Tuesday, September 17, 2013

ஆர்யகன் மனம் திறக்கிறான்.

“பாட்டனார் அவர்களே, நல்லது.  எதற்கும் ஒரு படையை செகிதனாவை விரட்ட அனுப்பி வையுங்களேன், பார்க்கலாம்.  அந்தப் படையோடு உத்தவன் செல்லட்டும்;  வேண்டுமானால் சாத்யகியையும் அனுப்பி வைக்கிறேன்.  நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பதில் ஐயமே இல்லை.  ஆனால், “ தொடர்ந்த கிருஷ்ணன், “இது யுத்தம் பாட்டனாரே,  அப்படி என்றால் என்னவென்று அறிவீர்கள் அல்லவா?  மனிதனை மனிதன் கொல்வது, குடிமக்களின் குடியிருப்புக்களுக்குத் தீ வைத்து அழிப்பது, பெண்களை மானபங்கம் செய்வது போன்றவையும் அடங்கும்.” கிருஷ்ணன் கொஞ்சம் நிறுத்திவிட்டு அனைவரையும் பார்த்தான்.  தன் பேச்சு அவர்களிடம் எத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது என அறிய விரும்பினான்.  பின்னர் மேலும் தொடர்ந்தான், “ நீங்கள் என் ஆலோசனையை ஏற்றீர்களானால், செகிதனா உங்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்வதை நீங்களே அன்பின், விருந்தோம்பலின் அடையாளமாய்க் கொடுத்ததாக ஆகும்.  அப்போது அவன் மனம் இளகி இருக்கும் சமயம் பார்த்து அவனை இங்கிருந்து அனுப்ப முயல்வேன்.” என்றான்.  “இது உறுதி. நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறேன்.” என்றான் கிருஷ்ணன் முடிவாக.  நாகர்களின் வீரர்களும் தலைவர்களும் ராக்ஷசவர்த்தத்தில் கிருஷ்ணனுக்கு நடந்தவற்றைக் கண்டே அதிசயம் அடைந்திருந்தனர்.  ஒரு சின்னத் தாக்குதல் கூட இல்லாமல் ராக்ஷசர்களைக் கிருஷ்ணன் வெற்றி கொண்டதில் அவர்கள் அனைவரும் வசியம் செய்தவர்களைப் போல் இருந்தனர்.   இப்போது கிருஷ்ணன் தெள்ளத் தெளிவாக அளித்த இந்த வாக்குறுதியும் அவர்களைக் கவர்ந்தது.

ஆர்யகன் மெல்லத் தன் பல்லக்கில் இருந்து எழுந்து கண்களை மூடி பசுபதி நாதரை தியானித்தான். “பசுபதி நாதரின் கருணையும், அருளும் மகத்தானது.  கிருஷ்ணா, குழந்தாய், நீ சொல்வது போல் நடக்கட்டும். என் மக்கள் செகிதனாவுக்கு விருந்தோம்பல் செய்வார்கள்.  ஆனால் ஒன்று, மழைக்காலம் முடிந்ததும், அவர்கள் அனைவரும் என் எல்லைப் பகுதிகளை விட்டு அகன்றுவிட வேண்டும்.  அதை உறுதியாகச் செய்ய வேண்டும்.” எனக் கூறினான்.   அத்துடன் அங்கிருந்து சென்ற கிருஷ்ணன் மறுநாள் ஆர்யகனின் அழைப்பின் பேரில் அவனைக் காண வந்தவன் திடுக்கிட்டுப் போனான்.  ஒரே நாளில் ஆர்யகனுக்குப்பல ஆண்டுகள் கூடிவிட்டாற்போன்ற முதுமை மட்டுமின்றி அவன் உடலின் ஒவ்வொரு பாகமும் நடுங்கிக் கொண்டிருந்தது.  அத்தோடு அவன் கண்பார்வையில் ஒளியும் இல்லை.  எங்கோ சூன்யத்தைப் பார்த்தன விழிகள்.   கிருஷ்ணன் அவனை வணங்கிவிட்டு, “பாட்டனாரே, நான், வாசுதேவ கிருஷ்ணன், உங்கள் ஆணையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.” என்றான்.  ஆர்யகனோ, கிருஷ்ணனோடு தனிமையில் பேச விரும்புவதாய்த் தெரிவித்தான்.  தன் கரங்களின் ஒரு சிறு அசைவால் அங்கிருந்த கார்க்கோடகனையும், மற்ற நாகர்கள் தலைவர்களையும் அப்புறப்படுத்தினான்.   அனைவரும் அகன்றதும், கிருஷ்ணனைப் பார்த்து, “கண்ணா, உன் கரங்களைக் கொடு!” என்று கூறினான்.   நீட்டிய அவன் கரங்களைப் பிடித்துக் கொண்ட ஆர்யகன், “கிருஷ்ணா, நேற்றுக் கேட்ட செய்தியினால் எனக்கு மிகவும் அதிர்ச்சி ஏற்பட்டு விட்டது.   கண்ணா, நான் கனவு கூடக் கண்டதில்லை.  ஆரியர்கள் யமுனையைத் தாண்டி என் ராஜ்யத்தினுள் நுழைந்து என் குடிகளைத் தொந்திரவு செய்வார்கள் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். “இதைச் சொல்கையில் ஆர்யகனின் ஒளி இழந்த கண்கள் கண்ணீரைப் பெருக்கின. “குழந்தாய், இதைக் கேள், என் கதையை, இந்த வயதான பாட்டனின் கதையைக் கேள் அப்பா.  நான் இன்னமும் எத்தனை நாட்கள் இருப்பேனோ, தெரியவில்லை.  ஒரு சில நாட்கள் தாம் இருப்பேன்.  நீ என் அருமை மரிஷாவின் பேரன். குழந்தாய், உன்னிடம்  எனக்கு பாத்தியதை உண்டு.”

