Tuesday, January 31, 2017

கண்ணன் வருவான், குருக்ஷேத்திரம், சௌபநாட்டுத் தலைநகரில்!

அவர்கள் மாட்ரிகோவட்டாவுக்குள் நுழைந்ததுமே அங்கே காணப்பட்ட பரந்து விரிந்த வீட்டையும் அந்த வீட்டின் சுவர்கள் ஆட்டுத் தோலால் அமைந்திருப்பதையும் கண்டு பிரத்யும்னன் ஆச்சரியம் அடைந்தான்.  அவர்கள் ஓர் பெரிய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  மிக ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த அறை. அவர்கள் எந்தத் திக்கில் சென்றாலும் அங்கே இருந்த பணியாட்கள் அவர்களை மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் மரியாதையுடனும் கவனித்துக் கொண்டார்கள்.  அன்றிரவு பிரத்யும்னனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும் ஒரு பெரிய அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறை அவர்களுக்கு விருந்தோம்பல் நடந்த சமூகக் கூடத்திற்குள்ளேயே அமைந்திருந்தது.

பிரத்யும்னன் தான் நன்கு உணவளிக்கப்பட்டுக் கொழுத்துச் செழித்த காட்டுப் பன்றியைப் போல் உணர்ந்தான்.  இப்படித் தனிப்பட்ட முறையில் தனக்கு அதிகக் கவனம் கொடுத்துக் கொண்டிருப்பது தன்னை முற்றிலும் கெடுப்பதற்காக என்று பிரத்யும்னன் புரிந்து கொண்டான். பிரத்யும்னன் மற்றும் அவனுடன் வந்தவர்கள் இன்னொரு அறையிலிருந்த ஒரு சிறிய நீச்சல் குளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அந்த அறைக்கு அப்போது யாருமே வராததால் அனைவரும் தங்கள் உடைகளைக் களைந்து நீராட ஆரம்பித்தனர்.  அப்போது அங்கே ஒரு பருத்த கொழுத்த வேலையாள் அந்த அறைக்குள் நுழைந்தான். வந்தவன் நேரே பிரத்யும்னன் அருகே வந்து வணங்கி விட்டுத் தன் இரு கரங்களையும் தட்டினான். உடனே ஏதோ அற்புதம் போல் ஆறு பெண்கள் உள்ளே நுழைந்தனர். பிரத்யும்னன் குளத்திற்குள் மீண்டும் பாய்ந்து நீந்த ஆரம்பிக்க அந்தப் பெண்களும் குளத்துக்குள் நுழைந்து அவனைப் பார்த்துச் சிரித்தனர். பிரத்யும்னன் வெறுப்பில் பின்னே சென்று விட்டான்.

குளித்து முடிந்ததும் வேலையாட்கள் அவர்களுக்கு உண்ண உணவும் குடிக்கப் பழச்சாறுகளும் கொண்டு வந்தனர்.  அதன் பின்னர் அவர்கள் தங்களுக்கு எனக் கொடுக்கப்பட்ட படுக்கைகளில் படுத்து உறங்க ஆரம்பித்தனர். தங்களிடமிருந்து வஜ்ரநப் விடை பெறு முன்னர் பிரத்யும்னன் அவனைப் பார்த்து, “உங்கள் வேலையாட்களால், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களால் எல்லாவிதமான சௌகரியங்களையும் செய்து கொடுக்க இயலுமா?” என்று கேட்டான். மேலாடை அணியாத அங்கிருந்த பணிப்பெண்கள் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.  அந்தப் பெண்கள் அனைவரும் அடிமைகள். தாசிகள். அவர்களில் சிலர் மட்டுமே குடும்பம் உள்ளவர்கள். ஆகவே பிரத்யும்னன் மீண்டும் வஜ்ரநபைப் பார்த்துச் சொன்னான். “க்ஷத்திரிய தர்மத்தில் அடிமைகளை ஆதரிப்பதில்லை. அடிமைகள் என எவரும் இல்லை.  இங்கே யாருமே க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதில்லை போலும்! உயர்குடிப் பிறப்பில் பிறந்த பெண்கள் உட்பட!” என்று கேட்டான்.

வஜ்ரநப் அதற்கு நக்கலாகச் சிரித்துவிட்டுச் சொன்னான். “இங்குள்ள பெண்களில் புனிதமானவள், கற்புள்ளவள் யார் என்று கண்டிபிடிப்பது கடினம். “ என்றவன் பிரத்யும்னனின் தோளின் மேல் தன்னிரு கரங்களையும் வைத்த வண்ணம்” நான் முன்னரே உன்னிடம் சொன்னேன். எங்களுடைய பழக்க, வழக்கங்கள் உனக்குப் பிடிக்காது என்று கூறினேன்.  ஆகவே இங்கு நடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடையாதே! எங்கள் பெண்கள் இப்படியெல்லாம் கண்டனங்கள் செய்வதை விரும்ப மாட்டார்கள்.” என்றவன் தன் குரலை மேலும் தழைத்துக் கொண்டு, “எங்கள் மன்னாதி மன்னருக்குச் சேவை செய்ய வேண்டித் தங்கள் பங்குக்குச் செய்ய வேண்டியதைச் செய்யாதவர்கள் தங்கள் உயிருக்குப் பயந்து வாழ வேண்டி இருக்கும்!” என்று கிசுகிசுப்பாகச் சொன்னான்.

பிரத்யும்னன் முகம் போன போக்கைப் பார்த்துவிட்டு அவன் மேலும் கூறினான். “ஒன்று உறுதியாகச் சொல்கிறேன். எல்லாமே இப்படி இருக்காது! இங்கே பல நூற்றுக்கணக்கான பெண்கள் இருக்கின்றனர். நல்லவர்கள்! அவர்களில் யாருமே இந்தப் பெண்களைக் குறித்து அவதூறாகவும் பேச மாட்டார்கள்.”

“அவர்கள் ஆண்களை எப்படி வழிக்குக் கொண்டு வருகின்றனர்?” என்று பிரத்யும்னன் கேட்டான்.  அதற்கு வஜ்ரநப் சிரித்த வண்ணம், “நம்மிடம் இருக்கும் ஆயுதங்களை விட வலிமையான ஆயுதம் அவர்களிடம் உள்ளது!” என்றான்.  பிரத்யும்னன் அதற்கு, “நம்மிடம் இல்லாத ஆயுதமா? அப்படி என்ன அவர்களிடம் உள்ள ஆயுதம்?” என்று கேட்டான்.  வஜ்ரநப் அதற்குச் சிரித்த வண்ணம், “விஷம், விஷம்! இந்த ஆண்கள் அனைவரும் அந்தப் பெண்களின் மடியில் படுக்கையில் நடக்கும்!” என்றான்.

“அதெல்லாம் என் வீரர்களிடம் நடக்காது!” என்ற பிரத்யும்னன், “ என் வீரர்களின் மன வலிமையையும் அவர்களிடம் தீரா நெருப்பாக எரியும் நம்பிக்கையையும் சிதைக்க நினைக்காதே!” என்றான்.

“நல்லது! உன் நம்பிக்கையை உன்னோடு பாதுகாத்து வைத்துக்கொள்! இளம் யாதவனே! பொக்கிஷம் போல் வைத்துக் கொள். பாதுகாத்துக்கொள்! ஆனால் எங்கள் இளம்பெண்களிடம் நீ கவனமாகவே இருந்தாக வேண்டும்.” என்றான் வஜ்ரநப்! வஜ்ரநபுக்கு பிரத்யும்னனை மிகவும் பிடித்து விட்டது. இவ்வளவு அழகான இளைஞன். நேர்மையானவனும் கூட.  மீண்டும் தன் குரலைத் தழைத்துக் கொண்டு வஜ்ரநப் சொன்னான். “ நீ ஓர் அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்த க்ஷத்திரியனாகத் தெரிகிறாய், இளைஞனே! என் குமாரனைப் போன்றவன் நீ!” என்று பாராட்டும் குரலில் தெரிவித்தான். வஜ்ரநப் சொன்ன விஷயங்களில் மனம் சிந்தனையில் ஆழ்ந்து போன பிரத்யும்னன் அதனால் பாதிக்கப்பட்டவனாகத் தனக்கென ஒதுக்கப் பட்ட அறைக்குச் சென்றான்.