Wednesday, September 14, 2016

கோதுலி ஆசிரமத்தில் ஷார்மி!

இங்கே கோதுலியில் ஷார்மி அன்னையார் ஒரு காலத்தில் தன் கணவர் ஆசாரிய கௌதமரின் ஆசிரமமாக இருந்த இடத்தில் இப்போது காணப்பட்ட சாம்பல் குப்பைகளை அகற்றுவதில் முனைப்பாக இருந்தார். அந்த இடத்திலேயே சில நாட்கள் முன்னரே கொல்லப்பட்ட தன் குழந்தைகள், கணவன் ஆகியோரின் நினைவு வந்து அவளைக் கொன்றது. கண்ணீர் வடித்தாள். ஆனாலும் வேலைகளில் சுணங்கவில்லை. அனைவரையும் வேலை வாங்கினாள். சிலரைச் சத்தம் போட்டுக் கோவித்தும், சிலரிடம் சிரித்துக் கொஞ்சியும் வேலை வாங்கினாள். ஆனால் ஒரு போதும் தான் அந்த ஆசிரமத்தின் தலைவர் ஆன கௌதம முனிவரின் மனைவி என்ற ஹோதாவிலிருந்து தன்னைக் கீழிறக்கிக் கொள்ளவில்லை என்பதோடு இந்த ஆசிரமம் புனர் நிர்மாணம் செய்யப்படுவதே தன் வாழ்க்கையின் முக்கியக்குறிக்கோள் என்றும் நினைத்தாள்.

மோசா இந்த ஆசிரமத்தை எரித்தபோது அந்த ஆசிரமத்துக் குடிகள் சில பேர் அங்கிருந்து தப்பி ஓடி சாம்பல் பிரதேசத்துக்குச் சென்றடைந்திருந்தார்கள். அவர்கள் இப்போது அடிக்கடி இரண்டு பேரை அனுப்பி அங்கே நடக்கும் வேலைகளைக் கண்காணிக்கச் சொல்லி இருந்தார்கள். அந்த மாதிரி பார்க்க வந்தவர்களுக்கு இப்போது இங்கே அரசப் படகு வந்ததும், அதிலிருந்து ஷார்மி அன்னையும் மற்றவர்களும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அவர்க:ள் மோசாவின் ஆட்களால் தாங்கள் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று நினைத்துக் கொண்டு மெல்ல மெல்லத் தவழ்ந்த வண்ணம் ஆசிரமத்தை நோக்கி முன்னேறினார்கள். மரங்களுக்குப் பின்னர் ஒளிந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் பார்த்தது ஷார்மியை. ஆகவே ஷார்மியைப் பார்த்ததும் திகைத்துப் போனார்கள். மேலும் ஷார்மியின் கூட வந்திருந்த பிரமசாரிகளும் மற்ற மாணாக்கர்களும் ஆசிரமப் பகுதியைச் சுத்தம் செய்து கொண்டிருந்ததைக் கண்ணுற்றதும் அவர்கள் மனதில் நம்பிக்கை தோன்றியது. மோசா இங்கே இனி வரமாட்டான் என நிச்சயம் செய்து கொண்டனர்.

அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த ஷார்மியின் கண்களில் இந்த இருவரும் பட்டனர். அவர்கள் இந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் அடையாளம் கண்டு கொண்டாள். உடனே தன் கையை அசைத்து அவர்களை அழைத்த வண்ணம், “ரோஹித், கோழையா நீ? உன்னைப் போல் இன்னும் எத்தனை பேர் சாம்பல் பிரதேசத்தில் ஒளிந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். ரோஹித் என்பவனும் அவனுடன் வந்தவனும் மரங்களுக்குப் பின்னால் இருந்து முன்னே வந்தனர். ஷார்மியின் கால்களில் விழுந்து, “அம்மா, நாங்கள் பதினெட்டுப் பேர் இங்கே சாம்பல் பிரதேசத்தில் ஒளிந்திருக்கிறோம்.” என்றான். “எத்தனை பெண்கள்?” என்றாள் ஷார்மி. “ஐந்து பெண்கள்!” என்றான் ரோஹித்.

