கண்ணன் புல்லாங்குழலை இசைத்துக் கொண்டே குகையின் சுரங்கப்பாதையில் தெரிந்த அந்த துவாரத்தின் வழியாக மேலேறினான். கீழே இருந்து சத்யபாமா அவனைத் தன்னால் இயன்றவரைக்கும் உள்ளே தள்ளினாள். ஒரு கையில் கத்தியை வைத்திருந்த கண்ணன், இன்னொரு கையால் புல்லாங்குழலைப் பற்றிக் கொண்டு இசைத்தவண்ணம் முன்னேறினான். இந்த இசைப் போட்டியில் தோற்க விரும்பாத அந்தப் பிசாசுப் பெண்ணும் தன்னால் இயன்ற அளவுக்கு சங்கீத ஸ்வரங்களை மிக இனிமையாக இசைத்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்களில் கண்ணன் மேல் குகைக்குச் சென்றுவிட்டான். அந்தக் குகையின் கூரையில் நிறைய வெடிப்புக்கள் காணப்பட்டதால் குகை வெளிச்சமாக இருந்தது. கிருஷ்ணன் மேலேறியதும் சத்யபாமா அவனிடம் அவனுடைய வில்லையும், அம்புகளையும் கீழிருந்த வண்ணம் கொடுத்தாள். பின்னர் கிருஷ்ணன் துவாரத்தின் உள்ளே சென்றதைப் போல் அவளும் துவாரத்தின் உள்ளே சென்றாள். மறக்காமல் ஊரியின் குட்டி மினியையும் கையில் எடுத்துக் கொண்டாள். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஊரியோ வெகு எளிதாக மேலேறி விட்டது. சத்யபாமாவோ அப்போதும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். எந்நேரம் வேண்டுமானாலும் அந்தப் பிசாசை நேருக்கு நேர் சந்திக்கும்படி இருக்கும் என்னும் எதிர்பார்ப்பில் தவித்தாள். இப்போது அதன் சங்கீதம் மிக மிக மெல்லிய ஒலியில் கேட்டது. மிகவும் ஹீனமாக இருந்தது. அப்படியானால் அது அந்தக் குகையில் மேலும் முன்னேறிச் செல்கிறது என்பது புரிகிறது. ஆனால் இவர்களைக் கண்டு பயந்து ஓடவில்லை. அப்படி இருந்தால் சங்கீதம் கேட்காதே! ஆகவே அவர்களை இன்னமும் முன்னே அழைக்கிறது. அவர்கள் அதைத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றே விரும்புகிறது.
“எங்கே போகிறோம் பிரபுவே?” என்று பாமா கண்ணனைக் கேட்டாள். அவளுக்கு இன்னமும் அச்சம் போகவில்லை. பீதியோடு அந்தக் குகையில் அது சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். எந்த நேரமும் அது தன் முகத்தை இங்கே காட்டிவிடும் என்ற பயத்தில் உறைந்து போயிருந்தாள். ஆனால் கண்ணனோ அவளைத் தேற்றினான். “பயப்படாதே, சத்யா! எதுவும் நடக்காது. நாம் இந்தக்குகையின் தெய்வீகக் காவலர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறோமோ என்னமோ! ஒருவேளை சாத்யகி அவர்களால் கூடக் கடத்தப்பட்டிருக்கலாம், அல்லவா?” என்றான். பின்னர் ஏதோ நினைத்தவனாக, “அது சரி, சாத்யகியைக் கடத்தியவர்களை உன்னால் அடையாளம் காட்ட முடியும் அல்லவா?” என்று கேட்டான். அதற்கு பாமாவும், “முடியும்! அவை இரண்டு கரடிகள். மிகப் பெரிய கரடிகள். சின்னக் கரடி உன்னைப் போல் உயரம் இல்லை! உயரம் குறைவாகவே இருந்தது. ஆனால் நல்ல உடல் பருமனுடன் இருந்ததோடு அல்லாமல் எப்போதும் தன் பின்னங்கால்களாலேயே நின்று கொண்டிருந்தது. இன்னொன்று மிகப்பெரியது! அது தனது பெரிய உடலுடன் நான்கு கால்களாலும் நடந்து சென்றது.” என்றாள். “ஆனால் உன்னுடைய “பிசாசு” ஒரு கரடியாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன், சத்யா! மேலும் நான் இனிமையாகக் கீதம் இசைக்கும் கரடியை இன்று வரை பார்த்ததில்லை!” என்று சிரித்தான்.
அவர்கள் மேலே சென்றார்கள். குகையில் வாயில் அவர்களை ஓர் அடர்ந்த காட்டினுள் கொண்டு விட்டது. அடர்ந்து பரந்திருந்த மரங்களாலும், மரக்கிளைகளாலும் சூரிய ஒளி மிகக் குறைவாகவே அங்கே வந்தது. ஆங்காங்கே தெரிந்த சிறிய இடைவெளிகள் தெரிந்த ஒளி போதுமானதாக இல்லை. அவர்கள் கீழ்க்குகையில் பார்த்த குளத்திற்கு ஆதாரமாக விளங்கிய ஊற்றுக்கண் இங்கே இருந்து தான் தொடங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் விதமாக நீர் வேகமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. இன்னும் என்னென்ன ஆபத்துகள், ஆச்சரியங்கள் காத்திருக்கின்றனவோ என நினைத்துக் கிருஷ்ணன் வியந்தான். ஆனாலும் அவனுடைய இயல்பான நகைச்சுவை உணர்ச்சி அவனை விட்டு முழுதும் பிரியவில்லை. “சத்யா! உன் தந்தை உன்னை இப்போது பார்க்க வேண்டும். ஒரு வேடுவச்சி போல் குறைந்த அளவே உடை உடுத்துக் கொண்டு ஆபரணங்கள் ஏதுமின்றி காணப்படுகிறாய். அதோடு மட்டுமா? ஒரு கையில் அரிவாளைப் பிடித்திருக்கும் இந்த மூர்க்கனுடன் தோள் தொட்டு அணைத்தவண்ணம் நடந்து வருகிறாய்! உன் ஒரு கையிலோ பூனைக்குட்டி! உன் முன்னே உன் அருமை ஊரி நடந்து செல்ல நாம் நம்முடைய விதியைத் தேடிக் கொண்டு செல்கிறோம். அதுவும் சந்தோஷமாக!
“பிரபுவே, நான் சந்தோஷமாக இல்லை! மிகப் பயந்திருக்கிறேன். இந்தப் பிசாசு நம்மை மரணத்துக்கே அழைத்து செல்லப் போகிறது என்றே நினைக்கிறேன்.” என்று இன்னமும் பீதி குறையாத குரலில் கூறினாள் சத்யபாமா. “பாமா, இறப்பதற்கு இவ்வளவு அஞ்சுபவள் எப்படி இந்தப் பயணத்தை அதுவும் முடிவில்லாப் பயணத்தை ஆரம்பித்தாய்? மிகவும் ஆபத்தான இந்தப் பயணம் உன்னை மரணத்தின் வாயிலில் கொண்டு தள்ளும் என்று எவரும் உன்னை எச்சரிக்கவில்லையா?”
“கோவிந்தா, உனக்கு பயமாக இல்லையா?” பாமா கேட்டாள். “ஹா, பாமா, மரணம் என்பது மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் ஒருநாள் வந்தே தீரும். எனக்கும், உனக்கும் மட்டும் இல்லையே! அது வரும்போது வரட்டும்! நான் ஏன் அதைக் கண்டு பயப்பட வேண்டும்? இப்போதைக்கு நான் அந்தப் பிசாசை நேரில் சந்திக்கும் ஆவலில் மட்டுமே இருக்கிறேன். ஒருவேளை இந்தப் புனிதக் குகையின் தெய்வீகக் காவலர்களையும் சந்திக்க நேரிடலாம். உன் தந்தை அப்படித்தானே சொல்கிறார்!” என்றன் கண்ணன். குளிர்ந்த காற்று எங்கிருந்தோ வீசியது. மரங்கள் அந்தக் காற்றில் அசைந்ததும், மரங்களின் அடர்ந்த இலைகளின் “மர்மர” சப்தமும் அங்கே ஓர் கீதம் போல் கேட்டது. அதன் லயம் சத்யபாமாவுக்குள் மகிழ்ச்சியை ஊட்டியது. அப்போது இருந்த பயத்தையும் மீறி அவள் இந்தக் காற்றையும் அதன் தாக்கத்தையும் அனுபவித்தாள். ஏனெனில் இப்போது அவள் அவளுடைய “பிரபு”வுடன் தனித்திருக்கிறாள். இந்த நாள் அவர்கள் இருவருக்கு மட்டுமே சொந்தமானது. அவள் மட்டுமே இப்போது கோவிந்தனின் இந்த நாளை அவனுடன் வாழ்கிறாள். இந்த நேரம் மரணம் சம்பவித்தாலும் அதுவும் அவளுக்கு இனிமையாகவே இருக்கட்டும். அது அவள் உரிமை! அவர்கள் மேலே நடந்தனர். அந்தப் பிசாசு தன்னை அவர்களுக்குக் காட்டிய வண்ணம் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்குத் தாவி ஊஞ்சலாடிய வண்ணமும், இனிமையாகப் பாடிய வண்ணமும் சென்றது. சில சமயம் அதன்குரல் குயிலின் இனிமையான சங்கீதம் போலவும், சில சமயங்களில் செம்போத்தின் குரல் போலவும், சில சமயங்களில் பாடும் பறவையின் குரலிலும் அது இனிமையான ஸ்வரங்களைச் சொல்லும். சில சமயம் மயிலைப் போல் உரத்த குரலில் அகவும்.
“இது பிசாசா? இல்லை ஏதேனும் இசைபாடும் பறவையா?” என்று சத்யபாமா கண்ணனைக் கேட்டாள். “இரண்டும் இல்லை. இது ஓர் விசித்திரமான பிரகிருதியாகத் தெரிகிறது.” என்றான் கண்ணன். அப்போது சத்யபாமா திடீரெனக் கண்ணனை இறுக்கிக் கட்டிக் கொண்டு தன் கண்களையும் மூடிக் கொண்டாள். “அதோ, அந்தக் கரடி, கரடி! அங்கே பார் கோவிந்தா!” என்றாள். ஒரு பெரிய பருத்த உயரமான கரடி சோம்பலுடன் நடந்து வந்து கொண்டிருந்தது. அது தேனடைகளையும், எறும்புப்புற்றுக்களையும் அங்குமிங்கும் பார்த்துத் தேடிக் கொண்டிருந்தது. அது தங்கள் பக்கம் திரும்பினால் அதை வில்லில் அம்பைக் கோர்த்து அதன் மேல் எய்வதற்குத் தயாராகக் கிருஷ்ணன் வில்லையும் அம்பையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டான். பாமாவைப் பார்த்து, “கவலைப்படாதே சத்யா! அந்தக் கரடி மனிதர்களை உண்பதில் விருப்பம் காட்டவில்லை!” என்றான். இப்போது அவர்களுக்கு அந்தப் பிசாசு தெளிவாகத் தெரிந்தது. ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருந்த மரங்களின் கிளைப்பின்னல்கள் அங்கே கொஞ்சம் குறைந்திருந்ததால் இடைவெளியும், வெளிச்சமும் ஏற்பட்டிருந்தது. நீண்ட தலைமுடியுடன் காணப்பட்ட அது ஓர் காட்டேரியாகவோ அல்லதே வேதாளமாகவோ இருக்கலாமோ? அதன் நீண்ட தலைமயிர் காற்றில் அங்கும் இங்கும் பறக்க அது ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்குத் தாவிக் கொண்டிருந்தது. அதைக் குரங்குகளும் தொடர்ந்தன.
“அது ஒரு பாடும் ரத்தக்காட்டேரி!” என்றாள் சத்யபாமா.
