Sunday, April 3, 2016

ஜாம்பவான் மனம் திறக்கிறான்!

கிருஷ்ணனுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். குரல்! அந்தக் குரல்! அதில் சந்தேகமே இல்லை. கரடிகளின் அரசனான ஜாம்பவானின் குரலே தான். ஆனால் அந்தக் குரலில் தென்பட்ட மாற்றம்! கடந்த இரு நாட்களாகக் கிருஷ்ணனிடம் கடுமையை மட்டுமே காட்டி வந்த அந்தக் குரல் இப்போது நட்புத் தொனியில் அன்றோ தொனிக்கிறது! அதோடு அந்தக் குரலில் தெரிந்த அளப்பரிய பாசம்! ஜாம்பவான் குகைக்குள்ளே வந்தார். அவருடன் எப்போதும் கூடவே இருக்கும் அவர் மருமகன் ஆன கரடி வெளியே பாதுகாப்பாக நின்று கொண்டது. அதைக் கண்ட மினி பூனைக்குட்டிக்கு சந்தோஷம் அதிகரிக்க தன் பெரிய கரடி நண்பனோடு விளையாடச் சென்றது. கிருஷ்ணன் ஜாம்பவானைப் பார்த்து, “உங்களுக்கு நல்வரவு, அரசே!” என்றான். மேலும் ஒரு புன்னகையுடன்,”அதுவும் நீங்கள் இப்போது உங்கள் கரடி உலகின் சட்டதிட்டங்களைப் புறக்கணித்துவிட்டு ஒரு ந்ண்பனாக என்னைப் பார்க்க வந்திருப்பது குறித்தும் மகிழ்வுடன் உங்களை வரவேற்கிறேன்.” என்றான்.

தூங்கிக் கொண்டிருந்த ரோகிணிக்கு விழிப்பு வந்து எழுந்து கொண்டாள். தன் தந்தையைப் பார்த்தவள் அவர் நட்பு ரீதியில் கண்ணனோடு பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும் எழுந்து வந்து கிருஷ்ணனின் அருகே அமர்ந்து கொண்டாள். “ரோகிணி, நீ சந்தோஷமாக இருக்கிறாயல்லவா? குழந்தாய்! உன் மகிழ்ச்சியே எனக்குத் தேவை!” என்ற வண்ணம் பேசிய ஜாம்பவானின் குரல் இப்போது மிக மிக மெதுவாக இருந்தது. இதிலிருந்து அவர் யாருக்கும் தெரியாமல் அங்கே வந்திருப்பதும் புரிந்து விட்டது. ரோகிணி தன் தகப்பனிடம், “வாசுதேவக் கிருஷ்ணன், என் பிரபு, என்னைத் தன் ஆளுகைக்குக் கொண்டு வந்துவிட்டார். அவருடைய கவனிப்பின் கீழ் நான் நன்றாகவே இருக்கிறேன். என்னைக் குறித்துக் கவலை வேண்டாம், தந்தையே!” என்றாள். அதைக் கேட்ட ஜாம்பவான், “ரோகிணி, இன்னும் எத்தனை நாட்கள் வாசுதேவக் கிருஷ்ணனால் உன்னைப் பார்த்துக் கொள்ள முடியும் என்பது தான் எனக்குத் தெரியவில்லை; புரியவும் இல்லை!” என்ற ஜாம்பவான் கிருஷ்ணனிடம் திரும்பிப் பார்த்து, “உனக்கு எத்தகையதொரு விதி காத்திருக்கிறது என்பதை நீ அறிவாயா? வாசுதேவக் கிருஷ்ணா! உன் விதி உனக்குத் தெரியவில்லை!” என்று புலம்பினார்.

“எனக்கு நன்றாகத் தெரியும்!” என்ற கிருஷ்ணன் தொடர்ந்து, “இன்னும் மூன்று நாட்களில் நீங்கள் என்னை உங்கள் குல தெய்வமான கருநிறக்கடவுளிடம் அழைத்துச் சென்று அங்கே அவருக்கு என்னை அர்ப்பணிக்கப் போகிறீர்கள்! அதன் பின்னர் ரோகிணி எனக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் ஆசாரியனை, கருநிறக் கடவுளுக்குப் பிரியமான மனிதனை மணப்பாள்.” என்ற வண்ணம் சிரித்தான்.

