Monday, June 6, 2016

மன்னன் கண் திறந்தான்!

ராஜகுருவான ஆசாரிய விபூதி என்பார் அங்கே ஓர் ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். கைகளில், கழுத்தில் எண்ணற்ற ஆபரணங்கள். கைகளின் எல்லா விரல்களிலும் மோதிரங்கள். கழுத்தில் கனமானதொரு சங்கிலி! அவர் அரசகுரு என்பதை அறிவிக்கும் வண்ணம் ஓர் பட்டுத்துணியிலான உருமால்! அவரும் சளைத்தவர் அல்ல. மந்திர வித்தையில் தேர்ந்தவரே! ஆனாலும் கொஞ்சம் இகழ்ச்சியோடும், கொஞ்சம் வெறுப்போடும் உள்ளே நுழைந்த இளம் துறவியைப் பார்த்தார். இவனால் என்ன செய்ய முடியும்? நாம் செய்ய முடியாத அதிசயத்தை இவன் செய்துவிடுவானா? அதையும் தான் பார்ப்போமே!

 த்வைபாயனர் அனைத்தையும் கண்டும் காணாதவராகத் தன் வேலையிலேயே மும்முரமானார். ஊழியர்கள் கொண்டு வந்த கொடுத்த பொருட்களை வைத்துச் சிறிய அக்னிகுண்டம் ஒன்றை உருவாக்கினார். அதை மன்னனின் படுக்கைக்குச் சற்று அருகேயே நிர்மாணித்தார். பின்னர் அக்னியை உருவாக்கி அக்னிதேவனுக்கு வழிபாடுகள் செய்து ஆஹுதி கொடுத்தார்.
பின்னர் அங்கே எரிந்து போய்ச் சாம்பலானவற்றை எடுத்துக் கைகளில் வைத்த வண்ணம் மன்னன் அருகே வந்தார். அந்தச் சாம்பலை மன்னனின் நெற்றி, உடல், மார்பு, கைகள், கால்கள், கன்னங்கள் எனப் பூசினார். பூசுகையிலேயே அவருடைய வாய் மந்திரங்களைச் சரியான உச்சரிப்பில் உச்சரித்துக் கொண்டிருந்தது.

மஹா அதர்வ ரிஷி பைலருக்கு எப்படிச் செய்தாரோ சற்றும் பிசகாமல் அப்படியே இங்கே மன்னனுக்கும் செய்தார். முதலில் வேதத்தின் முதல் மூன்று தொகுப்புக்களிலிருந்த மந்திர வித்தைக்கான மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தவர், பின்னர் மஹா அதர்வ ரிஷி பைலரை எழுப்புவதற்குச் சொன்ன மந்திரங்களைச் சொன்னார். மெல்ல மெல்ல அவருடைய மந்திர சப்தம் அந்த அறையை நிறைத்தது. எங்கும் ஓர் பவித்திரமான உணர்வு சூழ்ந்து கொள்வதை அனைவருமே உணர்ந்தார்கள். அடுத்து யமதர்மனை வழிபட்டு அவனிடம் பிரார்த்தனைகள் செய்து கொண்ட த்வைபாயனர் தன் பையிலிருந்து மந்திர மூலிகைகளை எடுத்தார். அவற்றிலிருந்து சாறு பிழிந்து கொஞ்சம் போல் நீர் கலந்து மன்னனின் உதடுகளைப் பிரித்து மெல்ல மெல்ல அவன் வாயில் புகட்டினார். கைகள் இந்த வேலைகளைச் செய்ய அவர் மனமும் வாயும் ஒருமித்து மந்திர வித்தைக்கான மந்திரங்களைச் சொல்வதிலே ஈடுபட்டிருந்தது. அவர் அந்த மந்திரங்களின் உண்மைத் தன்மையை முற்றிலும் உணர்ந்து மனப்பூர்வமாக ஒன்றிப் போய் மந்திரங்களைச் சொல்லச் சொல்ல அந்த அறையின் ஒட்டு மொத்த சூழ்நிலையுமே மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தது.


