Saturday, January 14, 2017

எட்டாம் பாகம்! குருக்ஷேத்திரம்!

யுதிஷ்டிரன் அதற்குச் சம்மதம் தெரிவித்தான். தான் சக்கரவர்த்தியாக வேண்டும் என்பதற்காக ஒரு போரை நடத்தி அதில் பல க்ஷத்திரிய வீரர்களைக் கொலைசெய்யவோ, அந்த நாட்டுப் பெண்களை மானபங்கப்படுத்தித் துன்புறுத்தவோ தான் விரும்பவில்லை என்று கூறினான். தான் அப்படி எல்லாம் சக்கரவர்த்தி ஆக விரும்பவில்லை என்றும் அதைவிட ராஜ சூய யாகம் செய்யாமல் என்ன முறையில் இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம் என்று யோசிப்பதாகவும் கூறினான்.  கிருஷ்ணன் அதற்கு, “மூத்தவனே, உன்னை நான் நன்கறிவேன். நாம் யுத்தம் நடத்தி ஆரியவர்த்தத்து அரசர்களை வென்று அதன் மூலம் ராஜசூய யாகத்தை நடத்துவது எனில் நீ அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டாய் என்பதைப் புரிந்தே வைத்திருக்கிறேன். ஆனால் அப்படி ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்றால் நீ அதற்கு ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்!” என்றான் கிருஷ்ணன். யுதிஷ்டிரன் அதற்குச் சத்தமாகச் சிரித்து விட்டு, “இது ஏதோ மந்திரத்தால் தான் நடக்க வேண்டும்.” என்றான்.
“இல்லை மூத்தவனே! என் மாமன் கம்சனை நான் மல்யுத்தத்தின் மூலமே கொன்றேன். அங்கே ஆயுதப் பிரயோகமே நடக்கவில்லை!” என்றான்.

“ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் எப்படி நாம் வெல்வது? அதற்கு என்ன வழி?” என்று யுதிஷ்டிரன் கேட்டான். “இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! பீமனையும், அர்ஜுனனையும் என்னோடு ராஜகிருஹத்துக்கு அனுப்பி வை. அங்கே ஜராசந்தனை நாங்கள் எதிர்கொள்கிறோம்!” என்றான். யுதிஷ்டிரன் அவர்கள் மூவரையும் ராஜகிருஹம் செல்ல அனுமதி கொடுத்தான். அங்கே ஜராசந்தனை மல்யுத்தம் மூலம் இரண்டாகக் கிழித்துப் போட்டான் பீமன். பின்னர் அவர்கள் இந்திரப்பிரஸ்தம் வந்ததும் ராஜசூய யாகம் நடப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கபட்டது.  அப்போது யுதிஷ்டிரன் ராஜ சூய யாகத்தின் முக்கியமான நிகழ்வு என்று அக்ரபூஜை நடத்துவது எனவும் அதை யாரேனும் ஓர் முனிவருக்கோ, ரிஷிக்கோ நடத்த வேண்டும் என்றும் அவர் மிக உயர்ந்தவராக இருத்தல் வேண்டும் என்றும் கூறினான். மேலும் தர்மத்தைத் தன் உயிராய் மதிப்பவராகவும் தர்மத்தைக் காக்கவெனத் தன் உயிரையும் கொடுப்பவராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறினான்.

பின்னர் சற்று நிறுத்திவிட்டு மேலும் தொடர்ந்தான் யுதிஷ்டிரன். “இந்த அக்ரபூஜைக்கு அனைவரிலும் மிக உயர்ந்தவன் நீ ஒருவனே கிருஷ்ணா! “ என்றும் கூறினான். கிருஷ்ணன் அதற்கு, “மூத்தவனே, நான் உண்மைகளைப் புறம் தள்ளுபவன் அல்ல. உண்மைகளை அறியாதவன் அல்ல! இந்த அக்ரபூஜையை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை. ஏனெனில் நான் பிறப்பால் ஓர் அரசன் அல்ல. எனக்கென ஓர் நாடு இல்லை. நான் அதற்குத் தலைவன் இல்லை. எனக்கெனப் படைகள் ஏதும் கிடையாது. அதோடு என்னுடைய முக்கியக்குறிக்கோளே பல நாடுகளையும் அரசர்களையும் வெல்வது இல்லை. ஓர் மஹாச் சக்கரவர்த்தியாக ஆகவேண்டும் என்னும் எண்ணமும் என்னிடம் இல்லை. அரசர்களை எல்லாம் அவர்கள் நிலையில் இருந்து மிக உயர்த்த வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்கு பிரமதேஜஸ் தான் அவர்களுக்கு உதவும். அத்தகைய பிரமதேஜஸோடு இந்த அரசர்களின் க்ஷத்திரிய தேஜஸும் சேர்ந்தால் ஆரியவர்த்தம் உலகுக்கே ஓர் வழிகாட்டியாக இருக்கும்!” என்றான் கிருஷ்ணன்.
அதற்கு யுதிஷ்டிரன் பதில் சொன்னான். “வாசுதேவா! இந்த மஹா சபையில் பிரசன்னம் ஆகி இருக்கும் பல முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும், மற்றும் அரசர்களுக்கும் இந்த அக்ரபூஜையை நீ ஏற்பது தான் சிறந்தது என்னும் எண்ணம் இருந்து வருகிறது. நீ ஓர் அரசனோ, சக்கரவர்த்தியோ இல்லை தான். ஆனால் நீ தர்மத்தின் பாதுகாவலன் என்னும் நிலையை எப்போதோ அடைந்து விட்டாய். நீ ஒருவனே தர்ம ரக்ஷகன் என்பதை இங்குள்ள அனைவரும் நம்புகின்றனர். உன்னை “தர்மகோப்தா”வாகப் பார்க்கின்றனர். இந்த கௌரவம் இங்குள்ள எந்த அரசனுக்கும் கிட்டாத ஒன்று. ஆகவே அக்ரபூஜையை உனக்குத் தான் செய்யப் போகிறோம்.”

க்ருஷ்ண த்வைபாயனரின் ஆசிகளுடனும், ராஜவம்சத்து குருவான தௌமியரின் ஆசிகளுடனும், பீஷ்மரின் அனுமதி மற்றும் ஆசிகளுடனும் மற்ற அரச குலத்தவரின் சம்மதங்களுடனும் கிருஷ்ணனுக்கு அக்ரபூஜை அளிக்கப்பட்டது.  இது கிருஷ்ண வாசுதேவனின் அத்தையும் பாண்டவர்களின் சித்தியுமான ஸுஸ்ரவதாவின் மகனான சேதி நாட்டரசன் சிசுபாலனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குச் சிறு வயது முதலே கிருஷ்ணனின் மேல் ஆத்திரம் அதிகம். அவனைக் கண்டால் பிடிக்காது. மேலும் அவன் ஜராசந்தனுக்கு நெருங்கிய நண்பன்.  ருக்மிணியின் சுயம்வரத்தின் போது அவளை மணக்க முடியாமல் போனதும் சிசுபாலனுக்குக் கோபம் இருந்தது. அதனால் அவன் கிருஷ்ணன் மேல் ஏற்கெனவே இருந்த கோபம் இப்போது ஜராசந்தன் அழிக்கப்பட்டதும் அதிகம் ஆகிக் கிருஷ்ணனைக் கொன்றுவிடும் ஆத்திரத்தில் இருந்தான். மேலும் பாண்டவர்களின் தாய்வழியில் சகோதரன் என்பதால் தனக்குத் தான் அவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்த்திருந்தான்.  இந்த மாபெரும் சபையில் தனக்குக் கிடைக்கப் போகும் கௌரவத்திற்காக ஆவலுடன் காத்திருந்தான்.

ஆனால் ஏமாற்றம் அளிக்கும் வகையில் கிருஷ்ணனுக்கு அக்ரபூஜை கொடுக்கவும், அதுவும் பீஷ்மர் அதற்கு அளித்த ஆதரவும் சிசுபாலனுக்கு ஆத்திரத்தை மூட்டி விட்டது. அத்தனை பேர் நிறைந்த மஹாசபையில் அவன் கிருஷ்ணனை மாட்டிடையன் என்று திட்டினான். மேலும் அவதூறு நிறைந்த சொற்களால் கிருஷ்ணனை அவமதித்தான். பீஷ்மரையும் அவமதித்தான்.  எவ்வளவு மோசமான வார்த்தைகளால் அவர்களை அவமதிக்க முடியுமோ அவ்வளவு மோசமாக அத்தனை பேர் நிறைந்த மாபெரும் சபையில் அவமானம் செய்தான். மோசமாகக் கீழ்த்தரமாக நடந்து கொண்டான். இந்தப் பரந்த பாரத கண்டமே மதித்துப் போற்றும் பீஷ்மரை சிசுபாலன் மோசமான வார்த்தைகளால் பேசியதைக் கேட்டு அந்த மாபெரும் சபையே அதிர்ந்தது. மேலும் கிருஷ்ணனுக்கு நடந்த அவமரியாதையையும் கண்டு திகைத்துப்போனார்கள்.  என்றாலும் சிசுபாலன் நூறு முறை தன்னைக்குறித்து அவதூறு பேசும்வரை அவனைக் கொல்வதில்லை என்று தன் அத்தைக்குத் தந்திருந்த வாக்குறுதி காரணமாகக் கண்ணன் அவன் பேசுவதைப் பொறுத்துக் கொண்டிருந்தான். ஆனால் சிசுபாலன் அந்த எல்லையையும் தாண்டிக் கிருஷ்ணனை அவமதிக்க ஆரம்பித்தான்.

உடனே கிருஷ்ணன் தன்னுடைய அபூர்வமான ஆயுதமான சக்கராயுதத்தை எடுத்து சிசுபாலன் மேல் பிரயோகம் செய்தான்.  சிசுபாலன் தலை அறுபட்டுக் கீழே விழுந்து இறந்தான்.  ராஜசூய யாகம்இந்த ஒரு நிகழ்வைத் தவிர வேறு எந்தவிதமான பேரழிவும் இல்லாமல் கிருஷ்ணன் உதவியினாலும் க்ருஷ்ண த்வைபாயனரின் ஆசிகள் மற்றும் உதவியினாலும் சுமுகமாக நடந்து முடிந்தது.  த்வைபாயனர் கிருஷ்ணனை க்ஷத்திரிய தர்மத்தை மட்டுமல்லாமல் ஆரிய வர்த்தத்தின் நெறிகளையும் தர்மத்தையும் காப்பாற்ற வல்லவனாகவே பார்த்தார்.  அதே போல் ஆரியவர்த்தத்தின் பல அரசர்களும் ஸ்ரோத்திரியர்களும் கிருஷ்ணனை ஓர் கடவுளாகவே நினைத்து மதித்துப் போற்றினார்கள்.  அவனிடம் உள்ள தெய்விக சக்தியினாலேயே அந்த சுதர்சன சக்கரத்தை அவனால் காற்று வெளியிலிருந்து கொண்டு வந்து சிசுபாலனை வதம் செய்ய முடிந்தது என்று நம்பினார்கள்.  ஜராசந்தன் வதத்தின் காரணமாகவும் சிசுபாலன் வதத்தின் காரணமாகவும் கிருஷ்ணன் இப்போது அனைவருக்கும் ஓர் புதிய மனிதனாகத் தோற்றமளித்தான். இதுவரை மக்களுக்குத் தங்கள் நாட்டை வெல்லும் தங்களை ஆக்கிரமிக்கும் மனிதர்களையே பார்த்து வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது கிருஷ்ணன் எந்த நாட்டையும் ஆக்கிரமிக்காமல் போரிடாமல் அனைவரையும் வெல்லும் கிருஷ்ணனின் புதிய போக்கு அவர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தையும் வியப்பையும் அளித்தது.

இன்னொரு பக்கம் கிருஷ்ணனுக்கு இயல்பாகவே ஓர் சக்கரவர்த்திக்குரிய எல்லாவிதமான தகுதிகளும் அமைந்திருந்தது. போரிடாமலேயே ஆயுதப் பிரயோகம் செய்யாமலேயே அவன் தர்மத்திற்காகப்போராடி அதைக் காக்கும் முயற்சிகளைச் செய்து வந்தான்.  அரசர்களின் தார்மிக ஆதரவையும் ஸ்ரோத்திரியர்களின் தார்மிக ஆதரவையும் பெற்றே அவன் தர்மத்தின் காவலனாக இருந்தானேயன்றி ஆயுதம் எடுத்துப் போரிடவில்லை. கொடிய அரசர்களையோ, தலைவர்களையோ மட்டுமே தண்டித்தான். அனைவரையும் அல்ல! ஆக்கிரமிப்பு என்பதையே அவன் செய்யவில்லை. இந்த அவனுடைய நடைமுறையால் கிருஷ்ணன் சென்ற இடமெல்லாம் மக்கள் அவனைக் காணவும், அவனை வழிபடவும் கூட்டம் கூட்டமாகக் கூடினார்கள். அவர்களுக்கிடையே இருக்கும் சின்னச் சின்ன விரோதங்கள், மனஸ்தாபங்கள் எல்லாம் கிருஷ்ணன் முன்னிலையில் தீர்த்து வைக்கப்பட்டன. தர்மத்தைப் பாதுகாக்கக் கிருஷ்ணனோடு சேர்ந்து போராடவேண்டும் என்னும் பொறுப்புணர்வு அவர்கள் அனைவரின் மனதிலும் ஓரு நெருப்புப் போல் கிளர்ந்தெழுந்தது.  கிருஷ்ணனின் க்ஷத்திரிய தேஜஸோடு, த்வைபாயனரின் பிரம்ம தேஜஸும் சேர்ந்து ஆரியவர்த்தத்தை ஓர் பிரபலமான பகுதியாக மாற்றிக் கொண்டு வந்தது.