“ஹூம்!,” என்றொரு பெருமூச்சு விட்ட ஜாம்பவான், “உன் சிநேகிதன் உன்னை நடமாடும் கடவுள் என வர்ணித்ததில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது, வாசுதேவா! உனக்கு அனைத்தும் நன்கு தெரிந்திருக்கிறது; புரிந்திருக்கிறது!” என்றான். மேலுக்கு வேடிக்கையாகப் பேசுவது போல் தோன்றினாலும் அவன் உள்ளூர வருந்துகிறான் என்பது தெரிந்தது. கிருஷ்ணன் பாதியில் குறுக்கிட்டு, “ஐயா! அது நீங்கள் கருநிறக்கடவுளின் பிரியத்துக்கும், விருப்பத்துக்கும் உகந்த மனிதனாகி விட்டால் நடக்காத ஒன்று! இதைத் தான் நான் முன்பே ஆலோசனையாகக் கூறினேன்!” என்றான். அதற்கு ஜாம்பவான் பெரிதாகச் சிரித்தார். பின்னர், “நான் என்னைப் பற்றி இன்னும் எதுவும் நினைக்கவில்லை; அதற்கு முன்னர் ஒன்றை வெளிப்படையாகச் சொல்கிறேன். வாசுதேவா! நான் தான் ரோகிணியிடம் கூறி உன்னை இங்கே அவள் இனிமையான குரலில் மயக்கி அழைத்து வரச் சொன்னேன்! அதை நீ அறிவாயா?” என்று கேட்டார்.

“எனக்குத் தெரியுமா என்கிறீர்களா?” ஜாம்பவானின் கேலியை உணர்ந்த கிருஷ்ணன் தானும் அதே தொனியில் பேசினான். “உங்கள் மகள் அனைத்தையும் என்னிடம் சொல்லிவிட்டாள். முழுவதையும்! உங்கள் ரகசியம் இப்போது உங்களிடம் இல்லை! உங்கள் எல்லாத் தந்திரங்களையும் குறித்து அவள் என்னிடம் கூறிவிட்டாள்!” என்றான்.

“அது ஏன் என்பது உனக்குத் தெரியுமா? நீ அதைப் புரிந்து கொண்டாயா?”

“ஓரளவு புரிந்து கொண்டேன். இது உங்கள் கருணையைக் காட்டுகிறது!” என்றவண்ணம் கிருஷ்ணன் தன் வசீகரப்புன்சிரிப்பை ஜாம்பவானிடம் காட்டினான். அதற்கு ஜாம்பவான் கொஞ்சம் சோகமாகவே, “இல்லை, வாசுதேவா! உண்மையில் என் சுயநலத்தையே அது குறிக்கும். எப்படியாவது ரோகிணியை நீ திருமணம் புரிந்து கொள்ளவேண்டும் என்றே நான் விரும்பினேன்.” என்றார். அதைக் கேட்ட கிருஷ்ணன் சிரித்த வண்ணம், “உங்கள் வழிமுறைகளே தனியானவை,  அரசே! விசித்திரமானவையும் கூட! ரோகிணி என்னை மணக்கவேண்டும் என ஏன் விரும்பினீர்கள்? நான் தான் இறந்துவிடுவேனே! அப்புறம் அவள் விதவையாக அல்லவோ ஆவாள்? அதையா நீங்கள் விரும்பினீர்கள்?” என்றான் கிருஷ்ணன்.

“இல்லை, வசுதேவ குமாரா! நான் எத்தனை முழு நிலவு நாட்களாக/ அல்ல, வருடங்களாக உனக்காகக் காத்திருக்கிறேன், தெரியுமா? ஒவ்வொரு முழு நிலவு நாளிலும் உன் வருகையையே எதிர்பார்த்திருப்பேன்!”

“என்ன? எனக்காகக் காத்திருந்தீர்களா?” வியப்புடன் கிருஷ்ணன் கேட்டான்.

“ஆம், வாசுதேவா, ஆம். எப்படி என்கிறாயா? சொல்கிறேன், கேள்! ரோகிணியின் தாய் என்னை இந்தக் கரடி உலகின் கடுமையான சட்டதிட்டங்களில் இருந்து முழுதும் விலகி அவளுடன் எங்காவது தப்பி ஓடி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மிக விரும்பினாள். அவளால் இந்தக் கொடுமைகளைப் பொறுக்க முடியவில்லை!”

“ஆஹா! அப்படி எனில் நீங்கள் ஏன் அப்போதே தப்பிக்கவில்லை, அரசே?”

“வாசுதேவா, என்னால் எங்கள் கரடி உலகைத் தவிர, இந்தப் பிராந்தியத்தைத் தவிர வேறு சுகமளிக்கும் பூமியை, உலகைக் குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அப்படி ஓர் உலகம் வெளியே எனக்காகக் காத்திருக்கிறது என்பதையும் நான் அறிந்ததில்லை. அப்போது தான் சத்ராஜித் முதல் முதலாகப் புனிதக் குகைக்குத் தன் வழிபாடுகளுக்காக வந்து சேர்ந்தான். அவன் சூரியனை வணங்கி அதற்குப் பரிசாக ச்யமந்தகமணிமாலையைப் பெற்றான். அதிர்ஷ்டமும் அவனுடன் கூடவே சென்றது. செல்வம் பெருகியது! அவன் தான் எனக்கு வெளி உலகைக் குறித்து அறிமுகம் செய்து வைத்தான். வெளியே காத்திருக்கும் அற்புத உலகைக் குறித்துக் கூறினான். அங்கே எல்லாவிதமான ஆண்கள், பெண்கள், மிருகங்கள் என அனைவருமே சேர்ந்து வசிப்பதையும் கூறினான். இளமை பொருந்திய ஆண்களும், பெண்களும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உண்பதும், குடிப்பதும், வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பதுமாக இருப்பதைக் குறித்துச் சொன்னான். அவன் என்னை இந்தக் கரடிகள் உலகிலிருந்து காப்பாற்றி வெளியே பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாகவும் உறுதி கூறினான்.”

