Saturday, June 28, 2014

திரௌபதி சுயம்வரத்துக்குத் தயாராகிறாள்!

ஆயிற்று.  கடைசியில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த தினமும் வந்தே விட்டது.  இன்று திரௌபதி சுயம்வரம்.  அன்று அதிகாலையிலேயே திரௌபதி விழித்துக் கொண்டுவிட்டாள்.  இன்று சுயம்வர நாள்.  பல தினங்கள் வான நிலையைக் கண்டு ஆய்ந்து அறிந்து பாஞ்சாலத்தின் ஜோதிடர்கள், பௌஷ மாதத்தின் இந்தக் குறிப்பிட்ட நாளை அவள் சுயம்வரத்திற்கெனத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.  கிரஹங்களின் சஞ்சாரங்கள் கணிக்கப்பட்டு, இந்த நாள் அவள் வாழ்க்கையில் இனிமையையும், மகிழ்ச்சியையும் கூட்டும் என்றும் கணித்துச் சொல்லி இருக்கின்றனர்.  இன்றைய தினம் அவள் தலைவிதி மட்டுமன்றி அவள் குடும்பம்…. அவ்வளவு ஏன்? இந்தப் பாஞ்சாலத்தின் தலைவிதி…..ம்ஹ்ஹும், அதுவும் சரியல்ல…… இங்கு வந்திருக்கும் ஆர்யவர்த்தத்தின் சக்கரவர்த்திகள், அரசர்கள் ஆகியோரின் தலைவிதியும் நிர்ணயிக்கப்படப் போகிறது.  இதை நிர்மாணிக்கப் போகும் சிற்பி அவள் தான்.  அவள் முடிவில் தான் இத்தனைபேரின் தலைவிதியும் இருக்கிறது.

காலையிலேயே உற்சாகமாக கங்கைக்குத் தன் தோழிகள் புடை சூழ நீராடச் சென்றாள்.  அவள் மனதுக்குள்ளாக இனிய கீதம் ஒன்று இசைத்துக் கொண்டிருந்தது.  அவள் காதுகளுக்கு மட்டுமே கேட்கும்படியாக அந்த இசை இருந்தது.  இது வெற்றியின் இனிய கீதமோ? அவளை ஒரு அழகான பிரகாசமான எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும் கீதமோ?  ஆஹா!  அதோ விண்ணிலிருந்து அந்த இனிய கீதம்!  இதோ இங்கே பூமியில் பூக்கும் பூக்கள் கூட அந்த இனிய கீதத்தை இசைத்துக் கொண்டே பூக்கின்றன.  மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள் அனைத்துமே இந்த இனிமையான இசையை இசைக்கின்றன.  அனைவருக்கும் ஒருசேர இந்த கீதத்தை இசைக்கச் சொல்லிக் கொடுத்தது யார்?  அதோ அந்த ஓடக்காரன் இசைக்கும் இனிமையான நாட்டுப்பாடல் கூட இந்த கீதம் தான் போல் தெரிகிறது!

கங்கையின் சில்லென்ற தண்ணீரில் அவள் அமிழ்ந்து போகும்போது கிருஷ்ணன் அவளை நோக்கி வருவதாகக் கண்டாள்.  நேற்றைய தினம் நிஜத்தில் எப்படி அவள் முன் வந்தானோ அதே போல்!  இதோ, ஏதோ கேட்கிறானே?  “கிருஷ்ணா, கிருஷ்ணா, என் மீது உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?  என்னை நீ நம்புகிறாய் அல்லவா?”  திரௌபதி தன்னையுமறியாமல் கிருஷ்ணன் தன்னெதிரே மீண்டும் நின்று கொண்டு கேட்பது போல் நினைத்த வண்ணம் தலையை ஆட்டினாள்.  “ஆம், வாசுதேவா, நான் உன்னைப் பூரணமாக நம்புகிறேன்.”  அவள் வாய் முணுமுணுத்தது. அவன் அவளுக்கு ஒரு நல்வழியைக் காட்டி இருக்கிறான்.  தர்ம சாம்ராஜ்யத்தை எழுப்பும் வழியைக் காட்டி இருக்கிறான்.  ஆஹா, அந்த எண்ணமே அவள் மனதில் பேரமைதியையும், ஆனந்தத்தையும் உண்டாக்குகிறதே!  “உன்னுடைய ஆசைகளை, அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வேன். வாசுதேவா!” அவள் மீண்டும் முணுமுணுத்தாள். அவளையும் மீறிய களிப்பில் அவள் எல்லையற்ற ஆனந்தத்தில் மிதந்தாள்.

கங்கையில் குளித்த பின்னரும் சடங்கு முறைப்படியான குளியல் ஒன்றுக்கும் அவள் உட்படுத்தப்பட்டாள்.  சுத்திகரிக்கப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்ட நீர், பால், தயிர்  போன்றவை சேர்க்கப்ப்பட்டு அவள் தலையில் மந்திர கோஷங்களோடு வேதங்களை ஓதும் அந்தணர்களால் அபிஷேஹம் செய்யப்பட்டது.  மங்கலமான இசையுடன் கூடிய பாடல்களைப் பாடிய வண்ணம் அவள் தோழிமார்கள் அவள் உடலில் சந்தனம், மஞ்சள், கஸ்தூரி போன்றவற்றைப் பூசி அவளுக்கு அழகுக்கு அழகு சேர்த்தார்கள்.  சடங்குகள் ஆரம்பித்த பதினாறாம் நாள் அது.  அன்றாடம் நடத்தப்பட்ட இறை வழிபாடுகள், உபவாசங்கள், மத ரீதியான சடங்குகள், நாளுக்கு நாள் மாறிக்கொண்டு வந்த சூழ்நிலைகள் அனைத்தையும் மீறி அவள் கனவுலகில் தான் சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்தாள்.  இவ்வுலகின் உச்சியிலே தான் இருப்பதாக உணர்ந்தாள்.  இங்கே கூடியிருந்த மனிதர்கள், மக்கள், பொருட்கள் அனைத்துமே  அவள் இருக்கும் உலகுக்குப் பொருந்தாதது போலும்,  அவள் ஏதோ வேறு உலகில் சஞ்சரிப்பதாகவும்  தோற்றமளித்தன.  இத்தனை பேரிலும் கிருஷ்ணன், வாசுதேவ கிருஷ்ணன் ஒருவனே உண்மையானவன். அவன் அவள் பக்கம் முழுக்க முழுக்கத் துணை நிற்கிறான்.  ஆகவே அவள் ஆனந்த சாகரத்தில் தள்ளாடாமல் நிலைகொண்டு மிதந்து கொண்டிருக்கிறாள்.

அவள் அணிய இருந்த ஆடையில் நிறையத் தங்கம் கலந்திருந்தது.  அந்த ஆடையை  ஒருதரம் எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்த்துவிட்டு அவளுக்குத் தோழிகள் அணிவித்தனர். மோதிரங்கள், மாலைகள், கழுத்தணிகள், வளைகள், தலைச்சுட்டி, நவரத்தினங்கள், முத்துக்கள் போன்றவற்றால் அவள் மேலும் அலங்கரிக்கப்பட்டாள்.  அவள் தலையில் பூவினால் விதவிதமான அலங்காரங்களைச் செய்தனர்.  ஒரு அழகான சிறிய கிரீடம் அவள் தலையை அலங்கரித்தது.  அந்தக் கிரீடத்தில் விலை உயர்ந்த சிவப்புக் கற்களும், வைரங்களும் பதிக்கப்பட்டிருந்தன.  வாசனை மிக்க மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை ஒன்று அவள் கழுத்தை அலங்கரித்தது. கோயில் பூசாரிகளும், மற்ற நாட்டு இளவரசிகள் மற்றும் தோழிப் பெண்கள் புடை சூழ ஊர்வலமாக வந்து அவள் முதலில் யக்ஞசாலைக்குள் நுழைந்தாள். அங்கே சந்நிதியில் புனிதமான அக்னி எரிந்து கொண்டிருந்தது.  அவளும் த்ருஷ்டத்யும்னனும் பிறந்ததில் இருந்து அது அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.  அவளுடைய பாதுகாவலனே அக்னி என அனைவரும் கருதினார்கள்.

தன் கரங்களைக் கூப்பிய வண்ணம் திரௌபதி அந்த அக்னியைச் சுற்றி வந்தாள்.  அவள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் மாபெரும் நிகழ்வுக்கு வெற்றியைத் தரும்படி வேண்டிக் கொண்டு பிரார்த்தனைப் பாடல்களை முணுமுணுத்தவண்ணம் சுற்றினாள்.  அதிலும் இது மாபெரும் துணிகர முயற்சி.  அதில் அவள் எப்பாடுபட்டேனும் வெற்றி கண்டே ஆகவேண்டும்.   அரசர்கள் மாபெரும் பலத்துடன் எழுந்து நிற்கவோ, அல்லது அனைவருமே பலவீனத்தாலும் தோல்வியாலும் அடிபட்டு விழவோ காரணமாய் இருக்கப் போவது அந்த முயற்சி.   அதற்காக அவள் எவ்விதமான கஷ்டத்துக்கும், சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு இருக்கிறாள். யக்ஞசாலையிலிருந்து வெளிவரும்போதே அவள் பிரியத்துக்கு உகந்த பசு க்ஷீரா அங்கே நின்றிருப்பது தெரிந்தது.  அவளுடைய இனிமையான, அருமையான தோழி, அவளுக்காகக் காத்திருந்தாள்.   இந்தப் பசுவுக்குத் தன் கையாலேயே உணவூட்டி அதைக் கறப்பதும் தன் வேலை என்று வைத்திருந்தாள் திரௌபதி.  பசு அவளை அளவு கடந்த பாசத்துடன் பார்த்தது.


2 comments:

ஸ்ரீராம். said...

நீராடச் செல்லும் திரௌபதியின் மனதில்தான் எத்தனை உல்லாசக் கனவுகள்? அத்தனையும் தர்மம் என்ற பெயரில் மாறப் போகிறது என்று அறியாமல் இசைபட நீராடச் செல்கிறாள். திரௌபதியும் மகாபாரதப் பெண்களில் ஒருவகையில் சபிக்கப்பட்டவள்தான்!

முக்கியமான கட்டத்துக்குப் பக்கத்தில் வந்து விட்டோம்.

அப்பாதுரை said...

எஙல் பிலாகில் இணைத்தது பெரிய வசதி. நன்றி. விட்டதையெல்லாம் படிக்கணும்.