Tuesday, May 3, 2016

தர்மக்ஷேத்திரே, குருக்ஷேத்திரே!

“பார்க்கலாம், மகனே! ஏனெனில் இந்த யுத்தம் நீண்ட காலங்களுக்கு நடந்தது. ஆரியர்கள் சார்பில் அவர்களுக்காக பார்கவ குலத்தில் பிறந்த பரசுராமர் கடுமையாக யுத்தம் புரிந்தார். அவர் தந்தை ஜமதக்னி முனிவர் இந்தக் கொடிய அரசன் சஹஸ்ரார்ஜுனனால் கொல்லப்பட்டிருந்தார். ஆகவே அதற்குப் பழி வாங்கவும், ஆரியர்களின் தர்மத்தை நிலைநாட்டவும் பரசுராமர் போர் புரிய நேரிட்டது. என் மாணவர்கள் நிலையோ சொல்லவே வேண்டாம். அவர்களின் பாதுகாப்புக் குறித்துத் தெளிவற்ற நிலை ஏற்பட்டிருந்தது. அப்படி இருக்கையில் எவ்வாறு இன்னொரு ஆசிரமம் ஏற்படுத்த முடியும்? அப்படியே நான் ஏற்படுத்தி இருந்தாலும் அது இந்தக் கொடியவனால் மறுபடி அழிக்கப்பட்டிருக்கும். அவன் தேடித் தேடி முனிவர்களின் ஆசிரமங்களை ஒழித்தான். தர்மக்ஷேத்திரத்தின் அனைத்து ஆசிரமங்களும் அவனால் அழிக்கப்பட்டது. அவர்கள் வேதத்திற்கும் வேதங்களை ஓதும் வேத சிரோன்மணிகளுக்கும் எதிரானவர்கள். “

“அந்தக் கொடியவனுக்கு என்ன ஆயிற்று, தந்தையே?”

“வல்லமை பொருந்திய பரசுராமரால் அவன் கொல்லப்பட்டான். ஆனாலும் அவன் வீரர்களும் ஊழியர்களும் ஆசிரமங்களுக்குச் சென்று அவற்றை அழிப்பதிலும், பசுக்களைக் கொல்வதிலும், பிடித்துச் செல்வதிலும், பெண்களை இம்சைப்படுத்துவதிலும் முனைந்தார்கள். ஆரியவர்த்தம் முழுவதும் அவர்களால் அழிக்கப்பட்டது.”
“இன்னமும் அவர்கள் ஆரியவர்த்தத்தில் அழிவுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்களா, தந்தையே?”

“இல்லை, மகனே, அவர்களில் பெரும்பகுதியினர் அழிக்கப்பட்டனர். ஆயினும் ஒரு சிலர் ஆங்காங்கே தொந்திரவுகள் கொடுத்த வண்ணம் தான் இருந்தார்கள். ஆனால் இதன் மூலம் ஓர் நன்மையும் ஏற்பட்டிருக்கிறதாகவே சொல்வேன். நான் பிரளயத்தை ஒத்தது என்று நினைத்த சம்பவங்கள் மூலம் ஒரு சில நன்மைகளும் ஏற்பட்டிருக்கின்றன. ஒரே ஒரு பெரிய ஆசிரமத்துக்குப் பதிலாக இன்று எண்ணற்ற ஆசிரமங்கள் இந்த யமுனைக்கரை முழுவதும் தோன்றியுள்ளன. அந்த ஆசிரமவாசிகளால் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது. தர்மம் தவறாமல் அற வாழ்க்கை வாழச் சொல்லிக் கொடுக்கின்றனர். அதோடு அல்லாமல் வேதத்தின் புனிதத்தைக் கட்டிக் காப்பாற்றுகின்றனர். நானும் ஓர் இடத்திலேயே தங்காமல் இங்கும் அங்குமாகப் போய் வந்து எனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் சொல்லிக் கொடுத்து வருகிறேன்.”

