Saturday, March 12, 2016

கரடிகளின் ராஜ்ஜியத்தில் நந்தலாலா! 2

“கரடி அரசரைச் சந்தித்து நட்புக் கொள்ளும் எண்ணம்! அதனால் தான் வந்திருக்கிறோம்.” என்றான் கண்ணன் மீண்டும். அதற்கு அந்தக் கரடி மனிதன் சிரித்தான். “ஓஹோ! கரடிகளின் அரசனைச் சந்திக்க வேண்டுமா உனக்கு? அப்படி எனில் இதோ நீ பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாய்!” என்ற வண்ணம் தன் நெஞ்சில் ஓங்கி ஓர் அடி அடித்துக் கொண்டான். “நான் தான் கரடிகளின் அரசன் ஜாம்பவான். நீ யாரப்பா?” என்று ஜாம்பவான் கேட்டார்.
“நான் கிருஷ்ணன், வாசுதேவக் கிருஷ்ணன், விருஷ்ணி குலத்தலைவரான வசுதேவரின் மகன்!” என்றவண்ணம் கிருஷ்ணன், “மாட்சிமை பொருந்திய கரடி அரசருக்கு என் வணக்கம்.” என்ற வண்ணம் கீழே குனிந்து ஜாம்பவானை வணங்கினான். அதைப் பார்த்த பாமாவும் அப்படியே செய்தாள். கண்ணன் மேலும் பேச ஆரம்பித்தான்.

“எங்கள் அரசர் மாட்சிமை பொருந்திய உக்ரசேனர், என்னுடைய தந்தை வசுதேவர், மற்றும் எங்கள் யாதவகுலத்தின் அனைத்துத் தலைவர்களும் உங்களை நான் சந்திக்க நேர்ந்தது குறித்துக் கூறும்போது மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் சார்பாகவும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களிடமும் நான் போய்ச் சொல்கிறேன்.” என்றான் கிருஷ்ணன். “ஆனால் அது நீ திரும்பினால் தான் அப்பனே!” என்றார் ஜாம்பவான். ஆனால் கிருஷ்ணன் அதை லட்சியம் செய்யவே இல்லை. “நம் நட்புக்கு அடையாளமாக என் ஆயுதங்களை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன், ஐயா!” என்ற கிருஷ்ணன் தன் ஆயுதங்களை ஜாம்பவானிடம் ஒப்படைத்தான். பின்னர் தன் வழக்கமான அனைவரையும் கவர்ந்திழுக்கும் புன்னகையுடன் இரு கைகளையும் கூப்பிக் கொண்டான். ஜாம்பவானுக்கு உள்ளூர ஆச்சரியம்! இப்படியான ஒரு நிகழ்வை அவர் இதுவரை பார்த்ததே இல்லை. நட்பு என்றால் ஆயுதங்களைக் கூடவா ஒப்படைப்பார்கள்? ஆனாலும் அவர் ஆயுதங்களை வாங்கிக் கொண்டு தன்னருகே இருந்த கரடி மனிதனிடம் அவற்றை ஒப்படைத்தார். பின்னர் அவர்களை அங்கிருந்த ஒரு செங்குத்தான பாதை வழியாக உள்ளே அழைத்துச் சென்றார்.

அவர்கள் உள்ளே நுழைகையில் அதே இசைக்கும் குரல் வானம்பாடியைப் போல் இசைத்தது. ஆனால் கொஞ்சம் தூரத்திலிருந்து அந்தக் குரல் கேட்டது. அதைக் கேட்ட கிருஷ்ணா அதே போல் இசையைத் தன் புல்லாங்குழல் மூலம் இசைத்தான். அதைப் பார்த்த ஜாம்பவான் கிருஷ்ணனைப் பார்த்துச் சிரித்த வண்ணம் அவன் கையிலிருந்து புல்லாங்குழலைப் பிடுங்கித் தான் இசைக்கப் பார்த்தார். ஆனால் அதிலிருந்து காற்றுத் தான் வந்ததே தவிர இசை வரவில்லை. அதைத் திரும்பவும் கிருஷ்ணனிடம் கொடுத்துவிட்டுக் கரடி உறுமுவதைப் போன்ற குரலில் சந்தோஷமாகச் சிரித்தார். அந்த இருகுரலிசை நின்றதும், ஜாம்பவான் மேலுள்ள மரத்தின் உச்சியைப் பார்த்தார். அங்கே தான் அந்தப் பிசாசுப் பெண் பாடிக் கொண்டிருந்தாள். அங்கே பார்த்த ஜாம்பவான் சந்தோஷம் தாங்க முடியாமல் க்ரீச் எனச் சத்தம் கொடுத்தார். அதே போன்ற சப்தம் அங்கிருந்தும் வந்தது.
சற்று நேரத்தில் அவர்கள் ஒரு பீடபூமிக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கிட்டத்தட்ட 40, 50 குகைகள் இருந்தன. அவற்றில் சிறிய, பெரிய கரடிகள் பல வசித்து வந்தன. அவை அனைத்தும் சற்றும் கவலையும், பயமும் இன்றி அங்குமிங்கும் உலாவின.

அந்தப் பீடபூமி ஒரு தனி உலகமாய்க் காட்சி அளித்தது கண்ணனுக்கு! சுற்றிலும் பெரிய பெரிய மலைச் சிகரங்கள் அரணாகப் பாதுகாத்தன. இன்னொரு பக்கமோ மிகப் பாதாளமாகப் பாதாள உலகமே அங்கு இருக்கிறதோ என்னும் வண்ணம் அதலபாதாளமாகக் காட்சி அளித்தது. இதைப் பார்த்த கண்ணன் அங்கே வரக்கூடிய ஒரே வழி சூரியனின் அந்தப் புனிதமான குகை வழி ஒன்று தான் என்பதைப் புரிந்து கொண்டான். அங்கே வந்து சேர்ந்து விட்டால் வெளி உலகத் தொடர்பே அடியோடு அற்று விட்டாற்போலவும் இருந்தது. அவர்கள் அந்தப் பீடபூமியின் மையப்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அங்கே சுமார் அறுபது, எழுபது நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இருந்தனர். அவர்கள் பார்க்கவே மிகக் கொடூரமாகக் காட்சி அளித்தனர். காட்டு மிராண்டிகள் போல் இருந்தனர். அங்கே அனைவருக்கும் பொதுவாக ஓர் இடத்தில் நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. அனைவரும் அந்த நெருப்பைச் சுற்றி அமர்ந்து இருந்தனர். அவர்களில் பெரியோர்களான ஆண்கள் கரடித் தோலை ஜாம்பவானைப் போல் போர்த்தி இருந்தனர். மற்றச் சிறியவர்களும், நடுத்தர வயதைச் சேர்ந்தவர்களும் நரித்தோலை ஆடையாக அணிந்திருந்தனர். எல்லாப் பெண்களும் தங்கள் உடலை மூடும் வண்ணம் நீண்ட கூந்தலை வளர்த்து இருந்தனர். அவர்கள் இடுப்பில் நரித்தோல் ஆடையாகக் காணப்பட்டாலும் மார்பின் பெரும்பகுதி கூந்தலாலேயே மூடப்பட்டிருந்தது. சிறு குழந்தைகள் அங்கிருந்து குட்டிக்கரடிகளைத் துரத்திக் கொண்டு அவற்றுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

எரிந்து கொண்டிருந்த நெருப்பில், பன்றி இறைச்சி, நரி மற்றும் முயல்களின் இறைச்சிகள் வெந்து கொண்டிருந்த மணம் அந்தச் சுற்றுப்புறத்தில் தாக்கியது. அதைத் தவிர உண்ணக்கூடிய வேர்ச்செடிகள், காய்கள், கனிகள், கொட்டைகள் பலவும் உணவுக்காகத் தயார் ஆகிக் கொண்டிருந்தது. பழங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. கொட்டைகளும், காய்களும் வேகும் மணம் மூக்கைத் துளைத்தது. அனைவரும் தங்களுக்குள்ளாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சு ஜாம்பவானின் வரவால் தடைப்பட்டது. அதோடு தங்களுக்குச் சிறிதும் பழக்கமில்லாத இரு வெளிநபர்கள் ஜாம்பவானோடு வருவதையும் அவர்கள் பார்த்தார்கள். ஒரு சிலர் தங்கள் இடத்திலிருந்து எழுந்து வருபவர்கள் யார் என்பதை இன்னும் கொஞ்சம் கவனமாக உன்னிப்பாகப் பார்த்தனர். அவர்களுக்குப் பின்னால் பல கரடிகள் தங்கள் உணவுக்காகக் காத்துக் கொண்டு இருந்தன. சில கரடிகளின் வாய் ஒரு கெட்டியான நூலால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது. அவை அதிகம் கடிக்கும் என்பதால் அப்படிக் கட்டி இருக்கலாம். இதைப் பார்த்த கண்ணனுக்கு அங்கே மனிதர்களும், மிருகங்களுமாகச் சேர்ந்து ஓர் அற்புதமான நட்பு உலகைச் சித்திரித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அப்போது கிருஷ்ணனும், பாமாவும் அங்கே சற்றுத் தள்ளி எரிந்து கொண்டிருந்த நெருப்புக்கு அருகே சாத்யகி அமர்ந்திருந்ததைக் கண்டார்கள். இருவர் மனமும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தாலும் சாத்யகியின் கண்களில் தெரிந்த எச்சரிக்கை அவர்களைக் கட்டிப் போட்டது. அந்த எச்சரிக்கை அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று சொல்கிறது என்பதைக் கண்ணனும் , பாமாவும் புரிந்து கொண்டனர்.

அந்தக் கரடி அரசன் ஜாம்பவான் அவர்களை அங்கே நெருப்பினருகே இருந்த மேடையில் அமர்ந்திருந்த ஓர் இளைஞன் அருகே அழைத்துச் சென்றார். அவன் குட்டையாகவும் அதே சமயம் வலிமை படைத்தவனாகவும் இருந்தான். கறுநிறத் தாடியுடன், கரடிப் பற்களால் ஆன மாலை ஒன்றை அணிந்திருந்தான். கரடித்தோலை அணிந்திருந்தான் ஜாம்பவானைப்போல் கரடி முகமூடியுடனும் காணப்பட்டான். ஆனால் ஜாம்பவானைப் போல் கவண் கற்கள் எறியும் ஆயுதம் ஏதும் வைத்திருக்கவில்லை. தலைக்கவசத்தில் 2 கரடிகளின் வாலை இணைத்துக் கட்டப்பட்டிருந்தது. அவன் கண்களின் மேல் பாகம் சிவப்பு வண்ணம் பூசப்பட்டிருந்ததோடு, அவன் தோளில் இருந்து மத்தளம் போன்றதொரு வாத்தியம் இணைத்துக் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது.


3 comments:

வல்லிசிம்ஹன் said...

அபூர்வ தேசம். கண்ணன் ரத்னமாலையில் வரவில்லையே என்று கவலைப் பட்டேன் கீதா. இங்கே வந்தால் இரண்டு அத்தியாயம் மிஸ் பண்ணி இருக்கும். இவ்வளவு விவரங்களோடு சமீப காலத்தில் எதுவும் படித்ததில்லை. இதுவில் நடுவில் ஒரு பிசாசு வேறு.

ஸ்ரீராம். said...

இதெல்லாம் நான் அறியாதவை. சுவாரஸ்யத்துடன் தொடர்கிறேன்.

sambasivam6geetha said...

ரத்னமாலையில் வரிசையாக எல்லாமே போட்டிருக்கேன் வல்லி. ஒரே தலைப்பில் இருப்பவைகளை ஒருவேளை தவற விட்டிருப்பீங்க! :)))

நன்றி ஶ்ரீராம்.