Sunday, September 4, 2016

ஷார்மிக்கு ஏற்பட்ட கொடூரம்!

த்வைபாயனரை அடையாளம் கண்டு கொண்ட மற்ற இளைஞர்களும் ஓடோடி வந்து அவர் கால்களில் விழுந்து ஆசிகளைப் பெற்றனர். அப்போது இருட்ட ஆரம்பித்து விட்டது. என்றாலும் த்வைபாயனர் மனதில் மகிழ்வுடனேயே சுகரைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தார். அவர் உயரமாகவும், நல்ல கட்டுமஸ்தான உடலுடனும் இருப்பதைக் கண்டு மனதினுள் மகிழ்ந்தார். பின்னர் சுகர் தந்தையைப் பார்த்து, “நீங்கள் எப்படி இங்கே வந்து சேர்ந்தீர்கள் தந்தையே!!” என்று கேட்டார். “உன்னைக் காணவேண்டும் என்றும் ஹஸ்தினாபுரத்துக்கு உன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு கோதுலிக்கு வந்தேன்!” என்ற த்வைபாயனர் மகனைப் பார்த்து, “ஆனால் மகனே, நீ எவ்வாறு இங்கே வந்து சேர்ந்தாய்? ஏன் இங்கே இருக்கிறாய்? அதுதான் அனைத்தையும் விட மிக முக்கியமானது!” என்றார்.

“தந்தையே, மோசாவுக்குத் தன் தந்தையைப் பிடிக்காது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்தத் தலைவன் இருந்தபோது மோசாவுடைய நடமாட்டங்களையும் மற்ற அக்கிரமங்களையும் ஓர் கட்டுக்குள் வைத்திருந்தான். இங்கே தலைமையகத்துக்குக் கூட அவனுக்கு வர அனுமதி கொடுத்ததில்லை. ஆனால் திடீரென பழைய தலைவன் இறந்து அவன் இடத்தில் மோசா அமர்த்தப்பட்டதும், அவன் உடனேயே ஆசிரமங்களுக்குச் செய்தியை அனுப்பினான். நம் ஆசாரியர் கௌதமரிடம் அனைத்து ஆசிரமப் பெண்களையும் தன்னிடம் சரண் அடையச் செய்ய வேண்டும் என்றும் முக்கியமாக அவர்களில் ஷார்மியும் இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினான். ஆனால் நம் மதிப்புக்குரிய ஆசாரியர் அதைச் செய்ய மறுத்துவிட்டார்.” என்றார் சுகர். “அப்படியா? இப்போது மோசாவுக்கு என்ன மனக்குறை இருக்கிறதாம்? அனைத்துக் காட்டுவாசிப் பெண்களும் அவரவர் பெற்றோரின் சம்மதத்தோடு தான் ஆசிரமத்து ஆண்களை மணந்து கொண்டிருக்கின்றனர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்குப் பழைய தலைவன் போப்பாவின் சம்மதமும் கிடைத்திருக்கிறது!” என்றார் த்வைபாயனர். “அதோடு இல்லை. அவர்களுக்குத் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்பதோடு அனைவரும் குழந்தைகளையும் பெற்றெடுத்திருக்கின்றனர். முழுக்க முழுக்க ஆரிய சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டனர். இனி என்ன? அவர்களை ஏன் பிரிக்க வேண்டும்? அடுத்து என்ன நடக்கப் போகிறதோ, தெரியவில்லை!” என்றார் த்வைபாயனர் தொடர்ந்து.

