Sunday, January 22, 2017

கண்ணன் வருவான், எட்டாம் பாகம், குருக்ஷேத்திரம்!

இந்திரப் பிரஸ்தத்திலிருந்து துவாரகை செல்லும் வழியிலேயே கிருஷ்ணன் தன்னுடன் நட்புப் பாராட்டி வரும் மன்னர்களுக்கு தூது அனுப்பி இந்த முறையற்ற ஆக்கிரமிப்பை அகற்றவும், தன் தந்தையை விடுவிக்கவும் உதவி செய்யுமாறு வேண்டிக் கொண்டான். எங்கும் செய்திகள் அனுப்பப்பட்டன. தர்மம் காப்பாற்றப் பட வேண்டுமெனில் ஷால்வன் அழிய வேண்டும் என்பது உறுதியாகி விட்டது. கிருஷ்ணனை இப்போது அனைவருமே தர்மகோப்தாவாகவே பார்க்க ஆரம்பித்தனர். தர்மத்தின் பாதுகாவலன் கிருஷ்ணன் ஒருவன் மட்டுமே என உறுதியாக நம்பினார்கள்.  ஷால்வனுக்கு எதிராக ஓர் புனிதமான போர் நடக்கப் போகிறது என்பதைக் குறித்து அனைவரும் அறிந்ததோடு அதற்கு உதவி செய்யவும் சம்மதித்தார்கள். கிருஷ்ணனின் தூதுக்கு பதில் கிடைத்தது. ஆரியவர்த்தத்தின் இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கை கோர்த்துக் கொண்டு கிருஷ்ணனுக்கு உதவ ஆயத்தமானார்கள்.

அனைவரும் தங்கள் கரங்களை உயர்த்திக் கொண்டு, “எங்கே தர்மம் நிலைத்திருக்கிறதோ, அங்கே வெற்றி கிட்டும்!” என்று கோஷங்களைச் செய்தார்கள். ரதங்களை வேகமாக ஓட்டி வரும் குதிரைகளின் கனைப்புக் குரலும் ரதச் சக்கரங்களின் உருண்டோடும் சப்தமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு கேட்டவண்ணம் இருந்தன. அவர்களில் ஆடம்பரம் மிகுந்த ராஜாக்கள் மட்டுமில்லாமல் சாதாரணக் குறுநில மன்னர்களும் இருந்தனர். ஸ்ரோத்திரியர்கள் பலரும் தங்கள் பங்குக்குக் கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்கள். அவர்களில் பெண்கள் பலரும் இருந்தனர். சாதாரணக் கிராமத்து விவசாய மக்கள் தங்கள் வாழ்க்கையை மிகுந்த சிரமத்துடன் நடத்துபவர்கள் தங்கள் கணவனுக்குப் பின்னால் ஸ்திரமாக நின்று ஆதரவைக் கொடுத்தனர். கிருஷ்ணனின் வேண்டுகோள் செவிமடுக்கப்பட்டது. ஆரியவர்த்தத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அவர்கள் வந்தனர்.

கிருஷ்ணனனால் நடத்தப்பட்ட அதிசய நிகழ்வுகளான கம்சனின் மரணம், ஜராசந்தனின் மரணம் மற்றும் சிசுபாலனை அழித்தது ஆகியவை ஏற்கெனவே மக்கள் மனதில் பெரியதொரு எழுச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடல் அலை  கரைக்கு வந்து மோதிக்கொண்டே இருப்பது போல்  மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டம் அலையென மோதியது. பல அரசர்களும் க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பது என உறுதி எடுத்திருந்தார்கள். என்றாலும் அவர்களால் அவர்கள் ராஜ்யத்தின் எல்லைக்குட்பட்ட ஆசிரமங்களைப் பாதுகாக்க முடியாமல் இருந்தது.  அவர்கள் முதலில் தங்கள் பாதுகாப்பையும் தங்கள் ராஜ்யத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாகத் தங்களைக் காத்துக் கொள்ளவே முனைந்தனர். ஆகவே கிருஷ்ணனைப் போன்ற ஒருவர் எந்த விதமான ராஜ்யத்துக்கும் ஆசைப்படாமல், ராஜ்யபாரத்தைச் சுமக்காமல் இத்தகைய பாதுகாப்பை அளிக்க வந்தது அவர்களுக்கு ஒரு விதத்தில் நிம்மதியையே தந்தது.

முதலில் கிருஷ்ணனும் அக்ரபூஜையைத் தனக்குச் செய்ததினால் விளைந்த எதிர்ப்பின் தாக்கங்களைக் குறித்துச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும்.  உண்மையில் வேத வியாசரின் முக்கியமான குறிக்கோள் இந்த அக்ரபூஜையில் எவ்விதத்தில் இருந்தது என்பதை எவரும் சரியாகப் புரிந்து கொள்ளவே இல்லை. அவர் கிருஷ்ணனைத் தான் அக்ரபூஜைக்கு அழைக்கப் போகிறார் என்னும் விஷயம் அவர் கிருஷ்ணனை நோக்கிச் செல்கையிலேயே அனைவருக்கும் தெரிய வந்தது. அந்த சபாமண்டபமே அமைதியில் ஆழ்ந்தது. வேத வியாசர் பல்லாண்டுகளாக ஆசிரமங்கள் தோறும் சென்று விஜயம் செய்து ஆரியக் கோட்பாடுகளைக் குறித்துக் கற்பித்து, ஆரியர்களையும் மற்ற ஆரிய அரசர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.ஸ்ருதி, ஸ்ம்ருதி மற்றும் தெய்விகமான வேதங்கள் அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் குலதெய்வமாகவும் விளங்கிற்று.  ஆசிரமங்கள் அனைத்துமே அநேகமாக சுயக் கட்டுப்பாட்டுக்கும், தவங்கள் செய்து வாழ்க்கையில் மேம்படவும் உதவின. இதைத் தான் அங்கே வசித்த பெரும்பாலான ஸ்ரோத்திரியர்கள் வியாசரின் வழிகாட்டுதலில் செய்து வந்தனர்.

வாழும் தெய்வீக மந்திரங்களான வேதங்கள் இவ்வுலகைப் போலவே மிகவும் பெரியதாகவும், அகண்டு, ஆழமாகவும் இருப்பதாகவும் வேத வியாசர் நம்பினார். அவற்றின் பொருளை அறிவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல என்றும் புரிந்து கொண்டார். ஆனால் உண்மையில் மக்கள் வாழும் வாழ்க்கையோ தனி மனிதனின் குறுகிய மனத்தைப் போல் இருந்தது. ஆகவே மனிதனின் பார்வையை விசாலமாக ஆக்கவேண்டி, தினம் தினம் அக்னி மூட்டி அந்த அக்னியில் ஆஹுதிகள் செய்து மந்திர கோஷங்கள் மூலம் மனித மனதை நிலைப்படுத்த முயன்றனர். விரைவில் ஆசிரமங்கள் மூலம் தார்மீக ரீதியிலும் ஆன்மிக ரீதியிலும் முன்னிலை பெற்று அனைவரையும் ஈர்த்தன. ஆசிரமவாசிகள் வேத மந்திரப் பிரயோகங்களின் மூலம் அக்னிக்கடவுளைப் பிரார்த்தித்து மக்களுக்கு புனிதமானதொரு அறவாழ்க்கைக்கு வழிகாட்டினார்கள். இதன் மூலம் பல கொடூரமான அரசர்களின் மனங்கள் மாற்றப்பட்டு நிம்மதியும் அமைதியும் நிறைந்த ஆட்சிக்கு வித்திட முடிந்தது.

ஒவ்வொரு சமயங்களிலும் காடுகளிலிருந்து ராக்ஷசர்கள் வெளியேறி ஆசிரமங்களையும் ஆசிரமவாசிகளையும் அழிக்க முயன்றனர். ஸ்ரோத்திரியர்களைத் தாக்கி அவர்கள் அக்னிக்குண்டத்தை நொறுக்கி அவர்களின் பூணூலை அறுத்து அவர்களைக் கொன்று பெண்களை மானபங்கப்படுத்தி என்று பல்வேறு விதங்களிலும் அவர்களுக்குத் தொந்திரவு அளித்தனர்.  ஆனால் ராஜசூய யாகத்தின் போது நடந்த சம்பவங்களின் மூலம் அனைவர் மனதிலும் உற்சாக ஊற்றுப் பெருக்கெடுத்தது.  கிருஷ்ணனின் சாகசங்களை அறிந்தோர் மனதில் அவன் மேல் பயபக்தியும் பிரமிப்பும் உண்டானது. அவனுடைய ஒவ்வொரு சாதனைகளையும் மக்கள் போற்றிப் பாடி வந்ததோடு அல்லாமல் அவன் சாதனைகளையே ஓர் தெய்விகமாகக் கருதி வணங்கி வந்தனர்.  எதிர்பாராவிதமாக கிருஷ்ணனுக்கு அக்ரபூஜை நடத்தப்பட்டபோது அவனுள்ளும் பல்வேறு விதமான பொறுப்புக்கள் தன்னைச் சூழ்ந்து விட்டதாகத் தோன்றியது. ஏனெனில் ஒரு சக்கரவர்த்திப் பதவியை விட அவனுக்கு அளிக்கப்பட்ட “தர்மகோப்தா”  “தர்ம ரக்ஷகன்” என்னும் பட்டம் மிகப் பெரியதும் பொறுப்புக்கள் நிறைந்ததும் ஆகும்.  அவனுடைய தர்மசாம்ராஜ்யம் அவனுக்கு வந்தாலும் அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்தது.  ஆனாலும் அவன் தன்னை வலிமை மிக்கவனாகவே உணர்ந்தான். ஏனெனில் அது அவன் மனதுக்கிசைந்த யாதவர்களால் மட்டும் அளிக்கப்படவில்லை. ஆரிய வர்த்தத்து அனைத்து ஆரியர்களும் மட்டுமில்லாமல் நாகர்கள், ராக்ஷசர்கள் இன்னும் சொல்லப் போனால் வேட்டுவ அரசர்களான நிஷாதர்களால் கூட ஆதரிக்கப்பட்டது.


No comments: