Wednesday, March 23, 2016

பாமாவின் வேண்டுகோள்!

ஜாம்பவான் உள்ளே சென்றதும், பெரியோர்கள் அனைவரும் அவ்விடத்தை விட்டு அகன்றும் அங்கிருந்த மீதம் உள்ள கரடி மனிதர்கள் ஒவ்வொருவராகக் கலைய ஆரம்பித்தனர். சிலர் திரும்பிக் கண்ணனையும் அவன் நண்பர்களையும் பார்த்தனர். அவர்கள் பார்வையில் தீய எண்ணமே மிகையாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. கிருஷ்ணனும், மற்ற இருவரும் சற்று நேரத்தில் தனியாக விடப்பட்டனர். ஆனால் அது வெறும் பார்வைக்குத் தான் என்பதும், காவலர்கள் சற்றுத் தூரத்தில் அவரவரின் துணைக்கரடிகளோடு அங்கே அமர்ந்திருந்ததையும் அவர்கள் பார்வை இவர்கள் மூவரை விட்டு அகலாமல் இருந்ததையும் காணும்போது இவர்கள் எங்கே சென்றாலும் காவலர்கள் தங்கள் கரடிகளோடு சற்றும் தயங்காமல் பின் தொடர்வார்கள் என்பது புரிந்தது.

சத்யபாமாவுக்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பியதும், கிருஷ்ணனும் சாத்யகியும் அவளையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றனர். கிருஷ்ணன் கிட்டத்தட்ட அவளை இழுத்துக் கொண்டு சென்றான். அந்தப் பீடபூமியை மூவரும் சுற்றி வந்தனர். ஆனால் சிறிதும் தப்ப வழியில்லை என்பதைக் கண்டு கொண்டனர். எந்தச் சுரங்கப்பாதை வழியாக அவர்கள் மூவரும் வந்தனரோ அந்தப் பாதையின் நுழை வாயிலில் இப்போது சில கரடி மனிதர்கள் தங்கள் கரடிகளோடு காவல்காத்துக் கொண்டு இருப்பதையும் ஒரு சிலர் அங்கேயே தங்கி இருப்பதையும் காண முடிந்தது. இவ்வளவு பேரையும் தாண்டி அவர்கள் செல்வது என்பது எளிதல்ல!  அவர்கள் மூவரும் தாங்கள் தங்கி இருந்த குகைக்கு வந்தனர். அப்போது அவர்கள் அந்தப் பீடபூமியின் விளிம்புக்கு வந்திருப்பதைக் கண்டார்கள். கீழே உள்ள அடிவாரத்தைத் தொடும்படியாகத் தொங்கிக் கொண்டிருந்தது அந்த முனை! கிருஷ்ணன் அந்தப் பக்கமும், மலைப்பக்கமும் தப்பிச் செல்லும் வழி ஏதேனும் தென்படுகிறதா என்பதை அலசி ஆராய்ந்தான். ம்ஹூம், சுரங்கப்பாதை வழியாகப் புனிதக் குகைக்குச் சென்று அதன் பின்னரே நாட்டுக்குச் செல்லும் வழி இருக்கிறது. வேறு வழியே இல்லை. இதில் கிருஷ்ணனுக்குச் சந்தேகமே இல்லை!

சாத்யகி அப்போது கிருஷ்ணனிடம், “கிருஷ்ணா, இங்கிருந்து தப்ப வேறு வழியே இல்லை! புனிதக்குகை வழி ஒன்று தான் உள்ளது. ஆனால் அந்த வழியும் இப்போது அடைபட்டுள்ளது. தடுக்கப்பட்டுள்ளது!” என்று கூறினான். அவன் கிருஷ்ணன் தப்பிச் செல்ல வழி தேடுகிறான் என்பதைப் புரிந்து கொண்டே மேற்கண்டவாறு கூறினான். “ஜாம்பவான் நம்மிடம் நட்பாக இருப்பதாகத் தெரிந்தாலும், இன்னொரு பக்கம் நாம் தப்புவதற்கு வழியே இல்லாமல் எல்லா வழிகளையும் எச்சரிக்கையுடன் அடைத்து விட்டான். நாம் இங்கிருந்து தப்புவது  கடினம்.” என்றும் கூறினான். மேலும், “ஒரு வேளை நீ ரோகிணியைத் திருமணம் செய்து கொண்டு அவர்கள் ஆசாரியனாக மாறினாயானால் அவர்களுக்கு உன் மேல் நம்பிக்கை வரக்கூடும். அப்போது நாம் புனிதக்குகை வழியே தப்பவும் இயலலாம்.” என்றும் ஆலோசனை கூறினான். “அது வரை நாம் உயிருடன் இருந்தால் தானே!” என்றான் கிருஷ்ணன். மேலும் தொடர்ந்து,”நம்மால் புனிதக்குகை வழியே தப்ப இயலவில்லை எனில், இந்த மலைப்பக்கம் மேலே ஏறித் தப்பிச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டியது தான்! அங்கிருந்து அடிவாரம் செல்ல வழியில்லாமல் போகாது!” என்றான். தூரத்தே தெரிந்த மலைச்சிகரங்களையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினான்.

