Thursday, May 15, 2014

வாசுதேவனா உன் கடவுள்?

திரெளபதி ஷிகண்டினின் முதுகில் கைவைத்து அவனை ஆசுவாசப் படுத்தினாள்.  அதே போல் சத்யஜித்தும் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு தன் ஆறுதலைத் தெரிவித்தான்.  அப்போது திரெளபதி பேச ஆரம்பித்தாள்.  “ஷிகண்டின், சகோதரா, நீ வந்திருக்கும் இந்த நேரம் சரியானது அல்ல. ஹஸ்தினாபுரத்து யுவராஜா துரியோதனனால் நாம் மிகப் பெரிய சதி வலையில் மாட்டி இருக்கிறோம். “

“எப்படி சகோதரியே! என்னால் நம்ப முடியவில்லையே!”

“நம்முடைய பழைய நகரமான அஹிசாத்ராவில் அனுபவித்த அவமானத்தை விட மோசமான அவமானத்தை நம் மீது அவன் சுமத்தப் போகிறான்.  உன்னை ஆண்மகனாக்கியதன் மூலம் அந்தப் பொல்லாத அந்தணன் துரோணன் விசித்திரமானதொரு திறமையைக் காட்டி நம்மை ஏமாற்றவும் அவமானத்தில் ஆழ்த்தவும் திட்டம் போட்டிருக்கிறான்.  நாளை மறுநாள் நடக்கப் போகும் சுயம்வரத்தில் அவன் மாணாக்கர்களில் ஒருவன் போட்டியில் வென்று என்னை ஹஸ்தினாபுரம் தூக்கிச் செல்லச் சரியானதொரு திட்டம் வகுத்துக் கொடுத்துள்ளான். “

ஷிகண்டின் இப்போது தன்னைச் சமாளித்துக் கொண்டு விட்டான்.  அவனுக்கு துரோணர் மீது கோபமோ, அவர் சதிசெய்கிறார் என்னும் எண்ணமோ இல்லவே இல்லை.  ஆகவே தன் சகோதரியைப் பார்த்து, “ கிருஷ்ணா, நீ தப்புச் செய்கிறாய். ஆசாரியரை அவ்வளவு மட்டமாகவா நீ நினைக்கிறாய்?  ம்ஹூம், சரியில்லை கிருஷ்ணா!  அவர் என்னை ஏற்றுக்கொண்டிருக்காமல் திருப்பி அனுப்பி இருக்கலாம்.  ஆனால் அவ்வாறு செய்யவில்லை.  திருப்பி அனுப்பி இருந்தால் நான் நிச்சயம் கங்கையில் மூழ்கி என்னை மாய்த்துக் கொண்டிருப்பேன்;  இதன் மூலம் தன் எதிரியின் ஒரு மகனைக் கொன்ற திருப்தியாவது அவருக்குக் கிடைத்திருக்குமே!   ஆனால் இது அத்தனையையும் மீறி அவர் என்னை ஏற்றுக் கொண்டார்.  ஒரு போதும் தந்தைக்கும் அவருக்கும் இடையே உள்ள பகைமை குறித்து என்னிடம் பேசியதில்லை.  “ துரோணரின் பெருந்தன்மையான சுபாவத்தைக் குறித்துக் கூறும்போது ஷிகண்டின் கண் கலங்கினான்.  மீண்டும் அழவும் ஆரம்பித்தான்.  “மஹாதேவா, அவர் என்னை ஏற்காமல் இருந்திருக்கக் கூடாதா!  என்னை இறக்க விட்டிருக்கலாமே!  ஏன் என்னை ஏற்றுக் கொண்டார்!” என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்தான்.

