Wednesday, May 4, 2016

வேதமும், வியாசரும்! ஒரு முன்னுரை!

மஹாபாரதத்தின் முக்கியக் கதாபாத்திரம் வேத வியாசர். வியாசரே வேதங்களைப் பகுத்தார் என்று அறிந்திருக்கிறோம். அதற்கு முன்னால் வேதங்கள் பகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனினும் திரு முன்ஷிஜி தன் கற்பனையால் பராசரர் மகனிடம் பேசுகையில் வேதங்கள் 3 இருந்தது என்றும் நான்காவது வேதத்தைத் தான் அதிகம் அறியவில்லை என்றும் கூறுவதாகச் சொல்லி இருக்கிறார். சென்ற அத்தியாயத்தில் இதைப் பார்த்திருக்கலாம். இது என் சொந்தக் கருத்து அல்ல. முன்ஷிஜி குறிப்பிட்டிருப்பதை நான் இங்கே மொழி மாற்றம் மட்டும் செய்திருக்கேன். இப்போது இந்தக் கதைத் தொகுப்பு ஆரியர்களின் வாழ்க்கை நடைமுறைகளை நோக்கித் திரும்புகிறது. ஏனெனில் அந்த வாழ்க்கை முறையை நெறிப்படுத்திக் கொடுத்த முக்கிய பாத்திரமான வேத வியாசர் இனி வரும் சம்பவங்களில் அதிகம் இடம் பெறுவார். மஹாபாரதத்தை எழுதியவரும் அவரே! ஆகவே இங்கு வேதத்தின் முக்கியத்துவமும் கொஞ்சமானும் அறியப்பட வேண்டும்.

வேதம் சத்தியமானது. எவராலும் எழுதப்படாதது. “எழுதாக்கிளவி” என்று தமிழில் அழைக்கப்படும். பொதுவாக வேதங்கள் என்று சொல்லப்பட்டாலும் அதை நான்காகப் பகுத்தே இன்றைய நாட்களில் பார்க்கிறோம்.  ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் என அவை அழைக்கப்படுகின்றன. அளவில் மிக மிகப் பெரியது! ஆரியர்களின் வாழ்க்கை முறையின் ஆதார சுருதியே இந்த வேதங்கள் தாம். இது இல்லாமல் ஆரிய வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதோ அதைக் குறித்து விவரிப்பதோ இயலாத ஒன்று. இவை எந்த மனிதராலும் இயற்றப்பட்டது இல்லை. தன்னைத் தானே அறிவதற்கு வேதங்களில் ஏற்படும் ஞானம் உதவும். மனத் திருப்தி, சந்தோஷம் போன்றவையும் வேதங்களை முற்றிலும் அறிவதால் ஏற்படுகிறது.  இவற்றைச் சரியாக ஏற்ற, இறக்கத்துடன் உச்சரித்தாலேயே இதன் மூலம் ஏற்படும் பலன்களைப் புரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ முடியும். அதற்கேற்ற வழிமுறைகளும் சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு மாறுபடாமல் செய்ய வேண்டும். இந்த உச்சரிப்பும், சொல்லும்போது வரும் ஒலியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாகச் சிறிதும் மாறுபடாமல், எங்கேயும் தடைபடாமல், எவராலும் குறுக்கிடப் படாமல் தொடர்ந்து வருகிறது. உலகில் இப்படி வேறு எதுவும் இன்று வரை இல்லை.

இதை மனதை ஒருமுகப்படுத்திய வண்ணம் ஓதி வந்தால் கெட்ட எண்ணங்கள் அகன்று மனது சுத்தமாகும் என்றும், உடலிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு உடலும் சுத்தமடையும் என்றும் ஒரு சில மந்திரங்களைக் குறிப்பிட்ட முறையில் உச்சரிப்பதன் மூலம் தீராத நோய்களைத் தீர்க்கலாம் என்றும் இதன் மூலம் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்றும் சொல்வதோடு வறட்சியான சமயத்தில் மழையை வரவழைக்கும் மந்திரங்களும், அதீத மழையை நிறுத்தக்கூடிய மந்திரங்களும் இருப்பதோடு அல்லாமல் ஒரு நாட்டின் வெற்றி, தோல்வியையும் நிர்ணயித்து வீரர்களை உருவாக்கும் மந்திரங்களும் இருப்பதாகச் சொல்வதோடு பற்பல அதிசயங்களும் நடைபெறும் என்றும் தெரியவருகிறது. இப்போதும் நாம் நம் நாட்டில் ஆங்காங்கே வேதம் கற்றுக் கொடுக்கும் பாடசாலைகளைப் பார்க்கிறோம். பல பிராமணர்கள் வேதம் ஓதுவதிலும் சநாதன தர்ம சாஸ்திரங்களிலும் நிபுணர்களாக இருப்பதை அறிகிறோம். ஆனால் முன்னம் இருந்ததைப் போல் நான்கு வேதங்களிலும் சிறந்தவர்கள் என்று இல்லாமல் பகுக்கப்பட்ட ஒவ்வொரு வேதத்திலும் சிறந்தவர்களாகச் சிலர் இருப்பதைப் பார்க்கிறோம். நான்கு வேதங்களையும் பூரணமாக அறிந்தவர்கள் இன்று எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.

சநாதன தர்மத்தின் ஒவ்வொரு சடங்குகளிலும் இந்த மந்திரங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. பிறப்பு, இறப்பு, உபநயனம், திருமணம், சீமந்தம், ஆயுஷ்ஹோமம், கிரஹப்ரவேசம் போன்ற பல சடங்குகளிலும் இந்த வேத மந்திரங்கள் அவரவர் சார்ந்திருக்கும் வேதத்துக்கு ஏற்ப இடம் பெற்று வருகின்றன. இவர்களில் ஒரு சிலர் மணிமந்திர ஔஷதம் எனப்படும் குறிப்பிட்ட மந்திரங்களின் மூலம் பற்பல நோய்களளையும், பாம்புக்கடி போன்ற விஷக்கடிகளையும் குணப்படுத்துவதில் சிறந்திருக்கின்றனர். இதற்கு முக்கியத் தகுதி கற்கும் சிறுவனின் பிரமசரிய விரதம் தான். முற்காலங்களில் பனிரண்டு வயதுக்குள்ளாகவே ஆண் குழந்தைகளுக்கு உபநயனம் நடந்து பிரமசரியம் ஏற்பான். பிரமசாரிகள் ஒரு துறவியைப் போல் (ஆனால் காவி வஸ்திரம் கிடையாது. ஒற்றை வேஷ்டி) தினம் தினம் பிக்ஷை எடுத்து உண்ணவேண்டும் என்பதோடு கடுமையான நியம, நிஷ்டைகளைக் கடைப்பிடித்து குருகுலத்தில் குருவின் சொற்படி நடந்து கொண்டு வாழ வேண்டும்.

இப்போதும் அநேகமான பிராமணர்கள் வீடுகளில் உபநயனம் நடந்து வந்தாலும் அதைத் தொடர்ந்த பிரமசரிய விரதம் என்பது உபநயனத்தின் பின்னர் 2, அல்லது 3 நாட்கள் கடைப்பிடிப்பதோடு முடிந்து விடுகிறது. இது ஒரு கடமையாக மாறி விட்டது. வாழ்க்கை முறையாக இல்லை. ஆனாலும் பல நூற்றாண்டுகளாக, ஏன் கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்ந்தவர்கள் அநேகம். பார்க்கப் போனால்  இந்த வேதங்கள் தான் இந்த நாட்டை ஒருமைப்படுத்திக் கொண்டு வருகிறது. காஷ்மீர் முதல்கன்யாகுமரி வரையிலும் இந்த வேதமே இந்த ஒருமைப்பாட்டுக்குப் பெரும்பாலும் உதவி இருக்கிறது. சநாதன தர்மமானது இந்த வேதங்கள் மூலமாக இந்துக்களின் வாழ்க்கை முறையில் வலிமையையும், ஒற்றுமையையும், நேர்மையையும், அதே சமயம் ஆன்மாவுக்குத் திருப்தியானவற்றை அளிப்பதுமாக இடைவிடாமல் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைபெற்று இருந்து வருகிறது.

மத சம்பந்தமான பள்ளிகளின் பாடங்களைப் படிக்கும்போதும், வேதாந்தங்களைப் படிக்கையிலும், சமூக வாழ்க்கை முறையிலும், தர்ம சாஸ்திரங்களிலும், இசைப்பள்ளிகளிலும் வேதத்தின் முக்கியத்துவம் இன்றளவும் குறைவில்லாமல் இருந்து வருகிறது. இன்று பெரிதும் பிரபலம் ஆகி இருக்கும் யோகா என்னும் கலையும் கூட வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும்  ஓர் அங்கம் தான் என்பார்கள். பகவத் கீதையில் வேதத்தை, “சப்த பிரம்மா” என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஆகவே இந்துக்களின் வாழ்க்கையில் வேதம் முக்கியமான இடம் பெறுகிறது. இனி வரும் நாட்களில் வேத வியாசரைக் குறித்துப் படிக்கையில் இவற்றை முதலில் அறிந்து கொண்டு மேலே தொடருவது பலனளிக்கும்.