அந்த அறைக்குள் நுழைந்த சூரிய ஒளியே புதியதொரு தேஜஸோடு பிரகாசிக்க ஆரம்பித்தது. மீண்டும் அக்னிகுண்டச் சாம்பலை எடுத்து மன்னனின் உடல் முழுதும் பூசி விட்டார் த்வைபாயனர். அவர் குரல் அந்த அறையையே நிறைக்க அனைவரும் அந்த மந்திரங்களால் கட்டுண்டவர்கள் போல் வாய் திறக்காமல் அப்படியே நின்றனர். அமர்ந்திருந்தவர்கள் சற்றும் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். த்வைபாயனரின் கண்கள் அசையாமல் சக்கரவர்த்தி ஷாந்தனுவையே பார்த்துக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து தெரிந்த ஒளி மன்னனை எப்போது வேண்டுமானாலும் எழுப்பி விடும் என்பது போல் இருந்தது. த்வைபாயனரின் கண்களையும் அவற்றிலிருந்து பெருகிய ஒளி மன்னனை நோக்கிப் பாய்ந்ததையும் அது மன்னனை எப்போது வேண்டுமானாலும் எழுப்பி விடும் என்பதையும் மஹாராணி சத்யவதியால் புரிந்து கொள்ள முடிந்தது.

 ஏனெனில் அவள் தன் மகனின் இந்தச் சக்தியைக் குறித்து ஏற்கெனவே அறிவாள். அவள் மனம் பின்னோக்கிச் சென்றது. த்வைபாயனர் ஆறு வயதுக் குழந்தையாக இருக்கையில் கல்பியில் அவளோடு இருக்கும்போது யமுனைக்கரையில் வந்து நின்று கொண்டு தன் தந்தையை அழைப்பார் அல்லவா? அப்போது அவர் முகமும் கண்களும் இப்படித் தான் ஜொலித்தன! தன் முழுமனதோடு தன் தந்தையை அங்கே வந்து தன்னை அழைத்துச் செல்லும்படி த்வைபாயனர் விடுத்த அழைப்புக் குரல் எப்படி அவர் தந்தையின் காதுகளில் போய் விழுந்து அவரும் கல்பிக்கு வந்து த்வைபாயனரை அழைத்துச் சென்றாரோ அதே போல் இப்போதும் நடக்கப் போகிறது என்று சத்யவதி உறுதியாக நம்பினாள்.


எல்லாருடைய கண்களும் த்வைபாயனரின் மேல் பதிந்திருந்தன. அவர் உடல் சற்று நேரத்தில் விரைப்பாகி விட்டது. தன் முழு சக்தியையும் பிரயோகித்துத் தன் குரலில் கொண்டு வந்திருப்பதைப் போல் காணப்பட்டார் அவர். அவர் உடலின் சக்தியும் உள்ளத்தின் பலமும் ஒன்று சேர்ந்து அந்த மந்திரப் பிரயோகங்கள் மூலம் மன்னனுக்குப் போய்ச் சேருகின்றன என அனைவருக்கும் புரிந்தது. தன் ஒருமித்த சக்தியனைத்தையும் கண்களில் கொண்டு வந்த த்வைபாயனர் அந்த ஒளி விடும் கண்களில் வீசும் ஒளிரேகைகள் மூலம் மன்னனின் உடலுக்குள் அவற்றைப் பாய்ச்சி அவனைத் தன்னிலைக்குக் கொண்டு வர முயல்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டனர். மந்திர சப்தம் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. அனைவரும் மூச்சுக்கூட விடாமல் அடுத்து என்ன என்று பார்த்துக் கொண்டிருந்தனர். ஏதோ அதிசயம் நடக்கப் போகிறது என்பதை அனைவரும் உணர்ந்தார்கள்.


