Saturday, January 28, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம்! குருக்ஷேத்திரம்! மாயாவதி!

பிரத்யும்னனுக்குத் தன் தந்தையை அழைத்துச் சென்று மாயாவதியின் பொறுமையைச் சோதிக்கத் தயக்கமாகவே இருந்தது. அதையும் மீறியே தந்தையை அழைத்துச் சென்றான். காட்டுக்குள்ளே சரியாகத்தெரியாத தடங்களிலேயே செல்லும்படியாக இருந்தது.  பின்னர் ஓர் வெற்றிடம் வந்து சேர்ந்தனர். அங்கே மாயாவதி உணவு தயாரித்துக் கொண்டு இருந்தாள். அவர்கள் மாயாவதியைப் பார்த்ததும் கிருஷ்ணன் அவளைப் பார்த்துக் கேட்டான். “இந்தக் குடும்பத்தின் மற்றப் பெண்களோடு நீயும் ஏன் கிரிநகர் செல்லவில்லை? ஏன் காட்டில் தங்கி இருக்கிறாய்?” என்றான்.  அதற்கு மாயாவதி, “நான் உங்கள் குடும்பத்தின் அகந்தை மிக்க பெண்களோடு சேர்ந்து தங்கி இருப்பேன் என நினைக்கிறீர்களா? அப்படி எதிர்பார்க்கிறீர்களா?  அவர்களில் எவரும் என்னை அங்கீகரிக்கவில்லை; நானும் அவர்களை அங்கீகரிக்கவில்லை!” என்றாள்.

“ஆனால் நீ ஏன் அவர்களுடன் செல்லவில்லை?” மீண்டும் அதே கேள்வியைத் தான் கிருஷ்ணன் கேட்டான். “என்னுடைய திட்டங்களை ஏற்கெனவே நான் போட்டுவிட்டேன்.” அவள் கொஞ்சம் ஏளனம் கலந்த வெறுப்புடன் பார்த்தாள். “எனக்குப் பிடித்த வகையில், பிடித்த வழியில் என் சொந்த வாழ்க்கையைத் திட்டம் செய்திருக்கிறேன்!” என்றாள்.

“ஆஹா, அது சரிதான்! ஆனால் நீ எப்படி பிரத்யும்னனுடன் செல்ல முடியும்? அவன் தன்னந்தனியாக ஆரியர்களின் முக்கிய எதிரியான ஷால்வனைச் சந்திக்கவன்றோ செல்கிறான். ஷால்வனின் தலை நகரத்துக்குள்ளே உன்னைப்போன்ற பெண்கள் பிரத்யும்னன் துணையாக இருந்தாலுமே செல்வது சரியல்ல!” என்றான்.

“இந்த விஷயத்தை இங்கே பேசுவது பொருளற்றது! நான் இதைக் குறித்து முதல் நாளே பிரத்யும்னனிடம் விரிவாகப் பேசிவிட்டேன். அன்று தான் பிரத்யும்னன் ஷால்வனைத் தேடிச் செல்வது குறித்த கேள்விகள் எழுந்தன!” என்றாள்.

“ஆனால் நீ எப்படி அவனுடன் போக முடியும்? நீ அவனுடன் சென்றால் அது பெரியதொரு பிரச்னையில் வில்லங்கத்தில் கொண்டு விடும். ஏனெனில் அவன் ஷால்வன், நமது எதிரியைச் சந்திக்கப் போகிரன். தெரியும் அல்லவா?” என்று கிருஷ்ணன் குறுக்கிட்டான்.

“பிரச்னை! வில்லங்கம்! ஆஹா! அதுவும் அப்படியா? நான் இல்லை எனில் பிரத்யும்னன் என்ன ஆகி இருப்பான் தெரியுமா? இன்று அவன் உயிருடன் இருப்பதே என்னால் தான். அவனுக்கு ஐந்து வயது தான் இருக்கும். அவன் திருடப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்டான். அவனுக்குத் தான் எங்கிருந்து வந்தோம் என்பதே தெரியாது! தன் பெற்றோர் யார் என்றும் தெரியாது! நான், நான், என்னை மட்டுமே அவன் அறிவான். நான் அவனுக்குத் தந்தையாக, தாயாக, ஒரு சகோதரியாக,ஒரு சகோதரனாக எல்லாமுமாக இருந்தேன்.  ஆனால் அதையும் மீறியதொரு பந்தம் எங்கள் இருவருக்கிடையே உருவாகி இருந்தது. இந்த உறவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு பந்தம்!”

“நாங்கள் இருவரும் ஒருவரில் ஒருவர் அடங்கினவர்கள். ஈருடல், ஓருயிர்! நான் மட்டும் இல்லை எனில் பிரத்யும்னன் இருந்த இடமே தெரியாமல் போயிருப்பான். உயிருடன் இருந்திருக்க மாட்டான். அவன் என்னை ஒரு தாயை விட அதிகமாக நேசிக்கிறான். தாய் மாதிரியே நினைக்கிறான்.”

சற்றே நிறுத்திய மாயாவதி ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தாள். “ஒரு நாள் இரவு! அந்த நாள்! அந்தக் கொடுமையான கொடூரமான கொலைகாரர்கள் தங்கள் புதிய தேடல்களில் சென்றிருந்த அந்த நாள்! நாங்கள் இருவரும் வழக்கம் போல் தூங்கச் சென்றோம். ஆனாலும் நான் நடு இரவில் திடீரென விழித்து விட்டேன். அப்போதிருந்த என் மனோநிலை என் அமைதியைக்குலைத்து விட்டது! நான் திடுக்கிட்டுப் போனேன். அப்போது தான் எனக்குப் புரிந்தது. பிரத்யும்னன் இன்னமும் ஓர் குழந்தை அல்ல! வளர்ந்த இளைஞன் என்றும் தனக்கான துணையைத் தேடுகிறான் என்பதையும் புரிந்து கொண்டேன்.”

“அப்போது தான் அப்போது தான் நான் புதியதொரு மனுஷியாக ஆனேன். புதியதொரு பெண்! முற்றிலும் புதியவள். நான் பாதி தான் விழித்திருந்தேன். அவன், பிரத்யும்னன் தன் கைகளை மெதுவாக மிகமிக மெதுவாக மென்மையாக என் மேல் போட்டிருந்தான். ஒருவேளை அவன் தூக்கத்தில் அது தற்செயலான ஓர் நிகழ்வாகக் கூட இருக்கலாம்.  ஆனால் அந்த நிமிடத்தில் நான் எல்லையற்ற பரவசத்தில் ஆழ்ந்து போனேன். பிரத்யும்னனும் அதே போல் அந்த நிமிடத்திலிருந்து தான் மாறிப் போனான். அவனுள்ளும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.  அவனும் எல்லையற்ற உணர்ச்சிப் பிரவாகத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான். அந்த நிமிடத்திலிருந்து தான் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டோம். ஒன்றோடு ஒன்றாகக் கலந்து போனோம்.”

“எங்கள் திருமணத்தைக் கொண்டாட எங்களால் பெரிய அளவில் விருந்துகள் ஏதும் அளிக்க முடியவில்லை; முடியவும் முடியாது! அதே போல் எங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்க எந்த ஸ்ரோத்திரியர்களும் அங்கில்லை!  நானே எழுந்து அக்னியை மூட்டினேன்.  பின்னர் நாங்கள் இருவரும் அந்த அக்னியை ஏழு முறை வலம் வந்து வணங்கினோம். அதன் மூலம் எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருள் எங்களை இணைத்துவிட்டதாகவே நம்புகிறோம். ஆனால் அடுத்த நாள் தான் இந்தக் கஷ்டமான காரியத்தைச் செய்ததில் உள்ள எல்லையற்ற பிரச்னைகளைக் குறித்த அறிவு என் மனதுக்கு எட்டியது. என் கண்கள் திறந்தன!”

“ஆனால் உங்களுக்குத் தெரியாது! அந்த நாளிலிருந்து பிரத்யும்னன் என் வாழ்க்கையில் எவ்விதமான பாகத்தை ஏற்று வந்திருக்கிறான் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்! நான் அன்றே முடிவு எடுத்து விட்டேன். பிரத்யும்னனை அந்தக் கொடுமைக்காரர்கள் கருணை காட்டி உயிருடன் விடும்படி வைக்கக் கூடாது. அவனை அந்தத் தளையிலிருந்து விடுவிக்க வேண்டும்.  ஏனெனில் பிரத்யும்னன் என் வாழ்க்கைத்துணை மட்டுமல்ல! என் உயிர், என் காதலன், என் நெஞ்சம், என் கண்ணின் மணி, என் பாதுகாவலன், எல்லாமும் அவனே! ஒவ்வொரு நாளும் அன்றிலிருந்து நான் வாளின் முனையில் நடப்பது போன்ற உணர்வுடன் இருக்கிறேன். எந்நேரமும் என் தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப் போல் உணர்கிறேன். அதன் பின்னரே நான் சித்தப்பா உத்தவரைச் சந்தித்தேன். அவர் தான் எங்களுக்கு ஒரு சின்ன வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். அந்த வீட்டில் நாங்கள் எங்களால் முடிந்தவரை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கென சிறியதொரு பரிவாரங்களையும் சித்தப்பா உத்தவர் அளித்திருக்கிறார். அவர்கள் எங்களைஆபத்திலிருந்து காப்பாற்ற உதவுகிறார்கள்.”

“”நீங்கள் அவரை முதன்மையான மஹாரதியாக ஆக்கி இருக்கிறீர்கள். அவர் மிகவும் அன்பானவர். நான் அவரை உங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன். ஏனெனில் உங்களால் அவருடைய கௌர்வத்தை இந்த ஆரிய வம்சத்து அரசர்களிடையே மீட்டுத் தர இயலும். அதிகாரத்தைப் பெற்றுத் தர முடியும். அவர் இன்னமும் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு சாகசங்களைப் புரிந்து நன்மைகளையும் நல்லவைகளையும் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்.  அவற்றைச் செய்வதற்காக அவர் சற்றுப் பொறுமை இல்லாமலேயே காத்திருக்க வேண்டி இருக்கிறது. பிரத்யும்னர் இவற்றை எல்லாம் முடிக்கும்படி நீங்கள் தான் உதவ வேண்டும்!”

“என் வாழ்க்கையே பிரத்யும்னனைச் சுற்றி அவரால் கட்டுண்டு இருக்கிறது! நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்கிறீர்கள்? அதையே நான் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்? அவர் எங்கே சென்றாலும் நானும் அங்கேயே செல்வேன்! அவர் எங்கும் செல்லாமல் துவாரகையில் இருக்க விரும்பினால் நானும் இங்கேயே இருப்பேன். ஒரு வேளை அவரை ஷால்வன் கொன்று விட்டால், நீங்கள் பயப்படுவது போல் நடந்து விட்டால்! நானும் அவருடன் உடன்கட்டை ஏறி விடுவேன்.  நான் ஏன் இதை எல்லாம் உங்களிடம் சொல்கிறேன் தெரியுமா? இது வரை சித்தப்பா உத்தவரிடம் மட்டுமே சொல்லி இருக்கிறேன். அவரைத் தவிர நீங்கள் ஒருவர் மட்டுமே எங்கள் வாழ்க்கையைக் குறித்துச் சிறப்பாக நினைக்க முடியும். எங்கள் வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதைப் புரிந்து கொள்ளவும் முடியும்!”

No comments: