Monday, April 11, 2016

வாசுதேவக் கிருஷ்ணனுக்கே வெற்றி!

சத்ராஜித்தின் தற்பெருமை, அகந்தை, தன்னம்பிக்கை, யாதவர்களைத் தன் அளப்பரிய செல்வத்தின் மூலம் அடக்கி ஆளலாம் என்று நினைத்திருந்த ஆசை, விருப்பம், அவன் சூரியக் கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவன் என்னும் எண்ணம் அனைத்தும் சுக்கு நூறாகச் சிதறிப் போய்விட்டது. அவன் ஒன்றுமில்லாதவனாக ஆகி விட்டான். அங்கேயே அப்படியே அந்தப் புனிதக்குகையின் வாயிலில் உடல் தளர்ந்து அமர்ந்தவன் சிறு குழந்தையைப் போல் விம்மி விம்மி அழுதான். பங்ககரா மௌனமாகத் தன் தகப்பனின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டான். தன் ஒரு கையைத் தகப்பனின் முதுகில் வைத்து தட்டிக் கொடுத்து ஆசுவாசம் செய்தான். வல்லமை மிக்கவர் என அவன் இத்தனை வருடங்களாக நம்பி வந்த அவன் தகப்பன் இப்போது உடைந்து போய் அழுவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். மனம் உடைந்த நிலையிலேயே சத்ராஜித் துவாரகைக்குத் திரும்பினான். அவனுக்குள்ளே ஆழ் மனதிலோர் பயம் இருந்துகொண்டிருந்தது. அது இன்னொரு மஹா பிரளயம் வெகு விரைவில் ஏற்படப் போகிறது என்பதும், இது வரை அவன் அனுபவித்தது எல்லாம் ஒன்றுமே இல்லை என்னும் வண்ணம் அது பயங்கரமாக இருக்கப் போகிறது என்றும் எண்ணம் அவன் மனதில் தோன்றியது. ஆகவே அவன் செய்வதறியாது தவித்தான். பகல் முழுவதும் இவற்றை எல்லாம் நினைத்து நினைத்துக் கவலை அதிகம் ஆனது எனில் இரவுகள் அவனைக் கண் மூடவிடவில்லை. கண்ணை மூடித் தூங்க முடியாமல் தவித்தான். அவனுடைய நித்திய கர்மானுஷ்டானங்களை முற்றிலும் மறந்தான். ஹூம்! அவன் என்ன செய்து என்ன! இந்த நன்றி கெட்ட சூரிய பகவான் அவனை இப்படி ஏமாற்றி விட்டானே!

அவனுடைய மனைவியரில் மூத்தவள் ஆன துவாரவதி என்பவள் பயந்து கொண்டே வந்து அவன் முன்னால் உணவுகள் நிரம்பிய தட்டுக்களை வைப்பாள்; அதன் பின்னர் அவள் பின் வாங்கி மௌனமாக அவன் சாப்பிடுவானா என்பதை எதிர்பார்த்துக் காத்திருப்பாள். ஆனால் அவனோ அவளை லட்சியம் செய்யாமல் அவமதிப்பான். இப்படியாகவே நாட்கள் கழிந்து கொண்டிருக்கையில் தான் இன்று காலை அவன் எழுந்திருக்கும்போதே மதியம் ஆகி விட்டிருந்தது. அவனுக்குள் ஏதோ நடக்கப் போகிறது என்னும் எண்ணம் ஏற்பட்டு முடியும் முன்னரே வீட்டின் வெளி வாயிலுக்கருகே ஏதோ குழப்பமான வாதங்கள், பதில் வாதங்கள் என்று கேட்டன. ஒரே சமயத்தில் பல குரல்கள் கேட்டதால் அவை தெளிவற்றுக் கேட்டன. சத்ராஜித்திற்குக் கோபம் ஏற்பட்டு, அங்கே என்ன சத்தம் என்று கேட்டு அந்தக்குரல்களை ஒருவழியாக அடக்க வேண்டி வாயைத் திறந்தான். அவன் வாயிலிருந்து சொற்கள் வரும்முன்னரே அவை திரும்ப அவன் வாயினுள்ளேயே சென்றுவிட்டன. அவன் தொண்டை அடைத்துக் கொண்டது போல் உணர்ந்தான். உள்ளே நுழைந்தது சத்யபாமா!

அதுவும் எப்படி? தன்னுடைய சிற்றன்னைகளைத் தள்ளி விட்டுவிட்டு உள்ளே நுழைந்திருக்கிறாள். சிற்றன்னையின் மகன்களும், மற்றோரும் அவளைத் தடுக்கும்போது அனைவரையும் மீறிக் கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறாள்! இங்கே இருந்தபோது கொஞ்சம் குண்டாகவே இருந்தாள் சத்யபாமா. ஆனால் இப்போதோ கடந்த சில நாட்களில் அவள் எதிர்கொண்ட கடுமையான உழைப்பினாலும், சிரமங்களினாலும் நன்றாக இளைத்துத் துவண்டு பார்க்கவே தனி கம்பீரமும், அழகும் பொருந்தி எழிலாகத் தெரிந்தாள். அவள் உடுத்தியிருந்ததோ பண்டிகைக்கால உடை. மிக விலை உயர்ந்த உடைகளை உடுத்தி இருந்தாள். உடல் முழுவதும் ஆபரணங்கள்! கைகளில் ஒவ்வொரு விரலிலும் ஒரு மோதிரம்!அவள் இடையைக் கற்களினால் ஆன மணிமேகலை அலங்கரித்தது. எல்லாவற்றுக்கும் மேல் அவள் நெற்றியைச் சிந்தூரம் அலங்கரித்தது! சத்ராஜித்திற்குத் தூக்கி வாரிப் போட்டது. அப்படி எனில்! சீச்சீ! சீச்சீ! சத்ராஜித்தின் கண்களையே அவனால் நம்பவே முடியவில்லை! கண்களை மூடி மூடிப் பின்னர் மீண்டும் திறந்து பார்த்தான். அந்தச் சிந்தூரம் அவள் முன் நெற்றியிலே பிரகாசமாக ஒளிர்விட்டது. சத்ராஜித்தின் முகம் பயங்கரமாக மாறியது. வந்தது சத்யா என்பதும், அவள் இருந்த நிலையையும், உடுத்தி இருந்த உடையையும் பார்த்த சத்ராஜித்தின் கோபம் தலைக்கு மேல் ஏறியது!

சத்யபாமாவோ கவலையே படவில்லை. சிறிதும் பயப்படவும் இல்லை. தன் தந்தைக்கு எதிரே கீழே விழுந்து வணங்கி அவர் பாதங்களைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். ஆனால் அப்படிச் செய்யவிடாமல் சத்ராஜித் பாதங்களை உள்ளுக்கிழுத்துக் கொண்டான். அவன் அவளைத் தள்ளியே வேகம் ஏதோ நாகப்பாம்பு அவனைக் கொத்தி விட்டாற்போன்ற பதட்டத்துடன் இருந்தது. சத்யபாமா அசராமல், “தந்தையே, உங்கள் ஆசிகள் எனக்குத் தேவை!” என்றாள். அப்போது பங்ககரா உள்ளே நுழைந்து தன் ஒரு கரத்தால் தகப்பனைத் தொட்டு ஆறுதல் கூறியவண்ணம் அமர்ந்தான். ஆசிகளைக் கேட்ட சத்யபாமாவைப் பார்த்த சத்ராஜித்தின் முகம் அஷ்டகோணலாக மாறியது. பற்களைக் கடித்த வண்ணம் அவளைப் பார்த்து உறுமினான். தன் கண்களை உருட்டிக் கொண்டு அவளைப் பார்த்து, “ எங்கே வந்தாய்? துஷ்டப்பெண்ணே! வெட்கம் கெட்டவளே! வெளியே போ! நீ ஒரு விஷமுள்ள பாம்பு! இத்தனை வருடங்களாக ஒரு நன்றிகெட்ட பாம்பை நான் வளர்த்து வந்திருக்கிறேன். நீ என்னைத் தொடாதே! உன்னுடைய ஸ்பரிசம் கூட விஷமுள்ளது. வெளியேறு இங்கிருந்து! இந்தக் குலத்தையும் குலத்து முன்னோர்களையும் அவமதித்து விட்டாய்! குடும்ப மானமே உன்னால் சீரழிந்துவிட்டது!” என்று கத்தினான். சத்யபாமா முழந்தாளிட்டு அமர்ந்து கொண்டு தன் கைகளைக் கூப்பிக் கொண்டாள். எங்கே அவள் மீண்டும் தன்னைத் தொட்டுவிடுவாளோ என நினைத்தாற்போல் சத்ராஜித் கொஞ்சம் பின்னே நகர்ந்து கொண்டான். பின்னர் மீண்டும் தன் கண்களைக் கோபமாக உருட்டினான்.

“ஹூம், வெட்கமில்லாதவளே! நீ அந்த மோசக்காரன் சாத்யகியுடன் ஓடி இருக்கிறாய்! உன்னைக் கட்டி வைத்துச் சாட்டையால் வீற வேண்டும். இங்கே எதற்கு இப்போது வந்தாய்? என்னை அவமதித்த சாத்யகனின் மகனை என் சம்மதமும்  அனுமதியும் இல்லாமல் மணந்து கொண்டு விட்டேன் என்பதைச் சுட்டிக்காட்டி என்னை மீண்டும் அவமானம் செய்யவா வந்தாய்? பொல்லாத பெண்ணே!”

“இல்லை, தந்தையே, இல்லை. நான் சாத்யகியை மணக்கவில்லை!”

“என்ன, பொய்யா சொல்கிறாய்? செய்வதெல்லாம் செய்து விட்டுப் பொய் வேறேயா ஏன் நீ பண்டிகைக்கால உடையை அணிந்து வந்திருக்கிறாய்? உனக்குத் திருமணம் ஆகவில்லை என்றா சொல்லப் போகிறாய்? உன்ன் நெற்றிச் சிந்தூரம் சொல்கிறதே! இந்த உடைகளையும், ஆபரணங்களையும் உனக்கு வேறு யார் அளித்தார்கள்? வெட்கமில்லாமல் அலைகிறாயே? சாத்யகியை மணக்கவில்லை எனில்…நீ………. சொல்லக் கூட எனக்கு நாக்குக் கூசுகிறது! வெட்கமில்லாத பெண்களைப் போல் ஆரம்பித்து விட்டாயா? சே! உன்னைப் பார்ப்பதே பாவம்!”

சத்யபாமாவின் கண்களில் நீர் திரண்டது. கண்ணீர் அவள் கன்னங்களின் வழியே உருண்டோடியது. “தந்தையே, என்னைப் பார்த்து நீங்கள் அப்படிச் சொல்லலாமா? ஏன் சொன்னீர்கள் தந்தையே! தந்தையே, கொஞ்சம் பொறுமையாக நான் சொல்வதைக் கேளுங்கள். நான் மணந்திருப்பது சாத்யகியை அல்ல. வசுதேவரின் அருமைக்குமாரன் ஆன வாசுதேவக் கிருஷ்ணனைத் தான் நான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். ஆம், என்னை மணந்து கொண்டது அவர் தான். சர்வ வல்லமை பொருந்திய வீர, தீர சாகசங்களைச் செய்த, இனியும் செய்யப் போகும் வாசுதேவக் கிருஷ்ணன் தான் என் கணவர்!”

“என்ன? வாசுதேவனா? கிருஷ்ணனா? என் ஜன்ம வைரியா? பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லாதே பாமா! மேலும் மேலும் பொய் சொல்லிக்கொண்டு இருக்காதே! நீ ஓர் பொய்யான பொய்களினால் நிறைந்த பொல்லாத பெண்!”

“இல்லை, தந்தையே இல்லை! என் விருப்பமே அவரை மணப்பது ஒன்று மட்டுமே! அதைத் தாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆர்யபுத்திரரான வாசுதேவக் கிருஷ்ணன் தானும் என்னுடன் வந்து உங்களிடம் ஆசிகளை வாங்கவேண்டும் என்றே விரும்பினார். ஆனால் அவர் அப்படி வந்திருந்தால் உங்களைப் பார்த்துத் தன் வெற்றியைக் கொண்டாடவே வந்திருப்பதாக நீங்கள் நினைப்பீர்கள். உங்கள் மனம் வருந்தச் செய்யவேண்டாம் என்றே அவர் வரவில்லை!” என்றாள் பாமா.

“வாசுதேவன்! வசுதேவனின் புத்திரன் வாசுதேவன்! உன் கணவன்! அந்தப் பொல்லாத மோசமான மனிதனா உன் கணவன்? என்னைக் கொன்றுவிடுவதாகக் கொக்கரித்தவன் உன் கணவனா? அவன் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறானா? இப்போது திரும்பி இங்கே துவாரகைக்கு வந்து விட்டானா? ஹூம், ச்யமந்தகத்தைத் திருடி எடுத்துக் கொண்டு போனவன் அவன் தானே! அதோடு அதைக் கண்டுபிடிக்கவில்லை எனில் தன்னைத் தானே நெருப்புக்கு அர்ப்பணிப்பதாகப் பொய்யான வாக்குறுதியும் கொடுத்தானே! இப்போது எந்த முகத்தோடு இங்கே வந்திருக்கிறான்? ஏமாற்றுக்காரன்! நய வஞ்சகன்! நீ இன்னமும் மோசமான வெட்கம் கெட்ட பெண்! அவனைப் போய் மணந்திருக்கிறாயே! அவன் ஒரு திருடன்! என்னுடைய மோசமான கடுமையான எதிரி! ஜன்ம வைரி!”

சத்யபாமா மெல்லப் புன்னகை புரிந்தாள். பின்னர் தந்தையிடம், “ஆர்யபுத்திரர் வசுதேவ குமாரர், வாசுதேவர் ச்யமந்தகமணியைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார், தந்தையே!அது ஜாம்பவான் என்னும் கரடிகளின் அரசனிடம் இருந்தது. ஜாம்பவானுக்கும் உங்களுக்கும் வெகுநாட்கள் நட்பாமே! ச்யமந்தகத்தை  வாசுதேவரிடம் கொடுத்த ஜாம்பவான் இதை உங்களுக்கே பரிசாக அளிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். வாசுதேவரின் விருப்பமும் அதுவே! இதோ ச்யமந்தகம் தந்தையே! இந்தாருங்கள்!” என்ற வண்ணம் தன் அரைக்கச்சையிலிருந்த ச்யமந்தகத்தை எடுத்துத் தந்தையிடம் கொடுத்தாள் பாமா. பின்னர் மேலும் பேசினாள். “தந்தையே! அவர், வாசுதேவர் இப்போது என் கணவர், ச்யமந்தகத்தை என் மூலம் உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இனியாவது நீங்கள் பழைய விஷயங்களை எல்லாம் மறந்து விட்டு எங்களையும் மன்னித்து ஏற்றுக் கொண்டு எங்கள் எதிர்கால வாழ்க்கைக்காக ஆசிகளை வழங்க வேண்டும் என்பதே அவர் விருப்பம். என் விருப்பமும் அதுவே!”

சத்ராஜித் நம்பிக்கையே இல்லாமல் ச்யமந்தகத்தை எடுத்துப் பார்த்தவன், அது உண்மையாகவே ச்யமந்தகமணிதான் என்பதை ஊர்ஜிதமும் செய்து கொண்டான். அவன் உடல் நடுங்கியது. அதுவரை இருந்த கட்டுப்பாடுகளெல்லாம் தளர்ந்து போய் அவன் நிலை தடுமாறினான். சத்ராஜித் அவன் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்து எழுந்தான். மொத்த உடலும் நடுங்கியது. கண்கள் சிவந்தன. ரத்தத்தைக் கண்கள் வழியாகக் கக்கிவிடுவானோ என்னும்படிக் கண்கள் சிவந்து காணப்பட்டன. அவனுடைய மொத்தக் கோபமும் அடங்கும்படியாக அல்லது அந்தக் கோபத்தைக் காட்டும்படியாக எதுவானும் கிடைக்குமா என நினைப்பவன் போலச் சுற்றும் முற்றும் பார்த்தான். சத்யாவின் கைகளிலிருந்து ச்யமந்தகத்தைப் பிடுங்கிக் கொண்டவன் அதே வேகத்தோடு அதை அவள் மேல் விட்டெறிந்தான். சத்யபாமா தன் உடலைக் கொஞ்சம் நெளித்து ஒருபுறமாக ஒதுங்கிக் கொள்ள அது அவளைத் தாண்டிக் கொஞ்சம் தூரத்தில்போய் விழுந்தது. சத்ராஜித் எழுந்தான், உணவுகள் நிறைந்த தட்டை காலால் உதைத்து அப்புறப்படுத்தினான். பின்னர் அந்த அறையிலிருந்து வெளியேறினான்! அவன் வாய், “உன்னை நான் சபிக்கிறேன்! உன்னை நான் சபிக்கிறேன்!” என்றே முணுமுணுத்தது


இத்துடன் கண்ணன் வருவான் தொடரின் ஐந்தாம் பாகம் முற்றுப் பெற்றது. இனி வரப் போவது ஆறாம் பாகம்! விரைவில்!


1 comment:

ஸ்ரீராம். said...

ஆஹா... விரைந்த முடிவு. தொடர்கிறேன்.