Sunday, May 18, 2014

திரெளபதியின் பிடிவாதம்! ஷிகண்டினின் உறுதி!

“நான் யாருக்கும் அடிமை அல்ல சகோதரி!  கிருஷ்ணனுக்கும் அடிமை அல்ல; துரோணருக்கும் அடிமை அல்ல!” என்ற ஷிகண்டின் கொஞ்சம் பெருமையுடனே மேலே தொடர்ந்தான். “நான் யார் என்பதை நான் மறந்தது இல்லை.  நான் துருபதனின் மகன்.  இந்தப் பாஞ்சாலத்துக்கோ, அதன் மக்களுக்கோ, என் தந்தையான அரசன் துருபதனுக்கோ அவமானத்தைத் தேடித்தரும் ஒரு காரியத்தை நான் நிச்சயம் செய்ய மாட்டேன்.  இத்தனை வருடங்களாக நாம் நமக்குள்ளே அனுபவித்து வந்த ஒரு கசப்பான நிலைமையை மாற்றவும், நம்முடைய கஷ்டங்களை எல்லாம் போக்கவுமே அந்த மஹாதேவன் வாசுதேவக் கிருஷ்ணனை நம்மிடம் அனுப்பி வைத்திருக்கிறான். “

திரெளபதி யோசனையுடன் எழுந்து அங்கிருந்த சாளரத்துக்கு அருகே போய் நின்ற வண்ணம் வெளியே பார்த்துக் கொண்டு சற்று நேரம் நின்றாள்.  “நீ சொல்வதிலிருந்து உன் மனம் முழுவதும் வாசுதேவன் நிறைந்திருப்பது தெரிய வருகிறது.  அப்படித் தானே சொல்கிறாய்?” சற்றே கரகரப்பான தன் குரலில் கேட்டாள் திரெளபதி.

“அவன் மற்றவர்களைப் போல் அல்ல சகோதரி!”

“ஓஹோ, இதைக் கேட்டுக் கேட்டு எனக்கு அலுத்துப் போய் விட்டது!” அவள் இதைச் சொன்ன வேகத்திலும், திரும்பிய வேகத்திலும் தன்னை அடிக்க வருகிறாளோ என்றே எண்ணினான் ஷிகண்டின். ஆனால் உதடுகளைக் கடித்துக் கொண்டு அவள் தன்னைச் சமாளித்துக் கொண்டதையும் பார்த்தான். ஆனாலும் கிருஷ்ணனைக் குறித்துப் பேசுகையில் அவனைப் புகழ்ந்து சொல்லுவதையும், அவன் பெருந்தன்மையையும் அங்கே குறிப்பிடாமல் அவனால் இருக்க முடியவில்லை.  அதோடு அவன் எவ்வளவு சாகசங்களைப் புரிந்திருக்கிறான்.  சாதாரண மனிதரால் இயலக்கூடியதா அவை?  பேய், பிசாசுகளை வென்றிருக்கிறான்.  ராக்ஷசர்களுக்கும், நாகர்களுக்கும் இடையே சமாதானம் செய்து வைத்து நண்பர்கள் ஆக்கி இருக்கிறான்.  அதோடு மட்டுமா?  நாகர்களை மாபெரும் வீரர்களாக மாற்றி வருகிறான்.  அதில் வெற்றியும் கண்டிருக்கிறான்.

இன்னும், இன்னும்,,,, புஷ்கரத்தை ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் மீட்டுக் கொடுத்திருக்கிறான். வல்லமை மிக்கவரும்,அதிகாரங்கள் நிறைந்தவருமான துரோணரைத் தன்னை வரவேற்கப் புஷ்கரத்துக்கு வருமாறு மறைமுகமாய்த் தூண்டி இருக்கிறான்.  அதுவும் சகல அரசமரியாதைகளோடு.   இது மட்டுமா? ஷிகண்டின் தன் சகோதரியிடம் கிருஷ்ணன் புகழ் பாடுவதைத் தொடர்ந்தான். அவன் மிகவும் மரியாதை உள்ளவன்;  நற்குணங்கள் மிக்கவன்.  புத்திசாலி. ஞானம் மிக்கவன்.  நான் மிகவும் நம்பிக்கை இழந்து அவநம்பிக்கையின் ஆழத்தில் இருந்தேன்.  இதிலிருந்து என்னால் வெளியேற முடியாது என நம்பினேன்.  அப்போது தான் அவன் மின்னலென என் வாழ்க்கையில் புகுந்தான்;  எனக்கு நம்பிக்கை அளித்ததோடு நல்வழியும் காட்டினான்.  இதை என்னால் மறக்கவே முடியாது.  அவனைப் பார்ப்பதே என்னுள் நம்பிக்கையையும் வாழ்வதற்கு ஆர்வத்தையும் தூண்டுகிறது.  “

இவை அனைத்தையும் திரெளபதியிடம் சொன்னான் ஷிகண்டின்.  திரெளபதிக்குக் கோபத்திலும், ஆங்காரத்திலும் முகம் சிவந்து விட்டது.  செய்வதறியாமல் தன் கழுத்திலிருந்த சங்கிலியைப் பிடித்து வேகமாக இழுத்தாள்.  அது அறுந்து கையோடு வந்துவிட்டது.  உடனே கோபத்திலும், சீற்றத்திலும் கத்த ஆரம்பித்தாள். “போதும் போதும் உன் வாசுதேவன் புராணம்! போதும் அவன் புகழ்!  நிறுத்திக்கொள் இதோடு!  ஆமாம், ஆமாம், அவன் கடவுள் தான்!  ஆஹா, கடவுள்!   அவனுடைய சூழ்ச்சியிலும், தந்திரத்திலும் வெளிவர முடியாததொரு சிக்கலான நிலையில் நாம் இப்போது மாட்டிக் கொண்டிருக்கிறோம்.  நம்மை அவன் சதிவலையில் மாட்டி விட்டான்.  நீ இப்போது அவனா? அல்லது தந்தையா என்பதை உடனே முடிவு செய்! “ என்றாள்.

ஷிகண்டினுக்கு தர்ம சங்கடமாக இருந்தது.  அவன் முகம் கவலையிலும், வருத்தத்திலும் வெளுத்துப் போனது.  “நம் தந்தையிடம்  நான் மிகவும் பிரியம் வைத்திருக்கிறேன் கிருஷ்ணா!  ஆனால் நீ சொல்லும் இந்த நிபந்தனைக்கு உட்பட மாட்டேன். நிச்சயம்!  நீ சொல்வதைக் கேட்க முடியாது!”

“நீ கேட்டுத் தான் ஆக வேண்டும். “ திரெளபதியால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் குரல் நடுங்கியது.  அசையாமல் நின்ற வண்ணம் ஷிகண்டினையே பார்த்தாள். இமைக்காமல் பார்த்தாள்.  “இப்போது நீ முடிவெடுக்க நேரம் வந்துவிட்டது.  கிருஷ்ணனிடமும், துரோணரிடமும் நீ வைத்திருக்கும் விசுவாசத்தை உடைக்க வேண்டும்.  அப்போது தான் நீ இங்கே தங்கலாம்; இல்லை எனில் நாம் எப்போதும், எங்கேயும் சந்திக்கப் போவதில்லை.”

ஷிகண்டின் எதுவுமே பேசாமல் மாடத்துக்கு வெளியில் தெரிந்த வெட்டவெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.  பிறகு ஏதோ முடிவு எடுத்தவன் போல் அவன் முகம் பிடிவாதத்தைக் காட்டியது.  “நீ என்ன கேட்கிறாய் என்பதைப் புரிந்து தான் கேட்கிறாயா?  நான் ஆண்மகனாக ஆவதற்கு உதவிய என் ரக்ஷகனையும், குருவையும் ஆணையிட்டுத் துறக்கச் சொல்கிறாய்?  அது என்னால் முடியாது!”

“நீ இப்போது நம் தந்தைக்கும், அந்த மாட்டிடையனுக்கும் இடையில் எவராவது ஒருவரைத் தேர்ந்தெடு! அது தான் தேவை!  தந்தையா?  அந்த மாட்டிடையனா?”


அதற்கு ஷிகண்டின் தன் எஃகு போன்ற உறுதியைக் காட்டும் கண்களால் அவளைப் பார்த்து முறைத்துவிட்டு, தன் தலையை  மறுப்பாகஆட்டிவிட்டு ஒரு வார்த்தை கூடப்பேசாமல் அங்கிருந்து வெளியேறினான்.



1 comment:

ஸ்ரீராம். said...

//தன் தலையை மறுப்பாகஆட்டிவிட்டு ஒரு வார்த்தை கூடப்பேசாமல் அங்கிருந்து வெளியேறினான்//

கண்ணனின் கவர்ச்சி.