Friday, September 9, 2016

படகு நகர்ந்தது!

“நான் வர மாட்டேன். மோசா என்னைக் கொன்று விட்டுத் தான் மறுவேலை பார்ப்பான்!” அலறிய க்ரிவி தன் நெற்றியில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டு அழத் தொடங்கினான். “ஓஹோ, க்ரிவி, ரொம்பவும் பயப்படாதே! நீ மிக வயதானவன். உன்னைக் கொல்வதால் அவனுக்கு எவ்விதப் பலனும் ஏற்படப் போவதில்லை. நீ வழி காட்டுவதற்குத் தான் எங்களுடன் வரப் போகிறாய்! ஆனால் நீ மறந்து கூட எங்களுக்கு துரோகம் நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் அடுத்த கணமே நீ கொல்லப்படுவாய்!” என்றார் குனிகர்.

“யஜமானரின் உத்தரவுப்படியே!” என்று தலை தாழ்த்திக் குனிகரை வணங்கினான் க்ரிவி. பின்னர் தொடர்ந்து, “நான் ஏற்கெனவே பாலமுனிவரின் உத்தரவுப்படியே நடந்து வந்திருக்கிறேன். இப்போது ஷார்மி அன்னையும் அப்படியே கூறினார். மோசாவை நான் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறேன். அவமதித்திருக்கிறேன். ஆகையால் இப்போது என்னால் அவனிடம் திரும்பிச் செல்ல முடியாது! உங்கள் சொல்படி தான் கேட்டாக வேண்டும். உங்களுக்கு உதவி செய்கிறேன்.” என்று ஒத்துக் கொண்டான்.

“அது! நீ இப்போது தான் சுய உணர்வுடன் பேசுகிறாய்!” என்ற குனிகர் ஷார்மியிடம் திரும்பினார்.”ஷார்மி அன்னையாரே, மற்றப் பெண்களும் இந்த பிரமசாரிகளும் இப்போது வந்திருக்கும் இந்தப் படகுகளில் படகோட்டிகளின் பாதுகாப்பின் கீழ் இருக்கட்டும். இரண்டு வில்லாளிகளையும் அவர்கள் பாதுகாப்புக்கென இங்கே விட்டுச் செல்கிறேன். இங்கே உள்ளவர்களுக்கு இந்தப் பாதுகாப்புப் போதும். மற்றவர்கள் அனைவரும் என்னுடன் வரவேண்டும்.” என்றார்.

“அப்படி ஏதும் நடக்கப் போவதில்லை!” என்றாள் ஷார்மி தீர்மானமாக. “குனிகரே, நீ ஆசிரமத்தை மீட்டெடுக்கிறாயோ அல்லது பாலமுனியைக் காப்பாற்றப் போகிறாயோ தெரியாது. எதுவாக இருந்தாலும் நானும் அங்கே இருந்தாக வேண்டும். நான் பாலமுனியைச் சிறு வயதிலிருந்து வளர்த்து வந்திருக்கிறேன். நான் அவனுடைய தாய்க்குச் சமமானவள்!” என்றாள். குரு பத்தினியாக அவளுடைய முதல் கடமையே அவள் வழியில் வருபவர்களை ஒழுங்கு செய்து ஒரு கட்டுப்பாடுடன் வைப்பது தான். இல்லை எனில் அவர்கள் கட்டுக்கடங்காமல் போய்விடுவார்கள். ஆகவே ஷார்மி இங்கேயும் தன் நிலைப்பாட்டைத் தொடர்ந்தாள். ஆனால் குனிகர் விடவில்லை. “அங்கே என்ன யுத்தமா நடக்கப்போகிறது? நீங்களும் வருவதற்கு? தேவை இல்லை!” என்று மறுத்தார். ஆனால் ஷார்மியோ அதிகாரத்தைத் தன் கைகளிலே எடுத்துக் கொண்டு விட்டாள்.