“நீங்கள் அனைவருமே கோழைகள். கோழைகள். நீங்கள் அனைவரும் ஆசிரமத்தோடு அழிந்து போக விரும்பவில்லை. எப்படியேனும் உயிர் பிழைத்தால் போதும் என்று இருந்து விட்டீர்கள். ஹூம்! ஆசாரியர் எவ்வளவு தைரியமாக மோசாவை எதிர்த்து நின்றார்! அதைப் பார்த்த பின்னரும் கூட உங்களுக்கு தைரியம் வரவில்லை. ஆசிரமம் இல்லாமல் உயிர் வாழ அவர் விரும்பவில்லை. விரும்பி மரணத்தை ஏற்றுக் கொண்டார். போகட்டும் விடு! என்ன நடக்குமோ அது தான் நடக்கும். எதையும் மாற்ற இயலாது. அது இப்போது இங்கே அவசியம் இல்லை. நான் உங்களை எல்லாம் மன்னித்து விட்டேன். நீங்கள் எல்லாம் இன்னமும் குழந்தைகள் தானே! போ! போய் மற்றவர்களையும் இங்கே அழைத்து வா!” என்றாள் ஷார்மி.

அன்று சூரிய அஸ்தமனம் ஆவதற்குள்ளாக ஆசாரிய கௌதமரின் சீடர்கள் அங்கே யாக குண்டத்தை நிறுவி புனிதமான அக்னியை வளர்த்து மந்திரங்களை ஓதவும் ஆரம்பித்தனர். அந்த இடத்திலேயே இப்போது ஓர் புனிதமான சூழ்நிலை தோன்றியது. அக்னி விண்ணைத் தொட்டுவிடும் போல் எழும்பியது. அன்றிரவு இருட்டுவதற்குள்ளாக சாம்பல் பிரதேசத்திலிருந்து பதினெட்டு பேர்களும் ஐந்து பெண்கள் உட்பட அங்கே வந்து சேர்ந்தனர். பல நாட்களாக அவர்கள் உணவு ஏதும் உண்ணவில்லை. ஆகவே அரசப் படகிலிருந்து தலைமைப் படகோட்டியால் அவர்களுக்கு உணவு வரவழைக்கப்பட்டது. ஷார்மி அவர்களிடம், “கோழைகளா! நீங்கள் எல்லாம் செத்திருக்கலாம். ஆனால் போனால் போகிறது என்று நான் உங்களை எல்லாம் மன்னித்து விட்டேன். நாட்கணக்காக உங்களில் எவரும் உணவு உண்ணவில்லை. ஆனால் நிதானமாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். ஓநாய்களைப் போல் விழுங்காதீர்கள். ஏதேனும் நோய் வந்து விடும்!” என்றாள்.

அப்போது ஆசிரமத்தைச் சேர்ந்த இரு பசுக்கள் இங்கே இருந்த ஆபத்து நீங்கி விட்டதென்பதை எப்படியே உள்ளுணர்வால் அறிந்தது போல் அங்கே வந்து சேர்ந்தன. அவை புனிதமான அக்னிக்குச் சற்று முன்னால் நின்று கொண்டன. அவை என்னதான் வந்து விட்டாலும் முழு மனதுடன் அங்கே இல்லை என்பது போல் ஒரு சமயம் இங்கே ஆசிரமத்தைப் பார்த்துக் கொண்டும் இன்னொரு சமயம் அவை வந்த காட்டுப்பாதை வழியே எந்நேரமும் தப்பி விடவேண்டும் என்று நினைக்கின்றவோ என்னும் வண்ணமும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த ஷார்மி அவற்றைப் பெயர் சொல்லி அழைத்தாள். முதலில் அவை சற்றுப் புரியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தன. ஆனால் ஷார்மி தான் அழைத்தாள் என்பதை எப்படியோ அறிந்து கொண்டன. உடனே அங்கே ஓடி வந்து அவள் அருகே நின்றன. ஷார்மி அதன் கழுத்தின் மேல் கைகளைப் போட்டு அணைத்துக் கொண்டு இரண்டு பசுக்களையும் தடவிக் கொடுத்தாள்.

