Tuesday, March 22, 2016

ரோகிணி உன் மனைவி! ஜாம்பவான் கட்டளை!

வாசுதேவா, நேற்று முழுவதும் எங்கள் குலதெய்வத்திடம் நாங்கள் வேண்டிப் பிரார்த்தனைகள் செய்து வழிபட்டோம். அவர் உன்னை இங்கே தங்கச் சொன்னார். அவரின் பிரியத்துக்கு உகந்த ‘மகனா’க உன்னைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறினார். ஆகவே நீ இங்கேயே தங்கிவிடு!” என்றார் ஜாம்பவான். “அப்படியா? எல்லாம் வல்ல கடவுள் உங்களிடம் இப்படிக் கூறினாரா? நான் அடுத்த ஆசாரியன் என்றாரா? அப்படி எனில் நான் அவரிடம் பேசியாக வேண்டுமே!” என்றான் கிருஷ்ணன். ஜாம்பவான் அந்த மலைச் சிகரத்தையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் நிழலில் அதன் அடிவாரத்தில் வசிக்கும் தன் மக்களையும் பார்த்தார். பின் கண்ணனிடம், “கேலி செய்யாதே வாசுதேவா! அவரை அவமதிக்காதே! அவர் மிக மிகச் சக்தி வாய்ந்தவர்! நீ அவரை அவமதித்தால், அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தால் உன்னை அடியோடு ஒழித்துக் கொன்றுவிடுவார்.”

“ஐயா நான் உங்களையோ, உங்கள் கடவுளையோ அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ விரும்பவில்லை; அப்படிச் செய்யவும் மாட்டேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள். நான் அவரை மிகவும் மதித்துப் போற்றுகிறேன். எல்லாக் கடவுளரும் கடைசியில் சென்று அடைவது ஒருவரிடம் தானே! நாம் மட்டும் முழு அர்ப்பணிப்புடன் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும். பரிபூரண சரணாகதி அடைய வேண்டும்.” கிருஷ்ணனின் உறுதிமொழியை ஜாம்பவானால் முழுதுமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.  ஆனால் இதை மட்டும் கூறினார்.” நீ நம்புவது எனில் அவருடைய கட்டளைகளை மதித்து நடக்கவேண்டும். இந்தக் கரடி உலகுக்குள் வந்த அந்நியன் எவனுமே திரும்பப் போனதில்லை. அதனால் தான் சத்ராஜித்தும் கூடப்புனிதக் குகையோடு தன் பயணத்தை முடித்துக் கொண்டு விடுவான். இங்கே காலடி எடுத்து வைக்க அஞ்சுவான்! “ என்றார் ஜாம்பவான்.

“நான் எப்படி இங்கே தங்கி இருக்க முடியும்? என் மக்கள் அனைவரும் துவாரகையில் இருக்கிறார்கள். என் தாய், தந்தை, சகோதரன், மனைவியர் இருவர், குழந்தைகள் மற்றும் என் நண்பர்கள் என அனைவருமே துவாரகையில் இருக்கிறார்கள். நான் திரும்பி வருவதை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். வெளியே இதை விடப்பெரியதொரு உலகம் உள்ளது ஐயா! அதைக் குறித்துத் தாங்கள் அறியவில்லை. அந்த உலகுக்கு என்னுடைய இருப்பு மிக அவசியம். ஆகவே நான் திரும்பிச் செல்வது மிக முக்கியம்!” என்றான் கண்ணன். “ஹா, இந்தக் கரடி உலகை விடவா இன்னொரு உலகம் பெரியதாக இருக்க முடியும்? இருக்கவே இருக்காது. அதோடு எங்கள் தேவைகள் முதலில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதன் பிறகே மற்றவை!” என்று கண்டிப்பும் கறாருமாகச் சொன்னார் ஜாம்பவான். அதற்குக் கிருஷ்ணன் மனப்பூர்வமாகப் பதில் கூற நினைத்தான். ஆகவே யோசனையுடன் நிறுத்தி நிதானமாக, “ஐயா, அதற்காகத் தான் உங்கள் கடவுளுடன் நான் நேரில் தனிமையில் பேச வேண்டும் என்று கூறினேன். மாட்சிமை பொருந்திய கரடிகளின் அரசரே! இப்போதாவது புரிந்து கொள்ளும்! நான் உங்கள் கடவுளுடன் பேசியே ஆகவேண்டும் என்பதை! நான் அவரிடம் பிரார்த்தனைகள் செய்து கொண்டு உங்களை அவருடைய பிரியத்துக்கு உகந்த, ‘மகனாக’ ஏற்கும்படி கேட்டுக் கொள்வேன். அதற்கான முழுத் தகுதியும் உங்களிடம் உள்ளது.”