சுகர் மேலும் தொடர்ந்தார். “மறுநாள் மோசா நூற்றுக்கணக்கான காட்டுவாசிகளுடன் வந்து ஆசிரமத்தைச் சூழ்ந்து கொண்டான். ஆசிரமக் குடில்களுக்கு எரியூட்டினான். நம் மதிப்புக்குரிய ஆசாரியர் கௌதமரைக் கொன்றான்.அவருடைய குழந்தைகளையும் கூடக் கொன்று விட்டான். குரு பத்தினி ஷார்மியும் அவருடன் இங்கே வந்து வாழ்க்கை நடத்திய அனைத்துக் காட்டுவாசிப் பெண்களும் சிறைப்பிடிக்கப்பட்டு  சாட்டையால் அடிக்கப்பட்டு இங்கே காட்டுவாசிகளின் தலைமையகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். மிருகங்களைப்போல் அவர்களை நடத்தினான். ஒருசில ஆசிரமப் பெண்களும், ஆண்களும் எப்படியோ தப்பி ஓடி விட்டனர். அவர்கள் சாம்பல் பிரதேசத்துக்குச் சென்றிருப்பதாகக் கேள்விப் பட்டேன். ஆசிரமம் முழுதும் எரிந்து சாம்பலான பின்னரும் அவர்களின் கொடூரம் நிற்கவில்லை. ஒரு சில ஸ்ரோத்திரியர்களைப் பிடித்துக் கொன்று விருந்து சமைத்துச் சாப்பிட்டார்கள். ஆனால் எங்களை ஏன் விட்டுவிட்டான் என்பது தான் புரியவில்லை. ஒருவேளை இன்றிரவு நடக்கப் போகும் பெரிய விருந்தில் புத்தம்புதிய இளைஞர்களான எங்கள் மாமிசத்தை விருந்தாகப் படைக்கப் போகிறானோ என்னவோ! தெரியவில்லை!” என்றார் சுகர்.

சூரியன் மறைந்து கொண்டிருந்தான். அதைச் சுட்டிக்காட்டிய த்வைபாயனர், “நமக்கு மாலை நேர அனுஷ்டானங்களைச் செய்யும் நேரம் வந்து விட்டது. ஆனால் இங்கே குளிக்க வசதி இல்லை! குளிக்காமல் எப்படி அனுஷ்டானங்களைச் செய்வது? ஆகவே மௌனமாகக் கடவுளை வேண்டிக் கொள்வோம். நம்மை எதிர்நோக்கி இருக்கும் பிரச்னைகளை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய தைரியத்தைக் கடவுள் நமக்கு அளிக்கும்படி வேண்டுவோம்.” என்றார். ஐந்து பிரமசாரிகளும் த்வைபாயனருடன் சேர்ந்து மௌனமாக தியானத்தில் ஆழ்ந்தனர்.  அப்போது அங்கே இருந்த மௌனம் திடீரெனக் கேட்ட பேரிகை முழக்கங்களிலும் கொம்புகள் ஊதும் சப்தத்திலும் கலைந்தது. எங்கும் வெற்றி முழக்கம் கேட்டது. காட்டுவாசிகள் அனைவரும் அவர்களுடைய சமுதாயக் கூடத்தில் கூடினார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்து கேட்ட சீரான சப்தத்தில் இருந்து அனைவரும் வாத்தியங்கள் முழங்க நடனம் ஆடத் தொடங்கி விட்டார்கள் என்பது தெரிந்தது.

அது நிலவில்லாத கருமையான இரவாக இருந்தது. காட்டுவாசிகளின் நடனம் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஓர் மயில் அகவும் சப்தம் கேட்டது. அப்போது சுகர் த்வைபாயனரிடம், “தந்தையே, இது குருபத்தினி ஷார்மி அவர்களின் குரல்!” என்றார்.
“என்ன?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் த்வைபாயனர். “ நமக்கு அளிக்கப்படும் உணவு மனித மாமிசமாகவோ அல்லது பசுவின் மாமிசமாகவோ இருக்கக் கூடும். நாம் இரண்டையும் உண்ண மாட்டோம். ஆகவே நாங்கள் உணவே இல்லாமல் இங்கே இருந்து வருகிறோம். நேற்றிரவு நடு இரவு இருக்கும். குரு பத்தினி ஷார்மியும் அவருடன் மற்ற ஆசிரமப்பெண்களும் சேர்ந்து கொண்டு இங்கே உள்ள ஓர் புதருக்கருகே இருக்கும் இடைவெளியின் மூலம் எங்களுக்கு உணவளித்தார்கள். அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவென்பதால் விஷயம் வெளியே கசியவில்லை. ஆகவே இப்போதும் குருபத்தினி அதே காரணத்துக்காக இங்கே வந்திருக்க வேண்டும்.” என்றார் சுகர்.