ஆசிரமத்தில் அனைவரும் மீண்டும் கூடி விட்டனர். ஒரு விதத்தில் சந்தோஷமாகவே இருந்தது. ஆனாலும் ஒரு முக்கியமான சந்தேகம் அனைவர் மனதிலும் தோன்றிக் கொண்டு தான் இருந்தது. அது தான் மோசா எந்நேரம் வேண்டுமானாலும் எப்படியாயினும் ஆசாரியர் த்வைபாயனரைக் கொன்றிருப்பான் என்பது தான் அது. மேலும் அந்தக் கொலை குனிகர் அங்கே செல்வதற்கு முன்னரே நடைபெற்றிருக்கும் என்றும் நினைத்துக் கொண்டனர். ஆகவே அனைவருக்கும் இதில் குழப்பமும் வருத்தமுமாக இருந்தது. அப்போது ஓர் வயதான பழங்குடி இனத்தவன் தன் இரு இனத்து மக்களோடு காட்டிலிருந்து வெளியே வந்தான். அவர்கள் ஆசிரமத்தின் அருகே வந்தால் அவர்கள் மேல் எந்நேரம் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தத் தயாராகக் காத்திருந்தனர் அங்கிருந்த வில்லாளிகள். எல்லோருமே ஓர் மாபெரும் யுத்தத்தை எதிர்பார்த்து அங்கே கூடினார்கள். ஷார்மி அதற்குள்ளாக வில்லாளிகளுக்குக் கீழ்க்கண்டவாறு கட்டளை பிறப்பித்தாள். “அவர்களை இங்கே நெருங்க விடாதே! அதே சமயம் அவர்கள் சிறு அசைவு காட்டினாலும் உடனே அம்புகளைச் செலுத்துங்கள்!” என்றாள்.

அப்போது அந்த வயதான பழங்குடித் தலைவன் தன் கைகளை உயர்த்தி விரித்தான். பின்னர் ஷார்மியைப் பார்த்து,”ஷார்மி அன்னையே! நாங்கள் இங்கே இப்போது வந்தது நாளைக் காலை அனுஷ்டானங்கள் முடித்துக் கொண்டு ஆசாரியர் த்வைபாயனரும் இப்போது எங்கள் குலத் தலைவனுமான க்ருபாவுடனும் மந்திரி குனிகருடனும் இங்கே வருகின்றனர் என்பதை அறிவிக்கத் தான்! வேறு நோக்கம் ஏதும் எங்களுக்கு இல்லை!”
அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது. ஷார்மிக்கு ஆனந்தம் பொங்கியது. “மோசா என்ன ஆனான்?” என்று அவள் அந்தத் தலைவனை வினவினாள்.

“ஓ, ஒப்பற்ற எங்கள் தலைவனை புனிதமான எருமைக்கடவுளின் உலகுக்கு அழைத்துக் கொண்டார் கடவுள்!” என்றான். இன்னும் சற்று நேரத்தின் மேலும் சில பழங்குடியினர் அங்கே உணவு போன்ற பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர். அனைவரும் நிம்மதியாக ஓய்வாகத் தூங்கச் சென்றனர். ஆனால் ஷார்மிக்குத் தூக்கமே வரவில்லை. அவளைச் சுற்றிலும் ஆசிரமத்துப் பெண்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர். ஆனாலும் அவளால் கண்களை மூட முடியவில்லை. கண்களை மூடினால் அவள் கணவர் கௌதம முனிவரும் அவள் குழந்தைகளுமே தோன்றினார்கள். அவளையும் மற்றப் பெண்களையும் பழங்குடியினரின் தலைமை அகத்திற்கு இட்டுச் செல்கையில் அவளைத் துரத்தும் இத்தகைய நினைவுகளை மறக்கத் தன்னைத் தானே கடுமையாகச் சாட்டையால் அடித்துக் கொண்டாள்.

ஒவ்வொரு சமயமும் அவள் தன் கணவனையும் குழந்தைகளையும் நினைக்கையில் எல்லாம் அவளுக்குத் தான் எத்தகையதொரு வீழ்ச்சியின் விளிம்பில் விழுந்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வாள். ஆனாலும் அவள் மனோ தைரியம் மிக்கவள். மோசாவின் கோபத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் மற்றப் பெண்களைக் காப்பாற்றுவதே அவள் முக்கியக் கடமையாகும். இப்போது அவள் தன் கணவரின் ஆசிரமத்தை அவர் இருந்தால் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்புவாரோ அவ்வண்ணமே நிர்மாணிக்க வேண்டும்.