“உங்களுக்குத் தான் உங்கள் மக்களின் தேவைகள் என்னவென்று தெரியும். அதைப் பூர்த்தி செய்யவும் தெரியும். அதோடு நீங்கள் வயது முதிர்ந்து பல்வேறு அனுபவங்களையும் கொண்டவர். மிகப் புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறவர். உங்கள் கடவுளிடம் உங்களுக்குப் பரிபூரண நம்பிக்கையும் இருக்கிறது. உங்கள் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற உறுதி கொண்டவர் நீங்கள். ஐயா, நீங்கள் மட்டும் என்னுடைய பிரார்த்தனையை உங்கள் கடவுளிடம் வைத்தால் அவரின் பரிபூரண சம்மதம் கட்டாயம் கிட்டும் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.”ஜாம்பவான் கிருஷ்ணன் சொன்னதைத் தங்கள் மொழியில் தன்னுடைய மக்களுக்கும் அங்கு கூடியிருந்த கரடிகள் உலகப்பெரியோர்களுக்கும் எடுத்து உரைத்தார். அதைக் கேட்டதுமே அனைவர் முகங்களும் சொல்லவொணா மரியாதையிலும், மகிழ்ச்சியிலும் மாறியது. அனைவரும் கிருஷ்ணனைப் புதியதொரு நம்பிக்கையும் மரியாதையும் கலந்த பார்வையில் பார்த்தனர்.  அதற்குள்ளாகக் கிருஷ்ணனுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார் ஜாம்பவான்.

 “இல்லை, இல்லை நீ சொல்வதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அதெல்லாம் நடக்கவே முடியாத ஒன்று. அங்கே மறு கேள்விக்கு இடமே இல்லை. எல்லாம் வல்ல இறைவன் உன்னை எங்கள் ஆசாரியனாக நியமித்துள்ளான். அதுதான் அவர் விருப்பம். நீ தான் அவருடைய “பிரியத்துக்கு உகந்த மகன்” என்று முடித்தார் ஜாம்பவான்.


கண்ணன் இயன்றவரை பணிவும் விநயமுமாக, “நான் அதற்கெல்லாம் தகுந்தவனே அல்ல!” என்று மொழிந்தான். கிருஷ்ணன் உண்மையாக மனப்பூர்வமாக மொழிந்த அந்தச் சொற்களால் ஜாம்பவான் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும், :நீ தெய்வ நிந்தனை செய்கிறாய்!” என்று கிருஷ்ணன் மேலேயே பழி போட்டார். “ஐயா, என்னுடைய பிரார்த்தனைகள் எல்லாம் தெய்வ நிந்தனை அல்ல! தயவு செய்து என்னுடைய மனப்பூர்வமான, நேர்மையான, உண்மையான பிரார்த்தனைகளை உங்கள் கடவுளிடம் முன் வையுங்கள். அது கீழ்க்கண்டவாறு இருக்கட்டும்!


“எல்லாம் வல்ல இறைவனே! என்றும் அனைவராலும் போற்றத்தக்கவனே! எவருக்கும் அஞ்சாதவனே! கரிய நிறக் கடவுளே! உங்களுடைய பயங்கரமான தோற்றத்தையும், கடுமையான பார்வையையும் இந்த எளிய கரடி இன மக்களுக்காக மாற்றிக் கொள்ளுங்கள். அதை விடுத்து எளிமையான தோற்றமும் அருட்பார்வையும் கொள்ளுங்கள். இந்தக் கரடி இன மக்களுக்குக் கருணை காட்டுங்கள். ஐயா, அவர்களுக்கு நீங்கள் அன்பு என்றால் என்னவென்று காட்டிக் கொடுங்கள். உங்களிடம் தங்களை அர்ப்பணிப்பதன் மூலம் அவர்களுக்கு விலை மதிக்க முடியாத தைரியம் என்னும் ஆயுதம் பெறுவார்கள் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். இதோ இது தான் என் பிரார்த்தனை; ஜபம்! எல்லாம் வல்லவரே! கரடி மக்களை பயம் என்னும் ஆழ்கடலில் இருந்து வெளியேற வழி காட்டுங்கள். நேர்மையான பாதையையும், உண்மையான பாதையையும் அவர்களுக்குக் காட்டித் தாருங்கள். அவர்களுக்கு நேர்மையைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள். அவர்களை எல்லை இல்லா மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துங்கள். வலிமை பெறச் செய்யுங்கள். அவர்களுக்கு எண்ணற்ற சந்தான பாக்கியத்தை அள்ளித் தாருங்கள். நீண்ட ஆயுளை அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்து ஆசீர்வதியுங்கள். அவர்களில் ஒருவனை உங்கள் அபிமான மகனாக ஏற்று உங்களில் அவன் இணைந்தவன் என்பதை இந்த சாமானியக் கரடி இன மக்களுக்கு எடுத்துக் காட்டுங்கள்.”

கிருஷ்ணன் மிகவும் பணிவாகவும், பக்தியுடனும் இவற்றைக் கூறியபோது அவன் குரலின் காந்த சக்தி அனைவரையும் ஈர்த்தது. அங்கே அனைவரிடமும் சொல்ல முடியாததொரு அதிர்வு அலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் மனதில் பெரும் சாந்தி நிலவியதைப் புரிந்து கொண்டார்கள். ஜாம்பவான் கிருஷ்ணன் கூறியவற்றை எல்லாம் கரடி மனிதர்களின் மொழியில் அவர்களுக்கு எடுத்து விளக்கினார். அனைவரும் மிகவும் ஆச்சரியமும், சந்தோஷமும் கலந்ததொரு மனோநிலையில் அவற்றைக் கேட்டுக் கொண்டனர். கிருஷ்ணன் மேலும் தொடர்ந்தான். “மாட்சிமை பொருந்திய கரடிகள் அரசே, இந்தப் பிரார்த்தனை மட்டும் கரடி மனிதர்கள் சார்பாகப்பிரார்த்திக்கப்பட்டு அது உங்கள் சர்வ சக்தி வாய்ந்த கறுப்புக் கடவுளும் கேட்டாரெனில் நிச்சயமாக நம் அனைவரையும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிப்பார்!” என்றான். ஜாம்பவான் அதற்கு, “கரடி உலகக் கடவுளின் உரிமையையும் கட்டளையையும் குறித்து நாம் விவாதிக்க முடியாது; விவாதிக்கவும் கூடாது! அதில் பலன் இல்லை. இப்போதைக்கு நீ எங்களுடன் வசித்தாக வேண்டும். அதற்குள்ளாக சர்வ சக்தி வாய்ந்த எங்கள் கறுநிறக் கடவுள் ஏதானும் சொல்கிறாரா அல்லது செய்கிறாரா என்பதைப் பார்க்கலாம்.” என்றார்.