“ஆனால் அங்கே தான் இவர்களுடைய பயங்கரமான கருநிறக்கடவுள் வசிக்கிறார். அந்த வழியை நாம் தேர்ந்தெடுக்க முடியாது!” என்றாள் சத்யபாமா.

“சரி, அதனால் என்ன? அந்த ஒரு வழி தான் நாம் தப்பிச் செல்ல இருக்கும் வழி எனில் அப்படி தான் நாம் சென்றாக வேண்டும். வேறு வழியே இல்லை. அப்படிச் செல்லும்போது எவ்வளவு கொடூரமானவராக இருந்தாலும் அந்தக் கருநிறக்கடவுளையும் எதிர்கொண்டே ஆகவேண்டும்.” என்றான் கிருஷ்ணன்.”அங்கிருந்து கீழே பள்ளத்தாக்கிற்குச் செல்ல வழி இருக்குமா?” என்று சாத்யகி கேட்டான். “இருந்தே ஆகவேண்டும். அப்படி இல்லை எனில், நாம் உருவாக்குவோம்.” என்றான் கிருஷ்ணன். பின்னர், “சரி, இப்போது நாம் நம் குகைக்குச் சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொள்வோம். ஏனெனில் நாம் இன்னும் கடுமையான நாட்களை எதிர்நோக்க வேண்டி இருக்கும்.” என்ற வண்ணமே மீண்டும் அந்த மலைச்சிகரத்தையே உற்று நோக்கினான். அன்று மாலை சூரிய அஸ்தமனம் ஆகும் சமயம். அப்போது ரோகிணி மிகவும் சந்தோஷமான குரலில் பறவைகளின் குரலில் கீதம் இசைத்தாள். கிருஷ்ணன் அவள் தன் தந்தை தன்னை அவளை மணக்கும்படி கேட்டுக் கொண்டதைக் கேட்டிருக்கிறாள் என்றும் அவனை அப்போது அங்கே அவளிடம் அழைக்கிறாள் என்றும் தன்னை ஏற்கும்படி ஜாடையாகச் சொல்கிறாள் என்றும் புரிந்து கொண்டான். உடனே அவன் தன் புல்லாங்குழலை எடுத்து மிகக் கடுமையான, கோபமான ஒரு ஸ்வரத்தை இசைத்தான். ரோகிணி மனம் உடைந்து போனாள் என்பதை அவளின் பரிதாபமான இசைக்குரலின் மூலம் அறிந்து கொண்ட கிருஷ்ணன் அது திடீரெனப் பாதியில் நின்று விட்டது என்பதையும் கண்டான்.

சத்யபாமா உறங்குவதற்காகப் படுக்கையில் படுத்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் மழை வர்ஷித்தது. அவர்கள் மூவரும் கரடிகளின் அந்தக் கருநிறக்கடவுளுக்குப் பலியிடப்படப் போகின்றனர். அத்துடன் அவள் கனவுகள் அனைத்தும் முடிந்து விடும். அவள் ஒரு கதாநாயகனுக்கு, சாகசங்களைப் புரியும் வீராதி வீரனுக்கு மனைவியாக வேண்டும் என ஆசைப்பட்டாள்! அது தவறா? ஆனால் இப்போது அவர்கள் மூவரும் இருக்கும் இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில், சூழ்நிலையில் எவ்விதமான சாகசங்களோ, அல்லது வீராதி வீரனின் திறமைகளோ வெளிப்பட வாய்ப்பே இல்லை. சத்யபாமாவின் மனதைப் புரிந்து கொண்டாற்போல் ஊரி அவளருகே மெதுவாக அமர்ந்து கொண்டது. ஊரி தன் யஜமானி மிகவும் வருத்தத்தில் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டிருந்தது. அவள் குட்டி மினி என்னும் மேனகா மெல்ல மெல்லக் கிருஷ்ணன் படுத்திருக்கும் இடத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு சென்று அவன் அருகே தானும் படுத்துக் கொண்டது. அதைப் பார்த்த சத்யா, “மினி உங்களிடம் கண்மண் தெரியாமல் பாசமும், அன்பும் வைத்திருக்கிறது. உங்களை மிகவும் நம்புகிறது! பிரபுவே! அதைப்பாருங்கள்!” என்றாள்.