“ஹூம், இதோ பார் மந்திரி! நான் என் பிரபு ஆசாரிய கௌதமருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். அதோடு இல்லை. என் அருமைக் குழந்தைகளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களில் ஒருவனுக்கு நாங்கள் உபநயனம் கூடச் செய்வித்திருக்கிறோம். ஆகவே என்ன நடந்தாலும் சரி, குனிகரே! யுத்தமே ஏற்பட்டாலும் சரி! நானும் அங்கே வந்து தான் தீர்வேன். நாம் எல்லோரும் சேர்ந்து சென்று பாலமுனியை விடுவிப்போம் அல்லது அவரைக் கொன்றவர்களைத் தண்டிப்போம். என் வளர்ப்பில் இருந்த குழந்தைகளில் இப்போது மீதம் இருப்பவர்கள் பாலமுனியும் சுகரும் தான்! மற்றவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர்!” என்று சொன்ன ஷார்மியின் நெஞ்சைத் துக்கம் அடைத்தது. அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பின. அதைப் பார்த்த சுகர் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார். மீண்டும் சுகரைக் கட்டி அணைத்துக் கொண்ட ஷார்மி அந்த அணைப்பின் மூலம் கொஞ்சம் ஆறுதல் பெற முயற்சித்தாள்.

“தாயே, என்னுள் ஓர் எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது. நாம் வணங்கும் அனைத்துக் கடவுளரும் தந்தையைக் கொல்ல விடமாட்டார்கள். அவர் காப்பாற்றப்படுவார். அவர் ஓர் வசீகரமான அழகான வாழ்க்கையைத் தான் வாழ்ந்திருக்கிறார். அதோடு இல்லை. தர்மமே அவரால் காப்பாற்றப்பட்டிருக்கிறது. மேலும் அவர் உயிருடன் இருப்பதில் தான் தர்மம் மேலும் தழைத்தோங்கும். மந்திரி குனிகரே, நாங்கள் ஐந்து பிரமசாரிகளும் உங்களுடனேயே வருகிறோம்!” என்று முடித்தார் சுகர். அப்போது ஆசாரியர் வேத வியாசரின் சீடர்களில் ஒருவர் முன்னுக்கு வந்து ஏதோ பேசத் தொடங்கினார்.

“மந்திரி குனிகரே, நாங்களும் உங்களுடன் வருகிறோம். எங்கள் குருவை எங்களால் எப்படி ஒதுக்கித் தள்ள முடியும்? அவருக்கு என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்வதில் எங்களுக்கும் சிரத்தை உண்டு!” என்றார் அவர். வேறு வழியில்லாத குனிகர், “சரி, சரி, எல்லோருமே வாருங்கள். நீங்கள் அனைவரும் இப்போது வந்த படகுகளின் மூலம் கயிறு கட்டி இழுக்கப்பட்டு வந்து சேருங்கள். நான் அதற்குள்ளாக ஆசிரமப் பகுதியில் இந்தக் காட்டுவாசிகளின் தடயங்களே இல்லாமல் செய்து விடுகிறேன். மேலும் போரில் விருப்பமுள்ளவர்கள், போர்ப் பயிற்சி உள்ளவர்கள் மட்டும் என்னுடன் வாருங்கள்! மற்றவர்கள் மற்றப் படகுகளில் வரட்டும்!” என்று முடிவு செய்தார் குனிகர்.

“மந்திரி, நீங்கள் சிலபேர் தான் சண்டை செய்யக் கூடியவர்கள். ஆனால் அங்கே உள்ள பழங்குடியினர் உங்களை விட அதிகம்!” என்றாள் ஷார்மி. அதற்கு குனிகர், “கவலைப்படாதீர்கள் ஷார்மி அன்னையாரே! என்னுடன் வந்திருக்கும் வில்லாளிகளும் சரி மற்ற வீரர்களும் சரி, ஹஸ்தினாபுரப் படையிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சிறந்த வீரர்கள். அவர்கள் நமக்குப் பாதுகாப்புக் கொடுப்பதோடு அல்லாமல் தங்களையும் பாதுகாத்துக் கொள்வார்கள். இங்குள்ள படகோட்டிகள் அனைவரும் என்னுடன் வரவேண்டும்., இருவர் மட்டும் இங்கே தங்கிப் படகுகளைப் பார்த்துக் கொள்ளுங்கள். படகோட்டிகள் தங்கள் கைகளில் ஆயுதங்களை ஏந்திக்கொள்ளட்டும். குறைந்த பட்சமாக தண்டாயுதமாகவேனும் இருக்கட்டும். அல்லது ஈட்டிகளை ஏந்தட்டும். சரி, நாம் இப்போது கோதுலி ஆசிரமப் பகுதிக்குச் செல்வோம்.” என்று புன்னகை மாறாமல் சொன்னார் குனிகர். அனைவரும் படகுகளில் ஏறிக் கொள்ள அனைத்துக்கும் தலைமை வகித்து அரசப் படகு முன்னால் நகர்ந்தது.

1 comment:

ஸ்ரீராம். said...

படகுடனேயே செல்வோம்.