“அதெல்லாம் சரி.  நீ எப்படி அவரிடம் சென்றாய்?  யாரோ ஒரு கடவுள் உன்னை அவரிடம் அனுப்பியதாய்க் கூறினாயே?” திரெளபதி கேட்டாள்.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் ஷிகண்டின்.  மெல்லிய புன்னகை உதடுகளில் இழைந்தோட, “ஆம் கிருஷ்ணா, ஒரு கடவுள் என்னை வந்து காப்பாற்றினார்.” என்றான்.  “யார் அந்தக் கடவுள்? சொல் , ஷிகண்டின். உன்னை துரோணரிடம் அனுப்பியவர் எவராக இருந்தாலும் சொல்.  ஏனெனில் இதன் மூலம் அந்த நபர் தந்தையைத் துன்புறுத்தி மகிழ எண்ணி இருந்திருக்கிறார். அதற்காகத் தான் உன்னைத் தூண்டி விட்டு அங்கே அனுப்பி உள்ளார்.”

“இல்லை, இல்லை!” வேகமாய் மறுத்தான் ஷிகண்டின்.  “ நான்  என் மாமனாரிடமிருந்து தூதுவர்கள் வந்ததில் மனம் சோர்ந்து போயிருந்தேன் என்பதை நீ நன்கறிவாய்.  அந்த நாளை என்னாலும் மறக்க இயலாது.  என் மனைவியை இங்கே அழைக்க வேண்டும்; என்றும் என்னுடன் அவள் வாழ ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அந்தத் தூதுச் செய்தி கூறியது.  துருபதன் ஒரு பெரிய அரசன்.  மாமன்னன்.  அவன் பிள்ளைகளில் ஒருவன் பெண்ணாக வளர்க்கப்பட்ட செய்தி வெளியே தெரிந்தால் அது எத்தனை பெரிய அவமானம் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  அதோடு அந்தப் பெண்ணுக்கு இன்னொரு உண்மையான பெண்ணோடு திருமணமும் நடத்தி வைத்திருந்தது இன்னமும் கொடுமையான விஷயம் இல்லையா? இதெல்லாம் வெளியே தெரிந்தால் தந்தைக்கு எவ்வளவு பெரிய அவமானம் நேரிடும்!  இதை நினைத்து நினைத்து நான் வருந்திக் கொண்டிருக்கையில் அவன் வந்தான்.  ஒரு கடவுளைப் போல் வந்தான்.  என் உதவிக்கு வந்தான். அவன் மிகவும் கருணையுள்ளவன்.  அதோடு நம் குடும்ப கெளரவத்தை, பாரம்பரியத்தைக் காப்பாற்ற விரும்பினான்.  அவன் தான் என்னை துரோணரிடம் போகச் சொல்லி ஆலோசனை கொடுத்தான்.  அவனிடமிருந்து நான் செய்தியை எடுத்துச் செல்லாமல் போயிருந்தால் ஒருவேளை ஆசாரியர் என்னை ஏற்றுக் கொண்டிருக்கவே மாட்டார்.  அவன் செய்தி தான் அவரை என்னை ஏற்றுக்கொள்ள வைத்தது.  “கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிய வண்ணம் ஷிகண்டின் பேசினான்.

“யார் அது, உன்னுடைய அந்தக் கடவுள்? விசித்திரமான கடவுள்!” திரெளபதி கேட்டாள்.

“நீ நன்கறிவாய் கிருஷ்ணா! அவன் உனக்குத் தன் உதவி எப்போதும் உண்டு என்றும் எப்போதும் உன் பக்கமே நிற்பேன் என்றும் வாக்குக் கொடுத்திருக்கிறான்.  ஆனால் உன்னை மணந்து கொள்ள மறுத்துவிட்டான்.” ஷிகண்டின் சொன்னான்.

“என்ன? கிருஷ்ண வாசுதேவனா?” திரெளபதி ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனாள்.

“ஆம், அவனே தான்.  அவன் என் பக்கம் நின்றான்.  எனக்குப் பாதுகாப்புக் கொடுத்தான்.  நீங்கள் அனைவருமே என்னைக் கைவிட்டு விட்டீர்கள்!  இவ்வுலகமே என்னைக் கைவிட்டு விட்டது.  அப்போது கிருஷ்ண வாசுதேவன் தான் எனக்குக் கைகொடுத்துத் தூக்கி விட்டான்.  நான் அதல பாதாளத்தில் அழுந்தாமல் காத்தான்.”

“அட கடவுளே, கிருஷ்ண வாசுதேவன்!  மீண்டும் மீண்டும் அவனா?  தந்தை சரியாகத் தான் சொல்லி இருக்கிறார்.  நம் அனைவரையும் மிகப் பெரிய பொறியில் சதி வலையில் சிக்க வைத்து விட்டான்.  ஆஹா, நம் எதிரியிடமிருந்து வந்த உன்னை மிகப் பெரிய பரிசாக ஏற்கச் சொல்லி வற்புறுத்தியது இதற்குத் தானா? “

“சகோதரி, துரோணர் மிகவும் நட்புடனே பழகினார்!  இதில் என்ன தவறு கண்டாய்?  நட்போடு பழகியவர்களிடம் திரும்ப நட்பைத் தானே காட்டியாக வேண்டும்!”

“ஆஹா, ஷிகண்டின்! நீ அந்த வாசுதேவன்மாதிரியே பேசுகிறாய்!  அவன் குரலிலேயே பேசுகிறாய்!”

“இது என் சொந்தக் குரல் சகோதரி!  வாசுதேவன் என்ன நினைப்பான்! அவனைக் குறித்து    நீ இம்மாதிரிச் சொல்வது சரியில்லை.  மிகவும் மோசமாக இருக்கிறது.”

திரெளபதி அவனைக் கோபத்துடன் பார்த்தாள்.  அவள் முகம் சிவந்தது.  “நீ தேவையில்லாத விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுகிறாய் ஷிகண்டின்.   உன்னால் இதைப்புரிந்து கொள்ளக் கூட முடியாது.  தந்தையும், நானும், நாளை மறுநாள் சுயம்வரத்தை எதிர்கொள்ள வேண்டும்.  மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தன் வந்திருக்கிறான்.  அவன் என்னைத் தூக்கிப் போகப் போவதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.  இந்த துரியோதனன் வேறு என்னை மணக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறான்.  அவனை மணந்து கொள்வதை விடவும் நான் இறப்பதே சரியாக இருக்கும்.  நான் யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் சரி!  என்னுடைய முக்கிய நோக்கமே துரோணரோடு போராடுவது தான்.  என் மனதை நான் அதற்குத் தயாராக வைத்திருக்கிறேன்.   உன்னுடைய அருமை வாசுதேவன் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துவிட்டான்.  அவன் எனக்கும் தந்தைக்கும் உதவியாக எங்கள் பக்கமே நிற்பேன் எனக் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டான்.  தன் வாக்குறுதியை சுக்குச் சுக்காக்கி விட்டான்.”

ஷிகண்டினின் முகம் வெளுத்தது.  அவன் முகத்தில் மீண்டும் சவக்களை தெரிந்தது.  அவன் கைகள் நடுங்கின.  திரெளபதியைப் பார்த்து, “நீ ஏன் உன்னுடைய இந்த நிலைக்கு வாசுதேவன் தான் காரணம் என நினைக்கிறாய்?   நான் இன்று ஆண்மகனாய் இருப்பதே அவனால் தான்.  இந்த சுயம்வரத்தால் தந்தையின் கெளரவம் உயரத் தான் போகிறது. வாசுதேவனால் அந்த துரோணரையும் அவர் சூழ்ச்சிகளையும் கூட வெல்ல முடியும்!  துரோணர் வாசுதேவனை வரவேற்கப் புஷ்கரத்துக்கு நேரில் வந்திருந்தார் தெரியுமா உனக்கு?”

“ஆஹா!  நீ கிருஷ்ண வாசுதேவனின் அடிமையாகிவிட்டாய்!” குரலில் கசப்புத் தெரியக் கூறினாள் திரெளபதி.
*********************************************************************************

மேலே தொடரும் முன்னர்

இங்கே கொஞ்சம் நாம் அஹிசாத்ராவைக் குறித்து ஒரு சின்ன குறிப்புப் பார்ப்போம்.  குருகுலத்தில் ஒன்றாய்ப் படித்த துரோணரும், துருபதனும் பிரிந்து செல்கையில் துருபதன்  தனக்குக் கிடைப்பதில் பாதியை துரோணரோடு பங்கிட்டுக் கொள்வதாய்க் கூறினான்.  அதன்படி தன் நாடு சென்ற துருபதனுக்குத் தந்தை இறக்கவே அரியணை கிடைத்தது.  அதைக் கேள்விப் பட்ட துரோணர் துருபதனிடம் சென்று அவன் வாக்குறுதியை நினைவூட்டினார்.  துருபதனோ தான் சில கிராமங்களையும், தன் செல்வத்தையும் மட்டும் பங்கிட்டுக் கொள்வதாயும், நாட்டை எக்காரணம் கொண்டும்பங்கிட்டுக் கொள்ள முடியாது எனவும், இது பரம்பரையாக வந்தது;  க்ஷத்திரியர்களாலேயே ஆளப்பட வேண்டும்.  ஆகவே நாட்டைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் தருவதாய்க் கூறினான்.  துரோணரோ நாடும் வேண்டும் எனக் கேட்கவே  துருபதன் அவரை அவமானப் படுத்தி அனுப்புகிறான்.

பழி வாங்க நினைத்த துரோணர் ஹஸ்தினாபுரம் சென்று அங்கு அரசகுலத்தவருக்கு குருவாகத் தன் மைத்துனன் கிருபாசாரியார் மூலம் பெற்று அரசகுலத்து இளவரசர்களுக்கு ஆசானாக சகல வித்தைகளையும் கற்பித்தார்.  உரிய காலம் வந்ததும் தன் மாணாக்கர்களை துருபதனைப் பழிவாங்க வேண்டும் என்று கேட்க அர்ஜுனனைத் தவிர மற்றவர் மறுத்தனர்.  அர்ஜுனன் ஒருவனே பாஞ்சாலம் சென்று துருபதனோடு போர் தொடுத்து அவனைத் தன் தேர்க்காலில் கட்டி இழுத்து வந்து தன் ஆசிரியரிடம் ஒப்படைக்கிறான்.  அப்போது தான் பாஞ்சாலம் இரண்டாகப் பிரிகிறது. அஹிசாத்ராவைத் தலைநகராய்க் கொண்டு வட பாஞ்சாலம் உருவாக துரோணர் தன் மகன் அஸ்வத்தாமாவிடம் அதன் பொறுப்பை ஒப்படைக்கிறார்.  அவன் அந்த நாட்டை நிர்வாகம் செய்தான் எனச் சொல்லப்பட்டாலும் அந்த நாடு பின்னர் ஹஸ்தினாபுரத்து அரசர்களிடம் வசப்பட்டு அஸ்வத்தாமா அவர்கள் பிரதிநிதியாகவே அங்கே ஆண்டான்.  ஆகவே ஹஸ்தினாபுரத்து குருவம்சத்தினருடனும் பாஞ்சால மன்னன் துருபதன் பகைமையே பாராட்டி வந்தான்.

இந்த அஹிசாத்ராவில் நடந்ததைத் தான் திரெளபதி இங்கே ஷிகண்டினுக்கு நினைவூட்டுகிறாள். கதையைத் தொடர்ந்து படிக்க இது உதவியாக இருக்கும்.

   

                 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறு குறிப்பு விளக்கமும் அருமை... தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

சில விஷயங்களை மறைப்பதால் வரும் சந்தேகத்தின் பயன் கண்ணன் மேல் சந்தேகம். பிரதிநிதியாக அஸ்வத்தாமா ஆண்டான் என்று படித்திருந்தாலும் அப்புறம் கௌரவ அரசின் கைப்பாவை என்பது இப்போதுதான் படிக்கிறேன்.

அர்ஜுனனால் இழுத்து வரப்பட்ட துருபதனிடம் துரோணர் இப்போது நீ என் சமம் இல்லை, என்றும் ஆனாலும் பெருந்தன்மையாக, தான் அவனுக்கு பாதி ராஜ்ஜியம் தருவதாகக் கூறுவதும் ருசிகரம்.