என்று கடுமையாகக் கூறினார்.

அதற்கு த்வைபாயனர், “மிகச் சிறந்த ஆசாரியரே! போனமுறை நான் இங்கே வந்திருந்தபோது நான் உங்களிடம் சபதம் செய்திருந்தேனே! உங்கள் மாணாக்கனாகச் சீடனாக நான் ஆகிவிடுவேன் என்று! அதை மறந்துவிட்டீர்களா? உங்கள் மாணாக்கனாக நான் இங்கிருந்து வெளியேறியதே உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே!” என்று மேலும் கூறினார்.

“என்ன? என் மனம் விரும்புவதை நீ பூர்த்தி செய்தாயா? நிஜமாகவா? நிச்சயமாகவா? நீ எப்போதாவது உண்மை பேசி இருக்கிறாயா? உண்மையை எப்படிச் சொல்லவேண்டும் என்பதையாவது அறிவாயா?” என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு த்வைபாயனர், “ஐயா, நான் பிரமசரிய விரதம் ஏற்கையில் எப்போதும் உண்மையையே பேசுவது என்று உறுதி மொழி கொடுத்திருக்கிறேன்.” என்றார். மேலும் தொடர்ந்து, “நான் அதை விடாமல் கடைப்பிடிக்கிறேன்.” என்றும் கூறினார்.

“என்ன என்ன உறுதிமொழிகளை எல்லாம் நீ எடுத்துக் கொண்டாய்?”

“எல்லா பிரமசாரிகளும் தங்கள் மறுபிறவியான உபநயனத்தின் போது என்ன என்ன உறுதிமொழிகள் எடுத்துக் கொள்வார்களோ அவை தான்!”

“இவற்றைத் தவிர வேறு ஏதேனும் உறுதிமொழிகளை நீ எடுத்துக் கொண்டிருக்கிறாயா? சபதங்கள் செய்திருக்கிறாயா?”

“ஆம், ஐயா! என் தந்தையின் ஆலோசனைப்படி, பராசர கோத்திரத்தைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் மேலும் ஓர் அதிகப்படியான சபதம் ஏற்றோம். அது பராசர விரதம், பராசரரின் சபதம் என்று பெயரில் உள்ளது!”

“அதை நீயும் எடுத்துக் கொண்டுள்ளாயா?”

“ஆம், ஐயா!”

“என்ன அது?”

“நான் பிறரால் ஏற்படுத்தப்படும் மனக்காயங்களிலிருந்து விலகி இருப்பேன்! அவற்றை நானும் ஏற்படுத்தமாட்டேன்!
மற்றவரின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டேன்!
எப்போதும் உண்மையையே பேசுவேன்; உண்மையை மட்டுமே பேசுவேன்; மற்ற எதையும் பேசமாட்டேன்!
என்னிடம் இருப்பது எத்தனை விலை உயர்ந்த பொருளானாலும் அதை மற்றவருக்குத் தேவை என்றால் அவர் தகுதி வாய்ந்தவராகவும் இருந்தால் கட்டாயம் கொடுத்துவிடுவேன்!
இளம்பெண்களைக் குறித்துப் பேசுவதைத் தவிர்த்து விடுவேன்.
பேராசையையும், பொதுவான ஆசைகள், விருப்பங்களையும் தவிர்ப்பேன். அவற்றில் மனம் வைக்க மாட்டேன்.
என் குலக் கடவுளையும், இஷ்ட தெய்வத்தையும் குலத்து முன்னோர்களையும் மதித்துப் போற்றி வணங்குவேன்!


இவற்றை எல்லாம் எனக்குப் போதிக்கும் வேதம் ஒன்றுக்காகவே அதை வாழ வைக்கவே நான் உயிர் வாழ்வேன்! வேத வாக்கு சத்திய வாக்கு என்று உணர்ந்து செயல்படுவேன். வேதத்துக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொண்டு அதற்குச் சாதகமாகவே செயல்படுவேன்! அண்டத்தின் அதிசயங்களைப் புரிந்து கொள்ள உதவும் வேதங்களை என் உயிர் உள்ளவரை பாதுகாப்பேன்!”

“ஹூம், நீ சொல்வதில் ஒரு குறை உள்ளது!” என்றார் ஏளனமாக. மஹா அதர்வர் எதைக் குறிக்கிறார் என்பது புரியாமல் த்வைபாயனர் அவரைப் பார்க்க அவர் கூறினார். “நீ இங்கே வேதம், வேதம் என்றெல்லாம் கூறியது மூன்று வேதங்களைப் பற்றி மட்டுமே! இல்லையா? ஏனெனில் உன்னைப் பொறுத்தவரை வேதத்தில் மூன்றே பகுதிகள் தான்! ரிக், யஜூர், சாமம்!” என்றார்.

“இல்லை, ஆசாரியரே, நான் அப்படி நினைக்கவில்லை. அதோடு என் தந்தை பராசர முனிவர் கூறியுள்ளார்! வேதத்தின் தொகுதிகள் நான்கு என்று அவர் என்னிடம் சொல்லி இருக்கிறார். பராசர கோத்திரத்தைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் அதைப் புரிந்து கொண்டிருக்கிறோம். என் தந்தை எப்படிச் சொன்னாரோ அப்படியே நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். நான் என் வாழ்க்கையை மூன்று பகுதிகளால் ஆன வேதத்துகு மட்டும் அர்ப்பணிக்கவில்லை. வேதம் மொத்தத்துக்கும் அதர்வ வேதத்தையும் சேர்த்து நான்கு வேதங்களுக்குமாக என் வாழ்க்கை நான் அர்ப்பணித்திருக்கிறேன். அதர்வ வேதம் இல்லை எனில் வைத்தியம் தான் ஏது? உடல் வேதனைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? அரசன் ஆட்சி செய்வதும் எப்படி? ராஜரீக நீதிகள் அதில் தானே உள்ளன! அழிவிலிருந்து அரசாட்சியைக் காப்பாற்றுவது அதர்வ வேதம் தான். என் தந்தை எனக்கு அப்படித் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.” என்றார் த்வைபாயனர். மதிப்புடனும் மரியாதையுடனும் மஹா அதர்வரைப் பார்த்துவிட்டுத் தன் தலையைக் குனிந்து கொண்டார்.

மஹா அதர்வர் மனதில்  த்வைபாயனர் இந்த விஷயத்தை எடுத்துச் சொன்ன விதம் மிகவும் கவர்ந்து விட்டது. அவர் மனம் கொஞ்சம் போல் இளகியது. என்றாலும் தன் பிடியை விடாமல், த்வைபாயனரைப் பார்த்து, “பிரமசாரி! உண்மையைச் சொல்! ஏன் நீ இங்கே திரும்பி வந்தாய்? உண்மையான காரணம் என்ன?” என்று அதட்டினார். என்றாலும் முன்னிருந்த  கடுமை கொஞ்சம் குறைந்திருந்தது. அதையும் த்வைபாயனர் கவனித்துக் கொண்டார்.

“ஆசாரியரே! நான் தான் ஏற்கெனவே உங்களிடம் சொன்னேனே! உங்கள் மரண வசிய மந்திரத்தை நீங்கள் தாராளமாக என் மேல் பிரயோகம் செய்யலாம். என்னை மரணம் சம்பவிக்கும்படி செய்யலாம். நான் ஆசிரமத்தை விட்டு வெளியேறியதன் காரணமே உங்கள் தூது முழுவதுமாக நிறைவேற வேண்டும் என்பதற்கே அன்றி வேறில்லை!”

“என்ன தூதா? நானா? என்னிடமிருந்து யாருக்குத் தூது?” ஆச்சரியம் பொங்கக் கேட்ட மஹா அதர்வர் இந்த இளைஞன் சொல்வதன் உட்கருத்து என்ன என்று யோசித்தார். அவரை ஆர்வம் தொற்றிக் கொண்டது. “என்னுடைய தூது இது தான் என்று உனக்கு எப்படித் தெரியும்? நீ எவ்வாறு அறிந்து கொண்டாய்?” “ என்ன பணியை நாம் முடிக்க இருந்தோம் என்னும் ஆர்வமும் அவரிடம் எழுந்தது! அப்போது த்வைபாயனர், “ஐயா, நான் உண்மையை வெளிப்படையாகச் சொல்லலாமா?” என்று கேட்டார். “சொல், சொல், உடனே சொல்! உண்மையை மட்டும் சொல்! அதையும் வெளிப்படையாகச் சொல்! வேறே எதுவும் சொல்லவேண்டாம்.”

“மதிப்புக்குரிய மஹா அதர்வர் தர்மக்ஷேத்திரத்தின் மேல் சாபம் இட்டிருந்தார். ஏனெனில் அங்குள்ள மூன்று வித்யா அறிந்த மஹரிஷிகளில் ஒருவரான என் கொள்ளுப்பாட்டனார் மஹா வசிஷ்ட முனியின் தலைமையில் மற்ற ஸ்ரோத்திரியர்கள் அனைவரும் ஒன்று கூடி அதர்வ வேதத்தை வேதங்களின் ஒரு பகுதியாக ஏற்க முடியாது என்று சொல்லி இருந்தனர். அதோடு யாகங்கள், யக்ஞங்கள் செய்கையில் பிரம்மனாக அமர்ந்து யாகத்தை நடத்தித் தரும் தகுதி அதர்வ வேதக்காரர்களுக்கு இல்லை என்றும் மறுத்தனர். அதர்வ வேதம் ஓதப்படுவதையும் எதிர்த்தனர். அதர்வர்களின் இந்த யாக பிரம்மா என்னும் உரிமை அடியோடு மறுக்கப்பட்டது. ஏனெனில் மூன்று வேதங்களை அறிந்த ஸ்ரோத்திரியர்கள் அனைவருமே அதர்வ வேதத்தை ஒரு வேதப் பகுதியாக நினைக்கவில்லை என்பதோடு அதை மட்டமாகவும் தாழ்வானதாகவும் அதர்வ வேதம் அறிந்தோர்களைக் கீழோராகவும் பார்த்தனர். இது தான் அப்போதைய உண்மை நிலை! இதன் காரணமாகவே தர்மக்ஷேத்திரத்துக்கு சாபமும் ஏற்பட்டது!”                                                              



1 comment:

ஸ்ரீராம். said...

நல்ல இடத்தில் நிறுத்தி விட்டீர்கள்...