அவர்கள் அனைவரும் அந்த வேலியின் மறுபக்கத்து வாயிலுக்கருகே சென்றனர். ஷார்மி அங்கிருந்து உணவைச் சிறிய இடைவெளியின் மூலம் இங்கே உள்ள இளைஞர்களிடம் அளித்தாள். சுகர் ஷார்மியிடம், “அன்னையே, என் தந்தை இங்கே வந்திருக்கிறார்!” என்றார். த்வைபாயனரும் ,”அன்னையே, எனக்கு உங்கள் ஆசிகள் தேவை!” என்றார். ஷார்மி, “கிருஷ்ணா, என் மகனே! நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய்?” என்று வினவினாள். அவள் நினைவில் தாய் இல்லாமல் கோதுலிக்கு வந்து சேர்ந்த சின்னஞ்சிறிய கிருஷ்ணனே இன்னமும் நினைவில் இருந்தான். அவளால் வளர்க்கப்பட்டான். பனிரண்டு ஆண்டுகள் அவள் அவனை வளர்த்தாள். த்வைபாயனரைப் பார்த்து ஒரு கணம் தன்னை மறந்து பழைய நினைவில் மூழ்கி இருந்த ஷார்மிக்குத் திடீரென அவள் இழப்பு நினைவுக்கு வந்து மனம் பதறியது. “கிருஷ்ணா, கிருஷ்ணா, என்ன நடந்தது என்பது தெரியுமா? உன் மதிப்புக்குரிய குருவும் எங்கள் குழந்தைகளும் என் கண்ணெதிரேயே கொல்லப்பட்டனர். எனக்குக் கஷ்டகாலம் மட்டுமல்ல தீய காலமும் ஆரம்பம் ஆகி இருக்கிறது! இனி நான் என்ன செய்வேன்!” என்று தழுதழுத்த குரலில் கூறினாள்.

“அழாதீர்கள், தாயே! பழைய விஷயங்களை நினைக்காதீர்கள். இப்போது அவற்றை நினைக்கும் நேரம் அல்ல. கடவுள் அருளால் உங்கள் கிருஷ்ணன் ஆகிய நான் உங்களைச் சந்திக்க இங்கே வந்துள்ளேன்!” என்று கருணையுடனும் அளவற்ற பாசத்துடனும் கூறினார் த்வைபாயனர். “கேளுங்கள் தாயே! க்ரிவியின் படகு எனக்காக யமுனைக்கரையில் காத்துக் கொண்டிருக்கிறது. அரசரின் படகு சாம்பல் பிரதேசத்துக்கு அருகே உள்ளது. மந்திரி குனிகர் அதன் பொறுப்பில் இருக்கிறார். நாம் இந்த இடைவெளியைச் சிறிதே பெரிதாக்கி முதலில் இந்த இளைஞர்களை வெளியே அனுப்ப வழி செய்வோம். உங்களில் எத்தனை பெண்கள் நான் சொல்லும் இந்த வழியைக் கடைப்பிடித்துத் தப்பத் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார் த்வைபாயனர்.

“இங்கே இருக்கும் நாங்கள் மட்டுமில்லாமல், இன்னும் சிலரும் காத்திருக்கின்றனர்.” என்றாள் ஷார்மி. “இங்கே மோசாவால் அவர்கள் வாழ்க்கை நரகமாகத் தான் இருக்கப் போகிறது. அவன் இந்தப் பெண்களின் மூக்கையும், மார்பகங்களையும் வெட்டப் போகிறான். இளம்பெண்கள் இங்குள்ள காட்டுவாசிகளிலேயே முரடர்கள் கைகளில் சிக்கிக் கொண்டு திண்டாடப் போகின்றனர். ஆனால் நாங்கள் அனைவரும் புனிதமான அக்னிக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறோமே! எங்களை மணந்து கொண்டு எங்களுக்கு நல்வாழ்க்கையைக் காட்டித் தந்த ஸ்ரோத்திரியர்களுக்கு உண்மையாகவும், விசுவாசத்துடனும் நடப்பதாகச் சத்தியம் செய்திருக்கிறோமே! அதுவும் அக்னிக்கு முன்னால்! எங்களால் எப்படி இன்னொருவனுடன் இனி வாழ்க்கை நடத்த முடியும்? என்னைத் துண்டு துண்டாக வெட்டப்போகிறான் மோசா என்றும் கேள்விப் பட்டேன். செய்யட்டும். என் அருமைப் பிரபு ஆசாரிய கௌதமரும் போய்விட்டார். என் கண்ணின் கருமணிகளான குழந்தைகளும் போய்விட்டனர். இனி நான் இருந்து என்ன செய்வது? நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை!” என்றாள் ஷார்மி துக்கத்துடன்.