Sunday, June 8, 2014

சிரிப்பும், கொதிப்பும், திகைப்பும்!

அவ்வளவில் திரௌபதி அந்தப்புரம் சென்றாள்.  ஷகுனியும் அஸ்வத்தாமாவும்  துருபதனைச் சந்திக்க வரும்போது துருபதன் தன் அரச தர்பார் அறையில் அவர்களைச் சந்திக்கக் காத்திருந்தான்.  வெண்கல விளக்குகளில் நூற்றுக்கணக்கான திரிகள் ஏற்றப்பட்டு அந்த அறை பிரகாசமாக ஜொலித்தது.   தன் அரியணையில் துருபதன் வீற்றிருக்க அவனருகே சற்றுத் தள்ளி மரியாதையுடன் த்ருஷ்டத்யும்னனும், சத்யஜித்தும் நின்று கொண்டிருந்தனர்.  அவர்களுக்குப் பின்னே நிற்க முடியாமல் அருகிலிருந்த சுவற்றில் சாய்ந்த வண்ணம் மிகவும் பலஹீனமான ஷிகண்டின் நின்று கொண்டிருந்தான்.  அவன் முகத்தில் தன் குடும்பம் மீண்டும் தன்னை ஏற்றுக் கொண்டது குறித்த மகிழ்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தாலும் அவன் உடல்நிலை அதைக் கொண்டாட விடவில்லை. அவனருகே அவனுக்கு ஆதரவு கொடுப்பது போல் திரௌபதி நின்றிருந்தாள்.                  

வந்தவர்களோடு குசலப் பிரச்னங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஷகுனி துருபதனைக் குனிந்து வணங்கினான்.  இதில் பெருமிதம் கொண்டவன் போல் நிமிர்ந்து எழுந்தவன் தன் பருத்த உடலை மிகவும் கஷ்டத்துடன் அங்கிருந்த ஓர் ஆசனத்தில் கிடத்தினான்.  அஸ்வத்தாமா கம்பீரமாக நடந்து வந்தவன், தன்னுடைய நிலைமையை மறக்காமல் தன் நீண்ட கைகளை உயர்த்தி துருபதனை ஆசீர்வதிக்கும் தோரணையில் ,”தீர்காயுஷ்மான் பவ; ஜய விஜயீ பவ!” போன்ற இன்சொற்களை மொழிந்தான். அவன் ஆசனத்தில் அமரும்போதே அங்கே நின்றிருந்த திரௌபதியைப் பார்த்துத் தன்னை மறந்தான்.   அவளின் எழிலான முகத்தையும், கண்களையும், அவள் மிக நளினமாக நின்றிருந்த மாதிரியையும் பார்த்துப் பார்த்துப் பரவசம் அடைந்தான்.  அவன் கண்களை அவளிடமிருந்து அகற்ற முடியவில்லை .  இந்தச் சம்பிரதாயங்கள் அனைத்தும் நடந்து முடிந்ததும் ஒரு சங்கடமான மௌனம் அங்கே நிலவியது.  பின்னர் தன்னைச் சந்திக்க வந்திருக்கும் விருந்தாளிகளைத் தானே கவனிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் துருபதன் அவர்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.  மிகவும் களைத்திருந்தாலும், மனதிற்குள் ஆயிரமாயிரம் கவலைகள் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசினான் துருபதன்.

“இந்த நேரத்தில் எங்களைக் காண வந்திருக்கும் உங்கள் இருவருக்கும் நாங்கள் எவ்விதம் தொண்டு செய்து மகிழ்விப்போம்?” என்று துருபதன் கேட்டான்.  ஷகுனி கொஞ்சம் நடிப்புடன் தன் கைகளைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.  சிரித்துக் கொண்டான்.  துருபதனை உற்சாகப்படுத்தும் குரலில் பேச ஆரம்பித்தான்.  “மன்னர் மன்னா!  நாங்கள் வீரம் செறிந்த குரு வம்சத்து இளவலின் செய்தியைத் தாங்கி வந்திருக்கிறோம்.  நாங்கள் வரப்போவதைக் குறித்து கிருஷ்ண வாசுதேவன் கூறி இருக்க வேண்டுமே!”

“ஆம், காந்தார இளவரசே! கூறினான்.  திரௌபதியிடம் நீங்கள் இருவரும் மிகவும் அவசரமாகச் சந்திக்க விரும்புவதாய்க் கூறினான்.”

தன் தேனொழுகும் குரலில் ஷகுனி கூறினான்:”ஆம் மன்னர் மன்னா!  மாட்சிமை பொருந்திய மன்னருக்குத் தன் நமஸ்காரங்களை யுவராஜா அனுப்பி உள்ளான்.  பெண்களுக்குள்ளே ரத்தினம் ஆன இந்த உன் அழகிய பெண்ணின் கரத்தைப் பிடிப்பதன் மூலம் உன்னுடன் ஆன நட்பையும், உன் உதவியையும் பெற்று பலம் பொருந்தியவனாகத் தான் திகழ்வோம் என யுவராஜா நம்புகிறான்.”


“எங்கள் சகோதரி அப்படி எல்லாம் இலவச சேவைகளைப் பிறருக்குப் பெற்றுக் கொடுக்கப்  பிறந்தவள் அல்ல!” என்று த்ருஷ்டத்யும்னன் உடனடியாக பதிலைக் கொடுத்தான்.  தந்தையைக் கூடிய வரை சிரமப்படுத்தாமல் தானே தன் கைகளில் இந்தப்பிரச்னையை எடுத்துக் கொண்டு தீர்க்க வேண்டும் என நினைத்தவன் போல் காணப்பட்டான்.  மேலும் தொடர்ந்து கூறினான்: “சுயம்வரத்திற்காக ஒரு வில் வித்தைப் போட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அதை நாங்கள் ஏற்கெனவே அறிவித்து விட்டோம்.  நீங்கள் எவரும் அதை இன்னமுமா அறியவில்லை?”

“இல்லை, நாங்கள் அது குறித்து எதுவும் அறியவில்லை!” எரிச்சல் மீதூறக் கூறினான் அஸ்வத்தாமா.  அவனுக்குள் ஏற்பட்ட எரிச்சலும் கோபமும் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.

“எங்கள் சகோதரி வில் வித்தையில் சிறந்த வீரனையே மணக்கத் திட்டமிட்டுள்ளாள்.  அதுவும் இப்போது என் தந்தையால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந்தப் போட்டியில் வெல்லும் வில் வித்தை வீரன் எவராக இருந்தாலும் அவர் கரங்களையே அவள் பிடிப்பாள்.”

வந்திருந்த விருந்தாளிகளான ஷகுனிக்கும், அஸ்வத்தாமாவுக்கும் தூக்கிவாரிப்போட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  இருவரில் ஷகுனி சட்டெனத் தன்னைச் சமாளித்துக் கொண்டான்.  தனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தை மறந்தவனாக, “ அது தான் உங்கள் விருப்பம் எனில் எங்களுக்கு மிகவும் வசதியும், சுலபமாகவும் இருக்கும். மன்னர் மன்னா! இந்த ஆர்ய வர்த்தத்திலேயே நம் யுவராஜாவை விடச் சிறந்த வில் வித்தை வீரன் இல்லை. அஸ்வத்தாமா நான் சொல்வதைக் கேட்டுக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளட்டும்.  ஆனால் ஒரு விண்ணப்பம் மன்னர் மன்னா!  இளவரசி திரௌபதி இந்தப் போட்டிகள் ஏதும் இல்லாமலேயே நம் யுவராஜாவை மணாளனாகத் தேர்ந்தெடுத்தால் நல்லது.”

ரொம்பச் சிரமப்பட்டு வார்த்தைகளை உதிர்த்தான் துருபதன்.  ஷகுனியின் அளவு கடந்த பணிவு, அடக்கம் எல்லாம் நடிப்பு என்பது நன்கு புரிந்துவிட்டது அவனுக்கு.  அவனுடைய கோபத்தையும் வெறுப்பையும் அடக்கிக்கொண்டு, “போட்டி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது!” என்று மட்டும் சுருக்கமாய்க் கூறினான்.  பேச்சு வார்த்தையின் தொடர்ச்சியை ஆரம்பிப்பவன் போல் த்ருஷ்டத்யும்னன், “யுவராஜா வில்வித்தை வீரர் என்பதை நாங்களும் கேள்விப்பட்டிருக்கிறோம்.” என்றான்.

“ஆமாம், ஆமாம், வீரம் செறிந்தவன் எங்கள் யுவராஜா.  அவன் வில் வித்தை வீரன் என்பதில் ஐயமில்லை.  அவன் வில் வித்தை நாடெங்கும் பேசப்படும் ஒன்று.  எவரோடும் ஒத்துப் பேச முடியா அளவுக்குச் சிறந்த வில்லாளி.  அவன் இந்தப் போட்டியில் நிச்சயம் வெல்வான்.” நம்பிக்கையுடன் கூறினான் ஷகுனி.

“அப்படி எனில், யுவராஜாவின் தூதுச் செய்திக்கு இங்கே தேவையே இல்லை.   ஆனால் நான் வேறு மாதிரி அல்லவோ கேள்விப் பட்டேன்.  கர்ணன், அங்க தேசத்து மன்னன், அவன் தான் மிகச் சிறந்த வில்லாளி என்றல்லவோ கூறுகிறார்கள்?  அப்படித் தானே?”  அவன் குரலில் இருந்து வெளிப்படையாக எதுவும் தெரியாவிட்டாலும் உள்ளூரச் சிரிக்கிறான் என்பது புரிந்தது. இகழ்ச்சியாகச் சிரித்தான் ஷகுனி. “ஒவ்வொருத்தர் ஒவ்வொன்றைச் சொல்வார்கள் இளவரசே!  மக்களுக்கு என்ன?  அவர்களுக்குப் பிடித்தவர்களைப் புகழ்வார்கள்!  ஆனால் நம் யுவராஜாவின் தகுதியும், பெருமையும் நமக்குத் தெரியுமே! “

“ம்ம்ம்ம்ம், கர்ணனை விடவும் சிறந்த வில்லாளி அர்ஜுனன்!  இல்லையா?  வாரணாவதத்தில் கொல்லப்படவில்லை எனில் அவன் தான் ஆர்யவர்த்தம் என்ன இந்த பாரதம் முழுமையிலும் சிறந்த வில்லாளியாக இருந்திருப்பான். அல்லவா? “ துருபதனால் இந்தக் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் அவன் மனதில் நடந்தவை குறித்த எந்த சந்தேகமும் இன்றி இயல்பாகவே கேட்டான்.  அப்பாவியாகவே கேட்டான்.  ஆனால் இதைக் கேட்டதில் விருந்தாளிகள் இருவரும் அயர்ந்து விட்டனர். துருபதனின் கேள்விக்கணை இருவரையும் குறி பார்த்துத் தாக்கிவிட்டது.  அதிலிருந்து தப்ப முடியாமல் இருவரும் திகைத்தனர்.






2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமேல் தான் இன்னும் அனைத்தும்...

தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

இலக்கின்றி எய்தாலும் இலக்கைத் தாக்கிய அம்பு! ம்ம்ம்...