Sunday, November 6, 2016

ராஜசூய யாகத்துக்கான ஏற்பாடுகள்!

விரைவில் யுதிஷ்டிரன் சஹாதேவனை அனுப்பியும், அவன் மூலம் பல தூதர்களை ஆங்காங்கே பல தேசங்களுக்கும் அனுப்பியும் ராஜசூய யாகத்திற்குப் பன்னாட்டு அரசர்களையும் அழைத்தான். அப்படியே ஆங்காங்கே உள்ள ஸ்ரோத்திரியர்களுக்கும் யுதிஷ்டிரன் சார்பில் அழைப்புகள் அனுப்பப்பட்டன. பெரு வணிகர்கள், பெரிய பெரிய பண்ணைகள் வைத்து விவசாயம் செய்யும் விவசாயிகள், பலருக்கும் சேவை செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தவிர்க்க முடியாத ஷூத்ரர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு அவரவருக்கு உரிய வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டனர். நகுலனைப் பிரத்தியேகமாக ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்பி வைத்திருந்தான் யுதிஷ்டிரன். அவன் அங்கே சென்று மூத்தவர்களையும் குரு வம்சத்துத் தலைவர்களையும் ராஜசூய யாகத்துக்கு அழைக்க வேண்டும் என்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குரு வம்சத்தின் முக்கியமான நபர்களையும் யாகத்துக்கு அழைத்திருந்தான் யுதிஷ்டிரன். எல்லோருக்கும் முன்னால் யாகத்துக்கான ஏற்பாடுகள் நடைபெறும் சமயத்திலேயே ஆசிரமத்தில் வாசம் செய்யச் சென்றிருந்த மாட்சிமை பொருந்திய ராஜமாதா சத்யவதி தன்னிரு மருமகள்கள் ஆன காசி தேசத்து ராஜகுமாரிகளுடனும், வியாசரின் மனைவியான வாடிகாவுடனும் அங்கே வந்து சேர்ந்தாள். அவர்களுடன் ஷார்மியும் வந்திருந்தாள். ஷார்மிக்கு இப்போது முதுமை மிக அதிகம் ஆகிவிட்டபோதிலும் வந்த உடனேயே சமையலறைப் பொறுப்பையும் சமையலுக்கான ஏற்பாடுகள் செய்வதன் பொறுப்பையும் ஷார்மி ஏற்றுக் கொண்டாள்.

நூற்றுக்கணக்கான சீடர்கள் பின் தொடர ஆசாரியர் வியாசரும் வந்து சேர்ந்தார். வியாசர் தான் ராஜசூய யாகத்தை நடத்தித் தரும் பிரமன் ஆகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். ஸ்ரோத்திரியர்களில் சிறந்தவன் ஆன சுஷர்மா சாமவேதத்தைச் சேர்ந்த சாங்கியங்களுக்கும் சடங்குகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார். ஆரிய வர்த்தத்திலேயே சிறந்த வைதிகரும் சமயச் சடங்குகள் செய்வதில் நிபுணர் என்ற பெயர் பெற்றவரும் ஆன யாக்ஞவல்கியர் யாகத்தின் “அதவர்யூ”வாக நியமிக்கப்பட்டிருந்தார். தௌமியரும், பைலரும் யாகத்தின் “ஹோதா”க்களாக நியமனம் செய்யப்பட்டிருந்தனர். வந்திருந்த ஸ்ரோத்திரியர்கள் பல குழுக்களாகப் பிரிந்து அன்றாட நிகழ்ச்சிகள் நடந்து முடிந்ததும், தங்களுக்கும் சமயச் சடங்குகள் குறித்தும் கோட்பாடுகள் குறித்தும் நடைபெறும் விழாவின் முக்கியத்துவம் குறித்தும் தங்களுக்குள் விவாதித்துத் தெளிவு பெற்றனர். யுதிஷ்டிரன் அவர்கள் தங்குவதற்கெனப் புதியதாக வீடுகள் கட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்திருந்தான்.

ஒவ்வொரு நாளும் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து விழாவைப் பார்த்துப் பங்கெடுத்ததோடு அல்லாமல் புராண காலத்துக் கதாநாயகர்கள் குறித்தும், குரு வம்சத்துப் பழைய வீராதி வீரர்கள் குறித்தும் ஸ்ரோத்திரியர்களும் மற்றவர்களும் சொல்லும் வீர, தீர சாகசக் கதைகளையும் நாடோடிப் பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தனர். புராண நிகழ்ச்சிகளும், முன்னோர்களின் வீர தீர சாகசங்களும், கண்ணன் செய்த அற்புதங்களும் அனைவராலும் ஆடல், பாடல் நிறைந்த நாட்டிய நாடகமாகச் சிறந்த கலைஞர்களால் நடித்துக் காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் புதுமையைக் கண்டு ரசித்தனர். உணவு உண்பதற்கென பெரிய பெரிய கூடங்கள் கட்டப்பட்டிருந்தன. ஒரே சமயம் ஆயிரக்கணக்கான மக்கள் ஒருங்கே அமர்ந்து உணவு உண்ணும்படியாக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். இவை அனைத்தையும் ஷார்மி தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தாள். அனைவருக்கும் ஏழையாக இருந்தாலும் சரி, பெரிய பேரரசராக இருந்தாலும் சரி, ஒரே மாதிரியான தரமான உணவை திருப்தி அடையும் வண்ணம் பரிமாற உத்தரவுகள் போடப்பட்டிருந்தன. இத்தனை அமர்க்களத்திலும் வியாசர் தன் பழக்கம் ஆன குழந்தைகளுக்கு உணவு அளிப்பதை நிறுத்தவில்லை. குழந்தைகளுக்கு உணவு அளித்த பின்னரே அவர் உண்டார்.

அரச விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அவரவர் படை வீரர்களுடனும் பெரிய பெரிய ரதபப்டைகளுடனும் தங்கள் செல்வாக்கைக் காட்டிக் கொண்டு வந்தனர். சேதி தேசத்து சிசுபாலனும், காருஷ மன்னன் தந்த வக்கிரனும் பெரிய பெரிய ரதப்படைகளுடன் வந்து சேர்ந்தனர். யுதிஷ்டிரன் அனைவரையும் மலர்ந்த முகத்துடன் வரவேற்றான். சிசுபாலனையும் அவ்வாறே அவன் வரவேற்க சிசுபாலனோ யுதிஷ்டிரனை விடத் தான் மிக உயர்ந்தவன் என்னும் எண்ணம் தலைதூக்க அலட்சியத்துடன் தன் தலையை ஆட்டி அதை ஏற்றுக் கொண்டான். சற்றும் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கவே இல்லை. நட்பும் தொனிக்கவில்லை. கிருஷ்ணன் தன் தந்தை வசுதேவருடன் வந்து சேர்ந்தான். அவர்களுடன் பலராமனும் மற்றும் பல யாதவத் தலைவர்களும் வந்திருந்தார்கள். அவர்களை மிகவும் அன்புடனும், மரியாதையுடனும் யுதிஷ்டிரன் வரவேற்றான். அவன் மனதுக்குள் கிருஷ்ணன் பால் நன்றி சுரந்தது. ஏனெனில் எவ்விதமான பெரிய போர்களும் இல்லாமல் பல தேசத்து அரசர்களின் நட்புடன் கூடிய உறவை சாத்தியமாக்கியது கிருஷ்ணன் தானே! இமயமலைப் பிராந்தியத்திலிருந்து ஆரம்பித்து மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் எல்லை வரை உள்ள நாடுகளைத் தன்னுடன் நட்புப் பாராட்டும்படி செய்தது கிருஷ்ணன் அன்றி வேறு யார்!

ஹஸ்தினாபுரத்திலிருந்து பிதாமகர் பீஷ்மர் வந்து சேர்ந்தார். அவருடன் திருதராஷ்டிரன், அவர்கள் சகோதரன் ஆன மந்திரி விதுரர், மேலும் துரியோதனனும் அவன் சகோதரர்களும் கூட வந்து விட்டார்கள். காந்தாரத்திலிருந்து துரியோதனனின் பாட்டன் ஆன சபல் ராஜாவும் தன் மகன் ஷகுனியுடன் வந்திருந்தான். துரியோதனனை இணை பிரியாத அங்க தேசத்து மன்னன் கர்ணனும், துரோணரின் ஒரே மகன் அஸ்வத்தாமாவும் வந்திருந்தனர். குரு வம்சத்து இளவரசர்கள் அனைவருக்கும் ஆசாரியர்கள் ஆன கிருபாசாரியாரும், துரோணாசாரியாரும் வந்திருந்தனர். ஆகவே யுதிஷ்டிரன் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாண்டவர்கள் ஆன தங்கள் ஐவருக்கும், துரியோதனாதியருக்கும் இடையே உள்ள மனக்கசப்பை முற்றிலும் அகற்றி இருபக்கமும் ஓர் ஒத்திசைவான மனப்போக்கை உண்டாக்க வேண்டும் என்று பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான். ஆகவே முக்கியமான வேலைகளில் தன் குடும்பத்து நபர்களை ஈடுபடுத்தி அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கச் செய்தான்.

பீஷ்மரையும் குரு துரோணரையும் முறைப்படி மரியாதைகள் செய்து அவர்களை கௌரவித்து எல்லாவிதமான ஏற்பாடுகளும் சரியாக வந்திருக்கிறதா என்று அவர்களை மேற்பார்வை பார்க்கச் செய்தான். அஸ்வத்தாமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக அங்கே வருகை புரிந்திருக்கும் அனைத்து ஸ்ரோத்திரியர்களின் சௌகரியங்களுக்கும் அவனைப் பொறுப்பாக்கி அவர்களைக் கவனிக்கச் செய்தான். துரியோதனன் இப்போது ஹஸ்தினாபுரத்தின் மன்னன் ஆகி விட்டதால் அவனை மற்ற அரசகுல விருந்தினர்களை வரவேற்கவும் அவர்களை உரிய இடங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்வித்ததை மேற்பார்வை பார்த்து அவர்களை உபசரிக்கும்படி செய்தான். மேலும் அரசர்கள் கொண்டு வந்து தரும் கணக்கற்ற பரிசுகளை எல்லாம் துரியோதனனே வாங்கிப் பத்திரப்படுத்தும்படியும் கூறி இருந்தான். இதன் மூலம் தான் துரியோதனனை எந்த அளவுக்கு நம்புகிறோம் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்பதே யுதிஷ்டிரன் விருப்பம். இதே போல் பரஸ்பரம் அவர்களும் எதிரொலிப்பார்கள் என்று முழு மனதுடன் நம்பினான்.

மற்ற முக்கியமான விருந்தினர்களைக் கவனிக்க துரியோதனனின் தம்பியான துஷ்சாசனனையும், ஹஸ்தினாபுரத்தின் மந்திரியான சஞ்சயனையும் நியமித்தான் யுதிஷ்டிரன். கிருபாசாரியாரை அனைவரும் கொடுக்கும் தங்கக் கட்டிகளையும், நகைகளையும் வாங்கிப் பத்திரப்படுத்தும்படி கூறினான். வந்து சேரும் விலை மதிப்பற்ற பொருட்களைப் பங்கிடும் வேலையை விதுரரைக் கவனிக்கச் செய்தான். கிருஷ்ணன் வந்திருக்கும் ஸ்ரோத்திரியர்கள் அனைவரின் பாதங்களையும் கழுவிப் பாத பூஜை செய்யும் உரிமையைக் கேட்டுப் பெற்றான். அவனையே எல்லோரும் எப்போதும் கவனித்தார்கள். அவன் ஏதேனும் சொன்னாலோ அல்லது ஏதேனும் வாத, விவாதங்களில் பங்கெடுத்தான் என்றாலோ அதையே அவன் சொல்வதை மட்டுமே அனைவரும் கவனித்தார்கள். கிருஷ்ணனால் எல்லாவற்றிலும் வெகு எளிதாகப் பங்கெடுக்கவும் முடிந்தது.

அனைத்தும் சுமுகமாகவும் அருமையாகவும் எளிமையாகவும் நடப்பது கண்டு யுதிஷ்டிரன் மகிழ்ந்தான். ஆனாலும் சில அரசர்களுக்கும், அரச விருந்தினருக்கும் ராஜசூய யாகத்தின் முக்கியத்துவம் குறித்துச் சரியான புரிதல் இல்லாமை கண்டு யுதிஷ்டிரன் மனம் வருந்தவும் செய்தது. ஏனெனில் அவர்களில் சிசுபாலன் முக்கியமானவனாக இருந்தான். அவனுக்கு இது எல்லாம் வேண்டாத வீண் வேலையாகத் தோன்றியது. அவனைத் திருப்தி செய்வதும் கடினமாக இருந்தது. இவ்வளவு வருடங்கள் ஆகியும் அவன் ருக்மிணியின் சுயம்வரத்தின்போது கிருஷ்ணன் ருக்மிணியைத் தூக்கிச் சென்றதையும் அதனால் தான் தன்னால் ருக்மிணியை மணக்க முடியவில்லை என்பதையும் மறக்கவே இல்லை. கிருஷ்ணன் தன் தாய்வழிச் சகோதரன் என்று கூட அவனால் சமாதானம் ஆக முடியவில்லை. கிருஷ்ணனை ஓர் எதிரியாகவே பார்த்தான். இப்போது இங்கே யாகத்துக்கு வந்த அவனைப் பார்த்துக் கிருஷ்ணன் நலம் விசாரித்தும், அவன் கிருஷ்ணனின் விசாரணைகளையோ, வாழ்த்துகளையோ ஏற்கவே இல்லை.

ஜராசந்தனுக்கு மிகவும் நெருக்கமானவனாக இருந்தான் சிசுபாலன். அவனுடைய அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையாலும் தற்பெருமை மற்றும் அகந்தையாலும் கிருஷ்ணன் மெல்ல மெல்ல ஆரியவர்த்தத்தில் ஓர் முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பதைக் கவனிக்கத் தவறி விட்டான். சிசுபாலனின் அகந்தை அவன் கண்களை மறைத்து விட்டது. ஆனால் இப்போது ஜராசந்தன் உயிருடன் இல்லை என்பது நிச்சயம் ஆன பின்னால் இங்கே வந்தால் ஒவ்வொரு விஷயத்திலும் கிருஷ்ணனின் பங்கு எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பது சிசுபாலனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. அதிலும் மகத தேசத்துக்கு இப்போது அரசனாக இருக்கும் ஜராசந்தன் மகன் சகாதேவனாலும் இன்னும் மற்றச் சில ஆரிய அரசர்களும், பேரரசர்களும் கிருஷ்ணனை ஓர் கடவுளாகவே கொண்டாடுவதைக் கண்டு சிசுபாலனுக்குப் பொறாமை மேலிட்டது.


1 comment:

ஸ்ரீராம். said...

ஒரு மாபெரும் கூட்டம் கூடும் இடத்தில் - அதுவும் முக்கியஸ்தர்கள் - என்னென்ன நடக்கும் என்னும் விளக்கமான வர்ணனை.