“ஓ, அப்படியா? அவர் உங்களுக்கு எவ்வகையில் உதவினார்?”

“ம்ஹூம், அவன் எனக்கு உதவவே இல்லை, கிருஷ்ணா! அவன் மிக மோசமான பொல்லாத மனிதன். நல்லவனே அல்ல! அவன் என்னைக் காப்பாற்றி வெளியே அழைத்துச் செல்ல ஒரு நிபந்தனையையும் விதித்திருந்தான். எங்கள் நதிப் பிரவாகத்தில் காணப்படும் தங்கம் கலந்த பிரகாசமான மண்ணை எங்கள் நதியிலிருந்து நான் எடுத்துச் சென்று ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் புனிதக் குகையில் அந்த மண்ணால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்று வற்புறுத்தினான்! அப்படி வழிபடுவது ச்யமந்தமணிமலையை வழிபடுவதும் ஆகும் என்றும் கூறினான்.”

“ஓஹோ, எனக்கு இப்போது நன்கு புரிகிறது!ஒவ்வொரு முழு நிலவு நாளிலும் நீங்கள் உங்கள் நதியின் பிரவாகத்திலிருந்து கிடைக்கும் தங்கம் கலந்த மணலை சத்ராஜித்திடம் கொடுத்து வந்திருக்கிறீர்கள். அவனும் அதை வைத்து ச்யமந்தகத்தை வழிபட்டிருக்கிறான். அதாவது வழிபாடு செய்வதாகப் பாவனை செய்திருக்கிறான்.”

“ஆம்!”

“பின்னர்? என்ன நடந்தது? ஏன் அவன் உங்களுக்கு மேலும் உதவி செய்யவில்லை?”

“ரோஹிணியின் தாய், என் அருமை மனைவி, அன்பானவள், கலகலப்பான சுபாவம் கொண்டவள், உல்லாசமாக ஓடியாடிச் சுற்றித் திரிந்தவள், திடீரென இறந்து விட்டாள்!” ஜாம்பவான் தன் மனைவியிடம் எவ்வளவு பாசம் வைத்திருந்தான் என்பது இப்போதும் அதை நினைத்து அவன் கலங்குவதிலிருந்தும் கண்களைத் துடைத்துக் கொண்டு பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனதும் புரிய வைத்தது. பின்னர் அவனே தன்னைச் சமாளித்துக் கொண்டு மேலும் தொடர்ந்தான். “ரோகிணி அப்போது சிறு குழந்தை! கரடி உலக மக்களுக்கும் என் தேவை அதிகம் ஆனது. ஏனெனில் சாம்பனின் கொடூரங்கள் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆகவே என் மக்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் என்னிடம் இருந்தது.” என்றவன் கொஞ்சம் தாமதித்து, “ரோகிணி தன் தாயின் வழியிலேயே வளர்ந்தாள். அவளுக்கும் இந்தக் கரடி உலகின் சட்டதிட்டங்களும் கொடூரங்களும் சிறிதும் பிடிக்கவில்லை. ஆகவே பகல் முழுவதையும் மரங்களின் மேலேயே கழித்தாள். பறவைகளோடு பேசினாள். அவற்றைத் தன் நண்பர்கள் ஆக்கிக் கொண்டாள். குரங்குகளும், அணில்களும், பறவைகளும் அவளிடம் நட்புப் பாராட்டின.”

“என்னைக் கட்டிப் போட்டு விட்ட இந்தக் கொடூரமான கரடி உலகிலிருந்து அவள் தப்பவேண்டும்; தப்பி எங்காவது போய் நன்றாக வாழவேண்டும்! இதுவே என் கனவாக இருந்தது!ஆனால் அதற்கு என்ன வழி? அவள் உங்கள் உலகிலிருந்து வரும் மனிதர்கள் எவரையாவது திருமணம் செய்து கொண்டால் தான் அவனுடன் தப்பிப் போய் சந்தோஷமாக வாழ முடியும்! அப்படி யாருமே இங்கே வரவில்லையே! அவளை மணப்பவன் அவளுக்குத் தகுந்தவனாகவும் இருக்க வேண்டுமே! என்றாலும் சத்ராஜித் மூலமாக நான் கற்றுக்கொண்ட உங்கள் ஆரிய மொழியை ரோகிணிக்கும் சொல்லிக் கொடுத்து அவளை நல்லதொரு எதிர்காலத்துக்கு ஆயத்தமாக இருக்கும்படி மாற்றி வந்தேன்!”

“என்ன செய்ய நினைத்திருந்தீர்கள் நீங்கள்? எப்படி உங்கள் ஆவலை நிறைவேற்ற நினைத்தீர்கள்?”

1 comment:

ஸ்ரீராம். said...

நானும் ஆவலாகக் காத்திருக்கிறேன்.