“நான் வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா?” கிருஷ்ணன் கேட்டான். “ஆம், என்றென்றும் சாசுவதமாய்க் காணப்படும் எங்கள் கரடி உலகின் சட்டத்தின் படியும் எங்கள் கருநிறக்கடவுள் விதித்தபடியும் நீ என் மகள் ரோகிணியை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிலும் நீ சாம்பனை இப்போது கொன்று விட்டாய். அவள் பிறந்ததுமே அவனுக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்தாள். இப்போது அவளை யார் மணப்பார்கள்? ஆகவே நீ தான் அவளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று ஆணையிட்டார். “ஆனால் நான் ரோகிணியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லையே!” என்றான் கண்ணன். “அதற்கு நான் என்ன செய்ய முடியும் வாசுதேவா? எங்கள் சட்டம் மாற்ற முடியாத ஒன்று ஆகும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொன்றான் எனில் அவன் மனைவியை வென்ற மனிதன் ஏற்றே ஆகவேண்டும்.”

“நான் மறுத்தால்?” கிருஷ்ணன் கேட்டான். “வேறு வழியே இல்லை வாசுதேவா! நீ அவளை ஏற்க மறுத்தாயெனில் அவள் எங்கள் குல வழக்கப்படி பலி பீடத்தில் அமர்த்தப்பட்டு பலி கொடுக்கப்படுவாள்.” என்றார் ஜாம்பவான். “ஏன் இவ்வளவு குரூரமாக நடந்து கொள்கிறீர்கள்?” என்று கேட்டான் கிருஷ்ணன் வருத்தத்துடன்.

“வாசுதேவா! வேறு வழியே இல்லை. ஒன்று நீ ரோகிணியை மணந்தாக வேண்டும். அல்லது அவள் பலி பீடத்தில் அமர்ந்தாக வேண்டும். நீ அவளை மணக்க மறுத்தாயெனில் சர்வ சக்தி வாய்ந்த எங்கள் கருநிறக் கடவுளுக்கு அவளைப் பலி கொடுப்பதைத் தவிர்த்து வேறு வழியே இல்லை!” என்று திட்டவட்டமாகக் கூறினார் ஜாம்பவான்.

“சரி, என்னை யோசிக்க விடுங்கள். நான் நாளைக்குள் உங்களுக்குத் தக்க பதிலைச் சொல்கிறேன்.” என்றான் கிருஷ்ணன். “சரி, வசுதேவரின் குமாரனே! நாளை மதியத்துக்குள் நீ உன் விருப்பத்தைத் தெரிவிப்பாய். உனக்கு எங்கள் கடவுளின் சட்டதிட்டங்களை நிறைவேற்றுவதில் விருப்பமா இல்லையா, அதை நீ ஒப்புக்கொள்கிறாயா இல்லையா என்பதைத் தெரிவித்துவிடு!” என்றார் ஜாம்பவான். மற்றவர்களுக்கும் இவை விளக்கிக் கூறப்பட்டதும் அனைவரும் சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தனர். பின்னர் தங்கள் பிரார்த்தனைகளைத் தங்கள் கடவுளரிடம் தெரிவிக்க ஆரம்பித்தனர். ஜாம்பவான் தன் குகைக்குள் சென்று விட்டார். அவரின் மருமகன் ஆன கரடியும் அவரைப் பின் தொடர்ந்தான். பூனைக்குட்டியும் அவனைத் தொடர்ந்து சென்று விளையாட விரும்பியது. ஜாம்பவான் அதைப் பார்த்ததும் கொஞ்சம் ஆச்சரியத்துடன் அதைப் பார்த்தவர் பின்னர் உல்லாசமாக அதை எடுத்துத் தன் கைகளுக்கு இடையில் வைத்துக் கொண்டு குகைக்குள் சென்றார். அனைவரும் ஒவ்வொருவராக அங்கிருந்து அகன்றனர். அவர்களின் அறிவுக்கெட்டாத வண்ணமான ஒரு பார்வையைக் கிருஷ்ணனின் கண்களில் சாத்யகியும், பாமாவும் கண்டனர். சாத்யகி இனம் காணாத் திகைப்பில் ஆழ சத்யபாமாவோ மயங்கிக் கீழே விழும் நிலைக்கு வந்துவிட்டாள்.

No comments: