Tuesday, September 27, 2016

சத்யவதியின் கவலை!

சத்யவதி என்றேனும் ஓர் நாள் பாண்டு தன் வனவாசத்தை விட்டு விட்டு நாடு திரும்பி மீண்டும் ஹஸ்தினாபுரத்தின் அரண்மனைப் பொறுப்பையும் இந்தக் குரு வம்சத்தின் பாரம்பரியமான சாம்ராஜ்யத்தையும் ஏற்றுக் கொள்ளப் போகிறான் என்றே நம்பி வந்தாள். பாண்டுவின் வரவுக்காகக் காத்திருந்தாள். ஆனால் இவ்வளவு இளம் வயதில் பாண்டு இறப்பான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. மனம் மிகவும் நொந்து போய் வாழ்க்கையே வெறுத்துப் போய் என்ன செய்வது என்று தெரியாமல், புரியாமல் திகைத்திருந்தாள். அதோடு ஹஸ்தினாபுரமோ உட்பகையாலும் பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகளாலும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. பாண்டு திரும்பி வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்று இவற்றை எல்லாம் ஓர் ஒழுங்கு செய்வான் என்று எதிர்பார்த்திருந்த அவள் நம்பிக்கைகள் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டன. அவள் இத்தனை நாட்கள் கட்டிக் காத்து வந்த அவள் மனோ தைரியம் அவளை விட்டு அகன்றது. அவள் நோய்வாய்ப்பட்டுப் படுத்துவிட்டாள். இதைக் கண்டே பிதாமகர் பீஷ்மர் ஆசாரியர் வேத வியாசரை ஒரு முறை ஹஸ்தினாபுரம் வந்துவிட்டுச் செல்லும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பேரிலேயே இப்போது வியாசர் இங்கே வருகை புரிந்திருந்தார்.

ஆசாரியர் வேத வியாசர் பீஷ்மருடன் மஹாராணி சத்யவதியின் மாளிகைக்கு வந்து சேர்ந்தார். ராணிமாதாவின் அந்தப்புர அறைக்கு இருவரும் சென்றனர். அங்கே ராஜமாதா உடல் நலம் பூரணமாய்க் கெட்டுச் சிவந்த கண்களுடனும், செக்கச் சிவந்த முகத்துடனும் கொதிக்கும் உடலுடனும் படுத்திருந்தாள். அவள் அந்தரங்கச் சேடி தாவி உதவி செய்ய மெல்ல எழுந்திருந்து சாய்ந்த வாக்கில் படுக்கையில் அமர்ந்த ராணிமாதா தன் காலைத் தொட்டு வணங்கிய ஆசாரியரை ஆசீர்வதித்தாள். சுயக்கட்டுப்பாடுகளிலும் நல்லொழுக்கங்களைக் கடைப்பிடிப்பதிலும் பிரபலம் அடைந்திருந்த பீஷ்ம பிதாமகர் தானும் தன் மாற்றாந்தாயான சத்யவதியின் பாதங்களைத் தொட்டு வணங்கிக் கொண்டார். தன் கை அசைப்பால் இருவரையும் அமரச் சொன்னாள் சத்யவதி. பின்னர் தன் கண்களை ஒரு நிமிடம் மூடிக் கொண்டாள். த்வைபாயனரிடம், “கிருஷ்ணா, இந்த அடி பெரும் அடியாக மரண அடியாக விழுந்து விட்டது! என்னால் இதைத் தாங்க முடியவில்லை!” இதைச் சொல்கையிலேயே அவள் தொண்டை அடைத்துக் கொண்டு குரல் தழுதழுத்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

“கிருஷ்ணா, கிருஷ்ணா, இப்படி வா! என் அருகே வந்து அமர்ந்து கொள்! இத்தனை நாட்களாக நான் உனக்காக் காத்திருந்தேன் குழந்தாய்! இன்னும் எத்தனை நாட்கள் நான் உயிருடன் இருக்கப் போகிறேனோ தெரியவில்லையே! ஆனால் நான் உடனே இறக்க விரும்புகிறேன்; ஆம் நான் இறக்க வேண்டும்!” என்று புலம்பினாள் சத்யவதி! அவள் இத்தனையில் அளவுக்கு மீறித் தன் சக்தியைச் செலவிட்டதால் களைத்துப் போய்விட்டாள். மெல்லத் தனக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டாள். “ஆரிய புத்திரரின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றித் தருவதாகவும், தர வேண்டும் எனவும் நான் உறுதியாக இருந்தேன். ஆனால், ஆனால் அவற்றில் நான் தோல்வி அடைந்து விட்டேனே! இந்தத் தோல்வியிலிருந்து மீண்டும் மீள முடியாத அளவுக்குத் தோல்வி அடைந்து விட்டேன்!” என்று கூறிய அவள் பெரும் விம்மல்களோடு கூடிய அழுகையை ஆரம்பித்தாள். அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை! மெல்லிய பலஹீனமான குரலில், “நான் வாழ்க்கையைச் சரியாக வாழவில்லை. என் மொத்த வாழ்க்கையுமே வீணாகி விட்டது. என் பிரபுவுக்கு, என் அருமைக் கணவர் ஆரிய புத்திரர் மஹாராஜா ஷாந்தனுவிற்கு நான் நல்ல பலமுள்ள புத்திரர்களைப் பெற்றுத் தரவில்லை. நீண்ட நாட்கள் வாழக் கூடிய பிள்ளைகளை நான் பெறவில்லை!” என்று புலம்பினாள்.

பின்னர் காங்கேயரிடம் திரும்பி, “காங்கேயா, நீ த்வைபாயனனிடம் எல்லா விபரங்களையும் கூறி விட்டாய் அல்லவா?” என்று கேட்டாள். “ஆம், தாயே, ஆம்! நான் அனைத்தையும் த்வைபாயனரிடம் கூறி உள்ளேன்.” என்றார் பீஷ்மர். “நீ என்ன நினைக்கிறாய், கிருஷ்ணா? இந்த விஷயத்தில் உன் கருத்து என்ன?” என்று த்வைபாயனரைக் கேட்டாள் ராஜமாதா. “காங்கேயர் எடுத்திருக்கும் முடிவு சரியானது தான் தாயே!” என்றார் த்வைபாயனர். “காங்கேயர் மட்டுமின்றி குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவருமே இதை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். நியோக முறையில் பாண்டுவின் மனைவியர் குழந்தை பெற்றது ஏற்கக் கூடியதே! ஆகவே அவர்கள் பாண்டுவின் புத்திரர்களை முறைப்படி இளவரசர்களாக அங்கீகரித்துத் தான் ஆகவேண்டும். அதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.” என்றார்.

“ஆம், தாயே, அது உண்மைதான்!” என்றார் பீஷ்மர்! “நாங்கள் குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவருமே ஏற்கெனவே இதற்கான உறுதிமொழியை எடுத்து விட்டோம். பாண்டுவின் ஐந்து புத்திரர்களையும் ஹஸ்தினாபுரத்து இளவரசர்களாக  அங்கீகரிப்பதோடு அல்லாமல் யுதிஷ்டிரனை யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்யும் எண்ணமும் உள்ளது!” என்றார். “ம்ம்ம்ம், அப்படியா? குரு வம்சத்து மூத்தோர்களின் கருத்தையும் கேட்டாயல்லவா? அவர்கள் என்ன சொல்கின்றனர்?” என்று கேட்டாள் ராணி சத்யவதி. “அவர்களில் பலருக்கும் ஐந்து சகோதரர்களையும் பாண்டுவின் புத்திரர்களாகவும், ஹஸ்தினாபுரத்து இளவரசர்களாகவும் அங்கீகாரம் செய்வதில் எவ்விதத் தடையும் இல்லை!” என்றார் பீஷ்மர்.

அப்போது த்வைபாயனர், “காங்கேயரே! நான் வருவதற்குச் சற்றே நேரம் முன்னர் ஷகுனி உங்களை வந்து சந்தித்ததாகக் கூறினீர்கள் அல்லவா? அவன் கருத்து என்ன? அவன் என்ன சொல்கிறான்?” என்று கேட்டார். பீஷ்மர் கொஞ்சம் இகழ்ச்சியுடன் சிரித்தார். “அவன் எதற்கு வருவான்? என்னிடம் மிகுந்த அழுத்தம் கொடுப்பதே அவன் நோக்கம். மேலும் மேலும் என்னைச் சிந்திக்கவிடாமல் அழுத்தி அவன் கருத்தை நான் ஏற்கச் செய்ய வேண்டும் என்பதே அவன் நோக்கம். அதை மிகச் சாமர்த்தியமாகச் செய்தான். அவன் என்ன சொன்னான் தெரியுமா? அவன் தந்தையிடமிருந்து எனக்குச் செய்தி வந்திருப்பதாகத் தெரிவித்தான். அவன் தந்தை சொல்லி அனுப்பினாராம். பாண்டுவின் புத்திரர்கள் ஐவரையும் நாம் அங்கீகாரம் செய்யக் கூடாது என! அதோடு மட்டும் அல்ல. அப்படியே நாம் பாண்டுவின் புத்திரர்களை ஏற்றுக் கொண்டாலும், அதனால் துரியோதனன் அரியணை ஏறுவதற்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாதாம். எப்படியானும் துரியோதனன் அரியணை ஏறும்படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். அதோடு மட்டுமா? அவன் சில ஸ்ரோத்திரியர்களைக் கூட இதற்காகக் கண்டு பேசினானாம். அவர்களிடம் குரு வம்சத்துப் பழைய கோட்பாடுகளைக் குறித்துக் கலந்து ஆலோசித்து துரியோதனன் அரியணை ஏற உரிமை உள்ளவன் தானா என்றெல்லாம் கேட்டுக் கொண்டானாம்!” மீண்டும் இகழ்வுடன் நகைத்தார் பீஷ்மர்.

“ஆஹா! ஸ்ரோத்திரியர்கள் எல்லோரும் எப்படி துரியோதனனை ஆதரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்?” என்று வியப்புடன் கேட்டார் ஆசாரியர். “ம்ம்ம்ம்ம், இல்லை த்வைபாயனரே! அவன் என்னை ஏமாற்றுகிறான் என நினைக்கிறேன். என்னை நம்ப வைப்பதற்காகப் பொய் சொல்லுகிறான். எனக்குத் தெரிந்தவரையில் ஹஸ்தினாபுரத்தின் அனைத்து ஸ்ரோத்திரியர்களும் ஆசாரிய விபூதியின் கருத்தோடு ஒத்துப் போகிறார்கள். அதோடு நிற்காமல் இப்போதைய ராஜகுருவான ஆசாரிய பாரத்வாஜரின் கருத்துக்களோடும் ஒத்துக் கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் யுதிஷ்டிரன் அரியணை ஏறுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்றே கூறிவிட்டார்கள். அவர்களும் நம்முடைய பழைய கோட்பாடுகளையும், நீதிகளையும் அலசி ஆராய்ந்தே இம்முடிவுக்கு வந்திருக்கின்றனர். அதை அனைத்து ஸ்ரோத்திரியர்களும் ஆதரிக்கின்றனர். அவர்களுக்கு இந்த முடிவு எடுத்ததன் அடிப்படையே தர்மக்ஷேத்திரத்தில் உம்மால் ஸ்தாபிக்கப்பட்ட வித்வத் சபையின் நடவடிக்கைகளே முக்கியக் காரணம் என்றும் சொல்கின்றனர். அங்கே ஆரியவர்த்தத்தின் பழைமையான கோட்பாடுகளும், நீதி, நியதிகளும் அலசி ஆராய்ந்து ஓர் முடிவுக்கு எட்டி இருப்பதாகவும் அதையே தாங்களும் பின்பற்றுவதாகவும் சொல்லுகின்றனர். அந்த வித்வத் சபையை நீர் தான் அங்கீகாரம் செய்திருப்பதாகவும் சொல்கின்றனர்.”

அப்போது த்வைபாயனர், “ஐந்து சகோதரர்களும் இறந்து போன குரு வம்சத்துக் கடைசிச் சக்கரவர்த்தியான பாண்டுவின் புத்திரர்களே என்பதில் எவ்வித ஐயத்துக்கும் இடமில்லை. ஆகவே அவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரனுக்கு இந்த அரியணை பிறப்புரிமை என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை! அவன் தந்தைக்குப் பின்னர் அவருடைய வாரிசாக அவன் தான் அரியணை ஏற வேண்டும்!” என்றார் த்வைபாயனர். பின்னர் காங்கேயரிடம், “அது சரி, இளவரசே, நீங்கள் ஷகுனியிடம் என்ன சொல்லிப் போகச் சொன்னீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பீஷ்மர், “அந்த சூழ்ச்சிக்காரனிடம் பேசும் அளவுக்குப் பொறுமை என்னிடம் இல்லை, ஐயா! ந அவனிடம் தீர்மானமாகக் கூறி விட்டேன். ஐந்து சகோதரர்களும் பிரமாதமான வரவேற்புடன் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர்களைப் பாண்டுவின் புத்திரர்களாக அறிமுகம் செய்யப் போகிறோம் என்பதையும் இறந்த சக்கரவர்த்தி பாண்டுவின் மகன்கள் என்பதால் அவர்களுக்கு இந்த நாட்டின் சகல சுக சௌக்கியங்களையும் ஓர் இளவரசர்களாக இருந்து அனுபவிக்கும் உரிமை உண்டு என்பதையும் தெரிவித்து விட்டேன்.” என்றார்.

மெல்லத் தன் கண்களைத் திறந்து பார்த்தாள் சத்யவதி. இவ்வளவு நேரமும் அவள் கண்களை மூடியே படுத்துக் கொண்டு அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள். இப்போது மீண்டும் தாவியின் உதவியால் எழுந்து அமர்ந்து கொண்டு, “கிருஷ்ணா, காங்கேயன் மட்டும் இல்லை எனில் இந்தக் குருவம்சத்தைக் கட்டிக் காப்பாற்றுவது கடினம். அவன் தான் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கட்டிக் காத்து வருகிறான். இப்போதுள்ள இந்த மாறுபட்ட சூழ்நிலைக்கு முக்கியக் காரணமே அந்த ஷகுனி தான். முதலில் அவனை ஹஸ்தினாபுரத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்!” என்றாள்.

“தாயே, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே! ஷகுனி தான் அனைத்துக்கும் மூலக் காரணம் ஆவான். ஆனால் அவனை நாம் அவ்வளவு எளிதில் வெளியேற்ற முடியாது. அது மிகக் கடினம். அவன் காந்தாரியுடன் காந்தார நாட்டுச் சீதனமாகவன்றோ வந்துள்ளான். அவனை நாம் வெளியேற்றினால் திருதராஷ்டிரன் ஒருக்காலௌம் சமாதானமாகப் போக மாட்டான். இதை ஒத்துக் கொள்ளவும் மாட்டான். காந்தார நாட்டு அரசனும் நாம் அவனை அவமதித்து விட்டோம் என்று எண்ணிக் கொள்வான். அவனைப் பொறுத்தவரை இது வாழ்வா, சாவா என்னும் பிரச்னையாகத் தோற்றுகிறது. அம்மா, ஷகுனியைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். இங்குள்ள குரு வம்சத்துத் தலைவர்கள் அவனை ஒரு கை பார்த்துவிடுவார்கள். கவலையே வேண்டாம் அம்மா!” என்றார் பீஷ்மர் சமாதானமாக.

மேலும் தொடர்ந்து, “இப்போது ஒரு குழப்பம் ஏற்பட்டால், சச்சரவு நேர்ந்தால் அதன் மூலம் ஓர் சிறு போரே மூளலாம். அல்லது அது சிறு போராக இல்லாமல் ஓர் மாபெரும் யுத்தமாக அக்கம்பக்கத்து அரசர்கள், சிற்றரசர்கள் கூடக் கலந்து கொள்ளும் பெரும்போராகவும் மாறலாம். ஆகவே இவ்விஷயத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். துரியோதனனுக்கு காந்தார அரசன் சபல் பாட்டனார். ஆகவே அவன் துரியோதனனைத் தான் ஆதரிப்பான். அதைத் தவிர கருஷ நாட்டுப்பிரபுவும் சேதி தேசத்து அரசனும் அவனை ஆதரிக்கலாம். ம்ம்ம்ம்ம்ம்? மத்ரா கூட இதில் சேர்ந்து கொள்ளலாம். பாண்டுவின் புத்திரர்கள் பாண்டவர்கள் ஐவருக்கும் அவர்கள் சார்பில் குந்தியின் சகோதரன் வசுதேவன், யாதவத் தலைவன், மற்றும் குந்தியின் ஸ்வீகாரத் தந்தை குந்திபோஜன், மற்றும் ஒருவேளை பாஞ்சால தேசத்து அரசன் துருபதன் ஆகியோர் ஆதரிக்கலாம்!” என்று நீண்ட யோசனையுடன் கூறினார் பீஷ்மர்.

1 comment:

ஸ்ரீராம். said...

சாதக பாதகங்கள் இப்போதே அலசப்படுகின்றனவா?