“ம்ம்ம்ம்? அப்படியா? நான் நீங்கள் அனைவருமே மினியைப் போல் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இதோ பார் மினியை! எவ்வளவு நம்பிக்கையுடன் என் அருகே வந்து படுத்துக் கொண்டு விட்டது! இத்தனைக்கும் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதே நம் யாருக்கும் தெரியாது என்றபோது மினிக்கு மட்டும் என்ன தெரியும்? நம்பிக்கையுடன் என் அருகே வந்து விட்டது!” என்ற கண்ணன், பாமாவின் முகத்திலும், சாத்யகியின் முகத்திலும் தெரிந்த மன வாட்டத்தை நீக்க முயன்றான். அவன் மினியைத் தூக்கி சத்யபாமாவிடம் கொடுத்தான். பாமாவும் அதை வாங்கித் தன்னருகே படுக்க வைத்துக் கொண்டாள். ஆனால் அது உடனே உர்ர்ரென்ற உறுமலுடன் கண்ணன் இருக்குமிடத்தை மீண்டும் தன் முகரும் சக்தியால் கண்டு பிடித்துக் கொண்டு அவனருகே சென்று விட்டது. “நான் என்ன சொன்னேன், பார்த்தாயா, சத்யா? மினி தன் அனைத்துக் கவலைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாகப் படுத்துத் தூங்கப் போகிறது! அதற்கு என் மேல் அவ்வளவு நம்பிக்கை!” என்றான் கிருஷ்ணன்.

“பிரபுவே, நீங்கள் எங்கள் அனைவரையும் மினியைப் போல் இருக்கச் சொல்கிறீர்கள்? எல்லோருமேவா? பின்னர் உங்களால் எதுவும் செய்ய இயலாது!  எங்களுக்கு முதுகு சொறிந்து விடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?” என்று கேட்டாள் பாமா! “முயன்று பார் பாமா! இப்போது நீ தூங்கப் போ! நன்றாகத் தூங்கு!” என்றான் கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே. மறுநாள் விடிந்ததும் மூவரும் அங்குள்ள பிரவாகத்தில் குளித்துத் தங்கள் காலைக்கடன்களை வழக்கம்போல் முடித்துக் கொண்டனர். திரும்பும்போது மூவருக்குள்ளும் ஒரு மாபெரும் யுத்தம் தொடங்கியது. அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்து அவரவர் கருத்தைப் பரிமாறிக்கொள்ள அது மாபெரும் சண்டையில் முடிந்தது. சத்யபாமா ஒரு வீராதி வீரனின் மனைவியாக வேண்டும் என நினைத்தாள் தான். ஆனால் இப்போது அது இயலாது; என்றாலும் கிருஷ்ணன், அவளுடைய பிரபு உயிர் பிழைக்க வேண்டும்; அவன் உயிருடன் இருந்தாக வேண்டும். அதற்கு அவன் ரோகிணியைத் திருமணம் செய்து கொண்டே ஆகவேண்டும்; வேறு வழியில்லை! இதைச் சொன்ன பாமா தன் தைரியத்தை எல்லாம் திரட்டிக் கொண்டு மேலே சொன்னாள். “பிரபுவே, என் வார்த்தையைக் கொஞ்சம் கேளுங்கள். நீங்கள் நேற்றிரவு சொன்னது உண்மையே! மினியைப் போன்றதொரு அர்ப்பணிப்பு உணர்வு என்னிடம் இல்லைதான்!” இதைச் சொல்கையில் அவள் குரல் தழுதழுத்தது. அவள் மனம் கிருஷ்ணன் நேற்றிரவு சொன்ன வார்த்தைகளையே நினைத்து வருந்திக் கொண்டிருந்தது என்பதும் புலப்பட்டது. ஆகவே அவளால் அதற்குத் தக்க பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“ஆம் ஐயா! எங்களால் மினியைப் போல் இருக்க முடியவில்லைதான். எங்களால் என்ன கொடுக்க முடியுமோ அதைத் தான் உங்களுக்கு அளிக்கிறோம். ஆனாலும் நாங்கள் சொல்வதையும் எப்போதேனும் ஓர் முறையாவது தாங்கள் கேட்டே ஆகவேண்டும். இப்போது அந்த முறை வந்துள்ளது. ஆகவே நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். கரடி அரசனின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு ரோகிணியைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!” என்று சத்யபாமா வேண்டினாள்.

No comments: