Wednesday, June 29, 2016

ஆசாரிய விபூதியின் குற்றச்சாட்டு!

“வணக்கத்துக்கு உரிய ஆசாரியரே! இன்றைய காலகட்டத்தில் ஸ்ரோத்ரியர்கள் முன்னைப் போல் வைராக்கிய சித்தம் பூண்டவர்களாயும், வேதங்களில் சொல்லப்படும் சாஸ்திர சம்பிரதாயங்களையும், நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்வதிலும் வேதம் சொல்லும்படியான வாழ்க்கையை வாழ்வதிலும் சிரத்தையுடன் ஈடுபட்டிருக்கின்றனரா? எத்தனை ஸ்ரோத்ரியர்கள் பிரமசரிய விரதத்தை முறையாகக் கடைப்பிடிக்கின்றனர்? அதில் எத்தனை பேர் கிருஹஸ்தாஸ்ரமத்துக்குச் செல்கின்றனர்? செல்பவர்கள் அற வாழ்க்கையை வாழ்கின்றனரா? வேதம் சொல்லி இருக்கும் நீதியையும், நியாயத்தையும் கடைப்பிடித்து அதன்படி தங்கள் இல்லற வாழ்க்கையை வாழ்கின்றனரா? தர்மத்தின் பால் வாழ்க்கையை நடத்தி வருபவர்கள் எத்தனை பேர்? பிரமசாரியாகத் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர்களில் பிரமசரிய விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பவர்கள் எத்தனை பேர்? திருமணம் செய்து கொள்பவர்கள் அனைவரும் அந்தத் திருமண பந்தத்தின் புனிதத்தைக் காப்பாற்றுகின்றனரா?”

“ஆம், நீ இப்படித் தான் பேசுவாய்! ஏனெனில் சஹஸ்ரார்ஜுனனின் கொடூரம் ஆரம்பித்து எங்கும் போர் மூட்டமாக இருந்த போது நீ பிறக்கவே இல்லை! எத்தனை ஸ்ரோத்ரியர்கள் அமைதியான இல்லறத்தில் ஈடுபட்டிருந்தனர். அனைத்தும் அவனால் ஆட்டம் கண்டது!” என்றார் ஆசாரிய தேவயானர். “ஆம், ஐயா! உண்மைதான்! நான் அப்போது பிறக்கவில்லை தான்! ஆனால் அவர்கள் எந்த மண்ணில் புதைக்கப்பட்டார்களோ அதிலிருந்தே வீறு கொண்டு எழுந்து வரவேண்டாமா? மீண்டும் அந்த மண்ணை வளப்படுத்த வேண்டாமா?” அப்போது குறுக்கிட இருந்த ஆசாரிய விபூதியை பிரமிஷ்டர் தன் கையால் சைகை செய்து தடுத்தார். த்வைபாயனரைப் பார்த்து, “நீ எப்படி இதைச் சரி செய்யப் போகிறாய்? இந்த வேர்களில் பிடித்திருக்கும் விஷக்கிருமிகளை ஒழித்து இவற்றைக் காக்க நீ என்ன ஏற்பாடு செய்யப் போகிறாய்?” என்று கேட்டார்.

“ஐயா, என்னுடன் கழித்த நாட்களில் வருடக் கணக்காக இதைக் குறித்து என் தந்தையும் நானும் பேசியுள்ளோம். கடைசியில் அவர் கண்டு பிடித்தது என்னவெனில் முற்றிலும் புதிய ரத்தம் பாய்ச்சிய, புத்தம்புதிய இளம் ஸ்ரோத்திரியர்கள் மீண்டும் புத்தம்புதிய வைராக்கிய சிந்தையுடன் கூடிய தர்மவாழ்க்கையை மேற்கொண்டால் எல்லாம் சரியாகும் என்பதே அவர் முடிவான கருத்து! தர்மத்தின் பாதுகாவலர்களாக அவர்கள் வாழ வேண்டும்.”

“ஹூம், வேதங்கள், வேதங்கள், வேதங்கள், ஒன்றுக்கும் உதவா வேதங்கள்!” ஆசாரிய விபூதி ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தார். அவர் எப்படியேனும் இந்த இளைஞனின் பேச்சை நிறுத்தி சம்பாஷணையை முடிக்க எண்ணினார். அதற்கான குறுக்குவழியை எல்லாம் கையாண்டார். ஆனால் கிழவர் பிரமிஷ்டர் இப்போதும் குறுக்கிட்டார்! “எப்படி? எப்படி நீ அதைச் செய்து முடிப்பாய்?” என்று மீண்டும் த்வைபாயனரிடம் கேட்டார். “ஸ்ரோத்ரியர்கள் ஓர் மாபெரும் தவ வாழ்க்கையில் ஈடுபட வேண்டும். கடுமையான சுயக் கட்டுப்பாடுகளோடு இருக்க வேண்டும். அது மட்டும் போதாது; வேதங்களில் அவை சொல்லும் நியாய, அநியாயங்களில் அவற்றின் உள்ளார்ந்த பொருளைப் பூரணமாக அறிந்தவர்களாக இருத்தல் வேண்டும். அவற்றில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் ஸ்ரோத்ரியர்கள், க்ஷத்திரியர்களையும், வைசியர்களையும் மற்றவர்களையும் இன்னும் யாரெல்லாம் வளங்களையும் முன்னேற்றத்தையும் விரும்புகின்றனரோ அனைவரும் ஒன்று கூடி ஓர் புதிய உலகைப் படைக்கலாம்.”

“அவர்கள் தங்கள் லட்சியத்தை அடைவதற்கான வழி எப்படி? அதை விளக்கமாகச் சொல் எனக்கு!” பிரமிஷ்டர் மீண்டும் கேட்டார். கிழவரின் உறுதியும் பிடிவாதமும் கண்டு ஆசாரிய விபூதி அவர்களுக்கும் மற்ற ஸ்ரோத்ரியகளுக்கும் எரிச்சலாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லை! ஏனெனில் கிழவர் தனக்கு ஒரு விஷயம் அல்லது ஓர் நபரை மிகவும் பிடித்து விட்டால் எளிதில் அவர்களை விடமாட்டார். முழு விஷயத்தையும் அவர்கள் மூலம் தெரிந்து கொள்ள விரும்புவார். த்வைபாயனர் பேச ஆரம்பித்தார்.

“ஐயா, நான் நம்புவது என்னவெனில், “ கொஞ்சம் நிறுத்திய த்வைபாயனர் அனைவர் முகத்தையும் பார்த்துக் கொண்டார். மேலே தொடர்ந்து, “வாஜ்பேய யக்ஞம் நடக்க வேண்டும், சக்கரவர்த்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த யக்ஞத்தை ஆசாரிய விபூதி அவர்கள் நடத்தித் தர வேண்டும். அதன் மூலம் தர்மக்ஷேத்திரம் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு தர்மத்தின் ஊற்றுக்கண்ணாகச் செயல்படும். அனைத்துக்கும் ஆதாரமாகவும் அனைத்துக்கும் மையமாகவும் தர்மக்ஷேத்திரம் இருக்கும். ஒவ்வொரு ஸ்ரோத்திரியனின் மனமும், அவ்வளவு ஏன், ஒவ்வொரு ஆண், பெண்ணின் மனமும் இதன் மூலம் தூண்டு விடப்படும். க்ஷத்திரிய தேஜஸ் அனைத்தும் பிரம தேஜஸால் கவசம் போல் காக்கப்படும். இத்தனையும் ஆசாரிய விபூதி அவர்களின் தலைமையில் நடைபெறப்போகும் வாஜ்பேய யக்ஞத்தால் ஏற்படும்.” என்று முடித்தார் த்வைபாயனர்.

“நீ இன்னமும் சின்னஞ்சிறு பையன் தான்!” என்றார் தேவயானர் சற்றும் பொறுமையின்றி! “இப்போதுள்ள ஸ்ரோத்திரியர்களின் மனோநிலை மாற வேண்டிய அவசியம் ஏதும் இல்லை! அதற்கான சிறு தேவையும் இல்லை!” என்றார் கோபமாக. ஆசாரிய விபூதியோ கோபமாகச் சீறினார்! “த்வைபாயனா! உன் பார்வையில் எல்லாமே மாறுபடுகின்றன. நீ என்ன நினைக்கிறாய் எனில், இந்த வாஜ்பேய யக்ஞத்தை ஓர் தலை சிறந்த அதர்வனோடு சேர்ந்து நானும் செய்து முடித்தால் தான் எல்லாம் நன்மையாக முடியும் என்பது உன் கருத்து! உன்னுடைய திட்டம் அப்படித் தான் இல்லையா?” என்று கோபமாகக் கேட்டார். மேலும் தொடர்ந்து ஏளனமாக, அலட்சியம் மீதூறும் குரலில், “இளைஞனே! நீ புதுமையாக நினைக்கும் உன் ஆடம்பரமான எண்ணங்களை உன்னுடனேயே நிறுத்திக் கொள்! நான் மட்டும் ஓர் அதர்வனோடு சேர்ந்து வாஜ்பேய யக்ஞத்தை நடத்திக் கொடுத்தேன் எனில் தர்மம் தலைகீழாகப் புரண்டு விடும்! தர்மமே அற்றுப் போய்விடும்! தெரிந்து கொள்! குழப்பம் தான் மிஞ்சும்!” என்று மேலும் சீறினார். மேலும் எழுந்து செல்லப் போவதன் அறிகுறியாகத் தான் ஆசனத்திலிருந்து எழுந்தும் விட்டார்.

அவரைக் கைகூப்பித் தடுத்தார் த்வைபாயனர். “ஆசாரியரே, கோபம் வேண்டாம். தயை கூர்ந்து ஆசனத்தில் அமருங்கள்!” என்று வேண்டிக் கொண்டார். மேலும் தொடர்ந்து, “ஐயா, நீங்களும் தலை சிறந்த தேர்ந்த அதர்வத் தலைவர் ஒருவருமாகச் சேர்ந்து இந்த யக்ஞத்தைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தால் அது வருங்காலத்துக்கும், நம் பின்னால் வருவோருக்கும் உற்சாகத்தைக் கொடுப்பதோடு புதியதொரு பாரம்பரியத்தையும் உருவாக்கும்.” என்றார் த்வைபாயனர். “குருட்டுத் தனமான ஊகங்களில் மனதை ஈடுபடுத்த வேண்டாம்! இதெல்லாம் நடக்கக் கூடியவையே அல்ல!” என்ற வண்ணம் அலட்சியமாகப் பேசிய ஆசாரிய விபூதி தன் தந்தையைப் பார்த்து எழுந்து செல்லலாம் என்னும் பாவனையில் தலையை அசைத்தார். ஆனால் கிழவர் விடவில்லை! “உனக்கு அதர்வ வேதம் குறித்து என்னவெல்லாம் தெரியும்? எவ்வளவுக்கு நீ அறிவாய்?” என்று மேலும் பேச்சைத் தொடர்ந்தார். தன்னைத் தூக்கி உள்ளே அழைத்துச் செல்ல இருந்த விபூதியைத் தள்ளி நிற்கச் சொல்லியும் உத்தரவிட்டார்.

“வாஜ்பேய யக்ஞம் முடிவடைந்ததும், நான் அதர்வ வேதத்தை முழுவதுமாகக் கற்றுத் தேற வேண்டும், அதற்கேற்ற நல்ல குருவும் கிடைக்கவேண்டும்!” என்று அடக்கத்துடன் கூறினார் த்வைபாயனர். அதற்குள்ளாக ஆசாரிய விபூதி குறுக்கிட்டு, “அதர்வ வேதத்தை வேதங்களின் மற்ற மூன்று தொகுதிகளோடு இணைக்கும் முயற்சிக்கு நான் துணை போகவே மாட்டேன்! இப்போதும் இல்லை! இனி எப்போதும் இல்லை, இல்லை, இல்லை!” என்று வலியுறுத்தும் தோரணையில் இரைச்சலாகக் கூச்சல் போட்டார். பின்னர் தன் தோளில் கிடந்த உத்தரீயத்தை ஒரு சீறலுடன் ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு மாற்றிப் போட்டுக் கொண்டு தன் தகப்பனாரைத் தூக்குவதற்காகக் குனிந்தார். பின்னர் திடீரென நினைத்துக் கொண்டவராகத் தலையைத் தூக்கிக் கடுமையுடனும் குரோதத்துடனும் த்வைபாயனரைப் பார்த்து, “உனக்கு வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன். நீ அனைத்து ஸ்ரோத்ரியர்களையும் கவரும் விதமாக அதிலும் ஆரியவர்த்தத்திலேயே சிறந்த ஸ்ரோத்திரியனாக உன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிறாய்! உன்னை நிலை நிறுத்தி கொள்வதற்காக இப்படி அனைவர் கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் ஓர் பின்னணியை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறாய்!” துச்சமாக த்வைபாயனரைப் பார்த்தார் ஆசாரிய விபூதி! இந்தக் கருத்து த்வைபாயனரின் உள்ளத்தை மிக மோசமாகத் தாக்கி விட்டது.

ஆசாரிய விபூதியின் குற்றச்சாட்டு சாட்டை அடியாக விழுந்தது த்வைபாயனருக்கு. தலையைக் குனிந்து கொண்டார். சற்று நேரம் எதுவும் பேசாமல் நினைவுகளில் ஆழ்ந்தார். அப்போது அவர் உடலே நடுங்கியது. திடீரென அவர் உடல்நிலையிலும் மாற்றங்கள் தெரிந்தன. அவர் கண்கள் கண்ணீரைச் சுமந்தன.  தோள்கள் குறுகிவிட்டன. கண்களில் தெரிந்த புத்திசாலித்தனம், அதன் பேரொளி மறைந்தாற்போல் காணப்பட்டது. உதடுகள் துக்கத்தில் நடுங்கின. அனைத்து நம்பிக்கையையும் இழந்தவராகப் பார்க்கவே பரிதாபமாகக் காட்சி அளித்தார். உடல் கூட்டிலிருந்து உயிர் பிரிந்தவர் போலக் காட்சி அளித்தார். அங்கே பரிபூரண அமைதி நிலவியது.