“பாட்டனாரே, உங்கள் மகன் கார்க்கோடகனின் மகன் மணிமான் உங்களுக்கு எப்படியோ, அப்படியே நானும்.  அவனிடம் உள்ளதைப் போன்ற உரிமையில் நீங்கள் என்னிடமும் உரிமையுடன் சொல்லலாம். நான் என்றென்றும் உங்களுடையவனே!” எனக் கூறிய கண்ணன் கிழவனின் முதிர்ந்த கரங்களைப் பிடித்துக்கொண்டு அவனைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசம் செய்தான்.  சற்று நேரம் நிறுத்தி யோசித்த ஆர்யகன், தன் உணர்ச்சி மிகுந்த குரலில் தொடர்ந்தான்:” நேற்று நீ எங்களுக்குச் செய்த அறிவுரைகள் மிகவும் அவசியமானவை மட்டுமின்றி கெட்டிக்காரத்தனம்  நிறைந்ததும் கூட.   அது மிக்க நன்மை தரக் கூடியதே.  ஆனால் கண்ணா, உன்னைப் போன்ற இளைஞனிடம் இருந்து இவற்றை நான் முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை.  எல்லாம் வல்ல அந்தப் பசுபதிநாதர் இவற்றை எல்லாம் நிறைவேற்ற வேண்டிய மனோபலத்தை உனக்குத் தரட்டும்.”

“கவலைப்படாதீர்கள் தாத்தா.  அந்தப் பரம்பொருளுக்கு நம்மைக் காத்து ரக்ஷிப்பதை விட வேறு வேலை என்ன?  ஆனால் என் உயிரைக் கொடுத்தாவது, என் வாக்குறுதியை  நான் காப்பாற்றுவேன்.  கவலைப்படாதீர்கள்.” என மீண்டும் ஆறுதல் வார்த்தைகளை மொழிந்தான்.  “கிருஷ்ணா, என் குழந்தாய்! எனக்கு இப்போது என்ன பயம் அல்லது கவலை எனில் என் நாட்டிற்கும், குடிமக்களுக்கும் மிக மோசமானதொரு எதிர்காலம் காத்திருக்கிறது என்பதே!” என்றான் ஆர்யகன்.  “ஏன், தாத்தா, அப்படி நினைக்கிறீர்கள்?  காரணம் என்ன?”  தன் அநுதாபம்  முழுவதும் குரலில் வெளிப்படுத்தினான்  கிருஷ்ணன்.  ஆர்யகன், பழைய நினைவுகளில் ஆழ்ந்தவனாக  “கண்ணா, அப்போது நான் இளைஞன்.  வலு நிரம்பியவன்.  ஆரியர்கள் ரதங்களில் ஏறிக் கொண்டு விற்கள், அம்புகள் எடுத்து வருகையில்  அவர்களைப் பார்த்துச் சிரித்துக் கேலி செய்திருக்கிறேன்.  அப்போது நாகர்களாகிய எங்களை வலிமை மிக்கவர்கள் எனவும் எவராலும் அழிக்க முடியாது எனவும் கருதினேன்.  எங்கள் பிரதேசங்களிலிருந்து எவரும் எங்களை விரட்ட இயலாது எனவும் நினைத்திருந்தேன்.  அப்போது தான் உன் தாத்தாவின் வீரர் கள் வந்து யமுனையின் அக்கரையில் தாங்கள் குடியிருக்க வேண்டி ஒரு நகரை நிர்மாணிக்க ஆரம்பித்தனர்.  எங்கள் காடுகளெல்லாம் அழிக்கப்பட்டுக் குடியிருப்புகளாக மாறின.  அப்பனே, கங்கைக் கரையின் வளம் மிகுந்த பிரதேசங்கள் அனைத்துமே எங்களுடையவையாகவே இருந்தன.  மெல்ல, மெல்ல குரு வம்சத்தினரும், பாஞ்சால நாட்டவரும் அங்கே வந்து தங்கள் ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டனர். அவர்களை எதிர்கொண்டு நிற்க இயலாத என் குடிமக்கள் காட்டின் உள்ளே கங்கைக்கும், யமுனைக்கும் இப்பால் இந்தக்கரையின் உள்ளே  காட்டுப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.”

