Friday, April 22, 2016

தந்தையே, தந்தையே, என்னிடம் வாருங்கள்!

மாலை நேரம். யமுனைக்கரை. யமுனையின் பிரவாஹம் மிக வேகமாக இருக்கிறது. சூரியனின் செம்பொற்கிரணங்கள் யமுனையின் நீரை உருக்கிய தங்கம் ஓடுவதைப் போலக் காட்டிக் கொண்டிருந்தது. யமுனையின் நடுவே ஒரு சின்னஞ்சிறு தீவு! தீவின் முனையில் கரையில் ஒரு சின்னஞ்சிறு சிறுவன் நின்றிருந்தான். நிலப்பகுதியிலிருந்து பிரிந்து வந்து கடலில் சேர்ந்த ஒரு சிற்றோடையினால் அந்த இடம் தீவாகி இருந்தது. அந்தச் சிறுவன் மேல்வானத்தைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தான். அடிவானத்தில் அவன் எதைக் கண்டானோ தெரியவில்லை! ஆனால் நீண்ட யமுனையின் பிரயாணம் அடிவானத்தைத் தொட்டுக்கொண்டும் அதற்கு மேலும் ஓடிக் கொண்டிருந்ததால் அங்கே இருந்து பார்த்தபோது யமுனை அடிவானத்தைத் தொடுவது போல் இருந்தது. அந்தக் காட்சியை ரசித்த அந்தச் சிறுவன் தன் கைகளை நீட்டி எவரையோ அழைத்தான். கருமை நிறத்துடன் கட்டை, குட்டையாகத் தெரிந்த அந்தச் சிறுவனின் நெற்றி விசாலமாகவும், கண்கள் தீவிரமானதொரு ஒளியுடனும் காணப்பட்டது. சிறுவன் எளிமையாகவே இருந்தான்.

அந்தத் தீவில் அவன் தன் தாயுடனும், தாய்வழிப் பாட்டனுடனும் வசித்து வந்தான். பாட்டன் ஜாருத்தின் உடன்பிறந்தவர்களும் மற்ற உறவினர்களும் கூட அவர்களுடனேயே வசித்தனர். அங்கிருந்து சற்று தூரத்தில் நிலப்பகுதியில் இருந்த கிராமங்களுக்கு இவர்கள் தான் மீன்களைப் பிடித்துச் சுத்தம் செய்து விற்று வந்தனர். அதைத் தவிரவும் அனைவரிடத்தும் படகுகள் இருந்தமையால் இக்கரைக்கும் அக்கரைக்கும் பயணிகளை ஏற்றிச் சென்றும் கொண்டு விட்டும் பணம் சம்பாதித்தனர். அருகிலிருந்து கல்பி என்னும் ஊரே அவர்களின் பொருளாதார மையமாக விளங்கிற்று. யமுனையை அவர்கள் தாயாகக் கருதினர். அவர்கள் வாழ்வின் ஜீவாதாரமே இந்த யமுனையும் அதில் இருக்கும் மீன்களும் தான். அவளால் தான் இன்று அவர்கள் உணவு உண்டு இந்த சமூகத்தில் ஜீவித்திருக்க முடிகிறது. இந்தச் சிறுவனும் தன் தாய் வழிப்பாட்டனுடன் சேர்ந்து படகுகளில் சென்று மீன்களைப் பிடிப்பதிலும், அவற்றைச் சுத்தம் செய்வதிலும், வலைகளைத் தைத்துக் கொடுப்பதிலும் பெருமளவு உதவி செய்து வந்தான். அவன் வேலை செய்ய அஞ்சியதில்லை. மிகவும் கீழ்ப்படிதல் உள்ள ஓர் குழந்தையாகவே வளர்ந்து வந்தான். அவன் இயல்பாகவே பெரியோர் வார்த்தைகளை மீறாதவனாக இருந்து வந்தான். அவன் தாயோ, பாட்டனோ மீன்களை விற்க நகரத்துக்குச் செல்லும்போதெல்லாம் அவன் தனியாகப் பிடித்த மீன்களை ஒரு கூடையில் போட்டுக் கொண்டு அவர்களுடன் அவனும் சென்று அவற்றை விற்பான்.

அந்தத் தீவுக்குடியிருப்பிலுள்ள மற்றக் குழந்தைகளைப் போல் அல்லாமல் அவன் தனித்துத் தெரிந்தான். அதோடு மற்றக் குழந்தைகளுடன் கலந்து அவன் விளையாடுவதும் இல்லை. அவர்களுடன் அமர்ந்து பேசிக் களிப்பதும் இல்லை! எப்போதும் எதையோ தேடும் கண்கள்! எங்கோ தொலைதூரத்தைப் பார்க்கும் பார்வை! அப்படியே அந்தச் சிறுவர்களோடு அவன் கலக்க நேரிட்டாம் மௌனமே அவன் மொழி! அந்தச் சிறுவன் தனக்குள்ளே ஓர் உலகைச் சிருஷ்டித்துக் கொண்டு அதில் வாழ்ந்து வந்தான். அந்த உலகில் அவன் தாயையும், தகப்பனையும் தவிர எவருக்கும் இடமில்லை. அவனைக் கண்ட கிராமத்துப் பெரியோர்கள் பலருக்கும் இந்தச் சிறுவனுக்கு மூளைக்கோளாறோ என்னும் எண்ணம் உண்டாயிற்று. அவன் வேலைகளிலிருந்து சற்று ஓய்வு கிடைத்தாலும் போதும். யமுனையின் இந்தக் கரைக்கு வந்து தன் தகப்பனைத் தேட ஆரம்பிப்பான். மேற்குத் திசையையே அவன் கண்கள் பார்க்கும். குரலெடுத்துக் கூவுவான். அவன் குரல் அவன் தந்தையின் காதில் விழுந்து அவர் வந்துவிட மாட்டாரா? எங்கிருந்தாலும் அவர் வரவேண்டும். இப்போதும் அதைத் தான் அவன் செய்து கொண்டிருந்தான்.

பயணிகளை ஏற்றிச் சென்றிருந்த மச்சகந்தியின் சிறுபடகு யமுனைக்கரையில் அவர்கள் இருந்த தீவுக்குத் திரும்பியது. மச்சகந்தி தன் மகனைப் பார்த்தாள். ஆனால் அவள் மகன் அவளைப் பார்க்கவில்லை. பார்த்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை! மாறாக,”தந்தையே, தந்தையே! விரைவில் வாருங்கள்! எப்போது வரப் போகிறீர்கள்?” என்று கூவினான். படகிலிருந்து வெளியே குதித்த மச்சகந்தி படகை ஒரு மரத் தண்டில் இழுத்துக் கட்டிவிட்டுத் தாங்கள் குடி இருந்த குடிசையை நோக்கி வேக நடையாகச் சென்றாள். சுமார் இருபது வயதுக்குட்பட்ட மச்சகந்தி ஒல்லியாகவும் மிக அழகாக உருண்டு திரண்டும், படகு ஓட்டுவதால் ஏற்பட்ட திண்ணிய கரங்களோடும் வெயிலிலும், மழையிலும் அடிபட்டு அடிபட்டு ஆரோக்கியத்தைப் பெற்ற செம்பொன் நிற மேனியுடனும் காணப்பட்டாள். அவள் நடையே எழிலார்ந்து காணப்பட்டது. கண்களோ எனில் நக்ஷத்திரங்களோ என்னுமாறு பளபளத்தன. சிப்பிகளாலும், வெள்ளியினாலும் ஆனதொரு பெரிய ஆபரணத்தை மார்பில் அணிந்திருந்தாள். குடிசையை நோக்கி ஓடிய அவள் ஓடும்போதே தன் மகனை, “கிருஷ்ணா, கிருஷ்ணா!” என அழைத்தபடி ஓடினாள். அவள் தாய் சண்டோதரி, “உன் மகன் இங்கில்லை! வழக்கம் போல் அவன் தந்தையை அழைக்க யமுனைக்கரைக்குப் போய்விட்டான். ஹூம், அவர் எங்கே வரப்போகிறார்! அவர் வரபோவதே இல்லை!” என்று முடித்தாள்.

மச்சகந்தி ஓடிச் சென்று தன் மகனை அணைத்துக் கொண்டாள். அவனைத் தூக்கிக் கொண்டாள். தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். “கிருஷ்ணா, கிருஷ்ணா, ஏன் நேரத்தை வீணாக்குகிறாய்? இங்கிருந்து நீ அழைப்பதை உன் தந்தையால் கேட்க இயலாது!” என்றாள். இது ஏற்கெனவே பலமுறை நடந்திருந்தாலும் அந்தச் சிறுவன் கிருஷ்ணா முதல்முறையாக இதைக் கேட்பது போல் அவள் முகத்தையே பார்த்தான். அவன் அறியாமையும், வெகுளித் தன்மையும் அவன் கண்களில் பளிச்சிட்டது. அவன் வயதுக்குப் பொருந்தாத ஒரு தன்னம்பிக்கையுடன் தாயைப் பார்த்து, “தாயே, நீங்கள் சொல்வது தவறு! அவர் வருவார்! நிச்சயமாய் வருவார்! நான் தூங்குகையில் ஒவ்வொரு நாளும் என்னிடம் வருகிறார். வந்து. “குழந்தாய்! நீ என்னை அழைத்தால் நான் வருவேன்!” என்று சொல்லிச் செல்கிறார்.” என்றான்.


1 comment:

வல்லிசிம்ஹன் said...

இதைப் போன்ற நம்பிக்கைதானே நம்மைக் கடவுளிடம் சேர்க்கும். தந்தை வருவார் மகனை ஆட்கொள்ள. அருமையான எழுத்து கீதா. மிக நன்றி.