“ஆனால் நான் அதன் இரு கால்களையும் பார்த்தேன். அது பிசாசும் இல்லை, ரத்தக்காட்டேரியும் இல்லை, வேதாளமும் இல்லை!” என்றான் கிருஷ்ணன். அதற்குள்ளாக ஊரி மிகக் கடுமையாக மியாவ் எனக் கத்தியவண்ணம் ஓட்டமாக ஓடியது! பூனை ஓடிய திசையில் பாமாவும் கிருஷ்ணனும் பார்த்தனர். ஒரு கரடி என அவர்கள் நினைத்துக் கொண்டிருந்த உருவம் இப்போது ஒரு மனிதனைப் போல் இரு கால்களால் நடந்த வண்ணம் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. சத்யபாமாவுக்குப் பயத்தில் தொண்டை அடைத்துக் கொண்டது. வாய் பேசமுடியாமல் கிருஷ்ணனிடம் அந்த வேதாளம் அல்லது காட்டேரியை நோக்கித் தன் கையையும் பின்னர் தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த உருவத்தையும் பார்த்துக் கை காட்டினாள். “இவர்கள் இருவரும் தான் சாத்யகியைக் கடத்தியவர்கள்!” என்றாள். நடுங்கும் குரலில் குளறிக் குளறிக் கூறிய அவள் மயங்கும் நிலைக்கு வந்துவிட்டாள். கிருஷ்ணன் வில்லையும் அம்பையும் எடுத்து வைத்துவிட்டு ஒரு கையில் அரிவாளையும் இன்னொரு கையில் கத்தியையும் பிடித்தவண்ணம் அந்த உருவத்தையே கவனித்துக் கொண்டிருந்தான்.
“சத்யா, இப்போது தான் உண்மையாகவே ஆபத்து நம்மை நெருங்கி உள்ளது. என் பின்னே நின்று மறைந்து கொள்! உன்னை நீயே வெளிப்படுத்திக் கொள்ளாதே! என்ன நடந்தாலும் பேசாமல் இரு!” என்றான் கிருஷ்ணன். அந்தக் கரடிகள் அவர்கள் அருகே வந்தன. அவர்கள் அருகே வந்ததும் தான் புரிந்தது. ஒன்று நிஜமாகவே கரடி! அது தன் நான்கு கால்களால் நடந்தது. இன்னொன்று மனிதன். கரடித்தோலை ஆடையாக அணிந்திருந்தான். அவன் உடல் முழுவதும் கரடித்தோல் மூடி இருந்தது. இடுப்பில் நரித்தோலால் ஆன ஆடையை அணிந்திருந்தான். அவன் தலையின் மேல் அணிந்திருந்த முகமூடியில் சிரிக்கும் கரடியின் உருவம் எழுதப்பட்டிருந்தது. இதன் மூலம் அவன் தனக்கு இரு முகங்களை வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. ஒன்று மனித முகம், இன்னொன்று கரடி முகம். அவன் மார்பகம் பரந்து விரிந்து காணப்பட்டது. அவன் தோள்கள் விரிந்து கைகள் நீண்டு முழங்கால் வரை தொங்கிற்று. அந்தக் கைகள் வலுவானவை எனப் பார்த்ததுமே புரிந்தது. அவன் மார்பில் புரண்ட அவன் தாடி அடர்த்தியாகக் காணப்பட்டதோடு அல்லாமல் அவன் இடுப்பு வரை நீண்டு இருந்தது. மனிதனா, கரடியா என்பது புரியாவண்ணம் குழப்பமான நடையில் நடந்து வந்தான். மெல்லிய, நீண்ட அவன் முகத்தில் மூக்கு சதைப்பிடிப்போடு காணப்பட்டது. அவன் பெரிய விசாலமான கண்கள் அவ்வப்போது கருணையையும், பாசத்தையும் கூடக் காட்டும் என்று புரியும் வண்ணம் இருந்தது. தன் கைகளில் ஓர் கவணையும் அதில் வைத்து அடிப்பதற்காகக் கற்களையும் அவன் வைத்திருந்தான்.

1 comment:
சுவாரஸ்யம். உடனே தொடரவும்!
Post a Comment