சற்றே நிறுத்தி பெரிய பெருமூச்சாக ஒன்றை விட்ட ஆர்யகன், பின்னர் தொடர்ந்து, “கண்ணா, என் மக்களைக் குறித்து நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.   மிகவும் நல்ல குடிமக்கள் அவர்கள்.  நல்ல பழக்கங்கள் உள்ளவர்கள், அனைவரோடு ஒத்திருப்பதில் வல்லவர்கள், சமாதானத்தை விரும்புபவர்கள்.  அவர்கள் இப்படி ஆங்காங்கே ஒரு சில சில்லறைச் சண்டை, சச்சரவுகளில் விரும்பி ஈடுபட்டாலும், பெரிய போர்கள் எனில் அவர்கள் மிகவும் வெறுப்பார்கள்.  மேலும் முறையாகப் போரிடவும் தெரியாதவர்கள்;  அவர்களுக்குப் பெரிய போர்களை சமாளிப்பதும் கஷ்டமான ஒன்று.  உன் ஆரிய இனத்து மக்களைப் போல் அவர்களால் உங்கள் வழிமுறைகளை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள இயலாது.  போர் எனில் வில், அம்புகளைக் கொண்டும், குதிரைகள், ரதங்களின் மூலமும் வீரர்களை எங்களால் உருவாக்க இயலாது.  அதே போல் விவசாயமும், கால்நடை வளர்ப்பிலும் உங்களைப் போன்ற நாகரிகம் படைத்தவர்களும் அல்ல.  எங்களுடைய பழைய, மிகப் பழைய அந்த நடைமுறையையே நாங்கள் இன்னமும் பின்பற்றி வருகிறோம்.  எங்களுக்குத் தெரிந்தது அது ஒன்று தான்.  ஆனால் இப்படியே தொடர்ந்து நடந்தால், கண்ணா, எங்கள் நாகர்கள் இனமே அழிந்து போய்விடும். ஒருவர் கூட நாகர்களாக இருக்க மாட்டார்கள். “



3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//” நேற்று நீ எங்களுக்குச் செய்த அறிவுரைகள் மிகவும் அவசியமானவை மட்டுமின்றி கெட்டிக்காரத்தனம் நிறைந்ததும் கூட.

அது மிக்க நன்மை தரக் கூடியதே.

ஆனால் கண்ணா, உன்னைப் போன்ற இளைஞனிடம் இருந்து இவற்றை நான் முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை. //

கதை சுவாரஸ்யமாகச் செல்கிறது. பாராட்டுக்கள். நன்றிகள்.

ஸ்ரீராம். said...

ஆர்யகன் மிக நீளமாகக் கவலைப் படுகிறார். என்னதான் சொல்ல வருகிறாராம்?! வயது முதிர்ந்ததும் இளமையிலோ இருந்த நம்பிக்கைகள் காணாமல் போய்விடுகின்றன!

இராஜராஜேஸ்வரி said...

பாட்டனாரே, உங்கள் மகன் கார்க்கோடகனின் மகன் மணிமான் உங்களுக்கு எப்படியோ, அப்படியே நானும். அவனிடம் உள்ளதைப் போன்ற உரிமையில் நீங்கள் என்னிடமும் உரிமையுடன் சொல்லலாம். நான் என்றென்றும் உங்களுடையவனே!” எனக் கூறிய கண்ணன் கிழவனின் முதிர்ந்த கரங்களைப் பிடித்துக்கொண்டு அவனைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசம் செய்தான்.

கண்ணனின் ஆறுதல் மொழிகள் அருமை..!