“சிறிய ஆசிரமங்களானாலும் அங்கே எல்லாம் சென்று நான் எப்படி நெறி தவறா வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கற்றுக் கொடுத்து வருகிறேன். ஆரியர்களின் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் நினைவூட்டி அதன் படி வாழச் சொல்லி அறிவுறுத்தி வருகிறேன். வேதங்களின் தொன்மையையும், அதன் புனிதத்தையும் எடுத்துக் கூறி அது பாதுகாக்கப்படவேண்டிய அவசியத்தையும் உணர்த்தி வருகிறேன். ஆனால் மகனே! இப்போது என் மாணாக்கர்களால் கற்பிக்கப்படும் வேதங்கள் அனைத்தும் முழுமையானவை அல்ல. துண்டு துண்டாகவே அவர்கள் நினைவில் இருப்பதை வைத்துக் கற்பிக்கின்றனர். மகனே, இன்று வேதங்களின் முதல் மூன்று பகுதிகளை முழுமையாக அறிந்தவன் நான் ஒருவனே மீதம் இருக்கிறேன். வேதத்தின் நான்காம் பகுதியான அதர்வ வேதமும் அப்படித் தான் இருக்கிறது. அதில் நான் முழுமையாகக் கற்க முடியவில்லை. எனினும் துண்டு துண்டாக ஓரளவுக்கு அறிவேன். என் தாத்தாவுக்கு இந்த அதர்வ வேதம் என்றால் ஏனோ பிடிக்கவில்லை. அதைக் கொஞ்சம் மதிப்புக் குறைச்சலாகவே எண்ணி வந்தார். கொஞ்சம் அலட்சியமாகவே பார்ப்பார்!”

சற்று நேரம் யோசித்த த்வைபாயனன், “தந்தையே, தந்தையே, நாம் தர்மக்ஷேத்திரத்துக்குச் செல்வோம். அங்கே மீண்டும் புனர் நிர்மாணம் செய்வோம். நாம் இருவரும் சேர்ந்து செய்வோம், தந்தையே!” என்று பளிச்சிட்ட கண்களுடன் ஆவல் மீதூறக் கூறினான். வருத்தத்துடன் தலையை அசைத்தார் முனிவர். “மிகவும் கஷ்டம், மகனே, மிகக் கஷ்டம்! அது ஓர் நடக்கமுடியாத காரியம். இப்போதைய ஹஸ்தினாபுரத்து அரசன் ஷாந்தனு என்பான். அவன் எப்படி நடந்து கொள்ளப் போகிறன் என்பதே தெரியாது! அவனுக்கு தர்மக்ஷேத்திரத்தை மீண்டும் புனர் நிர்மாணம் செய்யும் ஆவல் இருக்கிறதா என்பதையும் அறியேன். ரிஷி, முனிவர்களையும், ஆசிரமங்களையும் பாதுகாக்க முற்படுவானா என்பதும் தெரியவில்லை. எல்லா ரிஷிகளும் உயிருடன் இருக்கிறார்களா என்பதும் எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இல்லாமல் அங்கே வேதங்களின் முழுமையும், புனிதத் தன்மையும் பாதுகாக்கப்பட்டிருக்குமா என்பதும் சந்தேகமே!”

“தந்தையே, நாம் தர்மக்ஷேத்திரத்துக்குச் செல்வோம். அதைப் புனர் நிர்மாணம் செய்வோம். வேதத்தின் முழுமையையும், அதன் புனிதத்தன்மையையும் மீண்டும் நிலை நாட்டுவோம்.” உற்சாகத்துடன் கூறினான் த்வைபாயனன். பராசரருக்குத் தன் மகனின் இந்த ஆவேசம் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே ஏற்படுத்தியது. அவன் கண்கள் ஒளிர்வதைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். தன் மகன் மூலம் கடவுளர் தமக்கு ஆணையிடுவதாகவே நினைத்தார் பராசரர். அவன் இன்னமும் ஆறு வயதுக் குழந்தைதான். ஆனாலும் இத்தனை புரிதலோடு கடவுளின் ஆசிகள் இல்லாமல் பேச முடியாதல்லவா? ஆஹா! இப்படி ஒரு அருமையான மகனைக் கொடுத்த அந்தக் கடவுளருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். திடீரென ஒரு முடிவுக்கு வந்தவராய்ப் பராசரர் பேசினார்: “மகனே, நாம் இப்போது ஆற்றோடு மேலே செல்ல வேண்டியதில்லை. திரும்ப கோதுலியில் இருக்கும் கௌதமரின் ஆசிரமத்துக்குச் செல்வோம். அங்கே உனக்கு உபநயனத்தை நடத்தி வைக்கிறேன்.” இதைக் கேட்ட த்வைபாயனன் மிகவும் சந்தோஷம் அடைந்து தன் தந்தையைக் கட்டிக் கொண்டு மகிழ்ந்தான்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

குருக்ஷேத்திரத்திற்கான தர்ம க்ஷேத்திரம் ஆரம்பிக்க நேரம் வந்தது. மனம் நிறைந்த பாராட்டுகள் கீதா.

ஸ்ரீராம். said...

ஷாந்தனு ஆட்சி செய்தபோது வியாசருக்கு 6 வயது என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது!