Saturday, June 14, 2014

துருபதன் முடிவு எடுத்துவிட்டான்!

“எப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்ட துருபதன் ஷிகண்டினைப் பார்த்தான்.  தான் மிகப் பெரிய அவமரியாதைக்கும், அவமதிப்புக்கும் உள்ளானது போல் இருந்த அவன் முகத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்தான்.  “அப்படிப் பார்க்காதே மகனே!  உன்னை நான் இனிமேல் அவமரியாதை செய்ய மாட்டேன்.  அதிலும் நீ சரியான நேரத்துக்கு அந்த தற்பெருமைக்காரனின் சந்தோஷத்தை நீர்க்குமிழியை உடைப்பது போல் உடைத்துவிட்டாய்.  ஆனால் உன் கேள்வியின் மூலம் நீ என்னதான் சொல்ல விரும்புகிறாய், மகனே?” என்று துருபதன் மிகவும் ஆதுரத்துடன் கேட்டான்.

“தந்தையே, பானுமதி, தான் இப்போது யுவராஜாவின் மனைவி.  அவளே பட்டமஹிஷியாகவும் ஆவாள் என அனைவரும் சொல்கின்றனர்.  இந்த பானுமதியை தான் பெற்றெடுத்த மகள் போலப் பிரியம் காட்டிப் பாசத்துடன் இருந்து வருகிறார் ஆசாரியர் துரோணர்.  பானுமதியின் இடத்துக்குப் போட்டியிட வரும் எந்த இளவரசியானாலும் அவளை துரோணருக்குப் பிடிக்காது.  அதுவும் திரௌபதி என்றால் இன்னமும் அதிகமாய் விரும்ப மாட்டார்.  பானுமதியின் இடத்தை திரௌபதி பிடித்துக்கொள்வதை அவரால் சகிக்க இயலாது.  வேறு எவரையும் அனுமதிக்கவும் மாட்டார்.”

இப்போது திரௌபதி தன் கண்களில் தெரிந்த ஜ்வலிப்புடன் துருபதனைப் பார்த்து, “தந்தையே, நான் துரியோதனனை மணக்க வேண்டிய அவசியம் நேரிடாது என உங்களிடம் சொன்னேன் அல்லவா?” என்று கேட்டாள். “எனக்கும் நீ அவனை மணப்பது என்பது விரும்பத் தகாத ஒன்று தான்! ஆனால் கிருஷ்ணா, அவன் போட்டியின் வென்று விட்டால்?  எப்படி நீ அவனைத் தவிர்ப்பாய்?  அவனிடமிருந்து நீ தப்பவே முடியாது மகளே!”  தன் மனதிலிருக்கும் வருத்தம் அனைத்தும் தெரியும்படியாகத் தன் கையாலாகாத் தனத்தை நினைத்து நொந்தவனாய்ப் பேசினான் துருபதன்.  அதற்குள் உடனே ஷிகண்டின் மீண்டும் குறுக்கிட்டான்.

“தந்தையே, நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா? “ என்று தந்தையிடம் அனுமதி கேட்டவனை உடனே அங்கீகரித்தான் துருபதன்.  அவனுக்குள்ளே ஷிகண்டினைக் குறித்த எண்ணங்கள் மெல்ல மெல்ல மாறி வந்தன.  தன் மகனா/மகளா எனச் சொல்ல முடியாமலிருந்த ஷிகண்டின் இப்போது பூரணமாக ஆண்மகனாக மாறி இருப்பதோடு அவனுடைய தைரியமும், வீரமும் சிக்கலான சமயங்களில் அவற்றைத் தீர்க்கப் பாடுபடும் முறையும் அவனுள் ஷிகண்டினின் மேல் கொஞ்சம் மரியாதையையே ஏற்படுத்தியது. ஷிகண்டின் மேலே பேசக் காத்திருந்தான்.

“தந்தையே, நீங்கள் அரச தர்மத்தைக் கைவிடாமல் காத்து வருபவர். அதிலும் கொடுத்த வாக்குறுதியைக் காக்கவேண்டும் என்பதில் முனைப்பாகவும் இருப்பீர்கள்.  வாக்குறுதியை உடைப்பது என்பது உங்களுக்கு அதர்மம். அரசநீதியை விட்டு விலகியது போல் நினைப்பீர்கள்; உணர்வீர்கள்.  அதே போல் அதர்ம வழியில் நடக்கும், அதர்மத்தையே கொள்கையாகக் கைப்பற்றி வரும் துரியோதனனுக்கு நம் வீட்டுப் பெண்ணை மணம் செய்து கொடுப்பதும் அதர்மமே! “ தன் தைரியத்தை எல்லாம் திரட்டிக் கொண்டு சொன்ன ஷிகண்டினின் உடல் நடுங்கியது.  உதடுகள் நடுக்கத்தில் நெளிந்தன.  அவன் கைகளும், கால்களும் ஆடின.  அவனுடைய நடுக்கத்தின் மூலம் அவன் உணர்வுகளைப் புரிந்து கொண்ட துருபதன் அவனை உற்சாகப்படுத்தும் விதமாக, “மகனே, அதிகமாய் உணர்ச்சி வசப்படாமல் நீ என்ன சொல்ல நினைக்கிறாயோ அதைச் சொல்லுவாய்!” என்று தைரியம் கொடுத்தான்.

ஷிகண்டின் கொஞ்சம் தைரியம் அடைந்தான். “ தன் மாமன் ஷகுனி, தன் அருமை சிநேகிதன் கர்ணன் ஆகியோரின் வழிகாட்டலின் படி நடந்து வரும் துரியோதனன் முழுக்க முழுக்கக் கொடூரம் நிறைந்தவன்.  அவன் இயல்பே கொடூரமானது தான்.  அவன் நினைத்ததை அடைவதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பான்.  எத்தகைய கேவலமான ஒன்றையும் செய்யத் தயாராக இருப்பான். அவனுக்கு வேண்டியதெல்லாம் அதிகாரம், பதவி,  போன்றவையே!  இதைப்பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பான்.”

“அவன் சதித்திட்டம் தீட்டியே ஐந்து சகோதரர்களையும் கொன்றான்.  அவர்கள் இருந்தால் தனக்கு யுவராஜா பதவியோ, அதிகாரமோ கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்து அவர்களை அகற்றிவிட்டான்.  அவர்கள் துரியோதனனால் தான் வாரணாவதத்தில் எரித்துக் கொல்லப்பட்டனர்.”

“ஆம், மகனே, நாங்களும் இவற்றைக் கேள்விப்பட்டோம்!  ஆனால் இவை எல்லாம் உண்மைதானா?”  துருபதன் கேட்டான்.

“ஆம் தந்தையே, அனைத்தும் உண்மை.  என் குருவே இதைக் குறித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவர்களை நாட்டை விட்டுக் கடத்தவில்லை எனில் அவர்கள் அங்கே ஹஸ்தினாபுரத்திலேயே அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் வாரணாவதம் சென்றும் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிட்டவில்லை.  எனக்குச் சிகிச்சை அளித்த யக்ஷன் ஸ்தூனகர்ணன் மூலம் வாரணாவதத்தில் அவர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதை அறிந்தேன். ஸ்தூனகர்ணன் தான் வாரணாவதத்தில் அரக்கினால் ஒரு மாளிகை கட்டியுள்ளான்; மேலும் அதிலே கந்தகத்தைச் சேர்க்கவும் துரியோதனன் அவனுக்குக் கட்டளை பிறப்பித்திருக்கிறான்.  புரோசனன் தான் அதை எரிக்கக் கட்டளை பெற்றிருக்கிறான்.” என்றான் ஷிகண்டின்.  துருபதன் த்ருஷ்டத்யும்னனைப் பார்க்க அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  சற்று நேரம் அங்கே வேறு ஏதும் பேச்சே இல்லை.

“யார் இந்த யக்ஷன்?” துருபதன் கேட்டான்.  “ஓ, அவன் தான் அவனுடைய சிகிச்சையினால் தான் நான் இன்று முழுமனிதனாக ஆகியுள்ளேன்.  அவனும் என்னுடன் வந்திருக்கிறான்.  ரதத்தில் காத்துக் கொண்டிருக்கிறான்.  அனுமதி அளித்தீர்களானால் சென்று அழைத்து வருகிறேன்.” என்றான் ஷிகண்டின்.

துருபதன் அனுமதி அளிக்க வெளியே சென்ற ஷிகண்டின் ஒரு விசித்திரமானவனை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.  வந்தவன் உயரமாக, ஒல்லியாக,  நரம்புகளால் ஆன உடல் போல, வட்ட, வட்டமான தண்டுவடங்கள் தெரியும்படியாக, தலை காற்றில் அலைந்து அங்குமிங்கும் பறக்கச் சிவந்த கண்களோடு கையில் ஒரு திரிசூலத்துடன் தோன்றினான். துருபதனை அவன் பார்த்த பார்வையில் அவன் மேல் வந்த யக்ஷன் கொண்டிருக்கும் முழு ஈடுபாடு புலப்பட்டது.  தன் கைகளை உயர்த்தி அவனை ஆசீர்வதித்தான்.

இவ்வளவு விசித்திரமான தோற்றம் கொண்டவனை இன்று வரை துருபதன் பார்த்ததே இல்லை.  அவனை ஆச்சரியத்துடன் பார்த்து, “நீர் தான் யக்ஷன் ஸ்தூனகர்ணனா?” என விசாரித்தான்.  அந்த யக்ஷனோ வாயே திறக்காமல் தலையை மட்டும் ஆட்டினான்.  அதைக் கண்டு வியந்த துருபதனிடம் ஷிகண்டின், “தந்தையே, இந்த யக்ஷன் ஒரு நாளைக்கு இருபதே இருபது வார்த்தைகள் தான் பேசுவான்.  அதற்கு மேல் பேசமாட்டான்.  நாளைக் காலை சூரியோதயத்துக்குள் இவனுக்குப் பேச இன்னும் ஐந்து வார்த்தைகள் தான் மீதம் உள்ளன.  நீங்கள் எந்தக் கேள்வியை எப்படிக் கேட்டாலும் இவன் அதற்குத் தக்க பதிலைச் சொல்லுவான்.” என்றான்.

“ஷிகண்டினுக்கு நீ தான் சிகிச்சை அளித்தாயா?” என்று துருபதன் கேட்க யக்ஷன் தலை மட்டும் ஆட்டி ஆமோதித்தான்.  “அரக்கு மாளிகையும் கட்டி அதில் கந்தகத்தையும் நிரப்பியதும் நீ தானா? ஐந்து சகோதரர்களையும் கொல்ல வேண்டி இவற்றைச் செய்ததும் நீ தானா?”  மீண்டும் தலை ஆட்டி ஆமோதித்தான் யக்ஷன்.

“யார் கட்டளையின் பேரில் இதைச் செய்தாய்?”

“துரியோதனன்!”

“மாளிகைக்குத் தீ வைத்தது யாரென உனக்குத் தெரியுமா?”

“புரோசனன்!”

“அவன் தான் தீ வைத்தான் என்பது உனக்கு எப்படித் தெரிந்தது?”

“கட்டளைகள்!”

“எவருடைய கட்டளைகள்?”

“துரியோதனன்!”

“நீ எப்படி இதை அறிவாய்?”

“கேட்டேன்.”

“ஓ, அப்படி எனில் இந்தக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டதை நீ கேட்டிருக்கிறாய்?  அது தானே நீ சொல்ல விரும்புவது?”
ஸ்தூனகர்ணன் தான் பேச வேண்டிய மிச்சம் ஐந்து வார்த்தைகளையும் தான் பேசி முடித்துவிட்டதாகச் சைகைகள் மூலம் தெரிவித்தான்.  தன் உதடுகளின் மேல் விரலை வைத்து இனி தான் பேச முடியாது என்றும் தெரிவித்தான்.  துருபதன் அவனிடம், “நீயே நேரில் இந்தக்கட்டளை பிறப்பிக்கப்பட்டதைக் கேட்டாயா?” என்று கேட்டான்.

தலையை ஆட்டி ஆமோதித்தான் ஸ்தூனகர்ணன்.

“நீ போகலாம்!” என உத்தரவு கொடுத்தான் துருபதன்.  ஷிகண்டின் அவனை வெளியே அழைத்துச் சென்று ஒரு காவலாளியை அழைத்து ஸ்தூனகர்ணனைத் திரும்ப ரதத்தில் கொண்டு விடும்படி கூறினான்.  அவன் திரும்பி வந்தபோது துருபதன் மிகவும் வெறுப்புடன், “கிருஷ்ணா துரியோதனனை மணக்க நேர்ந்தால் அதை விடப்பெரிய பாவம் ஏதுமில்லை. அவள் அவனை மணக்கக் கூடாது!” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.த்ருஷ்டத்யும்னன் அதை ஆமோதிக்க, திரௌபதியோ ஏற்கெனவே தன் மனம் துரியோதனனை மணக்க விரும்பாததை நினைத்துத் தன் உள் மனம் சொன்னதில் தவறில்லை என மகிழ்ச்சி அடைந்தாள்.  அவள் முகம் புன்முறுவலில் மலர்ந்தது.

“இப்போது நான் என்ன செய்வது என்றே புரியவில்லை! ரொம்பவே குழப்பமாய் உள்ளதே! என்னால் எந்த முடிவையும் எடுக்க முடியாது போல் இருக்கிறேன்.” துருபதன் மிகவும் சோர்வோடு கூறினான்.  ஷிகன்டின் அப்போது குறுக்கிட்டு மீண்டும் பேச அனுமதி கேட்டான்.  அவனுடைய அதீத மரியாதை தனக்குத் தொல்லையாக இருப்பதில் எரிச்சல் அடைந்த துருபதன், “சொல், நீ நினைப்பதைச் சொல்!  ஆரம்பத்தில் இருந்தே உன் மனதில் ஏதோ நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பது புரிந்தது!  உடனடியாகச் சொல்!” என்று கோபத்துடன் கத்தினான்.

“ஒருவேளை துரியோதனன் வில் வித்தைப் போட்டியில் ஜெயித்துவிட்டால், என் சகோதரியை அவனிடமிருந்து காப்பாற்ற வேண்டி நான் குறுக்கிட வேண்டி இருக்கும், தந்தையே!  அந்த மஹாப் பாவத்தை அனுமதிக்க முடியாது.”

“உன்னால் என்ன செய்ய முடியும்?” துருபதன் கேட்டான்.  ஷிகண்டின் கூறினான்:”அனைத்து மன்னர்களும் நிறைந்த அந்த சபையிலே துரியோதனன் தன் சிற்றப்பன் மகன்களுக்குச் செய்த கொடூரத்தை எடுத்துக் கூறுவேன்.  அவன் எவ்விதம் அவர்களை உயிரோடு எரித்துக் கொன்றான் என்பதை நிரூபிப்பேன்.  ரிஷி, முனிவர்களை அழைத்து நியாயம் கேட்பேன்.  இப்படி ஒரு அநியாயத்தைச் செய்தவன் அரசகுல தர்மப்படி நடக்கும் ஒரு போட்டியில் கலந்து கொள்ளலாமா என்று கேட்பேன்.”

இதைக் கேட்ட த்ருஷ்டத்யும்னன் அதன் விளைவுகளை எண்ணிப் பார்த்துவிட்டு, “இது மாபெரும் யுத்தத்தில் கொண்டு விடும்.  குருவம்சத்தினருக்கும் நமக்கும் இடையில் பெரிய போர் நடைபெறும்.” என்றான்.

“நடக்கட்டும்.  சரியான ஒரு கொள்கைக்காக யுத்தம் நடைபெறட்டும்.  நேர்மைக்கும், நேர்மை அற்றவர்க்கும் இடையில் நடைபெறும் யுத்தமாக இருக்கட்டும்.  மற்ற அரசர்கள் அனைவரும் நம் பக்கம் தான் இருப்பார்கள். அதிலும் கிருஷ்ண வாசுதேவன் நிச்சயம் நம் பக்கம் தான் நிற்பான்.  சந்தேகமே இல்லை.  அப்படி ஒரு யுத்தம் நடந்தால் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையில் நடக்கும் போராக இருக்கும்.” என்றான் ஷிகண்டின்.  த்ருஷ்டத்யும்னன் கொஞ்சம் யோசித்துவிட்டு, “தந்தையே, இந்த விஷயத்தைக் கொஞ்சம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.  தாமதம் கூடாது!” என்றான்.

துருபதன் கண்களை மூடிக் கொஞ்ச நேரம் யோசித்தான்.  ஆழ்ந்து யோசித்தவன் சட்டென ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் என்பது அவன் கண்களைத் திறந்ததும் புரிந்தது.  “த்ருஷ்டத்யும்னா!  எனக்கு இப்போது வழி புலப்பட்டு விட்டது!  நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.  ஷிகண்டின் சரியாகவே சொல்கிறான். துரியோதனன் ஜெயித்தான் எனில் கிருஷ்ணாவை மணக்க நாம் அனுமதிக்கக் கூடாது.  அவனுடைய கொடூரத்தை எடுத்துச் சொல்லியாகவே வேண்டும்.  வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.  இப்படிப் பட்ட ஒரு கொடூரனுக்கு என் மகளைக் கொடுப்பதை விட இதன் மூலம் நடக்கும் யுத்தத்தைப் புனிதமான ஒன்றாக நான் கருதுகிறேன்.”  என்று முடித்தான்.


1 comment:

ஸ்ரீராம். said...



தந்தையர் தினத்தில் (!) ஷிகண்டினுக்கு தந்தையிடம் கிடைத்த அங்கீகாரம்! சுவாரஸ்யமான பகுதி. பயந்து பேசும் ஷிகண்டின் தன்னம்பிக்கையுடன் பேசினால் ரசிக்கலாம்!