மன்னன் அசைவின்றிக் கிடந்தான். மந்திர சப்தங்கள் உச்சஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்தன. அனைவரின் கண்களும் மன்னன் மேலும் த்வைபாயனர் மேலும் மாறி மாறிச் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென மன்னனின் கண் இமைகள் படபடத்தன. கண்ணுக்குள்ளே கருமணிகள் உருண்டன. அதுவரையிலும் மூச்சுவிடுவதற்குப் போராடிக் கொண்டிருந்த மன்னனின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது. ஆனால் இன்னமும் கண்களைத் திறக்கவில்லை! என்றாலும் இப்போது அவன் மயக்கத்தில் இல்லை என்பதையும் நீண்ட ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறான் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆயிற்று!

மீண்டும் ஒருமுறை அக்னிச் சாம்பல் மன்னன் உடலில் பூசப்பட்டது. மணிமந்திர  ஔஷதம் மன்னன் வாயில் புகட்டப்பட்டது. அப்போது மன்னன் லேசாகக் கண்களைத் திறந்தான். சுற்றும் முற்றும் பார்த்த அவன் கண்கள் காங்கேயனின் மேல் வந்து நிலைத்தன. பின்னர் அசதி தாங்காமல் அந்தக் கண்கள் தானாக மூடிக் கொண்டன.  ஆயினும் மன்னன் மீண்டும் வலுக்கட்டாயமாகத் தன் கண்களைத் திறந்து தன் படுக்கைக்கு அருகே அமர்ந்திருக்கும் மஹாராணி சத்யவதியைப் பார்த்தான். அவளைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலை அசைத்தான். பின்னர் மீண்டும் கண்களை மூடியவன் அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் என்பது அவனுடைய சீரான மூச்சிலிருந்து தெரிந்தது.


அன்றைய தினத்துக்கான மந்திர ஓதல் முடிவடைந்தது. த்வைபாயனர் மனதுக்குள் சந்தோஷத்துடன் சம்பிரதாயமான முறையில் அக்னி குண்டத்து நெருப்பை அணைத்தார். தன்னுடைய தண்டத்தையும் சுரைக் குடுக்கையையும் எடுத்துக் கொண்டார். தன் கண் பார்வையினாலும், சைகைகளினாலும் மஹாராணியிடம் விடைபெற்றுக் கொண்டவர் அப்படியே சைகைகளின் மூலமே காங்கேயனிடமும், சித்திராங்கதன், விசித்திர வீரியன் ஆகியோரிடமும் விடைபெற்றுக் கொண்டார். அறையை விட்டு மெல்ல வெளியேறினார். மக்கள் அனைவருக்கும் அரண்மனையில் நடந்த இந்த அதிசயம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட அனைவரும் மாளிகை வாயிலில் கூடினார்கள்.

அரண்மனையை விட்டு வெளியேறிச் சென்று கொண்டிருந்த இளம் துறவியைப் பார்த்து ஆவலுடனும் மரியாதையுடனும் நமஸ்கரித்தார்கள். அனைவரும் மிக்க மரியாதையுடன் அவரைப் பார்த்து வணங்கினார்கள். ஆனால் துறவியோ நடந்த நிகழ்ச்சிகளினால் மிகவும் களைத்துப் போயிருந்தார். அவர் உடலிலிருந்த சக்தி அனைத்தையும் இழந்தவர் போல் காணப்பட்டார். அதோடு இல்லாமல் நடந்த அதிசயத்தினால் அவருமே வாயடைத்துப் போயிருந்தார். அங்கு கூடி நின்ற கூட்டத்தைக் கூடக் காணாமல் அதைப் பற்றிய சிந்தனையே சிறிதும் இல்லாமல் தன் தலையைக் குனிந்து கொண்டு மனதிலும் உடலிலும் அடக்கம் நன்கு தெரியத் தான் தங்கி இருந்த கோவில் வளாகத்தை நோக்கி நடந்தார்